Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
சிங்கூர் புகட்டும் பாடம்
க.முகிலன்

மேற்கு வங்காள அரசு, 997 ஏக்கர் வளமான நன்செய் விளைநிலங்களை உழவர்களிடமிருந்து கைப்பற்றி ஒரு இலக்கம் உருபாய் விலையில் சிறிய மகிழுந்து தயாரிப்பதற்காக டாட்டா மோட்டார் நிறுவனத்துக்கு அளித்தது. இதை எதிர்த்துத் திரிணமுல் காங்கிரசுக் கட்சியின் தலைவர் மம்தா பானர்சி 2006 திசம்பரில் 25 நாள்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். அப்போது டாடா மோட்டார் குழுமத்தின் தலைவர் இரத்தன் டாடா, "என் தலைமேல் கைத் துப்பாக்கியை வைத்தவர், ஒன்று என்னைச் சுடவேண்டும்; அல்லது அவராகவே கைத் துப்பாக்கியை எடுத்து விலகிவிடவேண்டும். எந்த நிலையிலும் என் தலை நூலிழையும் அசையாது' என்று சொன்னார்.

ஆனால் நானோ மக்கள் மகிழுந்து திட்டத்தைக் குசராத் மாநிலத்திற்கு மாற்றிட முடிவு செய்திருப்பதாக 7.10.2008 அன்று இரத்தன் டாடா குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் முன்னிலையில் அறிவித்தார். சிங்கூரில் ஆயிரம் கோடி உருபாய் முதலீடு செய்து, நானோ மகிழுந்து தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருந்தன. இந்நிலையில் இழப்பையும் பொருட்படுத்தாமல் நானோ மகிழுந்து தயாரிப்புத் திட்டத்தைக் குசராத் மாநிலத்திற்கு மாற்றிட டாடா ஏன் முடிவு செய்தார்?

சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தை எதிர்கொள்வேன் என்று சூளுரைப்பதுபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில் டாடா, நானோ மகிழுந்து தயாரிப்பைத் தொடங்கினார். உழவர்களின் துணையுடன் மம்தா பானர்சி இத்திட்டத்தைத் தொடக்கத்திலேயே எதிர்த்தார். நந்தி கிராம் பகுதிக்குள் 14,000 ஏக்கர் நிலத்தை மேற்கு வங்காள அரசு கையகப் படுத்தியதை எதிர்ப்பதற்காக தன் போராட்டக் களத்தை நந்தி கிராம் பகுதிக்கு மாற்றினார். ஆறு மாதங்கள் நீடித்த நந்தி கிராம் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் இறந்தனர். 400பேர் காணவில்லை. இப்போராட்டத்தில் மாவோவியப் புரட்சிகரக் கட்சியும் பங்கேற்றது. நந்திகிராம் போராட்டத்தை இடதுசாரி ஆட்சி கையாண்ட போக்கு இந்தியா முழுவதும் கடுங் கண்டனத்துக்குள்ளாகியது.

எனவே நந்திகிராமில் நிலத்தைக் கையகப்படுத்திப் பன்னாட்டு நிறுவனமான சலீம் குழுமத்திற்கு அளிக்கும் திட்டத்தை மேற்கு வங்காள அரசு கைவிட்டது. மேற்கு வங்காளத்தில் 2,50,000 ஏக்கர் நிலத்தை உழவர்களிடமிருந்து கையகப்படுத்திச் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது என்ற பெயரில் பெரு முதலாளிக்கு மலிவான விலையில் அளித்திட புத்ததேவ் அரசு திட்டமிட்டிருந்தது. (EPW சனவரி 2007).

நந்திகிராம் போராட்டம் முடிவுக்கு வந்தபின், மம்தா பானர்சி தன் போராட்டக் களத்தை மீண்டும் சிங்கூருக்கு மாற்றினார். 2008 ஆகஸ்டு மாதம் சிங்கூரில் டாடா மகிழுந்து தொழிற்சாலையின் முன் 15 நாள்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். தொழிலாளர்களும், பணியாளர்களும் தொழிற் சாலைக்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் இடையூறுகள் ஏற்பட்டன. எனவே 2.9.2008 அன்று மகிழுந்து தொழிற்சாலையின் பணிகளை நிறுத்தி வைப்பதாக டாடா அறிவித்தார்.

முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரி ஆளுநர் கோபால கிருட்டின காந்தியைச் சந்தித்தார். ஆளுநர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 7.9.2008 அன்று ஆளுநர் தலைமையில் புத்ததேவும், மம்தா பானர்சியும் பேசினர். 997 ஏக்கரில் 305 ஏக்கர் நிலம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உழவர்கள் அரசின் இழப்பீட்டுத் தொகையையும் வாங்க மறுத்துள்ளனர். எனவே 305 ஏக்கரை உழவர்களுக்குத் திருப்பி அளித்திட வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார். நிலத்தைத் திருப்பி அளிப்பதற்கான வாய்ப்புக் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.

