Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
திசைகளைத் தேடி

பவா சமத்துவன்

திருகோணமலை-தென்ன மரவடிக் கிராமம்

முல்லைத் தீவு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைக்கும் ஊர் இது. அலைபுரளும் கடலோரத்தில் ஆள் அரவமில்லை. பசுமை குலுங்கும் காடுகளும் நிசப்தமாய் இருந்தது. கிராமத்தின் தெருக்களில், மவுனத்தின் இறுக்கத்தைக் கலைக்காமல் புகுந்து வெளியேறியது காற்று. கிழக்கும் மேற்குமாய் நீண்டு கிடந்த ஒரு தெருவில், இயக்கத்தவர் இருவர் தோளில் துப்பாக்கியுடன் நடந்து போனார்கள். சுற்றிலும் பார்த்தபடி, “இதுதான் மேஜர் குமுதண்ணன் வீடு! தெரியுமா உனக்கு''. இடப்புறத்தில், குண்டு வீச்சில் சிதிலமடைந்த, பழைய வீட்டைச் சுட்டிக்காட்டினான் ஒருவன். அது முத்தையா செல்வ நாயகம் தனது மனைவி அய்ந்து மக்களுடன் வாழ்ந்த வீடு.

இரண்டாவது மகன்தான் கணேசநாதன். இயக்கத்தில் சேர்ந்து, மேஜர் குமுதனாகி, ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவன். “ஆம்! குமுதண்ணனைக் கேள்விப்பட்டிருக்கேன். வீட்டை இப்பதான் பார்க்கிறேன்'' நின்று நிதானித்து வீட்டைப் பார்த்துவிட்டுத், தோழனைப் பின்தொடர்ந்தான் மற்றொருவன். தெருவில் குரலைக் கேட்டு, எழுந்து பார்த்தது வாசலில் படுத்திருந்த நாய். அவர்கள் கடந்து சென்று, கண்ணிலிருந்து மறைகிறவரை நின்று பார்த்துவிட்டு, மீண்டும் வாசலுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டது, வாலை மடக்கி. கிழக்கி லிருந்து கடற்காற்று ‘ஊ' வென வீசியது. குண்டுவீச்சில்பட்டுப் போன, தென்னை மரங்கள் தவிர, மாமரமும், வேம்பும்-கிச்சிலியும், காற்றின் போக்கிற்கு ஏற்பத் தலைவிரித்தாடின.

வீட்டின் உள்நுழைந்தால் கூடம். மேலே கூரையைத் தாங்கி நின்ற உத்தரத்தில் இரண்டு ஆந்தைகள், ஒரு பொந்துக்குள் இருந்து எட்டிப் பார்க்கின்றன. மேல்தளத்தில் ஆங்காங்கே, வட்டமாய்ச் சதுரமாய் மூளியாய் ஓட்டை விரிசல்கள். அந்தந்த வடிவிலேயே வெயில், கீழே தரையில் விழுகிறது. கூடத்தின் நடுச் சுவரில் ஆணியடித்து மாட்டப் பட்டிருக்கிறது, முத்தையா குடும்பத்தின் பெரிய அளவு நிழற்படம். மகள் உமா ராணியின் திருமணத்தின்போது எடுத்தது. மணமகன் கொழும்பில் டாக்டராய் இருந்தான்.

“வேணாம்பா...! சொன்னா கேளு, பொண்ணு மாப்பிள்ளையைத்தான் உட்கார வைச்சு எடுக்கணும்! எங்களை எதுக்கு...?''
அம்மா வெட்கத்துடன் ஓடி ஒளிந்துகொள்ள, இரண்டாவது மகன் கணேசநாதன், தாயை ஒரு குழந்தையைப் போலத் தூக்கி வந்து, உட்கார்த்தி வைத்தான், அருகில் அப்பா.

