Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
பற்றி எரிகிறது காஷ்மீர்!
பற்றி எரியுமா இந்தியா?

வே. ஆனைமுத்து

உலக வரலாற்றில், தேசிய இனங்களின் சிக்கல் என்பது முதலில் மொழியை அடிப்படையாக வைத்தே எழுந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்ரோப்பிய நாடுகளில் முதலாளிகளே இக்கோரிக்கையை முன்வைத்தனர். குறிப்பிட்ட ஒரு மொழியைப் பேசுகிற மக்களைக்கொண்ட நாடு, வேறொரு மொழியைப் பேசுகிற மக்கள் வாழும் நாட்டின் முதலாளிகளால் சுரண்டப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. சுரண்டப்படுவதாகச் சொல்லப்படும் நாட்டின் மக்களை - எல்லோரையும் ஒன்றிணைத்தது, மொழி.

இலெனினின் 1905 - 07 புரட்சி தோல்வி அடைந்தபிறகு, 1912-14ஆம் ஆண்டுகளில், ஒடுக்கப்பட்ட மொழிவழித்தேசிய இன மக்களின் உணர்வுகளை அவர் அங்கீகரித்தார்; எல்லா ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களையும் ஒன்றுதிரட்டிட முயன்றார். அதனால்தான் 1917 நவம்பர் புரட்சி வென்றது.

இந்தியா - மொழிவழி மாநிலக் கோரிக்கை

வெள்ளையர் ஆட்சிக்கால இந்தியாவில், 1920களில் பஞ்சாபி மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் என்கிற "பஞ்சாபி சுபா' கோரிக்கையை முன்வைத்தார், மாஸ்டர் தாராசிங். 1926இல் சென்னை மாகாணப் பார்ப்பனர் அல்லாதார் சென்னை மாகாணத்தைத் தில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் இரண்டு தடவைகள் தீர்மானம் கொண்டு சென்றனர்; இரண்டு தடவைகளிலும் தோல்வியுற்றனர்.
1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பெரியார் எழுப்பிய "தமிழ்நாடு தமிழருக்கே!' என்னும் கோரிக்கை 1939இல் "திராவிட நாடு திராவிடருக்கே' என உருவெடுத்தது. 1945இல் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் குழுவினரால் பெரியாரின் கோரிக்கை மறுக்கப்பட்டது.

1926 முதல் 1945வரை சென்னை மாகாணத்தில் எழுந்த கோரிக்கைகள் - தில்லி பார்ப்பன - பனியா ஆதிக்கத்திலிருந்து சென்னை மாகாணத்தை விலக்கிக்கொள்ள வேண்டும்; சென்னை மாகாணம் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே. இது விடுதலை கோருவது ஆகாது. வெள்ளையன் தம் கோரிக்கையை மறுத்தவுடன், பெரியார் 1945இல் திருச்சி மாநாட்டில் எழுப்பிய "திராவிட நாடு திராவிடருக்கே' என்பதுதான்; தனிச் "சுதந்தர திராவிடநாடு' கோரிக்கையாகும்.

திராவிடநாடு கோரிக்கையை முறியடிக்க, நேருவின் அரசு திணிக்க முயன்ற "தட்சணப் பிரதேச'க் கோரிக்கையைப் பெரியார் வன்மையாக எதிர்த்தார். 1956 நவம்பர் 1இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு "திராவிடநாடு வேண்டாம்; தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்' என்று கோரினார். இறுதிவரையில் இதில் பெரியாருக்கு நடுக்கம் இல்லை.

ஜம்மு - காஷ்மீர் சிக்கல் என்ன?

வெள்ளையர்கள் பஞ்சாபைக் கைப்பற்றியபிறகு, 1849இல் தோக்ரா (ம்லிஆrழி) எனப்படும் பிரிவைச் சார்ந்த குலாப் சிங் என்கிறவருக்கு ஜம்மு - காஷ்மீரை விற்றுவிட்டனர். வெள்யைன் 1947இல் வெளியேறியபோது, இந்தியாவை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொடுத்துவிட்டு வெளியேறினான். ஒரு பகுதி இந்தியா; இன்னொரு பகுதி பாக்கிஸ்தான்.

