Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

எல்லா வகுப்பினருக்கும், 100 இடங்களையும் விகிதாசாரம் பிரித்துத் தந்து வகுப்புரிமை வழங்கப்பட, அரசமைப்பைத் திருத்திடவேண்டி ஆவன செய்யுங்கள்
வே. ஆனைமுத்து

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு, சால வணக்கம்.

சிந்தனையாளன்


ஆசிரியர்
வே. ஆனைமுத்து

ஆசிரியர் குழு
து. தில்லைவனம்
க. முகிலன்
தமிழேந்தி
சங்கமித்ரா
வையவன்
இரா. பச்சமலை
சி. நடராசன்
மங்கலம் அரசன்

அனைத்துத் தொடர்புகளுக்கும்:
"சிந்தனையாளன்'
19. முருகப்பாதெரு
சேப்பாக்கம்
சென்னை - 05.
தொலைபேசி :
044 - 2852 2862.
24 கோடி மக்களாக “இந்தியர்கள்'' இருந்தபோது 1885இல் மும்பையில் கூடியதுதான் இந்திய தேசியக் காங்கிரசின் முதலாவது மாநாடு. 24 கோடி மக்களை அடக்கி ஆளுவதற்கு அன்று இந்தியாவில் உயர் பதவியிலும், வேலையிலும் இருந்த வெள்ளையர் வெறும் 10,000 பேர்களே. இது இந்தியருக்கு அவமானம் என்று காங்கிரசு தலைவர்கள் கருதினார்கள். அது மிகவும் சரியானதே. அதனால்தான், “இந்திய அரசு ஊழியத்தை இந்தியர் மயமாக்குவோம்'' என்ற தீர்மானத்தை இந்தியத் தேசியக் காங்கிரசு 1885இல் நிறைவேற்றியது. அதுவும் பாராட்டத் தக்கதே.

1860 முதற்கொண்டும், 1885க்குப் பிறகும் இந்திய அரசு ஊழியத்தில் பங்குபெற்ற “இந்தியர்களின்'' எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால் அப்படிப் பதவிகளைப் பெற்ற இந்தியர்களில் 100க்கு 95 பேர்கள் இந்தியப் பார்ப்பனர்களாகவே - “இந்துக்களாகவே'' இருந்தார்கள். அதைப் பார்த்தவர்களில், இசுலாமியர்கள் தான், “நாங்கள் இந்தியர்கள் இல்லையா? எங்களுக்கு உயர் பதவிகளில் பங்கு இல்லையா?'' என்று வெள்ளையர்களிடம் கேட்டார்கள். அதுவும் மிகவும் நியாயமானதே. அந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு இசுலாமியர்களுக்கு சட்டமன்றப் பதவிகளில் 1909இல் தனி இடஒதுக்கீடு அளித்தான் வெள்ளையன். அதனை, 1916இல் நடைபெற்ற லாகூர் காங்கிரசு மாநாடும் ஏற்றுக் கொண்டது.

இசுலாமியருக்கு வெள்ளையன் வழங்கியது வகுப்புவாரி நியாயம்தான் என்பதை உணர மறுத்தவர்கள் இந்தியப் பார்ப்பனர்கள்தாம். பார்ப்பனர்களின் குரலை அன்று ஓங்கி ஒலித்தவர், நம் மகாகவி சுப்பிரமணிய பாரதிதான். அவர்கள் பார்வையில் மட்டும் அது, “வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சி'' என்று பட்டது. எனவே இசுலாமியர்களை “வகுப்பு வெறியர்கள்'' என்று வசை பாடினர். ஆனாலும் 1909 முதல் 1946 வரை இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களுக்குத் தனித் தொகுதிகள் இருந்தன. வெள்ளையர் வெளியேறிய 1947இல் அது அடியோடு ஒழிக்கப்பட்டது.

ஏறக்குறைய 1912இல் தென்னாட்டுத் திராவிடர்களுக்கு, “100க்கு 97 பேர்களாக உள்ள பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு, ஏன் சட்டமன்றப் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை?'' என்ற சிந்தனை முகிழ்த்தது. அச் சிந்தனை அவர்களுக்கு ஏன் தோன்றியது? சென்னை மாகாணத்திலிருந்து இந்தியச் சட்டமன்றத்தில் இடம் பெற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். அது தவறு என்பதால்தான் அச் சிந்தனை தோன்றியது.