“அப்பா! அம்மா மேல கையைப் போட்டு உட்காருங்க''. மூத்த மகன் பாலச்சந்திரமூர்த்தி ஆசையாய்க் கூற, நெளிந்தார் முத்தையா செல்வநாயகம். எல்லோருக்கும் கேலியாய்ப் போய்விட்டது. மகள், மகன்கள், மாப்பிள்ளை என எல்லோரும் ‘கொல்' லெனச் சிரித்தார்கள். சிரிப்பின் சுவடு அடங்குமுன்னே ‘போட்டோ' எடுத்து முடிக்கப்பட்டது. வெளியே கிளை பரப்பி நிற்கிறது மாமரம். பக்கத்திலேயே வேப்பமரமும், குட்டையாய்க் கிச்சிலியும். வாலை மடக்கிக் காலை நீட்டிச் சரிவாய்ப்படுத்து, பாதிக்கண் திறந்து படுத்துக் கிடக்கிறது அந்த நாய் ...

தமிழ்நாடு - மண்டபம்

அகதிகள் முகாம். முகப்பில் காவல் அரண், உள்ளே சதுர வடிவில், நீண்ட வரிசையாய்க் குடியிருப்புகள். அஸ்பெஸ்டாஸ் கூரைளுக்கு அடியில், தீப்பெட்டிகளைப் போல் சின்னஞ்சிறு அறைகள், ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். முகாமின் வடகிழக்கில், பெண்மணிகள் நீர் இறைத்து நிரப்ப, நடுவில் மைதானமாய் இருந்த மணற்பரப்பில், குழந்தைகள் ஓடி விளையாடித் திரிகின்றன. “அம்ம V இந்தாங்கோ...!'' ஒரு குடம் நீரை அறையின் நடுவில் இறக்கிவைத்துப் போகிறாள் ஒரு இளவயது பெண்மணி. புகையும் அடுப்பு. ஈர விறகை உள்தள்ளி ஊதிக் கொண்டிருக்கிறார் திருமதி. நல்லமுத்து செல்வநாயகம்.

வயது அறுபதைத் தொடுகிறது. கண் பார்வை மங்கலாய்த் தெரிகிறது. தடவியபடியே, பக்கத்திலிருந்து ஒரு அலுமினியத் தட்டைத் தேடி எடுத்து, உலை மேல் வைக்கிறாள். வெந்நீரில் இட்ட கோதுமை, கஞ்சியாக மாற, இன்னும் நெடு நேரம் ஆகும். அறையின் மூலையில் சிறு கொடியில் துணிகள் காய, அதற்குக் கீழே இருக்கிறது பாயும், தலையணையும், தகரப் பெட்டியும். நடுவில் குடம் இருப்பதே, எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டதுபோல் இருக்கிறது. நீர்க் குடத்தை அடுப்பருகே தள்ளிவைத்துவிட்டு, வாசலைப் பார்க்கிறாள் நல்லமுத்து.

வாசல்படியில் ... கிழிந்த போர்வையால் உடலைச் சுற்றிக் கொண்டு எங்கோ வெளியில் பார்வையை நிலைத்தபடி, வெறித்துக் கொண்டிருக்கிறார் முத்தையா. இரண்டு நாளாய்க் காய்ச்சல், ஓயாத இருமல். சோர்ந்துபோய்ப் படுத்தபடியே கிடந்தவர், இப்போதுதான் அந்திசாயும் வேளையில், எழுந்து உட்கார்ந்திருக்கிறார். “அப்பு பாருங்க, இவன் தள்ளி விட்றான்!'' விழுந்து எழுந்தபடியே ஒரு சிறுவன் செல்வநாயகத்திடம் வந்தான். “டேய். சும்மா இருங்கோ...!'' என்றோ, “போய் எதையாவது எடுத்து
வச்சு படியுங்கோ..!'' என்றோ வேறு நேரமாய் இருந்தால் சொல்லியிருப்பார்.

கடந்த காலத்தின் துக்கம், நிகழ்காலத்தின் ஏமாற்றம், எதிர்காலத்தின் சூன்யம் என மனம் எதில் எதிலோ முட்டி மோதிச் சிதறுகிறது. பதில் வராத சிறுவன், புரியாமல் பார்த்துக்கொண்டே அப்பால் சென்றுவிட்டான். எங்கோ அடிவானத்தில், மரங் களுக்கு மேலே, நிலைத்து நின்ற பார்வையை மாற்றவே யில்லை திரு. முத்தையா செல்வநாயகம்.

கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் - வான் கூவர்

கனடாவின் மூன்றாவது பெரிய நகரம் இது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் முக்கிய நகர் வான்கூர். ஓங்கி உயர்ந்த மலைச் சிகரங்களும், மலைப் பாறைகளில் மோதிச் சிதறும் கடல் அலையும், மார்கழி மாதத்துக் காலை நேரம் போல, எந்நேரமும் இருக்கும் பனிப் பொழிவும், சிகரங்களுக்கு மேல் கூடுகட்டி யிருக்கும் முகில் கூட்டங்களுமாக, காண்பதற்கே களிப்பூட்டும், வனப்புமிக்க மாநகர், வான்கூவர்.

தனது இனத்தாரும், நாட்டாரும் எனப் பெரும்பாலோர் கிழக்கில் நெடுந்தொலைவில், ஒட்டாவோ மாகாணத்தில் வசிக்கிறார்கள். பாலச்சந்திரமூர்த்தியும் அதே மாகாணத்திற்குப் பக்கத்தில், மான்ட்ரியலில் வேலை பார்த்தான். ஓராண்டிற்குப் பின், தனது நண்பர்கள், நாட்டவர்களின் வற்புறுத்தலையும் மீறி, வெகுதொலைவிற்குப் புறப்பட்டு, இங்கே மேற்கில் வான்கூவர் வந்து விட்டான். தனிமையைத் தேடி, எல்லாம் இழந்தபின், எதிலுமே மனம் ஒட்ட மறுக்கிறது, அன்பிலும் நட்பிலும்கூட கனடாவின் முதியோர்கள் தாயகம் என்றும், ஓய்வு பெற்றவர்களின் வாழ் நிலம் என்றும் பெயரெடுத்திருந்த வான்கூவர், இளைஞனும், முதியோனுமாய் இல்லாத இந்த நடுத்தர வயது ஆசாமியை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாய் ... வான்கூவர் துறைமுகத்தில் வேலை. உழைப்பு அதிகம் என்றாலும் ஓய்வும் விடுமுறையும் மிகுதி. ஓய்வு நேரங்களில் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் அமர்ந்து, நகரையே பார்த்துக் கொண்டிருப்பான், பாலச்சந்திரமூர்த்தி. விடுமுறை தினம் எனில், காலையில் புறப்பட்டு மலைத் தொடருக்கு வந்து, பொழுது சாய்ந்தபின் இருப்பிடம் திரும்புவான்.

இன்றும் அப்படித்தான். விடுமுறை தினம். காலையில் மலைச்சரிவிற்கு வந்தவன், கடற்கரையயங்கும் நீண்டு பரந்திருக்கும் மலைத் தொடர்களுக்கிடையே மணிக் கணக்கில் நடந்து, களைப்புற்றபோது பூங்காக்களில் அமர்ந்து, கீழே பாறைகளில் மோதிச் சிதறும் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பொங்கி எழுந்து மோதிச் சிதறி, கோலமிட்டு மறையும் அலைகளைப் பார்க்கிறபோது கடல் அவனது வாழ்க்கையை வரைந்து காட்டுவதுபோல் இருக்கிறது.

“பாலா! என்னப்பா நித்திரை வரலியா...'' வீட்டின் வாசலில், மாமரத்தின் அடியில், குழந்தைகளுடன் படுத்திருந்த முத்தையா கேட்டார். பாலச்சந்திர மூர்த்தியுடன் படுத்திருந்த, கணேசனும், உமாவும் ஏற்கெனவே தூங்கி விட்டிருந்தார்கள்.

“என்னப்பா! மேல எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...'' முத்தையா அருகில் வந்து உட்கார்ந்து, மூத்தமகனின் முகத்தை வருடியபடியே கேட்டார்.

