Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
ஆதிக்க வர்க்கத்தின் கள்ளக் குழந்தை கருப்புப் பணம்
செங்கதிர்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களில், 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவர்களுள் 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது கடுமையான தண்டனைக்குரிய வழக்குகள் உள்ளன. (டெக்கான் கிரானிக்கிள், 18.5.2009)

வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ள 543 உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு 3,075 கோடி உருபா. அதாவது சராசரியில் ஒரு உறுப்பினரின் சொத்து மதிப்பு ரூ.5.5 கோடிக்கும் அதிகம். தேர்தலின்போது வேட்பாளர் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளபடி, ஒரு கோடி உருபாவுக்குமேல் சொத்துடையவர்கள் 300 பேர். 2004 தேர்தலின்போது இவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்தான், கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் நிற்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூபா 174 கோடி. ஆந்திரா வில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற எஸ். இராசகோபாலின் சொத்து மதிப்பு 10 கோடி. 2009 தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அவர், வேட்பாளர் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு 200 கோடி உருபா. தற்போது நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள கோடீசுவரர் களின் எண்ணிக்கை-கட்சி வாரியாக: காங்கிரசு 138, பா.ச.க. 58, சமாஜ்வாடி 14, பகுஜன் சமாஜ் 13, தி.மு.க. 13, சிவசேனா 9, அய்க்கிய ஜனதா தளம் 8, தேசிய வாதக் காங்கிரசு 7, பிஜு ஜனதா தளம் 6, திரிணாமுல் காங்கிரசு 6, (தினத்தந்தி, 18.05.2009).

வெற்றிபெற்ற உறுப்பினர்கள் தம் தொகுதியில் குறைந்தது 10 கோடி முதல் 500 கோடி வரையில் தேர்தலில் செலவு செய்திருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு உருபா 50 முதல் 500 உருபா வரை கொடுத்திருக்கிறார்கள். எத்தனை வாக்கு வேறுபாட்டில் வென்றார்கள் என்பதில் பணம் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. தோற்ற பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேமுதிக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களும் பெருந்தொகையைச் செலவு செய்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில்-குறிப்பாகத் தமிழகத்தில் இதற்குமுன் இந்த அளவுக்கு வாக்காளர் களுக்குப் பணம் அளிக்கப்பட்டதில்லை என எல்லா ஏடுகளும் எழுதியுள்ளன. வெற்றிக்குப் பல காரணிகள் இருப்பினும் அவற்றுள் இழையோடி இருப்பது பண வலிமையே என்பதை 2009இல் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தல் திட்டவட்டமாகப் புலப்படுத்தியுள்ளது.

"இந்தியாவின் இளவரசர்' இராகுல் காந்தி அய்தராபாத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் பேர்வழிகள்மீது விசாரணை நடத்துவோம்' என்று முழங்கினார்.

"பிரதமர் வேட்பாளர் என்று இரண்டு ஆண்டுகளாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த-இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பாகிவிட்ட பா.ச.க.வின் முதுபெரும் தலைவர் அத்வானி தேர்தலின் போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்குள் வெளிநாடுகளின் வங்கிகளில் இரகசியக் கணக்கில் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான கள்ளப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்' என்று முழுங்கினார். இதுகுறித்து சிறு ஆவண நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்தியாவில் அரசியல் வாதிகள், உயர் அதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோரின் கூட்டுதான் ஊழலும், கொடிய குற்றச் செயல்களும் பெருகுவதற்கு ஊற்றுக்கண்ணாகவும், கெட்டியான காப்பரணாகவும் உள்ளன என்று நடுவண்அரசு அமைத்த ஓரா குழு Vohra Commission 1999இல் தன்னுடைய அறிக்கையில் தக்க ஆதாரங்களுடன் திட்டவட்டமாக அறிவித்தது. இக்கேடான நிலையை நீக்கிட, அதன்பின் 5 ஆண்டுகள் ஆண்ட வாஜ்பாய் ஆட்சியோ, பிறகு 5 ஆண்டுகள் ஆண்ட மன்மோகன் ஆட்சியோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இக்கூட்டுக் களவாணிளின் குற்றச் செயல்களும், கள்ளப்பணமும் மறைக்கப்படுவதற்கே இவர்கள் துணைபோனார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் மட்டும் இந்தியாவின் பெரும் திருடர்கள் 1456 பில்லியன் டாலர் (ரூ.72,80,000 கோடி) பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்று சுவிசு வங்கிச் சங்கம் தெரிவித்துள்ளது. இரஷ்யா 470 பில்லியன் டாலர், பிரிட்டன் 390 பில்லியன் டாலர், சீனா 96 பில்லியன் டாலர் உட்பட மற்ற நாட்டினர் இரகசியக் கணக்கில் வைத்துள்ள பணத்தின் மொத்தக் கூட்டுத் தொகையைவிட அதிகமாக இந்தியர்களின் பணம் ஸ்விஸ் வங்கியில் இருக்கிறது. ஆண்டு தோறும் 80,000 இந்தியர்கள் சுவிசு நாட்டுக்குச் செல்கின்றனர். இவர்களுள் 25,000 பேர் அடிக்கடி செல்கின்றனர்.

