Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
நாடாளுமன்றத் தேர்தலும் சோதிடப் புரட்டும்
ஆ.வந்தியத்தேவன்

30 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி மாணவர்களான நாங்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டுவிட்டு, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற இருந்த தொடர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, திராவிடர் கழகத்தின் அன்றைய விவசாய-தொழிலாளர் அணிச் செயலாளர் குடந்தை ஏ.எம். ஜோசப் அவர்கள் தலைமையில் எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்தோம். அப்போது இரயில் நிலைய நடைமேடையில் எடைகாட்டும் இயந்திரம் இருந்ததைக் கண்டோம். அதில் ஏறிநின்று இயந்திரத்தில் காசு போட்டால், நமது எடையுடன் எதிர்காலம் குறித்த வாசகம் அடங்கிய அட்டை வெளியே வந்து விழுவதைக் கண்டோம்.

சோதிடப் புரட்டைத் தோலுரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் மின்னலெனத் தோன்றியது. பத்துக்கும் மேற்பட்ட எங்களது பெட்டி, படுக்கை, பை முதலானவைகளை எடைமேடையில் வைத்தோம். இயந்திரத்தின் சக்கரம் சுழன்று நின்றது; காசு போட்டோம். அட்டை வெளியில் வந்தது; அதில் எடை குறிக்கப்பட்டிருந்தது. அட்டையின் மறுபுறத்தில், எதிர்காலம் என்ன என்று பார்த்தோம். உமது காதலில் வெற்றி கிட்டும், தொடர்ந்து முயற்சி செய் என அச்சிடப்பட்டிருந்தது. இதனை விளக்கி விடுதலையில் பெட்டிச் செய்தி வெளியிட்டோம்; கூட்டங்களிலும் பேசினோம்.

அப்போதெல்லாம் கிளி சோதிடம் சொல்பவர்கள் வருவார்கள். கை விரலில் ஒரு நெல்லை வைத்துக்கொண்டு பழக்கப்பட்ட கிளியை வைத்து சோதிடம் சொல்வார்கள். அட்டைகளின் படத்திற்கேற்ப, அச்சிடப்பட்ட சிறு புத்தகத்தில் உள்ளதைப் படித்துக் காட்டுவதில் மயங்கி ஏமாறுபவர்கள் பலருண்டு. நாளடைவில் கிளி சோதிடத்துடன், எலி சோதிடமும் வந்தது. இப்போது கம்ப்யூட்டர் சோதிடமும் வந்துவிட்டது. பிறந்த தேதியை மட்டும் சொன்னால்போதும், நாள், நட்சத்திரம், இத்யாதிகளுடன் வரைபடத்துடன் பலன்கூறும் வணிக மய்யங்கள் மலிவாகப் போய்விட்டன.

நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களிலும் ராசி பலன்கள் ஆக்கிரமித்து மக்களை ஏய்ப்பதில் போட்டி போடுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி என்ற ஆங்கில வார இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவரான குஷ்வந்த்சிங் என்பவர் அந்த இதழின் ஆசியராக நியமிக்கப் பட்டார். அவர் ஆசிரியர் பொறுப்பேற்ற உடன் சோதிடப் பகுதியை எழுதிவந்தவரின் ஊதியத்தைக் குறைத்ததால் சோதிட ஆசிரியர் இதழுக்கு எழுதுவதை நிறுத்திவிட்டார். அதனால் சோதிடக் குறிப்பு இல்லாமலேயே இதழ் வெளி வந்தது. சோதிடப் பகுதி இல்லாததால் இதழ் விற்பனை பாதித்துவிட்டதாக, ஏட்டின் உரிமையாளர்கள் வருத்தப் பட்டனர். இந்த நிலையில் குஷ்வந்த் சிங் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழைய சோதிடக் குறிப்புகளை அப்படியே வெளியிட்டார். எதைப்பற்றியும் கவலைப்படாத வாசகர்கள் அதனை உண்மையயன நம்பி, போட்டி போட்டுக்கொண்டு இதழ்களை வாங்கத் தொடங்கினர். இதுதான் சோதிட மகிமையோ!

நாள் நட்சத்திரம், குறிப்பதில், பெயர் மாற்றியும், கை யயழுத்துக்களை மாற்றியும் அமைப்பதில், மோதிரங்களை தாயத்துகளை அறிமுகம் செய்வதில் வாஸ்து நிபுணர்கள் புற்றீசல்போல் வந்துகொண்டே இருக்கிறார்கள். விட்டில் பூச்சிகளாய்ப் பகுத்தறிவற்ற மக்கள் வீழ்ந்து மடிகிறார்கள்.

1992ஆம் ஆண்டில் குடந்தை மகா மகக் குளத்தில் நெரிசலில் 130 பேர் செத்து மடிந்தார்கள். 1995ஆம் ஆண்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயக் குடமுழுக்கு விழாவில் யாகசாலை பந்தல் எரிந்து 65 பேர் கரிக்கட்டைகளாய் மாண்டுபோனார்கள். 2004ஆம் ஆண்டில் குடந்தையில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 95 மழலையர்கள் சிக்கிச் சீரழிந்து போனார்கள். அதே ஆண்டு திருச்சி திருவரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர்கள் உயிரிழந்தார்கள். இவர்கள் அத்தனைப் பேரின் சாதகமும் ஒரே மாதிரியாகவா இருந்தது? அது மட்டுமல்ல இதைப்பற்றி எந்த சோதிடராவது பத்திரிகைகளில் கிசுகிசு செய்தியைப் போலவாவது முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செய்தார்களா?

இவைகளையயல்லாம் இப்போது நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் 15ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் (திருவிழா) நடந்து முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தாவில் 1985ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிற இந்திய அறிவியல்-பகுத்தறிவாளர் சங்கம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பா.ச.க, சி.பி.எம், பி.எஸ்.பி, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க. முதலான கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றும், சோனியா, அத்வானி, மம்தா பானர்ஜி, ராம் விலாஸ் பஸ்வான், லாலு பிரசாத் ஆகிய தேசியத் தலைவர்கள் எவ்வளவு வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் கணித்துக் கூறுகிற சோதிடர்கள் எவராக இருந்தாலும் 25 இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பிரிபீஷ் கோஷ் வெளியிட்ட அறிக்கை செய்தி ஊடகங்களில் உலா வந்தது.

சோதிடம் அறிவியலுக்கு முரணானது-சரியாகக் கணக்கிட்டுக் கூறமுடியாது என்ற அவரின் அறைகூவலை ஏற்க எவருமே முன்வரவில்லை. சோதிடம்தனை இகழ் என்று புதிய ஆத்திசூடி புகட்டிய புரட்சிக் கவிஞரின் கட்டளையை அறிவுலகம் ஏற்க முன்வரட்டும்!