1912இல் முகிழ்த்த அச் சிந்தனைக்கு ஒரு வடிவத்தை அளித்த மேதைகள் டாக்டர். சி. நடேச முதலியார், டாக்டர். டி.எம். நாயர், சர்.பி. தியாகராயர், சர். ஏ. இராமசாமி முதலியார், கூர்மா வெங்கட்ட ரெட்டி நாயுடு ஆகியோர் என்பதை நாம் அறிந்துள்ளோம். அவர்கள் இலண்டன் வரையில் சென்று போராடி - வாதாடி - 1919இல் சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் “பார்ப்பனர் அல்லாதாருக்கு'' என்று 65 தனித் தொகுதிகளைப் பெற்றுத் தந்ததால்தான் - நம் திராவிடர் கட்சி ஆட்சி 17.12.1920இல் சென்னை மாகாணத்தில் தோற்றம் பெற்றது. 1920இல் தொடங்கி 1937 வரையிலும்; பின்னர் 1967 தொடங்கி 1975 வரையிலும், பின்னரும் தங்கள் தலைமையில் திராவிடர் கட்சி ஆட்சி நடைபெறுவது பற்றிய வரலாறு - எல்லோரையும்விடத் தங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

நம் மாமேதைகள், அரசு வேலைகள் எல்லாவற்றிலும் “100 விழுக்காடு இடங்களையும் எல்லா வகுப்பு மக்களுக்கும் பங்கு போட்டு அளிக்கிற வகுப்புவாரி உரிமை'' ஆணையை 1921இலேயே பிறப்பித்தனர்.
100க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களுக்கு 16% இடங்களைப் பிரித்து வழங்கினார்கள். அது அவர்களின் எண்ணிக்கையைப் போல் 5 மடங்கு இருந்தும், அது போதும் என்கிற நியாய உணர்வு பார்ப்பனர்களுக்கு எழவில்லை. அதுவரையில் 100க்கு 80 பங்கு அரசு வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள், கருநாகம் போல் சீறினார்கள். அதையயல்லாம் மிஞ்சித்தான் - சென்னை மாகாண அரசு வேலைகளிலும், அரசு கல்வியிலும், 1947 முதல் (எம்.எஸ்.எண். 3447 / 21.11.1947 ஆணையின்படி,)

1. பார்ப்பனருக்கு 14%
2. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு 44%
3. பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு 14%
4. இசுலாமியர்களுக்கு 7%
5. கிறித்தவர்களுக்கு 7%
6. ஆதித் திராவிடர்களுக்கு 14%
என, 100 விழுக்காடு இடங்களும் 6 வகுப்புகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோருக்கும், ஆதித் திராவிடருக்கும் விகிதாசாரம் இடம் வேண்டும் என்கிற கோரிக்கையை 1934இல் முன்மொழிந்தார் தந்தை பெரியார்; 1946இல் அதை வலியுறுத்தினார். அதனை ஏற்று, மேலேகண்ட ஆணையைப் பிறப்பித்துச் செயற்படுத்திய முதலாவது காங்கிரசு முதல்வர் ஓமந்தூர். "பெரியவளவு இராமசாமி ரெட்டியார்' ஆவார்.

“பாம்பின் கால் பாம்பு அறியும்'' என்பது பழமொழி. தன் ஒரே மகன் சுந்தரம், சேரன் மாதேவியில் தேசிய வீரர்கள் பயிற்சிக் கூடத்தில், இரண்டு பார்ப்பனச் சிறுவர்களால் அடிக்கப்பட்டபோது, அதைக் கூறி அழுத மகனை ஈ.வெ.ரா.விடம் ஆற்றுப்படுத்தினார், ஓமந்தூரார். அதே ஓமந்தூரார் பார்ப்பனர் அல்லாதார் இன உணர்வு காரணமாகவே ஈ.வெ.ரா. அவர்களின் கோரிக்கையை ஏற்று, 21.11.1947இல், மேலேகண்டவாறு, 100 விழுக்காட்டு இடங்களையும் 6 வகுப்புகளுக்குப் பங்கீடு செய்து அளித்தார். இந்தியத் துணைக் கண்டத்திலேயே, ஓமந்தூரார்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதலாகத் தனி இடஒதுக்கீடு வழங்கினார்.