சுவிசு நாட்டு வங்கியில் (இவை தனியார் வங்கிகள்) இரகசியக் கணக்குத் தொடங்க குறைந்தது ரூ. 50 கோடி செலுத்தவேண்டும். சுவிஸ் நாட்டின் யூ.எஸ்.பி. வங்கியில்தான் அதிக அளவில் பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. 2002-2006 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியர்கள் ரூ.1,36,466 கோடிப் பணத்தை வெளிநாடு களில் கள்ளக் கணக்கில் குவித்திருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. (டெக்கான் கிரானிக்கிள், 20.04.2009) பெரு முதலாளிகளும், பெரு வணிகர்களும் ஏற்றுமதிப் பொருள்களின் விலைப் பட்டியல் மதிப்பைக் குறைத்துக் காட்டுவது, இறக்குமதிப் பொருள்களின் விலையைக் கூடுதலாக்கிக் காட்டுவது முதலான நடவடிக்கைகள் மூலம் அவாலா பணம் கருப்புப் பணமாக மாற்றப்படுகிறது.

தொழில்கள்-வணிக பேரங்களில் கமிசன், கையூட்டு என்று பலகோடிகள் புரளுகின்றன. அரசியல் வாதிகள், உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், கமிசன் ஏஜெண்டுகள் என்று பலரும் இப்பணத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். 1986இல் சுவீடன் நாட்டிலிருந்து ஃபோபர்ஸ் பீரங்கிகளை இந்தியா வாங்கியதில் அதில் தரகராகச் செயல்பட்ட, சோனியா காந்தியின் இத்தாலியக் குடும்ப நண்பரான குவத்ரோச்சி மூலம் பெற்ற கமிசன் பிரதமராக இருந்த இராசிவ் காந்தியின் இரகசியக் கணக்கில் சுவிசு நாட்டு வங்கியில் போடப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. குவத் ரோச்சி இந்தியாவி லிருந்து தப்பிக்கவும், இலண்டனில் அவர் பெயரில் இருந்த பணத்தை முடக்கவிடாமல் அவர் பயன்படுத்திக் கொள்ளவும் சோனியாவும் காங்கிரசு ஆட்சியும் உறுதுணையாக இருந்தன. இறுதியாக 2009 ஏப்பிரல் 30 அன்று 11 ஆண்டுகளாக தேடப்படும் உலகக் குற்றவாளிப் பட்டியலில் இருந்த குவத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட, சோனியாவின் ஆணையின்பேரில், மன் மோகன் சிங் வழிசெய்தார்.

உலக வங்கியின் கணக்குப்படி, ஓராண்டில் ஒரு இலட்சம் கோடி டாலர் (ஒரு டிரில்லியன்) கருப்புப் பணம் உருவாகிறது. இதில் 50,000 கோடி டாலர், வரி ஏய்ப்பு, ஊழல், கமிசன் போன்றவை மூலம் பெறப்படுகிறது. மற்ற 50,000 கோடி டாலர், போதைப் பொருள் கடத்தல், கள்ளச் சந்தையில் ஆயுத விற்பனை, கொள்ளை, கொலை முதலான குற்றச் செயல்கள் மூலம் உருவாகிறது. குறிப்பாக புதிய பொருளாதாரக் கொள்கை என்கிற கொள்ளையடிக்கும் கொள்கை உலகமயம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த படத் தொடங்கிய கடந்த 25 ஆண்டுகளில் கள்ளப் பணமும் குற்றச் செயல்களும் வேகமாகப் பெருகி வருகின்றன.

மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் 170 நாடுகளில் 131 ஆவது இடத்தில் இந்தியா தாழ்ந்திருந்தாலும், ஊழலில் உலகில் 83ஆவது இடத்தில் உயர்ந்து நிற்கிறது. இந் நிலையைக் கட்டிக் காப்பதே இந்திய ஆட்சியாளர்களின், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர் களின் சனநாயகக் கடமையாக இருக்கப் போகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com