டாடாவின் நானோ மகிழுந்து தயாரிக்க அதற்கு வேண்டிய பொருள்களைத் தயாரித்து அளிப்பதற்காக 60 தனியார் துணைத் தொழில் நிலையங்கள் உள்ளன. இவை ஒப்பந்த அடிப்படையில் டாடா நிறுவனத்திற்குப் பொருள்களைத் தயாரித்து அளிக்கும். எனவே 997 ஏக்கர் என்பதைக் குறைத்துக்கொள்ள முடியாது என்று டாடா நிறுவனம் வாதிட்டது. ஆனால் உண்மையில் மொத்தத்தில் 300 முதல் 400 ஏக்கர் டாடா நிறுவனத்துக்குப் போதுமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசு அமைத்த குழு 70 ஏக்கர் மட்டுமே திருப்பி அளித்திட வாய்ப்புள்ளதாக அறிவித்தது. அதேசமயம் இழப்பீட்டுத் தொகையை மேலும் 50% உயர்த்தி அளித்திட அரசு முன்வந்தது.

எனவே மம்தா பானர்சி சிங்கூர் தொழிற்சாலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்புடன் மகிழுந்து தொழிற்சாலையை நடத்தமுடியாது என்று டாடா கூறினார். 3.10.2008 அன்று இரத்தன் டாடாவும் முதலமைச்சர் புத்ததேவும் 90 நிமிடங்கள் பேசினர். இறுதியில் மகிழுந்து தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு மாற்றிட முடிவு செய்துவிட்டதாக டாடா அன்றே அறிவித்தார். 7.10.2008 அன்று குசராத் மாநிலத்தில் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் சனானத் மாவட்டத்தில் சரோடி என்ற இடத்தில் 1100 ஏக்கர் பரப்பில் நானோ மகிழுந்து தொழிற்சாலை அமைக்கப்படும் என்று இரத்தன் டாடா அறிவித்தார். இதில் 85% நிலம் அரசினுடையது.
சிங்கூர் போராட்டம் புகட்டும் படிப்பினை என்ன?

மம்தா பானர்சி அதிரடி அரசியல் நடத்துபவர். மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக் கட்சிக்கு இருந்த களத்தின் பெரும் பகுதியை-குறிப்பாக நகர்ப்புறங்களை இவர் கைப்பற்றிக் கொண்டார். முப்பது ஆண்டுகளாக இருக்கும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை எதிர்ப்பது-வீழ்த்துவது ஒன்றே இவரது குறிக்கோள். முதலாளியத்திற்கோ, பெரு முதலாளியக் குழுமங்களுக்கோ, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத் திற்கோ எதிரான கொள்கை எதுவும் இவருக்கோ, இவர் கட்சிக்கோ கிடையாது.
சிங்கூரிலும், நந்திகிராமிலும் தங்கள் நிலத்தை இழந்ததன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் இற்றுப் போனதால் உழவர்களிடம் ஏற்பட்ட மனக் குமுறலுக்கு ஒரு போராட்ட வடிகாலை மம்தா ஏற்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்பு இல்லாமல் சிங்கூரிலோ, நந்தி கிராமத்திலோ திரிணமுல் கட்சி மட்டும் தனியாகப் போராட்டத்தை நடத்தியிருக்க முடியாது. மக்களை ஒருங்கிணைத்துப் போராடினால் மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை இப்போராட்டங்கள் உணர்த்துகின்றன.

மேற்கு வங்காளத்தில் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்த போதிலும், நிலத்திற்கும் உழவர்களுக்கும் இடையிலான வாழ்க்கைப் பிணைப்பை மதிக்காமல் நந்திகிராமிலும் சிங்கூரிலும் தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு உழவுத் தொழிலைச் சார்ந்து வாழ்ந்துகொண்டிருந்த உழைப்பாளர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று மேற்கு வங்காள அரசு நினைத்தது. நந்தி கிராமில் காவல் துறையையும் சி.பி.எம். கட்சியின் குண்டர்களையும், மக்கள்மீது ஏவியது. உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் மற்ற மாநில அரசுகளுக்கும், மேற்கு வங்காள அரசுக்கும் வேறுபாடில்லை என்பது திட்டவட்டமாக அம்பலமாயிற்று.

இந்திய அளவில் தனியார் மயம், தாராள மயம், என்னும் உலகமயத்தை-பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, தான் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. இக்கட்சியின் இரட்டைவேடம் அம்பலமாகிவிட்டது. இருக்கின்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு-மாநில அரசுக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு ஆட்சிசெய்யும் நிலையில் தொழில்வளர்ச்சிக்காகப் பன்னாட்டு மூலதனத் திற்கும், பெருமுதலாளியக் குழுமங்களுக்கும் இடந்தர வேண்டியுள்ளது என்று காரணம் கூறப்படுகிறது. அப்படி யானால் போலியான சனநாயக வாக்கு வேட்டை அரசியலைக் கைவிட்டு மக்களுக்கான புரட்சிகர அரசியலைக் கட்டியமைத்திட வேண்டும்.

