Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
‘தி இந்து’ நாளேட்டில் தீய நோக்கும் தமிழின எதிர்ப்புப் போக்கும்
வாலாசா வல்லவன்

"தி இந்து' நாளேடு தொடக்கக் காலம் தொட்டே தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதையே தமது ‘பத்திரிகா தர்மமாக'க் கொண்டுள்ளது. தமிழீழத்தில் இப்போது இலங்கை அரசின் முப்படைகளும் தாக்குதல் தொடுத்து வன்னிப் பகுதியின் குடியிருப்புகளின்மீதும், பள்ளிகள், மருத்துவமனைகள்மீதும் கண்மண் தெரியாமல் குண்டுமாரிப் பொழிந்து வருகின்றன. இராசபக்சே இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட உடனேயே தமிழின அழிப்பு வேலையைத் தீவிரப்படுத்திவிட்டார். அதன் உச்ச கட்டமாக இப்போது இந்திய அரசின் உதவியைப் பெறுவதுடன், அமெரிக்கா, பாக்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து போர்க் கருவிகளை வாங்கிக் குவித்துத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை எதிர்த்துத் தாய்த் தமிழகத்தில் தமிழர்கள் பலப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கைப் பிரச்சனையால் ஏற்கெனவே ஆட்சியை ஒருமுறை இழந்த தி.மு.க. அரசு இந்த முறை இவ்வளவு பெரிய கொடுமைகளைக் கண்டும் காணாமல் வாய்மூடியாகவே இருந்தது. ச. இராமதாசு, தொல். திருமாவளவன், பழ. நெடுமாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு நெருக்கடி கொடுத்தனர். முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

அனைத்துக் கட்சி கூட்டம் நல்லபடியாகவே நடந்தது. 15 நாள்களுக்குள் இலங்கை அரசுக்கு நெருக்குதல் தந்து போரை நிறுத்த வற்புறுத்தாவிட்டால், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அறிவித்தனர். இச் செயல் பாராட்டுக்குரியது. இந்தப் பதினைந்து நாள்கள் கெடுவுக்குள் இலங்கை அரசு போரை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. ஈழம் பற்றி எரிகிறது; அத் தீயில் பெட்ரோல் ஊற்றிப் பூணூலை உருவிக்கொண்டு யாகம் நடத்துகிறது "இந்து' நாளேடு.

14.10.2008 இந்து நாளேட்டில் தமிழ்த் தீவிரவாதிகளால் பேராபத்து (The damages of Tamil Chauvinism), என்ற தலைப்பில் மாலினி பார்த்தசாரதி என்கிற பார்ப்பனப் பெண் தமிழ் இனத்துக்கு எதிராக மிக மோசமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அவர் அக்கட்டுரையில் “இலங்கை படை விடுதலைப் புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியைப் பிடிக்க இன்னும் ஒரு இரவுதான் ஆகும், 2 கி.மீ. தொலைவுதான் உள்ளது. இலங்கை அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இராசிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகரனைப் பிடித்து விடுவார்கள். விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பா.ம.க, ம.தி.மு.க, தி.மு.க, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் இலங்கையில் போரை உடனே நிறுத்தவேண்டும் என்று வேண்டுகின்றனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் களும், தமிழ்த் தீவிரவாதிகளும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டுமெனத் தில்லிக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையின் இனப் பிரச்சனையைத் தீவிரமாக்குகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசு இலங்கையில் தமிழினமே பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்கின்றார். கடந்த காலங்களில் புதுதில்லி தமிழகத்தில் புலிகளின் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தியது போலவே இப்போதும் செயல்படவேண்டும். இலங்கையின் இறை யாண்மைக்குப் பங்கம் வராமல் இந்தியா பார்த்துக் கொள்ள வேண்டும்'' என எழுதியுள்ளார்.