8.1.1940இல் பம்பாயில் ஜின்னாவை, பெரியாரும் அவர்தம் குழுவினரும் சந்தித்தனர். அப்போது திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கைக்கு அவரிடம் ஆதரவு கோரினார். அத்துடன், "நீங்கள் இந்தியாவுக்கு ஒரே அரசியல் நிர்ணய சபைதான் என்பதை ஏற்காதீர்கள்' என்றும் ஜின்னாவிடம் பெரியார் கூறினார். அதன்பின்னர், 1940 மார்ச்சில்தான் முசுலிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா பாக்கிஸ்தான் கோரித் தீர்மானத்தை நிறைவேற்றினார். காந்தியாரின் சூதும், நேருவின் அடாவடித் தனமுமே ஜின்னாவைப் பிடிவாதமான அந்த நிலைக்குத் தள்ளின. 15.8.1947இல் பாக்கிஸ்தான் மலர்ந்தது.

பஞ்சாப், சிந்து மாகாணங்களில் இந்துக்களும் முசுலிம்களும் கலந்தே வாழ்ந்தனர். இங்கிருந்த இசுலாமியர் பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் இந்தியாவுக்கும் குடிபெயர நேரிட்டது. அதனால் ஏற்பட்ட சாவுகளும், கொலைகளும் மனித மனம்கொண்ட எல்லோரையும் உலுக்கிவிடக் கூடியவை. குருதிச் சேற்றில் நீந்தி, உயிருக்கு அஞ்சிய இந்துக்களும் இசுலாமியர்களும் மதவெறி காரணமாக அவரவர் பாரம்பரிய இருப்பிடத்தை விட்டுப் பெயர்ந்தனர்.

பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் - வடக்கிலும் வடமேற்கிலும் சரியான எல்லை எது என்பதை - வேண்டுமென்றே தீர்க்காமலே விட்டுச் சென்றான், வெள்ளையன். (2000 வாக்கில் இங்கே வந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இந்த உண்மையைப் போட்டு உடைத்தான்). எல்லைக்கோடு எது என்பது உறுதியானதாக இல்லை. எனவே பாக்கிஸ்தானியரில் சிலர் காஷ்மீரின் வடக்குப் பகுதியின்பேரில் படையயடுத்தனர். அந்த நேரம் ஆட்சியிலிருந்த தோக்ரா அரசன் அரி சிங் (கரன்சிங்கின் தந்தை) இந்தியாவோடு காஷ்மீரை இணைக்க ஒப்பினான்.

முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரை இந்துவான அரிசிங் ஆள முடிந்தது. ஆனால் பாக்கிஸ்தானியரின் படையயடுப்பை அவனால் தடுக்க முடியவில்லை. எனவே காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துவிட முன்வந்தான். அதை ஏற்றுக்கொண்ட நேரு அரசு, காஷ்மீருக்குள் படையை அனுப்பியது. அதற்கு ஏற்ற படை வலிமை இந்தியாவுக்கு இருந்தது. அதே நேரத்தில் ஜூனாகத் சிற்றரசில் இந்து மக்கள் பெரும்பான்மையினர். அதை ஆட்சி செய்தவன் ஓர் இசுலாமிய நவாபு. அவனை இந்துக்கள் எதிர்த்தனர். அவன் ஜூனாகத்தை பாக்கிஸ்தானோ டு இணைக்க முன்வந்தான். பாக்கிஸ்தான் அதை ஏற்றது. ஆனால் போதிய வலிமை இல்லாததால் ஜூனாகத்துக்குப் பாக்கிஸ்தான் படையை அனுப்ப முடியவில்லை.