6.10.2008 அன்று முதலமைச்சர் புத்ததேவ், “விவசாயத்தை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவசாயமும், தொழிற்சாலையும் சேர்ந்தே வளரவேண்டும். எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் விவசாயத்தை அழித்துத் தொழிற்சாலைகள் நடத்துவதா என்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் சிங்கூர் பகுதியில் விவசாயத்தைவிட தொழில்களின் வளர்ச்சியே அதிகம் தேவைப்படுகிறது. தொழில் வளர்ச்சிதான் நாட்டின் மொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன'' என்று கூறியுள்ளார். (தினமணி, 7.10.2008).

சிங்கூரில் அரசு கையகப்படுத்தியிருப்பது இருபோகம் நெல் விளையக்கூடிய வளமான நன்செய் நிலமாகும். உழவர்களின் மண்டையோடுகளின் குவியல்மீது தொழிற் சாலை அமைப்பதை நியாயப்படுத்துகிறார் "காம்ரேட்' புத்ததேவ். அதுவும் மகிழுந்து தொழிற்சாலைக்காக! ஒரு இலக்கம் உருபா விலை என்று கூறப்பட்டாலும் 1.30 இலக்கம் உருபா செலவிட்டால்தான் இந்த மகிழுந்தைச் சாலையில் ஓட்டிச் செல்லமுடியும். 1.30 இலக்கம் உருபா கொடுத்து யாரால் வாங்கமுடியும்? உயர்தர நடுத்தரக் குடும்பத்தினரும் மேட்டுக் குடியினரும் மட்டுமே வாங்கமுடியும்.

இவர்கள் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர். நாட்டில் 80 விழுக்காடு மக்களின் மாத வருவாய் உருபாய் 2700க்கும் குறைவான தாகவே உள்ளது என்று நடுவண் அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவது பொதுமக்களின் பயணத்திற்கு உதவும். மகிழுந்துகளின் எண்ணிக்கையின் பெருக்கம் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கையின் அடையாளம் ஆகும்.

குசராத்தில் தொடக்கத்தில் ஆண்டிற்கு 2,50,000 மகிழுந்துகளும் பிறகு 5,00,000 மகிழுந்துகளும் உற்பத்தியாகும். இத்தொழிற்சாலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று டாடா கூறியிருக்கிறார். (தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், 8.10.2008) சிங்கூரில் 997 ஏக்கர் நிலம், குத்தçயாளர்கள், நிலமற்ற உழவுத் தொழிலாளர்கள், மற்றும் பிற தொழிலாளர்கள் என 12,000 பேர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருந்தது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு தானியத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. தானிய விளைச்சல் நிலத்தின் பரப்பு வேகமாகச் சுருங்கி வரும் நிலையில், தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், நன்செய் நிலத்தில் மகிழுந்து தொழிற்சாலை அமைப்பது என்பது கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதல்லவா?

ஆந்திரம், கருநாடகம் போன்ற மாநிலங்கள் இரத்தன் டாடாவுக்கு அழைப்பு விடுத்தன. ஆயினும் டாடா குசராத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் நரேந்திரமோடிதான் குசராத் மாநிலத்தின் முடிசூடா மன்னர். மூவாயிரம் முசுலிம் இன மக்களைக் கொன்று குவித்தபின்னும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவுக்கு இந்துபாசிச வெறி தாண்டவமாடும் பூமி அது!. குசராத்தில் முற்போக்கு இயக்கம், பிற்படுத்தப்பட்டோர் இயக்கம், தலித் எழுச்சி என்று எதுவுமே கிடையாது. காந்தியும், வல்லபாய் பட்டேலும் இங்கு அவதரித்ததால் ஏற்பட்ட விளைவு இது!

சிங்கூரில் நடந்ததுபோல் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எதையும் இங்கு நடத்த முடியாது. மீறி எவரேனும் நடத்த முயன்றால் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள். மேலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நரேந்திரமோடி முதலமைச்சராக நீடிப்பார். எனவேதான் இரத்தன் டாடா நானோ மகிழுந்து தொழிற் சாலையைக் குசராத் மாநிலத்திற்கு மாற்றிட முடிவு செய்தார். தொழில் வளர்ச்சி என்கிற பெயரால் ஒரு ஏக்கர் விளை நிலம்கூட முதலாளிகளுக்கு அளிக்கப்படக்கூடாது. மக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்பதைச் சிங்கூரும், நந்திகிராமும் உணர்த்துகின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com