அது நியாயம் என்பதை மெத்தப் படித்த பார்ப்பன வெங்கட்டராம சாஸ்திரிகளைப் போன்றவர்கள் உணர மறுத்தனர். காந்தியாரிடம் அவர்கள் காவடி தூக்கிச் சென்று கோள் மூட்டினர். முதலில் அவர்களை நம்பிய காந்தியார், ஓமந்தூராரை நேரில் அழைத்துப் பேசியபின், தென்னாட்டுப் பார்ப்பனரை அழைத்துச், சீறிவிழுந்து கண்டித்தார். காந்தியாரின் கண்டனத்துக்கு உள்ளான பார்ப்பனர்கள் சென்னையில் கமுக்கமாகக் கூடி, "இனிமேல் காந்தி உயிரோடு இருப்பது பார்ப்பனர் வகுப்புக்கு பெரும் ஆபத்து' என்று தீர்மானமே நிறைவேற்றினார்கள். அடுத்த 60 நாள்களுக்குள், தென்னாட்டுப் பார்ப்பனரின் உள்ளார்ந்த விருப்பத்தை வடநாட்டு சித்பவன் பார்ப்பனரான நாதுராம் விநாயக் கோட்சே நிறைவேற்றினார். அவர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றார். பார்ப்பனரின் சாதி வெறியால் உயிர் பறிக்கப்பட்ட காந்தியாருக்கு, மனங்கசிந்து இரங்கல் செய்தி விடுத்த பெரியார், காந்தியாருக்கு அப்படி நேரும் என்பதை 1927 சூலையிலேயே பெங்களூரில், குமர பார்க்கில், அரசு விருந்தினர் மாளிகையில் நேருக்கு நேர் கூறியிருந்தார். அது நடந்துவிட்டதே என்று எண்ணித்தான் பெரியாரின் நெஞ்சம் 30.1.1948இல் அழுதது; புலம்பியது.

சென்னை மாகாண எல்லைக்குள் இயங்குகிற எல்லா நடுவண் அரசு அலுவலகங்களிலும் - சென்னை மாகாண அரசு செயல்படுத்துவது போலவே, பார்ப்பனருக்கும், (14%), பார்ப்பனரல்லாதாருக்கும், (44%), ஆதித் திராவிடருக்கும் (14%) தனித் தனி இடஒதுக்கீடு பெற வேண்டுமென்கிற பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, அன்றைய திராவிடர் இயக்க முதலாவது அமைச்சர் பொப்பிலி அரசரின் வேண்டுகோளை 1935இல் நிறைவேற்றித் தந்தார், சர்.ஏ. இராமசாமி முதலியார். அவர்கள் பெற்றுத் தந்த ஆணைதான் 1935இலேயே நடுவண் அரசு வேலையில் முதன் முதலாக நடைமுறைக்கு வந்த வகுப்புவாரி உரிமை ஆணையாகும். இது நியாயமானது. இந்த நியாயமான ஆணையை வெள்ளையர் வெளியேறிய அடுத்த மாதத்திலேயே நீக்கியவர்கள் தில்லி அரசில் 1947இல் ஆதிக்கம் செய்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே. இந்த நிலையைக் கண்டு கொதித்தார், பெரியார்.

மத்திய அரசு வேலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப் பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை 1973வரை நடுக்கமின்றி முன்வைத்தார், பெரியார். 1935இலேயே சென்னை மாகாண ஆதித் திராவிடருக்கு 14% இடஒதுக்கீட்டைத் திராவிடக் கட்சி ஆட்சிதான் பெற்றுத் தந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள ஆதித் திராவிட மக்களுக்கு மத்திய அரசு வேலையில் 8.33% இடஒதுக்கீட்டை 11.8.1943இல் பெற்றுத் தந்தார், மேதை டாக்டர். அம்பேத்கர். ஆனால் சென்னை மாகாணத்தில், ஆதித் திராவிடருக்கு 1928-29இலேயே மாகாண அரசு வேலையில் தரப்பட்ட இடஒதுக்கீடு, 1950வரையில் வட இந்தியாவில் எந்த மாகாணத்திலும் தரப்படவில்லை.