எனவே பிரிவினையை அடுத்து ஜம்மு - காஷ்மீரின் வடக்குப் பகுதியான மூன்றில் ஒருபகுதி பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது; தெற்கே உள்ள மூன்றில் இரண்டு பங்கு, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
எல்லை வரையறைகள் இரண்டு ஆயின. மொத்தப் பரப்பைக் கொண்ட காஷ்மீருக்கு அப்பால் - வடக்கில் உள்ளது பாக்கிஸ் தானின் தெற்கு எல்லை; பிரியாத காஷ்மீரின் வடக்கு எல்லை. பாக்கிஸ்தான் கைப்பற்றிக்கொண்ட காஷ்மீரின் தெற்கு எல்லை, இந்தியா கைப்பற்றிக்கொண்ட காஷ்மீருக்கு வடக்கு எல்லை.

நேருவின் குடும்பத்துக்கு நெருக்கமாக வேண்டியவர் ஷேக் அப்துல்லா. அரசன் அரிசிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்ததை அவர் ஆதரித்தார். ஆனாலும் காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று கோரினார். அதைப் பொதுமக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கவேண்டும் என்றும் கூறினார்; அய்.நா. அவை அதை ஒத்துக்கொண்டது. ஆனால் இந்தியாவோ அன்றுமுதல் இன்றுவரை அதை அந்தரத்தில் விட்டுவிட்டது. ஷேக் அப்துல்லா சிறையில் தள்ளப்பட்டார். அவர், பிறகு வெளியே விடப்பட்டார்.

1951இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் அப்துல்லா முன்னணியில் நின்றார். தேர்தலில் போட்டியிட 75 வேட்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றுள் 73 விண்ணப் பங்களை ஷேக் அப்துல்லா செல்லுபடியற்றவை என அறிவித்து விட்டு, காஷ்மீரில் வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்தார். அந்த மக்கள்நாயகப் படுகொலையை நேரு ஆதரித்தார். அப்போது, ஷேக் அப்துல்லா நிலம் அற்ற வேளாண் கூலிகளுக்கு நிலத்தைப் பிரித்து அளித்தார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலமற்ற பட்டியல் குலமக்கள் எல்லோருக்கும் அப்போதே வேளாண் நிலம் வழங்கப்பட்டது. அதனால் மக்களின் ஆதரவு கிட்டியது. காஷ்மீருக்கு விடுதலை கோரினார். மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவோடு இணைந்துவிட்டது. இந்தியாவுக்கென்று, "இந்திய அரசமைப்புச் சட்டம்' 1946 - 1949இல் உருவாக்கப்பட்டது. காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதி. அதே நேரத்தில் "ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்' என ஒன்று வரையப்பட இந்தியா ஒத்துக்கொண்டது. ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம், அங்கே செயல்பட்ட அரசமைப்பு அவையில், 17.11.1956இல் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

The Constitution of Jammu and Kashmir
Preamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves –
... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.

1. இது என்ன கூறுகிறது?

ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் “இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் “இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

தேசியக் கொடி

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

144. Flag of the State:

144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக் கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். இவற்றைக்கொண்டு நாம் அறிவது என்ன?

இந்தியாவுடன் ஆன இணைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்பில், அப்பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நாடாக - இந்தியாவின் கூட்டுக்குள் விளங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட எல்லாத் தனி உரிமைகளையும் 1959க்கும் 1965க்கும் இடையில் அடியோடு பறித்துக்கொண்ட பண்டித நேரு என்கிற காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர்தான். மக்கள் நாயகக் காவலர் - இந்தியாவின் முடிசூடா மன்னர் எனப் போற்றப்பட்டார். அவரை அடுத்து வந்த இந்திராகாந்தி அம்மையாரும், 1965க்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பேரில் படையையும், எல்லையோரக் காவல் படையையும், காவல் துறையினரையும் ஏவி பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்கிற பேரால், காஷ்மீரின் தன்னுரிமைக்குப் போராடியவர்களைக் கொன்று குவித்தார்.