“அப்பா, அதோ தெரியுதே நிலா...! அதுக்கும் மேலே என்னயிருக்கும்...?'' மாமரத்தின் கிளைகளுக்கிடையே கைநீட்டிக் கேட்டான் பாலச்சந்திரமூர்த்தி.

“நட்சத்திரம்...'' கேள்வி படர்ந்த மகனின் முகத்தைப் பார்த்தபடி, சொன்னார் முத்தையா.

“அதுக்கும் மேல...?'' நீட்டிய கையை இன்னும் உயர்த்தினான் பாலா...

“கிரகங்கள்'' முத்தையா மகனின் மீதிருந்த பார்வையை விலக்காமலேயே சொன்னார்...

“அதுக்கும் மேல...''
முத்தையா முகத்தை நிமிர்த்தி, மகனின் நீட்டிய விரலைப் பார்த்தபடியே சொன்னார். “தெரியலப்பா...!''

கல் ஆர்ப்பரித்தது. கொட்டும் பனிப் பொழிவால் உடல் தொப்பலாய் நனைந்திருந்தது. பாலச்சந்திர மூர்த்தியின் கண்களில் நீர் சுரந்தது. கண்ணீர் முத்து முத்தாய் திரண்டு, ஒன்றாய் இரண்டாய், மூன்றாய் கன்னங்களில் வழிந்தபோது, கடற்காற்று வீசிப் பனிப்பொழிவோடு போய்ச் சேர்ந்தது.

ஆஸ்திரேலியா-வடக்கு மாகாணம் - ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்

ஆஸ்திரேலியாவில் வடக்கு மாகாணத்தில் இருக்கிற பாலைவனச் சோலை இது. ஆலிஸ் ஸ்பிரிங் நகரைச் சுற்றிலும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை, வெறும் மஞ்சள் பூமி. உமாராணி வேலைகளையயல்லாம், அவசர அவசரமாய் முடித்துக்கொண்டு இப்போதுதான் வந்து சேர்ந்தாள், வீடு டோட் நதிக்கு அருகிலேயே இருக்கிறது. கணவர் பறக்கும் மருத்துவப் பிரிவில் (ய்யிதீஷ்ஐஆ ம்லிஉமிலிrவி) டாக்டராகப் பணிபுரிகிறார். திடீர் திடீர் என்று செய்தி வரும். பாலைவனத்தின் சமவெளிப் பிரதேசங் களுக்குள், இருநூறு, முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு குறு விமானத்தில் சென்று வருவார். கண் காணாத தூரங்களில் யாரோ ஒருவர் அடிபட்டுக் கிடப்பார்.

ஏதோ ஒரு பண்ணையில், கால்நடை ஒன்று நோயில் விழுந்து துடிக்கும். அல்லது பிரசவ வேதனை யில் ஒரு பழங்குடிப் பெண்மணி முனகிக் கொண்டிருப்பார். டாக்டர்கள் குழு முடிந்த அளவிற்குச் சிகிச்சை அளிக்கும். முடியாத பட்சத்தில் விமானம், மருத்துவமனைகளுக்குத் தூக்கி வரும். இப்படித்தான் காலையில் கிளம்பிச் சென்றார் கணவர். திரும்பி வந்துவிட்டாரா என்று தெரியவில்லை. குழந்தைகள் இரண்டும் பள்ளி சென்றிருக்கின்றன. வீடுவர இன்னும் நேரமாகும்.
உமாராணிக்கு ஏமாற்றமாய் இருந்தது. விளையாட்டு எதிலும் ஆர்வம் பிறக்கவில்லை. நீரில்லாத ஆற்றில் மரத்தைப் போட்டுத் துடுப்பு வலிப்பதும், நீந்தி முன்னேறுவதைப் போல, வெறும் மணற்பரப்பில் படுத்து, மண்ணைத் தள்ளுவதும், அலை இல்லாத மணற்பரப்பில் பந்தை எறிந்து, தவழ்ந்து பிடிப்பதும்... எல்லாமே கோமாளித்தனமாய் இருக்கிறது.

