Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
ஈழ விடுதலை : தமிழகத் தமிழரின் கொந்தளிப்பும், தமிழகப் பார்ப்பனரின் கொக்கரிப்பும்!
வே. ஆனைமுத்து

நாம் என்ன செய்யவேண்டும்?

தமிழ்நாட்டுத் தமிழர்க்குப் பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வை ஊட்டிய மேதைகள் 1912 முதல் பதவிகளில் பங்கு, அரசு வேலைகளில் இடம், அரசுக் கல்வியில் ஒதுக்கீடு என்பதோடு நின்றுகொண்டனர். அன்றே தென்னாட்டுப் பார்ப்பனர் சென்னை மாகாண அரசு வேலைகளை நம்பாமல் தில்லி, பம்பாய், கல்கத்தா என வடமாநில இடங்களுக்குச் சென்று, மத்திய அரசுக் கல்வி, மத்திய அரசு வேலைகளைக் கைப்பற்றிக் கொண்டனர். மத்திய அரசு வேலைகளிலும், சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்று 1934இல் கேட்டு, 1935இல் அவ்வுரிமைகளை பொப்பிலி அரசரும் ஈ.வெ.ரா.வும், ஏ.இராமசாமி முதலியாரும் பெற்றுத்தந்தனர். தமிழரின் பேரில் பார்ப்பனரின் சினம் இன்னமும் அதிகமாயிற்று.

1926இல் வருணாசிரம ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு இவற்றுடன் பார்ப்பனப் புரோகித ஒழிப்பை-சுயமரியாதைத் திருமண ஏற்பாட்டை நமக்குத் தந்தார் பெரியார். பட்டணத்துப் பார்ப்பனர், பட்டிக்காட்டுப் பார்ப்பனர் எல்லோரும் பெரியாரைக் கடுமையாக வெறுத்தனர்-தமிழரை வெறுத்தனர். 1939இல் தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கை-திராவிட நாடு விடுதலைக் கோரிக்கை-இந்தி பொதுமொழி ஆவதற்கு எதிர்ப்பு என்னும் கோரிக்கைகளைப் பெரியார் முன்வைத்தார்.

தில்லி, பம்பாய் முதலான இடங்களில் மய்ய அரசுப் பணிகளிலும், வேறு துறைகளிலும் இடம்பெற்ற பார்ப்பனர்கள் தமிழரை வெறுத்ததோடு, இந்தி மாநில அரசியல்வாதிகளையும், தமிழர் பேரில் வெறுப்புக்கொள்ளச் செய்தனர். காந்தியாரும், நேருவும், படேலும் இதற்கு அடிமை ஆயினர். காந்தியார் 1947 திசம்பரில் தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதாருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இசுலாமியருக்குப் பரிந்து பேசினார். உடனேயே பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து அவரைக் கொன்று போட்டனர்.

படேலும் 1950இல் பெரியாரின் வகுப்புரிமைக் கோரிக்கைக்குஆதரவாகப் பேசினார். அதனால்தான் அரசமைப்பில் 1951இல் கல்வியில் வகுப்புவாரி உரிமை காப்பாற்றப்பட்டது. அப்போது இதற்குத் துணைபுரிந்த பிரதமர் நேரு, 1955முதல் பார்ப்பனர் அல்லாதார் எதிர்ப்பு உணர்வுக்கு ஆளானார். தில்லி மத்திய அரசு உயர்பதவிகளில் இருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டைப் பற்றிய சிக்கல்களில் என்ன கருத்தை முன்வைத்தாலும் அதை அப்படியே மத்திய அரசு நம்பி ஏற்றுக் கொண்டது.

1963க்குப் பிறகு திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையும், இந்தி எதிர்ப்புக் கோரிக்கையும் காற்றில் விடப்பட்டன. 1975இல் பெரியாரின் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையும் கைவிடப்பட்டது. பார்ப்பனச் சடங்குகள் எதிர்ப்பு உணர்வு மட்டும் இன்றும் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இவற்றின் பின்புலத்தில் நின்று, மத்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர்-இலங்கைத் தோட்டத் தொழிலாளத் தமிழர்-தமிழீழத் தமிழர் கோரிக்கைகளைப் பற்றிய நிலைப்பாடுகளை மேற்கொள்ளுகிறது என்பதை இன்று நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். மத்திய அரசின் நிலைப் பாடே தமிழ்நாட்டுத் தேசிய காங்கிரசின் நிலைப்பாடு என்பது, 1969 முதலே தெளிவாக வந்துவிட்டது.