1977 தேர்தலில் ஷேக் அப்துல்லா வென்றார். அதன்பின்னர் 1980இல் அங்கு நடந்த தேர்தலின்போது, ஆயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்ட நிலையில், அங்கே சென்று வாக்குக் கோரிய இந்திராகாந்தி, "நான் ஒரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனத்தி என்பதில் பெருமிதம் அடைகிறேன்' என்று கூறி, இந்துமத வெறிக்குக்குக் கூர்சீவி விட்டார்.

நேருவின் பங்காளிக் குடும்பம் போன்ற - பரூக் அப்துல்லாவின் குடும்பத்தினர் இந்தியப் பார்ப்பன - பனியா ஆட்சிக்கு அடிமையாக இருந்துகொண்டு, இலண்டனில் குடியிருந்துகொண்டு, ஜம்மு - காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஆனால் போதும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். பாரதிய சனதா ஆட்சிக் காலத்தில் அவர் நிறைவேற்றிய ஜம்மு - காஷ்மீருக்கான தன்னாட்சித் திட்டம் இந்திய அரசினால் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டது. அதற்கு அவர் எந்த எதிர்ப்பையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த 60 ஆண்டுகளில், பாக்கிஸ்தான் நாடு, இராணுவ ஆட்சியின்கீழ்தான் பெரும்பகுதிக்காலம் அடங்கிக் கிடந்தது. இராணுவ ஆட்சிக்காலங்களிலும், 1965க்குப் பின்னரும் - இந்திய ஆளுகையிலுள்ள காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசும், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரை (விடுதலை பெற்ற காஷ்மீரை)க் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய தேசியவாதிகளும், இந்துத்துவ வாதிகளும் கூக்குரலிட்டனர். இந்திய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்துக்கென்று ஒதுக்கப்படுவதில் பெரிய அளவு தொகையை, ஜம்மு - காஷ்மீர் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கென்றே செலவழித்து நாசப்படுத்திவிட்டனர்.

இப்போது தீப்பற்றி எரியும் காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணதேவி கோயில் ஜம்மு பகுதியில் உள்ளது. அங்கு இந்துக்கள் அதிகம். அமர்நாத் குகைக் கோயில் காஷ்மீர் பள்ளத்தாக்கில், 10000 அடி உயரத்தில் உள்ளது; ஆண்டில் 8 மாதம் இது பனியால் மூடப்பட்டிருக்கும். இங்கு முசுலிம்கள் அதிகம் பேர். இக்கோயிலைக் கண்டுபிடித்தவர் போட்டா மாலிக் என்கிற இசுலாமியர்தான். கடந்த 300 ஆண்டுகளாக அவரின் வழிவந்தவர்கள் இக்கோயிலுக்குப் போகும் உரிமையைப் பெற்றிருந்தனர். 2000இல் உருவாக்கப்பட்ட அமர்நாத் கோயில் நிருவாகக் குழு (றீபுறீ யலிழிrd) பொறுப்பேற்றபிறகுதான், இந்து - முசுலிம் பகைமை வளர்ந்தது.

இன்று தீப்பற்றி எரியக் காரணமான ஜம்மு - காஷ்மீர் அமர்நாத் குகைக் கோயிலுக்கான - வனத்துறை நில ஒதுக்கீடு என்பது 2005இல் முதலில் உருவெடுத்தது. அப்போது நடைபெற்ற நில ஒதுக்கீடு திட்டம் கைவிடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீரில் காங்கிரசும் - மக்கள் சனநாயகக் கட்சியும் (Pம்P) இணைந்து நடத்தும் ஆட்சி நடைபெற்றது. இவ்விரு கட்சிகளிடையேயான ஒப்பந்தப்படி, காங்கிரசுக் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத் முதலமைச்சராக இருந்தார்.