மேதை அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பில் விதி 16(4) நடைமுறைக்கு வந்த பிறகுதான் மற்ற மாகாணங்களில் ஆதித் திராவிடருக்கு - பட்டியல் வகுப்பினருக்குத் தனி இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே, இரண்டாவது தடவையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராக விளங்கிய தாங்கள், 1973இல், வட இந்தியாவில் அலகாபாத்தில், நடுவண் அரசு வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தீர்கள். அதனை அடுத்து இந்தியக் குடியரசு தலைவரிடம் 8.5.1978இல், அதிகாரப் பூர்வமாக, முதன் முதலாக அதே கோரிக்கையை முன்வைத்த முதலாவது கட்சி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிதான். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 25.3.1979இல் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடமும், 25.9.1979இல் தலைமை அமைச்சர் சரண்சிங் இடமும் நேரில் வாதாடி, அவர்களுக்கு இதன் முதன்மையை விளக்கி வாக்குறுதிகளைப் பெற்ற முதலாவது கட்சி மா.பெ.பொ.க.

எங்களின் இந்தக் கோரிக்கைக்கு வலிமை சேர்த்திட வேண்டி, தில்லியில் போராட்டம் நடத்திடத் திட்டமிட்ட எங்களுக்கு உரம் ஊட்டி, சேலத்தில், 28.10.1979இல் எங்கள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றி, தாங்கள் தில்லிப் போராட்டத்துக்கு வாழ்த்துக் கூறினீர்கள். தங்களோடு உ.பி. முன்னாள் முதல்வர் இராம் நரேஷ் யாதவ், நடுவண் அரசின் இணை அமைச்சர் கரூர் கே. கோபால், பீகார் தோழர் இராம் அவதேஷ் சிங், கேரள மாநில, ஆந்திர மாநில, கருநாடக மாநிலத் தலைவர்கள் ஆகியோர் சேலத்தில் வாழ்த்துக் கூறி உரையாற்றினர். சேலத்தில் மேற்கொண்ட முடிவின்படி 15.11.1979 முதல் 1.12.1979 வரையில் தில்லி மாநகரில் நாங்கள் நடத்திய போராட்டம்தான், வகுப்புவாரி உரிமை வரலாற்றில், தில்லித் தலைநகரில் நடந்த முதலாவது வகுப்புரிமைப் போராட்டமாகும்.

தாங்கள் 1989இல் மூன்றாவது தடவையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோதுதான், தமிழ்நாட்டு அரசில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இடஒதுக்கீடும், பழங் குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் மொத்த அளவு அப்போதுதான் 69% ஆயிற்று. அதே சமயத்தில் மா.பெ.பொ.க., தி.க., தி.மு.க., பா.ம.க., இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 6.8.1990இல் மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்துகிற அறிவிப்பைத் தலைமை அமைச்சர் மதிப்புக்குரிய வி.பி. சிங் வெளியிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் அறிவிப்புச் செய்த அந்த நாளில் எங்களின் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவைத் தோழர்கள், தில்லியில், இராம் அவதேஷ் சிங் தலைமையில் பேரணி நடத்திக் காவலர்களால் தாக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நடந்தது.

13.8.1990இல் வி.பி. சிங் பிறப்பித்த நிருவாக ஆணையை, 1991 செப்டம்பரில் சிதைத்த மாபெருங் கேட்டினைத் தலைமை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் செய்தார். இந்த இரண்டு தலைமை அமைச்சர்களின் ஆணைகளையும் எதிர்த்து, இந்திரா சகானி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, 16.11.1992இல் வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பு: 1. 1970 முதல் அரசு வேலைகளில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பெற்று வந்த பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் தலைமேல் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டது. 2. பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு கல்வியிலோ, வேலையிலோ 27%க்குமேல் கொடுக்கப்படக் கூடாது என முளை அடித்து, கயிற்றால் கட்டிப் போட்டது. 3. முதலாவது தலைமுறைக்காரராக விளங்கும் படித்த - வேலையிலிருக்கிற பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் இடஒதுக்கீடு பெறத் தகுதி அற்றவர்கள் என்று கூறி அவர்களை அடித்துத் தள்ளியது. 9 நீதிபதிகள் என்கிற - ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் எதிரிகளான அவர்கள் கூறிய தீர்ப்பு வகுப்புவாரி உரிமைக்கு உலை வைப்பது என்பதை விளக்கி, 19.11.1992இல் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலக வளாகத்தில் அலுவலர்கள் பொதுக் கூட்டத்தில் இரா. பச்சமலை தலைமையில் கடுங்கண்டனம் தெரிவித்து, நான் உரையாற்றினேன்.