நெஞ்சில் நிழலாடுகிறது, கடந்தகால நிகழ்வுகள், சொந்த மண்ணில் குழந்தையாய் இருந்தபோது, தைப் பொங்கல் நாள்களில் புரண்டு வருகிற ஆராவாரமும் உற்சாகமும், சித்திரை பிறக்கும் நாளில், பொங்கி வரும் மகிழ்ச்சியும்போல் இது வருமா...! கடல் அலைகளுடன் போட்டி போட்டு நீந்தி, ஓடிப்பிடித்து, கடற்கரையில் அண்ணன் தம்பிகளுடன் கொஞ்சிக் குலவி, பள்ளி விட்டு வந்ததும் பக்கத்தில் இருக்கிற காட்டுக்குள் ஓடி, மரங்களில் மறைந்து, கிளைகளில் தாவி...'' டேய் அண்ணா! என்னைக் கண்டுபிடி பார்ப்போம்...!'' எத்தனை மகிழ்ச்சியான நாள்கள் அவை. அந்த நாள்களும்... அவர்களும் இப்போது...? எதுவுமே கண் எதிரில் இல்லை. எல்லாம் கனவாய்ப் போய் விட்டது. அடக்க முடியாமல் அழுகை வர, விசும் பலுடன் வீட்டிற்குத் திரும்பினாள் உமாராணி.

மேற்கு செருமனி-நார்த் ரெயின் வெஸ்ட்பாலியா மாகாணம் - ரூர் வட்டம்

ஓபர்ஹாசன் நகரத்திற்கு அருகில் இருக்கிறது எய்சென் ஹும் கிராமம். மேற்கு செருமனியின் இந்த நிலப்பகுதியை, பூமியின் நிலக்கரி பாத்திரம் என்று அழைப்பார்கள். மிகுதியாய் நிலக்கரியும், பெருவாரியாய்க் கனிமங்களும் புதைந்திருக்கிற பூமி. பூமியின் இந்த இயற்கை வளங்களைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்த ஆள்கள் தேவைப்பட்டார்கள். அவர்கள் தங்குவதற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக் காலனிகள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுள் மிகப் பழைய குடியிருப்புதான் எய்சென்ஹீம்.

நிலக்கரிச் சுரங்கத்தில், அவரவர் பணி முடித்து உடைமாற்றி, சுரங்கத்தைவிட்டு காற்றாய்ப் பறக்கிறார்கள். நிலையத்தின் வாசலில், மனைவியோ, மகளோ, மகனோ காருடன் வந்து காத்திருப்பர். தமிழ்ச்செல்வனுக்கு அப்படி யாருமில்லை, தென்னமர வடியில் பள்ளி இறுதி முடிக்கிற வயதுவரை, அப்பா வந்து பள்ளி வாசலில் காத்திருப்பார். வகுப்பு முடிந்து மகன் வெளிவந்ததும், முதற்காரியமாய் புத்தகப்பையை வாங்கித் தோளில் போட்டுக் கொள்வார். அவரது ஒரு கை மகனின் கையை இறுகப் பற்றியிருக்கும். அப்படியும் விழுந்து எழுவான் தமிழ்ச்செல்வன்.

“அப்பா! நான் மெல்லவா எடுத்தார்றானப்பா...!''

“டேய் சும்மா வாடா! நீ சுமக்க மாட்டாய்''

மெல்லிய தேகம். ஒற்றை நாடி. ஒடிந்து விடுவதுபோல் இடுப்பு, இருபது வயதுவரை இப்படித்தான் இருந்தான் தமிழ்ச்செல்வன். நீலநிறப் பணி ஆடை, நிறம் தெரியாமல் கருமைபடிந்து சுமக்கவே கனமாய் இருக்கிறது. தூசியும், துகள்களும் நாசியில் ஏறி, நெஞ்சில் கழறுகிறது. நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்ய, பொறுமையும் சகிப்பும் நிறையவே தேவை. தினம் ஆறுமணி நேரம் வேலை. இவன் இன்னும் இருமணி நேரம், மிகை நேரப்பணி செய்வான். கூடுதல் ஊதியம். முதலில் தூசியும் துகள்களும் கண்ணில் விழுந்து, எப்போதும் ஓடைபோல் கண்ணீர் ஒழுகும். துடைத்து, துடைத்து, கண்கள் உள்வாங்கி, எரிச்சல் மேலிட சோர்ந்து போவான் தமிழ்ச்செல்வன். இப்போது தனிமையில், கடந்த காலத்தை நினைத்து, அழுதாலும் கண்களில் நீர் வருவதில்லை.