வரப்போகும் 2008 அக்டோபர் தேர்தலில் இந்த இரு கட்சிகளிடையே யார் அதிக இடங்களைக் கைப்பற்றுவது என்கிற போட்டியினால்தான், இந்து மக்களின் வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்கிற சூது மதியினால் - இரண்டு இசுலாமியக் கட்சிகளும் இணைந்து, ஒருமனதாக, 20.5.2008இல் அமைச்சரவைக் கூட்டத்தில் வனத்துறை நிலத்தில் 100 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தனர்.

என்ன முடிவு அது?

அமர்நாத் குகைக் கோயிலுக்கு வசதியான பாதை அமைக்கவும், அப்பாதைப் பகுதியில் மக்கள் குடியேறவும் ஏற்ற வகையில் வனத்துறைக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை - சிறீநகருக்கு வடக்கே சிந்து சரகத்தில் உள்ளதை - சிறீ அமர்நாத் குகைக்கோயில் நிருவாகக் குழுவிடம் ஒப்படைப்பது என்பதே அம் முடிவு. இதற்கு அப்போது மாநில ஆளுநராக இருந்த சின்காவும் ஆதரவு அளித்தார். அரசு நிலத்தை இந்துக் கோயில் வசதிப் பெருக்கத்துக்காக அரசு ஒதுக்குவதை, அங்கே உள்ள இசுலாமியக் கட்சிகள் எதிர்த்தன; இசுலாமிய மக்களை அவை தூண்டிவிட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது இசுலாமியர்கள் அதிகம். 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு இந்துக்கள் குடியேற்றம் ஏற்பட்டால் - காஷ்மீர் பள்ளத்தாக்கில் இசுலாமியர் ஆதிக்கம் குறைந்துவிடும் என்று கூறியே இக்கிளர்ச்சி தொடங்கப்பட்டது. கிளர்ச்சி சூடுபிடித்தவுடன் மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சையத் தான் எடுத்த நிலையிலிருந்து நழுவி விட்டார். இது காங்கரசுக் கட்சிக்கு ஒரு பெரிய தலைவலி யாகிவிட்டது. "பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கு பிடித்த கதையாக' - இது இந்து - முசுலிம் கலவரமாக வெடித்துவிட்டது.

இந்து - முசுலிம் இரு தரப்பினரும் மதத்தை மட்டுமே மய்யமாக வைத்துக் கூறும் பல செய்திகள் பொய்யானவை. காட்டாக, இப்போது உள்ள காஷ்மீர் சட்டமன்றத்தில், ஜம்மு பகுதி மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கை விகிதத்துக்குச் சமமாக உறுப்பினர் எண்ணிக்கை இல்லை என்று இந்துக்கள் கூறுகின்றனர்.
இது உண்மை இல்லை. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்குப்படி, ஜம்முவின் மக்கள்தொகை 44,29,887 ஆகும். இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 37பேர். அதாவது 1,19,726 மக்களுக்கு ஓர் உறுப்பினர் வீதம் இது உள்ளது.

காஷ்மீரின் மக்கள்தொகை 54,76,970. இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 46 பேர். அதாவது 1,19,064 மக்களுக்கு ஓர் உறுப்பினர். இரண்டு தரப்பினர் கூறுவதும் ஒரு பொய் என்பதை இது உணர்த்தும். லடாக் என்ற மூன்றாவது பகுதியின் மக்கள்தொகை 2,36,539. இவர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடங்களைப் பெற்றிருப்பதாக பாரதிய சனதாக் கட்சி குற்றம் சாட்டுகிறது. அங்கு வாழ்வோர் பவுத்தர்கள். அவர்கள்பேரில் உள்ள வெறுப்பே இக்கூற்றுக்குக் காரணம்.