காங்கிரசோடு தேர்தல் உறவு கொள்ளும் கட்சிகளும்-இடஒதுக்கீடு உள்பட, எல்லாச் சிக்கல்களிலும், காங்கிரசின் நிலைப்பாட்டை ஒட்டியே செல்லவேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகிவிட்டன. ஈழவிடுதலை பற்றி 1987இல் பிரதமர் இராசிவ் காந்தி எடுத்த தமிழர்க்கு எதிரான நிலைப்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. 1987 முதல் 1990 வரை ஈழ விடுதலைபற்றித் தமிழகத் தமிழரும், தமிழீழத் தமிழரும் பிளவுபட்டே நின்றனர்.

ஆயுதம் தாங்காமல் சென்ற இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி என்று எவரும் கூறமாட்டார்கள். ஆனால் அதற்காக ஒப்பாரி வைக்கிற இந்திய தேசியக் காங்கிரசாரும்-கண்ணீர் வடிக்கிற பார்ப்பன இராம்களும், சோக்களும்-இராசிவ்காந்தியால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட-நம் வரிப் பணத்தில் சம்பளம் பெறுகிற இந்திய அமைதிப்படையினர் அங்கு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றனரே! நூற்றுக்கணக்கான தமிழ்த் தாய்மார்களைக் கற்பழித்துக் கொன்றார்களே! தமிழர்களின் வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் திருடினார்களே! மற்றப் போராளிக் குழுவினரைக் கொண்டு அடையாளம் காட்டச் சொல்லி, நூற்றுக் கணக்கான விடுதலைப்புலி வீரர்களைக் கொன்றார்களே!. ஈழத் தமிழர்கள் மட்டும் என்ன குருவிகளா? பறவைகளா? நம்மைப்போல அவர்களும் மனிதர்கள்தானே! அதுமட்டுமா?

21.5.1991 அன்று இரவு இராசிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை வைத்துத் தமிழகமெங்கும் தி.மு.க.வினரின்-தி.மு.க. அனுதாபிகளின் வீடுகளைத் தேசியவாதிகள் தாக்கினரே!. அதற்காக எப்போதாவது வருத்தம் தெரிவித்தார்களா? ஈழ விடுதலைப் போரில் ஒரு வகையிலும் தொடர்புபடாத தி.மு.க. அரசை-ஆளுநரின் அறிக்கையைக்கூடப் பெறாமல் குடியரசுத் தலைவரான பார்ப்பன வெங்கட்டராமனைக் கொண்டு 31.1.1991இல் கலைத்தார்களே. அப்போது இராம் பார்ப்பனரும், சோ பார்ப்பனரும், தேசியவாதிகளும் எந்த உலகத்தில் இருந்தார்கள்?

ஆயினும், தமிழ்நாட்டுத் தமிழரிடையே 2008 அக்டோபர் 5 முதல் ஒரு பெரிய எழுச்சி உணர்வு பொங்கி எழுந்தது. தமிழீழ விடுதலை ஆதரவுக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளை இணைத்து சென்னையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தலைமை ஏற்று நடத்திய உண்ணாநிலைக் கிளர்ச்சி, தமிழ்நாட்டுத் தமிழரிடையே ஈழவிடுதலை ஆதரவுக்குப் பெரிய உந்துதலை-வேகத்தை உண்டாக்கியது.

6.10.2008இல் தமிழக முதல்வர் கலைஞர் இந்திய அரசுக்கு விடுத்த அழுத்தமான வேண்டுகோளை-மத்திய அரசு அதிகாரிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் மட்டுமே, இலங்கை அரசின் தூதுவர்களிடம் “அடக்கமாக-மெதுவாகத் தாக்குதலை நடத்துங்கள்'' எனக் கோருவதற்கு மட்டுமே பயன்பட்டது. ஆயினும் ஈழவிடுதலை ஆதரவாளர்கள் எல்லோரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் 14.10.2008 இல் நடத்திய “அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகள்'' மத்திய அரசில் பிரதமர், அயலுறவு அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளன. இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒரு பெரிய மாற்றம் ஆகும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள்கூட, தமிழக அரசின் நிலைப்பாட்டின் முக்கிய முடிவான-”தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்-அதற்கு 29.10.2008 ஒரு காலக்கெடு'' என்பதை ஏற்றுள்ளனர். அத்துடன் 21.10.2008இல், சென்னையில், மனிதச் சங்கிலி மூலம் மக்களைத் திரட்டி, மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தர முதல்வர் எடுத்த முடிவும் வரவேற்கப்பட்டது. மழை காரணமாக அது 24.10.2008ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு எழுச்சியோடு நடைபெற்றது.