16.10.2008 இந்து தலையங்கத்தில் உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எல்லாம் விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளனர் என்ற பெரிய பட்டியலையே போட்டுள்ளனர். உலகத்திலேயே மிக மோசமான தீவிரவாத அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்புத்தானாம். இந்து நாளேட்டின் முதன்மை ஆசிரியரான தமிழக மக்களின் உழைப்பில் பத்திரிகைகளை விற்றுவரும் என். இராம் சிங்கள அரசின் விருந்தினராகச் சென்று, அந்த நாட்டு அரசு அளித்த ‘சிங்கள ரத்னா' என்ற விருதை வாங்கிவந்த கயவர்தானே. இவர் சிங்கள பேரினவாதத்துக்கு ஆதரவாக எழுதிக் குவித்ததற்காகவே சிங்கள அரசு மிகப் பெரிய விருதை இந்து இராமுக்குக் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஈழத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் இந்து நாளேட்டின் இந்தக் கேடுகெட்ட தனத்தைக் கண்டித்துத் தன்மானமுள்ள தமிழர் சிலரும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், மற்ற தமிழ் உணர்வு அமைப்பினரும் கோவையில் 14.10.2008 அன்று ஊர்வலமாகச் சென்று இந்து அலுவலக வாயிலின்முன் இந்து செய்தித்தாள்களை எரித்துத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 16.10.2008 அன்று ஈரோட்டிலும் இதே போன்ற மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. இந்து அலுவலகத்தின்மீது கல் விழுந்து விட்டதாகக் கூறி, இதைக் கண்டித்து 18.10.2008இல், இந்து ராம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 130 ஆண்டுகால பாரம்பரியமுள்ள ஒரு பத்திரிகைக்குக் கருத்துச் சொல்ல சுதந்தரமில்லையா? தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஈழத்துக்கு ஆதரவான-குறுகிய இன வெறியை எதிர்க்கும் இந்து நாளேட்டின் விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாததன் வெளிப்பாடு தான் இந்தச் செயல். அவர்களை உடனே கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்கிறார்.

இவர்களின் 130 ஆண்டு பாரம்பரியம் என்ன என்பது நமக்குத் தெரியாதா என்ன? இந்து நாளேடு தோன்றியதே பார்ப்பன இனத்தை காப்பதற்குத்தானே. 1878ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவசாமி அய்யர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது மெட்ராஸ் மெயில் ஏட்டில் பார்ப்பனர்கள் மற்ற சாதியினரைத் தொடவே மாட்டார்கள், கீழ்ச்சாதியாக நினைப்பார்கள். இந்நிலையில் பார்ப்பனர் நீதிபதியாக வந்தால் எல்லாச் சாதியிருக்கும் சரியாக நீதி கிடைக்குமா என்று ஒரு தலையங்கம் எழுதினார். இதே கருத்தை வலியுறுத்தி வாசகர் கடிதங்களும் மெயில் ஏட்டில் வெளியிடப்பட்டன. சிவசாமி அய்யருக்கு ஆதரவாக மெயில் ஏட்டிற்குப் பதில் சொல்ல அன்று ஜி. சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்டது தானே உங்கள் இந்து பத்திரிகை.

நீதிக்கட்சித் தொடங்கியபோது, நீதிக்கட்சிக்கு எதிராகவே தொடர்ந்து எழுதிவந்தது இந்து. 12.9.1917இல் ‘திராவிடன்' ஏட்டில் (The Hindu Out Burst) ‘இந்துவின் ஆவேசம்' என்ற தலைப்பில் இந்துவின் ஆணவப் போக்கைக் கண்டித்து தலையங்கம் எழுதினார்கள் அன்று. ஓமந்தூரார் ஆட்சிக்காலத்தில் அவர் இட ஒதுக்கீட்டைச் சரியாக நடைமுறைப்படுத்தியதால் அவர்மீது சீறிப் பாய்ந்தது இந்து. அவர் அன்றைய ஆசிரியர் இந்து சீனிவாசனைக் கோட்டைக்கு அழைத்து "உங்கள் அலுவலகத்தில் எத்தனைப் பேர் பார்ப்பனர். மற்றவர் எத்தனைப்பேர். நீ வகுப்புவாதியா? நான் வகுப்புவாதியா?” என்று நேருக்குநேர் கேட்டார்.

அதனால் குத்தூசி குருசாமி விடுதலையில் கிண்டலாகவும், கேலியாகவும் இந்துவை ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்று எழுதினார். “இனிமேல் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் என்னைத் தேடி மேலுலகம் வரவேண்டியதில்லை, நானே உங்களுக்கு உதவி செய்ய சங்கு, சக்கர பரிபாலனத்துடன் மவுண்ட் ரோட்டில் "இந்து' அவதாரம் எடுத்து வந்துள்ளேன். அங்கே வந்து உங்கள் குறைகளைச் சொன்னால் போதும். நான் தீர்த்து வைப்பேன்'' என்று எழுதினார். அன்றுமுதல் இன்றுவரை இந்து அந்த வேலையைத்தானே செய்துகொண்டிருக்கிறது.

முற்போக்கு வேடம் தரித்துள்ள என். ராம்-செயலலிதா ஆட்சியில் கொலைகாரச் சங்கராச்சாரியைக் கைதுசெய்யத் துடித்தபோது, செயாவுக்குப் பயந்துகொண்டு வெளி மாநிலங்களில் சுற்றித் திரிந்த குட்டிச் சங்கராச்சாரி விசயேந்திரனை ஆந்திரா சென்று அழைத்து வந்தது இந்த இந்து ராம்தானே. இதுதான் இந்துவின் 130ஆண்டுகால பாரம்பரியம். வேறு என்ன ‘பத்திரிகா தர்மத்தை'க் கிழித்துவிட்டது இந்து நாளேடு.