இந்தச் சூழலில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு 100 ஏக்கர் ஒதுக்கப்பட்டதை அரசு இரத்துச் செய்தது. இதை எதிர்த்து இந்துக்களால் நடத்தப்படும் போராட்டத்தை அமர்நாத் யாத்திரைப் போராட்ட சங்கம் - தலைமை ஏற்று நடத்துகிறது. இசுலாமியர்கள் சார்பில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், 5.8.2008, 6.8.2008, 7.8.2008 மூன்று நாள்களில் ஜம்முவில் உள்ள முசுலிம்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், ஜம்மு வழியாகப் பண்டங்கள் காஷ்மீர் பகுதிக்கு வருவதைத் தடுப்பதை எதிர்த்தும் உண்ணாநோன்பை மேற்கொண்டார். காவல்துறையால் அவர் அகற்றப்பட்டார்.

காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கலவரத்தைத் தடுக்க வேண்டி, 10 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமல் படுத்தப்பட்டது. காஷ்மீர் பகுதி இசுலாமியர் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஊரடங்குத் தடையை மீறி ஊர்வலம் சென்ற மக்களை அடக்கிடவேண்டி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காஷ்மீர் பகுதியில் 11.8.2008இல் 6 பேரும்; 12.8.208இல் 12பேரும்; ஜம்மு பகுதியில் 12.8.2008இல் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டனர். அடிக்க அடிக்கப் பந்து மேலே எழுவதுபோல, இந்திய அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க காஷ்மீர் இசுலாமியக் கட்சிகளின் கோரிக்கைகள் அதி தீவிரம் அடைந்தன. பிரிவினை கோரும் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தீவிரவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, "நாங்கள் இசுலாமியர்கள் - எனவே பாக்கிஸ்தானிகள். காஷ்மீர் பாக்கிஸ் தானோடு இணையவேண்டும்' என்ற முழக்கத்தை எழுப்பி அதிர வைத்துள்ளார். அதே கட்சியின் மிதவாதப் பிரிவினர் "சுதந்தரக் காஷ்மீரே எங்கள் இலட்சியம்' என முழங்குகின்றனர்.

1988முதல் 20 ஆண்டுகளாக எந்தவிதமான தீர்வுக்கும் வழிகாணாமல், அடக்குமுறையும் கொல்லுவதும்தான் தீர்வு என முட்டாள்தனமாகவும், ஆணவமாகவும் இந்திய அரசு - குறிப்பாகக் காங்கிரசுக் கட்சி அரசு நினைக்கிறது.
இராணுவத்திலும், இந்திய உள்துறை, அயலுறவுத்துறை, பிரதமர் அலுவலகச் செயலகம் இங்கெல்லாம் உயர் பதவிகளி லுள்ள பார்ப்பனர்களும், மலையாளிகளும் இதற்கு ஏற்ற வழிவகைகளையே ஆட்சியாளர்களுக்குக் கூறுகின்றனர்.

இது போதாது என்று, பாரதிய சனதாக் கட்சியினர்,

1. அகண்ட பாரதம் அமைப்போம். பாக்கிஸ்தான் கட்டுப் பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரைக் கைப்பற்றுவோம்;
2. இந்திய அரசமைப்பில் விதி 370இன்கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள தனி உரிமையை நீக்குவோம்;
3. ஜம்மு, காஷ்மீர் இரண்டையும் தனித்தனி மாநிலங் களாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் பிரிப்போம்;
4. இந்தியப் பண்பாடு, இந்துத்துவப் பண்பாடு என்பதை எல்லோரும் ஏற்கச் செய்வோம்;
எனக் கொக்கரித்தது. அவற்றை முன்வைத்தே - மீண்டும், வரும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்க விரும்புகின்றனர். ஏன் அப்படிப் பேசுகின்றனர்?

அரசமைப்பை அறியாத மூடத்தனம்

இந்தக் கட்சியின் அடியாள் படையான பஜ்ரங்தள் என்னும் குரங்குப்படையின் அனைத்திந்தியத் தலைவர் வினய் கட்டியார் என்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.பி.யை 11, 12.12.2000 அன்று தில்லியில் அவருடைய வீட்டில் நானும் எம் தோழர்களும் சந்தித்தோம்.

"இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இதாங்களா?' என்று, நான் தந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடனே கேட்ட, அப்படிப் பட்ட அறிவுக்கொழுந்துகளை(!) வைத்துக்கொண்டு, இந்துத்துவ வெறியை வளர்த்து, இசுலாமியருக்கும், கிறித்தவருக்கும் இந்தியாவில் என்ன வேலை என்கிற போக்கில் பாரதிய சனதாக் கட்சி செயல்படுகிறது.
இப்படிப்பட்ட மூடர்கள் எல்லாப் பாராளுமன்ற முறைக் கட்சிகளிலும் உள்ளனர் என்பது உண்மை. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியே தெரியாத அரசியல்கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், வழக்குரைஞர்களும் உள்ள இந்நாட்டில், ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் என ஒன்று இருப்பது எப்படித் தெரியமுடியும்? (நான் வைத்திருப்பது 1970ஆம் ஆண்டையப் பதிப்பு).

இவை தெரியாததனால்தான், இன்றுள்ள ஜம்மு - காஷ்மீர் - லடாக் பகுதிகள் உள்ளடங்கிய காஷ்மீருக்கு முழுத் தன்னாட்சி தரப்படுவது மிகவும் இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொள்ளாமல், - 1959 முதல் 50 ஆண்டுகளாகக் காஷ்மீரை ஒரு போர்க்களமாக இந்திய அரசு ஆக்கி வைத்திருப்பதும், 2009க்குப் பிறகும் அப்படியே அடக்கி வைத்திருக்க விரும்புவதும் மிகவும் காட்டாண்டித்தனமானதும், கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.

தேசிய இனவிடுதலை வேண்டுவோருக்கு

இந்திய அரசே!

1. 26.1.1957இல் அமலுக்கு வந்த ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தை முழுவதுமாக அமல்படுத்து.
2. 1959, 1960, 1961, 1963, 1965 வரையில் காஷ்மீர் அரசமைப்பிலிருந்த உரிமைகளை முடம்படுத்திடவேண்டி, இந்திய அரசமைப்பில் செய்த திருத்தங்களை நீக்கி விடு.
3. ஜம்மு - காஷ்மீர் - லடாக் அடங்கிய அய்க்கிய ஜம்மு - காஷ்மீருக்கு முழுத் தன்னாட்சி உரிமையை வழங்கிடு.
4. பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீருக்கும், இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீருக்கும் இடையிலான எல்லைக் கோட்டைத் திட்டவட்டமாக வரையறை செய்,

என்னும் கோரிக்கைகளை முன்வைத்து, மொழிவழித் தேசிய இன விடுதலையில் பற்றுக்கோடு உள்ள ஒவ்வோரு அரசியல் அமைப்பும், கட்சியும் பரப்புரை செய்யவேண்டும். அதே தன்மையிலான முழுத் தன்னாட்சி உரிமை - தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராட்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் முதலான எல்லா மொழிவழி மாநிலங்களுக்கும் கிடைத்திடவேண்டி அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் மேற்கொள்ளவேண்டும்.

50 ஆண்டுகளாக உரிமை பறிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக நசுக்கப்பட்ட காஷ்மீர் இன்று பற்றி எரிகிறது. இது இந்திய அடக்கு முறையிலிருந்து உறுதியாக விடுபடும். அதேபோல் தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் - உறுதியாக 2050க்குள் முழுத் தன்னாட்சி பெற்ற மாநிலங்களாக அமைந்தே தீரும். அப்படி அமைக்கப்படுவதற்கு இடையே இந்தியா பற்றி எரியும். அது நடவாமல் தமிழகத்துக்கோ, மற்ற மொழி மாநிலங்களுக்கோ தன்னுரிமை வராது; வரமுடியாது!

முழுத் தன்னாட்சி பெற்ற காஷ்மீர் மலரட்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com