1991 அக்டோபரிலேயே இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு ஒரே தீர்வு - விகிதாசார வகுப்புவாரி இடஒதுக்கீடுதான் என்பதை வலியுறுத்தி, புது தில்லியில் மூன்று நாள்கள் மாநாடுகளை நடத்திய மா.பெ.பொ.க.வினர் குடியரசின் முன்னாள் தலைவர் கியானி ஜெயில் சிங், உயர்நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் ஆகியோரின் பேராதரவைத் திரட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலிமை சேர்க்கவேண்டி 25.12.1993இல், சென்னை அண்ணா அறிவாலயத்தில், மா.பெ.பொ.க. நடத்திய அனைத்திந்திய விகிதாசார இட ஒதுக்கீட்டு மாநாட்டினை, அன்று தாங்கள்தான் தொடக்கி வைத்துப் பேருரை ஆற்றினீர்கள்.

இத்தனை முயற்சிகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆகிவிட்டதுதான், இன்று இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியல் குலத்தாருக்கும் ஏற்பட்டுவிட்ட மாபெரும் கேடுகளுக்குக் காரணம்.
இதனை, அருள்கூர்ந்து மனங்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்.

1. 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு எவ்வளவு கொடுமையான - மக்களுக்கு எதிரான - மூடத்தனமான தீர்ப்பைச் சொன்னாலும் அது, "நீதிபதிகள் செய்த சட்டம்' என்ற சட்ட வலிமை பெற்றதாக ஆகிவிடுகிறது. அது செல்லாததாக ஆக்கப்படவேண்டும் என்றால், அதற்கு இரண்டே வழிகள் மட்டும் உண்டு.

ஒன்று : 11 நீதிபதிகள், (அ) 13 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, 9 நீதிபதிகள் செய்த தீர்ப்புச் செல்லாது என்று தீர்ப்புப் பெறவேண்டும். இதனை நடுவண் அரசோ, பாதிப்புக்கு ஆளானவர்களோ செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு : 9 நீதிபதிகள் அளித்த தீர்ப்பைச் செல்லாததாக ஆக்கிட ஏற்ற அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றியிருக்க வேண்டும். இரண்டாவது வழியைப் பட்டியல் வகுப்பு அமைச்சர்களும், பட்டியல் வகுப்பு 119 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 1995 இலேயே மேற்கொண்டனர். அவர்கள் உரிமையைக் கோருவதில் காட்டிய ஆர்வத்தை, சட்ட முன்வரைவை வடிவமைப்பதில் காட்டவில்லை. எனவே பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடியினருக் கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு செல்லுபடியாவதற்கான அரசமைப்பு 16(4)பு என்பதை 17.6.1995இல் நிறைவேற்றினர்.

790 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் நிறைவேற்றிய அந்தத் திருத்தம் சட்டப்படி செல்லாது என்று உடனடியாக மா.பெ.பொ.க. மட்டுமே சுட்டிக் காட்டியது. அதனை எவருமே சட்டை செய்யவில்லை. மா.பெ.பொ.க. கூறியதைப் போலவே, 1999 இறுதியில் உச்சநீதி மன்றம் கூறியது. "அதன் பிறகாவது விழித்துக் கொள்ளுங்கள். மேதை அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் விதி 335 என்பது பட்டியல் குலத்தாரையும், பழங்குடியினரையும் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. முதலில் அதை அடியோடு நீக்குங்கள். அதன்பிறகு 16(4)ய என்று புதிதாக ஒரு திருத்தம் செய்யுங்கள்' என்று, 2.1.2000இல் மா.பெ.பொ.க. தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகும் - அம்பேத்கர் செய்த சட்டத்தை இவர்கள் குறை சொல்லுகிறார்களே என்று நினைத்தோ அல்லது அறியாமை யினாலோ, 16(4)ய என்கிற புதிய விதியை 9.6.2000இல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