இவ்வளவு அழுத்தங்களுக்கிடையே முன்னாள் முதல்வர் செயலலிதா, ஈழ விடுதலைக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு “ஈழத் தமிழர்க்குச் சுயாட்சி உரிமை அளிக்கப்படவேண்டும்'' என்று அறிவித்தது ("நமது எம்.ஜி.ஆர்,' 10.10.2008) ஒரு நல்ல மாற்றம் ஆகும். இவ்வளவு மாற்றங்களும் இந்தியப் பிரதமரையும், இலங்கை அதிபரையும் வாய்திறந்து பேசவைத்துள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதுபற்றிப் பேசுவதற்கு முன்னால்-இலங்கை அதிபரின் இந்தியக் கையாளான “இந்து'' ஏட்டின் என். இராம்-பார்ப்பனருக்கே உரிய தமிழின எதிர்ப்புக் கொள்கைக்கு நெய் ஊற்றி எரியவிட்டுள்ளார். ஒரு சுப்பிரமணியசாமி, ஒரு துக்ளக் "சோ” என்கிற-மக்கள் மன்றத்துக்கு அப்பால் எங்கோ நிற்கிற வாய்க்கொழுப்பேறிய பார்ப்பனர்கள்- “நடந்தது நாடகமே'' என்று எழுதியும், “தமிழ்நாட்டு ஆட்சியைக் கலையுங்கள்'' என்று அறிக்கை வெளியிட்டும் கொக்கரிக்கிறார்கள்.

இதற்கு இடையே "இந்து' ஏட்டில் 14.10.2008 அன்று மாலினி பார்த்தசாரதி எழுதிய, தமிழ்த் தீவிரவாதிகளால் பேராபத்து (The damages of Tamil Chauvinism) என்னும் கட்டுரை தமிழீழத் தமிழரின்-தமிழகத் தமிழரின் தமிழ் மொழி, தமிழினப் பாதுகாப்பு உணர்வை இழிவுபடுத்தி-கொச்சைப்படுத்தி-இவ்வுணர்வுகளை அழித்துவிட வேண்டும் என்று துணிந்து எழுதி, இலங்கை அதிபருக்கும், சிங்களவருக்கும் பார்ப்பனக் கும்பலின் ஆதரவைக் காட்டிவிட்டனர். இக்கட்டுரை வெளிவந்த "இந்து' ஏட்டின் சில படிகளை ஈரோட்டில் 16.10.2008இல் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் எரித்து எதிர்ப்பைக் காட்டினர். தமிழ்நாடு முழுவதிலும் இந்த “இந்து'' ஏடு எரிப்புப் போராட்டம் நடந்திருக்கவேண்டும்.

தமிழரை இழிவுபடுத்துவதற்கு எதிர்ப்புக் காட்டுவதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? நாம் காசு கொடுத்து வாங்கி அதை எரிக்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஆர்.எஸ். மலையப்பன் என்கிற ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாவட்ட ஆட்சியரைப் பற்றி-சென்னை உயர்நீதி மன்றத்தின் தீய தீர்ப்பை, வரவேற்று ஆதரித்து 1957இல் “இந்து''ஏடு எழுதியதற்காக, அதன் படியை விலைக்கு வாங்கி, திருச்சி நகர மண்டபத் திடலில் பொதுக்கூட்டத்தில் எரித்தார்; அதைப் பின்பற்றி நானும், எம்.பழநியாண்டியும் பெரம்பலூரில் எரித்தோம். நிற்க.

16.10.2008இல் ஈரோட்டு எரிப்பைப் பற்றி “இந்து'' ஏடு காட்டமான தலையங்கமும் எழுதிவிட்டது. மேலும், “Sri Lanka : What needs to be done?” என்று 18.10.2008இல் ஒரு தலையங்கம் எழுதி, ஈழ விடுதலையைக் கண்டித்துள்ளது. "இந்து', ஏடு தனிப்பட்ட ஒரு குழுமம் நடத்தும் ஏடு. ஆனால் 131 ஆண்டுகளாக-பார்ப்பனரின் நலன் காக்க-தமிழரின் நலனைக் குலைக்க எல்லாம் செய்கிற ஓர் ஏடு; உலகத் தலைவர்களால் படிக்கப்படுகிற ஓர் ஏடு.