தனது அலுவலகத்தின்மீது ஒரு கல்லைப் போட்டதற்கே இந்த அலறுகிறாரே இந்து ராம். ஈழத்தில் இன்று வன்னிப் பகுதியில் 2.30 இலட்சம் தமிழ் மக்கள் உணவின்றி, மருந்தின்றி பட்டினியாலும், நோயாலும் வாடி-மடிந்து கொண்டிருக் கிறார்களே!. 16.10.2008 அன்று அய்.நா.வைச் சேர்ந்தோர் 750 டன் உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்றபோது அந்த வாகனங்களின்மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியதே இலங்கைப் படை. அவர்கள் உயிருக்கு அஞ்சி உணவுப் பொருள்களைத் திரும்ப எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்களே-அதைக் கண்டிக்க மனமில்லாத, மனிதாபிமானமில்லாத, ஈரல் அழுகிய, இந்து பார்ப்பானுக்குக் கருத்துச் சுதந்தரம் என்று-இந்த நேரத்திலும் சிங்களனுக்கு ஆதரவாக எழுத என்ன துணிச்சல் இருக்க வேண்டும்!.

130 ஆண்டு பழைமை வாய்ந்த இந்துவுக்கே இப்படி யயாரு நிலை என்று துடிதுடிக்கும் இந்து ராம், மனித இனம் தோன்றிய காலம் முதலே அங்கு தனி ஆட்சி செய்து வந்தவன் தமிழன். ஆங்கிலேயன் தன் நிர்வாக வசதிக்காக ஒரே நாடாக ஆக்கி விட்டான். குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தனியாட்சி செய்துவந்த தமிழன் எதற்காக இந்தச் சிங்களக் கொடுங்கோன்மை மிக்க காட்டுமிராண்டிகளின் ஆட்சியில் ஒன்றாக இருக்கவேண்டும். ஒரு காசுமீரப் பார்ப்பானுக்குக் கால் நகத்தில் அடிபட்டால்கூட கன்னியாகுமரிப் பார்ப்பான் குய்யோ முறையோ என்று அலறுகிறான். உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்கிறார்களே, தம் சொந்த மண்ணிலேயே வீடுகளை இழந்து காடுகளிலும், பதுங்கு குழிகளிலும் வசிக்கிறார்களே எம் தமிழ் மக்கள், இந்த அவலம் ஏன்?. இதைப்பற்றி பேசுவோர் தமிழ்த் தீவிரவாதிகளா?

ஒரு கல் விழுந்ததற்கே இப்படி அலறுகின்றார் இந்து ராம். தமிழீழ அப்பாவி மக்களின் வீடுகளின்மீது ஆயிரக்கணக்கான பவுண்டு எடையுள்ள பீரங்கிக் குண்டுகள் விழுகின்றனவே! நாங்கள் எப்படி அலறவேண்டும். அதற்குக் குரல் கொடுக்கும் தாய்த் தமிழகத்துச் சொந்தங்களை, தமிழ்த் தீவிரவாதிகள் என்று கூறும் இந்து ராமுக்கு-அப்படிச் சொல்ல உரிமை கொடுத்தது யார்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்ப்பான் திருந்தவே மாட்டான் என்று டாக்டர். டி.எம். நாயர் கூறியதை மெய்ப்பிப்பது போல் உள்ளது இன்றுவரை இந்து நாளேட்டின் நிலை.

இந்து மட்டுமல்ல, தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன ஏடுகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிராகச் செயல் படுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆனால், தமிழனின் உழைப்பைச் சுரண்டி விற்று வயிறு வளர்த்துப் பிழைப்பை ஓட்டிவரும் மானங் கெட்டவ பிறவிகள்தானே இவர்களே. கொடிய நஞ்சு கக்கும் எழுத்துகளைக் கொண்ட இந்த ஏடுகளைப் பார்ப்பனர் மட்டுமா படிக்கிறார்கள். தமிழ் மக்களும் அல்லவா உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் படித்து நம்பி விடுகின்றனர்.

இரக்கமே இல்லாத குணம் படைத்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்கு வேதகாலம் தொட்டு இன்றுவரையில் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அந்த வகையில்தான் இன்றும் இந்து ராம், துக்ளக் சோ (வெளியே தலைகாட்டாத முதல்தர அயோக்கியன்), சுப்பிரமணிய சாமி (ஒற்றை ஆள் அறிக்கைப் போராளி) போன்ற பார்ப்பனர்கள் தமிழர்க்கும்-தமிழினத்திற்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும்-திருந்தவேண்டும். இல்லையயன்றால் தந்தை பெரியார்! அன்று சொன்னதைப்போல "பார்ப்பானே வெளியேறு' என்ற பழைய முழக்கம் மீண்டும் தொடங்கவேண்டிய நிலை ஏற்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com