மா.பெ.பொ.க.வினர் நயமாகச் சொன்ன அதே செய்தியை உச்ச நீதிமன்றம், முகத்தில் அறைவதுபோல் கூறி 16(4)ய செல்லாது; இது முட்டாள்தனமானது; விதி 335அய் உடனே நீக்குங்கள் என்று கூறியது. அதன்பிறகு விதி 335இல் ஒரு பகுதித் திருத்தம் 16(4)ய என்பதைத் தான் 8.9.2000இல் நாடாளுமன்றம் செய்தது. இன்று, அதுவும் போதாது என்று பட்டியல் குலத்தார் உணர முன்வந்துள்ளனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்டோர் - குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் என்ன செய்தனர்? உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யவும் வழிதேடாமல் - அரசமைப்பு விதிகள் 15(4), 16(4), 29(2), 338(10) இவற்றை மாற்றி அமைத்திடவும் முயலாமல், தமிழ்நாட்டில் 1989 முதல் நடப்பில் உள்ள 50 + 19 = 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றச் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி, அதனை நாடாளுமன்றம் ஏற்கச் செய்து, 9 ஆவது அட்டவணையில் சேர்த்துவிட்டார்கள். அது 69% விழுக்காடு என்பதில் அடங்கியுள்ள - பிற்படுத்தப்பட்டோருக்கான 50% ஒதுக்கீட்டைக் காப்பாற்றிட உதவாது என்பது இன்றளவும் இவ்வகுப்புத் தலைவர்களுக்குப் புரியவில்லை.

விதி 31-இ (31-ளீ)யின் கீழ் 1993இல் சட்டம் செய்யப்பட்டு, அட்டவணை 9இல் வைக்கப்பட்டுவிட்டதால், நீதிமன்றம், தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% ஒதுக்கீட்டில் தலையிட முடியாது என்கிற எண்ணம், 1995இலேயே உச்சநீதி மன்றம் கூறிய கருத்தின் - ஆணையின் மூலம் அடிவாங்கிவிட்டது. 1995 முதல் மருத்துவப் படிப்பிலும், 2005 முதல் பொறியியல் படிப்பிலும் - பிற்படுத்தப்பட்டோருக்கு 50% ஒதுக்கப்பட்டு, பிறகு, மொத்த இடஒதுக்கீடு 50% மட்டுமே இருந்தால், பொதுப் போட்டிக்கு என்று இருக்கிற இடங்களைப் புதிதாக ஆண்டுதோறும் உருவாக்கி, அதில் எல்லா வகுப்பினரும் போட்டி போட்டுத் "தகுதி' அடிப்படையில் இடங்கள் பெறலாம் என்கிற நடைமுறையே தமிழக அரசினரால் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் மேற் கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டரசினர் நிறைவேற்றி அளித்த, “69% இடஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டம் செல்லும்'' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிட முடியாது.

அதேபோல், பொருளதாரத்தில் வளர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினரை, இடஒதுக்கீடு பெற அனுமதிக்க முடியாது என்பதிலிருந்தும் பிற்படுத்தப்பட்டோருக்கு விடுதலை கிடைக்காது. இன்று, 20 உயர் நீதிமன்றங்களில் உள்ள 560 நீதிபதிகளுள் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் 160 பேர்கள்கூட இல்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி - பழமைவாதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் பட்டியல் வகுப்பினர் என்கிற ஒரு மன நிறைவைத் தவிர, அங்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்க்கு ஆதிக்கமோ, விகிதாசாரப் பங்கு அளவோ இல்லை.

இந்த நிலையில், பிடிவாதமாகச், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் உண்மையான ஈடுபாடு உள்ள தமிழகத்தைப் பலப்பல கட்சியினர் இடஒதுக்கீட்டு அளவை உறுதி செய்கிற அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்கிற வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள் என்று கோரிக்கை வைப்பது - அதிலும் தங்கள் தலைமையிலுள்ள தி.மு.க. இப்படிக் கோருவது எப்படிப் பொருத்தமும், தீர்வும் ஆகும்? அப்படிச் சட்டம் செய்தால், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு தமிழ்நாட்டுக் கல்வியிலும், வேலையிலும் மட்டும்தானே தமிழ்நாட்டு அரசு இடஒதுக்கீட்டு அளவை உறுதி செய்யமுடியும்? நடுவண் அரசுக் கல்வியிலும், நடுவண் அரசு வேலையிலும் தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவை உறுதி செய்திட, மாநில அரசுக்கு இதன்மூலம் எப்படி அதிகாரம் வரும்?