14.10.2008இல் முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவுகள் இந்திய மத்திய அரசையும், பிரதமரையும் நோக்கியவை. மகிந்த இராசபக்சே, இதுபற்றி உடனே இந்தியப் பிரதமரிடம் பேசவேண்டும்; அல்லது "இந்து' இராம் தன் கருத்தை ஏட்டில் எழுதி, இந்தியப் பிரதமருக்கும், இலங்கை அதிபருக்கும் தெரிவிக்கவேண்டும். ஆனால் நடந்தது என்ன?

14.10.2008இல் சென்னையில் முதலமைச்சர் செய்த முடிவுகள் பற்றி 16.10.2008 காலையில்-இராசபக்சேவும், இராமும் தொலைபேசியில் விரிவாக உரையாடுகிறார்கள். ஓர் ஏட்டின் ஆசிரியராக இராம் உரையாடினாரா? இலங்கை அதிபரின் கையாளாக-தமிழரின் எதிரியாக நின்று அவருடன் உரையாடினாரா? அவராக இவரிடம் உரையாடினாரா? இந்த அளவுக்கு ஒரு பார்ப்பனருக்குத் துணிச்சலும் செல்வாக்கும் வரக் காரணம் என்ன?

தமிழரின் பார்ப்பன அடிவருடித்தனமும், மத்திய அரசில் உள்ள தென்னாட்டுப் பார்ப்பனப் பாம்புகளான அதிகாரிகளின் “தமிழர் எதிர்ப்பு உணர்வுமே'' இதற்குக் காரணம் ஆகும். “பார்ப்பான் நல்ல வேலையாளாக-கையாளாக இருப்பான்; ஆனால் கொடிய எசமானனாக இருப்பான்'' என, டாக்டர். டி.எம். நாயர் அன்று சொன்ன பொன்மொழி, “இந்து'', “சுதேசமித்திரன்'' ஏடுகளைப் பார்த்துச் சொன்னதுதான். ஏன் இப்படிக் கூறுகிறோம்?

"இந்து” இராம் இடம் இராசபக்சே பேசியது 16.10.2008இல்; ஆனால் இந்தியப் பிரதமரிடம் இராசபக்சே தொலைபேசியில் பேசியது 18.10.2008இல். இதில் நமக்குப் புரிவது என்ன? ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழகத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவுகளைக் கூற, உற்ற கையாளான பார்ப்பனர்களிடம் முதலில் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின்னர் தில்லி அரசுத் தலைமைச் செயலகப் பார்ப்பன அதிகாரிகளிடமும் தன் அதிகாரிகள்மூலம் பேசித் தெரிந்துகொண்டு, மிகச் சாவதானமாக, இந்தியப் பிரதமரிடம் இலங்கை அதிபர் பேசினார்.

நம் பிரதமர் என்ன கூறினார்? “போர்மூலம் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணமுடியாது; ஒன்று பட்ட இலங்கை அரசமைப்புக்குஉட்பட்டு ஓர் அரசியல் தீர்வைக் காண முயலுங்கள்'' என்று மட்டுமே 18.10.2008இல் இந்தியப் பிரதமர் கூறினார். இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. ஏன்? நேற்றுவரையில் இந்திய அரசு ஆயுதங்கள், ராடார் கருவிகள், ஆயுதங்கள் வாங்குவதற்குக் கடன் எல்லாம் தந்து, ஈழத் தமிழர் பேரில் முப்படைத் தாக்குதல் நடத்த எல்லாம் செய்த பிரதமர்-“முப்படைத் தாக்குதலை உடனே நிறுத்துங்கள்; பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வு காணுங்கள்'' என்று கூறி, அதை இந்தியப் பாராளுமன்றத்தில் தெளிவாக அறிவித்திருக்கவேண்டும். அதைப் பிரதமர் செய்யவில்லை. பாராளுமன்றக் கூட்டம் இனி எப்போது நடந்தாலும், பிரதமர் மன்மோகன்சிங் இதைச் செய்யமாட்டார்.