கிரேட் பிரிட்டன் - இலண்டன் மாநகர்

உயிர்கள் ஆனாலும், உடமையானாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாளம் உள்ளது. தாஜ்மகால், பிரமிடு, கங்காரு, எனப் படமாய்ப் பார்க்கிறபோதே நாடுகள் ஞாபகத்திற்கு வந்து விடும். இலண்டன் நகருக்கு இதோ இந்த டவர் பிரிட்ஜ். சண்முக வடிவேல் பிரிட்டனுக்கு வந்த புதிதில், இலண்டன் நகரத்தின் செழுமையும் மக்களின் வாழ்க்கையும் அவனை மருட்டி யது. எங்கெங்குக் காணினும் இரவு விடுதிகள். கேளிக்கை அரங்குகள், கடைகள், உணவ கங்கள் என ஒரு அகதியாய் கால் வைத்து, உள் செல்ல முடியாத இடங்கள் பல. அங்கெல்லாம் மனிதனைவிடவும், பவுண்ட்ஸ் ஸ்டெர்லிங்குகளுக்கே வரவேற்பு
அதிகம்.

இலண்டன் நகரின் ஒரு மூலை முடுக்கில், நண்பன் ஒருவனது அறையில் தங்கி, வேலையில்லாமல் வெறுமனே இருந்தபோது, மனம் கடந்தகால வேதனைகளால் வெடிப்புறும். பசியையும், கவலையும் மறக்க, வெளியில் காலாற நடந்து போவான். இளைப்பாற இடம் தேடுவது தேம்ஸ் நதியும், டவர் பிரிட்ஜும்தான். பாலத்தின் சுவரில் சாய்ந்து நதியைப் பார்த்து, நதியில் ஓடும் படகில் இருக்கும் யாரோ எவருக்கோ கை ஆட்டி, அது முடிந்தபின்னால் பிரிட்ஜின் லிப்டில் ஏறி உச்சிக்கு வந்து, நடைபாதையில் நடந்து, இமைக்கவும் மறந்து, கண்களை அகலத் திறந்து நகரைப் பார்த்து வியந்ததெல்லாம், கொஞ்ச நாள்களுக்கு முன்பு.

இப்போதும் அதே தேம்ஸ் நதிதான். நதியின் கரையோரமாய் இருக்கும் நே­னல் தியேட்டருக்கு அருகில் ஒரு சீன உணவகத்தில் பணியாளராய்-பரிமாறுபவராய்-வேலை. தொடக்க நாள்களில் மேசையைத் துடைத்துச் சுத்தம் செய்து, பாத்திரங்கள் கழுவி, பிரஸ்சை பிழிந்தபோது, கழிநீர் வந்ததைவிடவும், கண்ணில் வந்த கண்ணீரே அதிகம்.
பின்னிரவாகி விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் விடியல் தொடங்கும். உணவகத்தில் கடைசியாய் இருந்த ஒரு சிலரும் வெளியேறிச் செல்கிறார்கள். இனிமேல்தான் உண்டு முடித்து, உறங்கச் செல்லவேண்டும். எப்போதும் முதல் வரிசையில், முதல் ஆளாய் உண்டதில்லை சண்முக வடிவேல்.

வீட்டில் ... அரைவட்டமாய் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் குறைந்தாலும் அம்மா உணவு பரிமாறுவதில்லை. எல்லோரும் வந்தாக வேண்டும். அப்பாவிற்கு அருகில் இருந்தான் வடிவு. “சாப்பிட்றா வடிவு...! எல்லோரும் சாப்பிடறாங்க பாரு!'' அம்மா தட்டை நகர்த்தி வைத்தாள். அப்பா பிசைந்து ஊட்ட வடிவு வாய் திறக்கவில்லை.