இன்றைய தமிழ்நாட்டு அரசில் பட்டியல் குலத்தாருக்கு 18% இடஒதுக்கீடு வழங்குகிறீர்கள்; (இது 19 ஆக்கப்பட வேண்டும்); பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு வழங்குகிறீர்கள். இது இந்த இரண்டு வகுப்பினருக்கும் உரிய - சட்டப்படிக்கான விகிதாசார இடஒதுக்கீடு. எப்படி இவர்களுக்கு விகிதாசாரம் வழங்கப் படுகிறது? விதிகள் 15(4), 16(4) இவற்றில் விகிதாசாரம் என்கிற கோட்பாடு இல்லை என்றாலும், மேதை அம்பேத்கர் 1947இலேயே பட்டியல் குலத்தாருக்கு விகிதாசார இட ஒதுக்கீட்டை நடுவண் அரசில் பெற்றுத் தந்துவிட்டார். எனவே, தொடர்ந்து வரும் நடப்பு என்பதால் விகிதாசார இடஒதுக்கீடு, நடுவண் அரசில் இந்திய அளவில், பட்டியல் வகுப்பினருக்கு 15% இருக்கிறது; அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 18%, கேரளத்தில் 10%, ஜம்மு - காஷ்மீரில் 8% என அந்தந்த மாநிலத்தில் உள்ள பட்டியல் வகுப்பினரின் மக்கள் எண்ணிக்கைக்குச் சமமாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

“சமுதாயத்தில் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற தகுதி பெற்றவர்களுக்கு விகிதாசார இடஒதுக்கீடு உண்டு'' என்று அரசமைப்பு விதியில் எழுதப்பட்டால்தான், அதைக் கொண்டு, இந்திய அளவில், இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய 50% ஒதுக்கீடு கிடைக்கும்; மதச் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு 10% ஒதுக்கீடு கிடைக்கும். அந்த அடிப்படை சட்டப்படி உறுதி செய்யப்பட்டால்தான், தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசாரமாக 70% இடஒதுக்கீடு கிடைக்கும். அதேபோல் அந்தந்த மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார இடஒதுக்கீடு கிடைக்கும்.

எனவே, விதிகள் 15(4), 15(5), 16(4), 338(10) இவற்றை, 100 விழுக்காடு இடங்களையும் - 1. பட்டியல் பழங்குடியினர், 2. பட்டியல் வகுப்பினர், 3. இந்து முற்பட்ட வகுப்பினர், 4. இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 5. இசுலாமியர், 6. கிறித்தவர், 7. சீக்கியர், 8. மற்ற சிறுபான்மையினர் ஆகிய எட்டு வகுப்பு களுக்கும் அவரவர் மக்கள்தொகை விகிதாசாரப்படி கல்வியிலும்; நடுவண் அரசிலும் - மாநில அரசுகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் வகையில் திருத்தம் செய்யவேண்டும் என இந்திய அரசினர்க்கு வேண்டுகோள் விடுத்து, இப்போதைய தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தொடரில் அருள்கூர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.
அத்துடன் கூட, இன்னொரு பெரிய அநியாயமான - 2006ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய அரசு முன்மொழிந்த - தொழில்நுட்பக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய சட்ட முன்வரைவுக்குத் தாங்கள் காட்டிய கடும் எதிர்ப்பையும் மீறி, 27% இடஒதுக்கீடு தருவதற்கான சட்டம் என்பதாக, 2007இல் ஓர் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதை இயற்றுவதற்கான மொய்லி முழு பரிந்துரை மூடத் தனமானது. இதுபற்றிய சுதர்சன நாச்சியப்பன் குழுவின் ஆலோசனை மாபெரும் கேடானது. இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் - 2006இல், உள்ள மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரே மூச்சில் 2007இல் 27% இடஒதுக்கீடு தருவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தால் அது சரியானதாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக - 2006 வரையில் ஒரு விழுக்காடுகூட உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி இவற்றில் ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு, 9% வீதம், முடிந்த அளவில் மூன்று ஆண்டுகளில், 27% தருவதற்காகவும் - அதே சமயத்தில் 1964 முதல் மொத்த இடங்களில் 70%, 80% இடங்களைப் பெற்று வருகிற மேல் சாதியினர் தொடர்ந்து, 2006க்குப் பிறகும், தகுதி என்கிற பேரால் 70%, 80% பெறுவதை உறுதி செய்வதற்காகவும் இயற்றப்பட்ட ஒரு சட்டம் (புஉமி) என்பது மக்கள் நாயகக் கோட்பாட்டு நடப்பு உள்ள எந்த நாட்டிலும் அரசமைப்பு வரலாற்றில் நடந்திராத ஒரு காட்டுமிராண்டிச் சட்ட நடப்பு ஆகும்.