21.10.2008 அன்று தம் அலுவலகத்தில், அதிபர் இராசபக்சே இலங்கை ஊடகத்தினருக்கும், இதழ்களின் ஆசிரியர்களுக்கும் பேட்டி அளித்தார். அப்போது இந்தியப் பிரதமர் அன்றைக்குத் தன்னிடம் என்ன கூறினார் என்பதை வெளிப்படையாகவே இராசபக்சே கூறிவிட்டார். அது என்ன? “இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் என்னுடன் பேசியபோது-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகள் பற்றி, எதையும் குறிப்பிடவில்லை. நாங்கள் தொடுத்துள்ள போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்பதை நான் மிகத் தெளிவாகவே அவரிடம் கூறிவிட்டேன்.''-(தி இந்து, 22.10.2008, புதுதில்லி பதிப்பு). எனக்கூறி, இந்திய அரசு தொடர்ந்து இராணுவ உதவி செய்துவருவதை அம்பலப்படுத்திவிட்டார்.

24.10.2008 அன்று தமிழ்நாட்டின் தலைநகரத்தில் நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலிப் போராட்டமும், 29.10.2008க்குள் இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலை நிறுத்தப்படாவிட்டால் தி.மு.க. மற்றும், தி.மு.க. கூட்டணியில் 2004இல் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று முடிவெடுத்துள்ளவை எல்லாம் மிகவும் பாராட்டுக்குரியவை. ஆனால் காங்கிரசுக் கட்சியின் தேசிய இன விடுதலைக்கு எதிரான போக்கை மாற்றிவிட இவை ஓரளவுக்கே உதவும். பாரதிய சனதா பதவிக்கு வந்தால் அது கொஞ்சம்கூட நடக்காது. இவற்றை நாம் நன்கு உணரவேண்டும்.

வேறு எந்த அணியின் சார்பில், எவர் பிரதமராக வந்தாலும்-இந்திய அரசுப் பார்ப்பன அதிகார வர்க்கம் சொல்லுகிற தன்மையில்தான்-தமிழர்-தமிழ்நாடு-ஈழத் தமிழர் பற்றிய சிக்கல்களில் நிலைப்பாட்டை எடுப்பார்கள். இந்தச் சூழலில், ஈழ விடுதலை பற்றி, நாம் என்ன செய்யவேண்டும்?

1. 14.10.2008க்குப் பிறகு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள ஈழவிடுதலை பற்றிய ஒற்றுமை உணர்வை மேலும் மேலும் நாம் வளர்த்தெடுக்கவேண்டும். 2009இல் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், எப்பாடுபட்டேனும் இந்த ஒற்றுமையை நாம் காப்பாற்ற வேண்டும்.

2. ஈழவிடுதலை ஆதரவுக் குழுக்கள், தமிழ்நாட்டுடன் நில்லாமல், மற்ற இந்திய மாநிலங்களுக்கும் சென்று, “ஈழத் தமிழர் சிக்கல்-இந்திய மக்களுக்கும்-இந்திய அரசுக்கும் பொறுப் புடைய சிக்கல்'' என்பதைப் புரிய வைக்கவேண்டும். ஏன்?

3. ஈழச் சிக்கல் பற்றி, அனைத்து நாடுகள் பொது மன்றத்தில் (U.N.O) 24.9.2008இல் பேசிய இராசபக்சே, பெரிய பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டிவிட்டு, “பயங்கரவாதிகள் புலிகள்; எனவே அவர்களை அழித்தே தீருவேன்'' எனச் சூளுரைத்துள்ளார்.

4. அண்மையில், இலங்கை அயலுறவு அமைச்சர் ரோகிதா பொகல்ல காமா, அய். நா. பாதுகாப்புக்குழு (Security Council) செயலகத்தை அணுகி, “விடுதலைப் புலிகளை, உலக பயங்கரவாதிகள் குழுப் பட்டியலில் சேருங்கள்'' என வலியுறுத்தியுள்ளார். உலக அரங்கிலும், இந்தியாவிலும் “பயங்கரவாதத்தை ஒடுக்குதல்'' என்கிற பெயரால்-மொழிவழி, இனவழி விடுதலைக் கிளர்ச்சிகளுக்கு எதிரான கொடிய நிலைப்பாட்டை எல்லா ஏகாதிபத்திய நாடுகளும், இந்தியாவும் மேற்கொண்டுள்ளதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.

“உண்மை வெல்லும்'' என்பது ஒரு பொய்-அதை வெல்லச் செய்திட, எல்லாவகைச் சூதுகளையும், தந்திரங்களை யும் கையாண்டாதால்தான்-உண்மை வெல்லும் என்பதே உண்மையாகும். ஈழ விடுதலையின் எதிராளிகள்-தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் இதைத் திறம்படவே செய்கிறார்கள். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. இது உண்மை. நாமும் அப்படிச் செய்வோம், வாருங்கள்!

வே. ஆனைமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com