“ஏண்டா வடிவு! பசிக்கலியா...!'' அருகில் வந்துகேட்டாள் அம்மா.

“இல்லம்மா... வந்து.. வந்து.. நம்ம நாய்... குட்டிக்கு... கொஞ்சம்... சோறு... வைக்கட்டா?''

ஒரு வாரத்திற்கு முன்புதான். தெருவில் விளையாடித் திரும்பியபோது, ஒரு நாய் குட்டியுடன் வந்தான் சண்முக வடிவேல். அப்பா சின்னதாய்க் கயிறு ஒன்றைத் திரித்துக் கொடுக்க, அதைப் பட்டையாய்க் கழுத்தில் மாட்டி, திண்ணையில் தூணில் கட்டி வைத்திருந்தான்.

“டேய் சாப்பிட்டதுக்கப்புறம் எல்லாரும், கொஞ்சம் கொஞ்சம் சோற்றை வைக்கத்தான் போறோம்! இப்ப நீ சாப்பிடு''
அப்பா கையில் இருந்ததை வாய்க்குமுன் நீட்டியபடி சொன்னார்.

“இல்லப்பா...! நமக்கு... முதல்லயே பசிக்கிறமாதிரி... அதுக்கும்... முதல்லியே பசிக்கும் இல்ல...?''

நல்லமுத்து, தன் கணவரைப் பெருமையும், நெகிழ்வும் பொங்கப் பார்த்துக்கொண்டே, தட்டைத் தன் முன் தள்ளிச் சோற்றைப் பிசைந்து, பெரிதாய் உருட்டி, உருண்டையை மகனின் கையில் வைத்தாள். அவிழ்ந்து விழும் கால்சட்டையை ஒரு கையால் பிடித்துக்கொண்டே, மறு கையில் சோற்று உருண்டையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி ஓடினான் சண்முகவடிவேல்.

திருகோணமலை தென்ன மரவடிக் கிராமம்

இரை எதுவும் இல்லாமல், காயோ, கனியோ, கொட்டையோ, இலையோ கிடைத்ததைத் தின்று, உடல் சோர்ந்து தோல் சுருங்கி, வரிவரியாய் எலும்புகள் தெரிய, அதே மாமர நிழலில், படுத்துக் கிடக்கிறது நாய். நாளொன்று ஏயழுட்டு முறை, திண்ணையில் ஏறி இறங்கி, நடுக்கூடம் முகர்ந்து, சமையலறை சென்று, புழக்கடைப் பக்கம் திரும்பி, தோட்டம் சுற்றி, ஏதேனும் ஆடோ-மாடோ-மனிதனோ அரவம் கேட்டால் நின்று குரைத்து, மீண்டும் மரநிழலில் வந்து வாசலில் தலைவைத்துப் படுத்துக் கொள்கிறது நாய்.

மதியவேளை. கிராமம் முழுவதும் வெறுமை கோலாச்சுகிறது. காற்று ஓ வென வீச மரங்கள் சலசலக்கின்றன.
அரைக் கண்மூடி படுத்துக் கிடந்த நாய், சருகுகள் பட்டு உடல் சிலிர்த்து, தலையைத் தூக்கிப் பார்க்கிறது. எதிரே-வாசலைத்தாண்டி, வாயிலைக் கடந்து நடுக்கூடத்தில் தெரிகிறது அந்தப் பெரிய நிழற்படம். கரையான் புகுந்து, மரச்சட்டங்களை அரித்து, கண்ணாடிக்கு மேலாக, சிறுசிறு வட்டத்தில் மொத்தமாய் மண்திரைகள். எழுந்தது நாய். பலவீனமான உடம்பைத் தூக்கி, மெல்ல நடந்து, சுவரில் கால் வைத்து, எக்கி... எக்கி... நகத்தால் பிறாண்ட கலைந்து விழுந்தது கரையான் புற்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com