இந்தக் காட்டுமிராண்டிச் சட்டம் செல்லும் என்று, 10.4.2008இல் உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறிவிட்டது. நீதிபதிகள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். இவர்கள் மக்கள் நாயகத்துக்கு எதிரான போக்கில் - மேல் சாதியினருக்குப் பாதுகாப்புத் தருவதையும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிமை தர மறுப்பதையும் நோக்கமாகக் கொண்ட போக்கில் தீர்ப்பை வழங்கினால் இவர்கள் கடுங்கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரியவர்களே ஆவர். இவர்கள் வழங்கிய இத் தீர்ப்பு எரிக்கப்படத் தக்கதேயாகும். இதைச் செய்யவும் மா.பெ.பொ.க.வினர் தயங்கமாட்டோம் என்பதை அறிவிப்பதுடன், இத்தகைய கொடுமை நீக்கப்படவும் “விகிதாசார இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு'' என்பதைத் தாங்கள் கருதிப் பார்க்க வேண்டுகிறேன்.

இன்றைய இந்திய அமைச்சரவையை உருவாக்குவதிலும், அதில் போதிய பங்கு பெறுவதிலும், அமைச்சரவையைக் காப்பாற்றுவதிலும் மாபெரும் செல்வாக்கையும் ஈடுபாட்டையும் ஆளுமையையும் பெற்றுள்ள தாங்கள், அடுத்து நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தொடரிலேயே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இப்படிப்பட்ட கோரிக்கை கொண்ட சட்ட முன் வரைவுகளை முன்மொழிய அன்புகூர்ந்து ஆவன செய்யுங்கள். தமிழகத்தில் உள்ள தாங்களும், இடஒதுக்கீட்டில் ஈடுபாடுள்ள மற்ற தலைவர்களும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் தத்துவம், வரலாறு, போராட்டம், சாதனை இவற்றைப் புரிந்த அளவுக்குப் புரிதல் பெற்றவர்கள் வட மாநிலங்களில் எதிலும் இல்லை.

1978 முதல் 2005 முடிய இடைவிடாது அவர்களிடையே ஊடாடிய மா.பெ.பொ.க.வினராகிய நாங்கள் இதனை நன்றாகவே உணர்ந்துள்ளோம். அதனால்தான் 1979 அக்டோபர் சேலம் மா.பெ.பொ.க. மாநாட்டிலும், 1993 திசம்பர் சென்னை மாநாட்டிலும், “வட நாட்டுக்கு நீங்கள் வாருங்கள்; வகுப்புவாரி உரிமைப் போருக்குத் தலைமை ஏற்றிடுங்கள். உங்கள் தலைமையில், நாங்கள் அங்கே அடைந்துள்ள களத்தில் நின்று போராடுவோம்'' - என அழுத்தமாகக் கோரிக்கை வைத்தோம்.

85 அகவையில் நடைபோடும் தாங்கள் அரசியல் அரங்கத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். 84 அகவையில் உள்ள நான் பாமர மக்கள் மட்டத்தில் போதிய அறிமுகத்தை கடந்த 30 ஆண்டுகளில் அங்கெல்லாம் வளர்த்து வைத்துள்ளேன். எங்கள் தோழர்கள் இந்தியா முழுவதையும் வலம் வருகிறவர்கள்; இனியும் அப்படி வலம் வரவும் - பெரியார், அம்பேத்கர், லோகியா நெறிகளில் நின்று அனைத்து வகுப்பினர்க்கும் விகிதாசார இடஒதுக்கீடு பெற்றிடவும் துணிச்சலோடும், துடிப்போடும் திகழ்பவர்கள். நமக்குத் தக்க சமயம் இது. தக்க நேரத்தில், தக்க வழியில், தகுந்த தீர்வுகாண வழி வகுத்துப் போராட அருள்கூர்ந்து முன்வாருங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com