Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர்களின் உரிமைக்குத் தடைபோடும் அந்நிய ஆட்சிப் பணித்தேர்வு விதி 16(2) அய் உடனே நீக்கிடு
கவின்

நடுவண் அரசின் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2008ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிகளுக்காக (IAS, IPS) நடத்திய தேர்வின் முடிவுகள் 2009 மே முதல் கிழமையில் அறிவிக்கப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 791 பேர்களில், 96 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இருபது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் தமிழ் நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் இத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்-கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பார்ப்பனர் மற்றும் பிற மேல்சாதி இளைஞர்களே இந்திய ஆட்சிப் பணிகளில் இடம்பெறும் நிலை இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தம் கடுமையான உழைப்பின்மூலம் அதிக எண்ணிக்çயில் இத் தேர்வில் வெற்றிபெற்று வருகின்றனர்.

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதும் இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்காக தில்லிக்குச் செல்லும் நிலை இருந்தது. 1994ஆம் ஆண்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது நடைமுறைக்கு வந்தது. அதன்பின் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள் சென்னையில் தொடங்கப்பட்டன. தற்போது 25 பயிற்சி மய்யங்கள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டின் சிற்றூர்ப்புறங்களிலிருந்து ஏழை இளைஞர்களும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வை எழுதுவதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட-அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் வீரபாண்டியன், வெற்றி பெற்ற 791 பேர் பட்டியலில் 56ஆவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வீரபாண்டியனின் பெற்றோர் உடலுழைப்புத் தொழிலாளர்கள். ஏழ்மையான குடும்பம் என்பதால் வீரபாண்டியன் ஆறாம் வகுப்பு முதலே கல்விச் செலவுக்காகப் பல வகையான உடலுழைப்பு வேலைகளைச் செய்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு படிக்கும்போது மதுரையில் புரோட்டா கடையில் வேலை செய்துகொண்டே புவியியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றார். தினமணி ஏடு இச் செய்தியை வெளியிட்டது. இதைப் படித்த முதல்வர் கருணாநிதி வீரபாண்டியனின் கல்விச் செலவிற்காக ஒரு இலட்சம் உருபாய் உதவித் தொகை வழங்கினார். "நான் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நூலை முழுமையாகப் படித்தேன். அம்பேத்கர் கடுமையான துன்பங்களுக்கிடையிலும் விடாமுயற்சியுடன் கல்வி கற்று, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மேம்பாட்டிற்காகக் கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் பொதுத் தொண்டு ஆற்றினார். அவருடைய வாழ்க்கை எனக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததால்தான் நான் அய்.ஏ.எஸ். ஆனேன் என்றுகூடச் சொல்லலாம்' என்று வீரபாண்டியன் கூறியிருக்கிறார்.

சென்னை சைதாப்பேட்டையில், சைதை துரைசாமி என்பவர் இலவயமாகப் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் பயின்றவர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 11 பேர் பிற்பட்ட வகுப்பினர். ஒருவர் பட்டியல் குல வகுப்பினர். சங்கர் என்பவர் நடத்தும் பயிற்சி நிறுவனத்தில் 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 29 பேர் பிற்படுத்தப்பட்டவர்; ஒருவர் பட்டியல் குலத்தவர். இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டில் 62 விழுக்காட்டைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் கைப்பற்றியுள்ளனர்; பழங்குடியினர்க்கான ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை இராஜஸ்தான் இளைஞர்கள் பெற்றுள்ளனர் என்று சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட பட்டியல்குல வகுப்புகளின் இளைஞர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பதற்குப் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் ஏற்படுத்திய திராவிட இயக்கமும், 1928 முதல் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் முறையாகப் பின்பற்றப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், 1980 முதல் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதும் முதன்மையான காரணங்களாகும் என்று சமூக இயல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ், 8.5.2009)

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது போன்ற தன்மையில் நடுவண் அரசின் பணியாளர் தேர்வாணையம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்லை. தமிழ் நாட்டில் பொதுப் போட்டிக்கான (நுளீ) இடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை தர வரிசைப்படி முதலில் நிரப்புகின்றனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட-பட்டியல் குல-பழங்குடியினரும் பொதுப் பிரிவில் இடம் பெறுகின்றனர். ஆனால் இத்தகைய நடைமுறையை மேல்சாதி ஆதிக்க எண்ணங்கொண்ட நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்பற்றுவதில்லை என்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதிய தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் குறை கூறுகின்றனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ், 8.5.2009)

இம் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நடுவண் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு விதி 16(2), பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தான் பெறுகின்ற அதிக மதிப்பெண் காரணமாக பொதுப் பிரிவில் இடம்பெற்றால், அவர் விரும்புகின்ற உயர் பணியைப் பெற உதவும் பொருட்டு, அவரை அவர் சார்ந்த வகுப்புக்குரிய ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லாமல் அதே இடத்தில் இருக்க அனுமதிக்கலாம். ஆனால் அவர் எந்த இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவரோ, அப்பிரிவில் அவருக்குரிய இடத்தைக் குறைத்திட வேண்டும்' (அதாவது அவ்வாறு குறைக்கப்படும் இடம் மேல் சாதியாருக்குக் கிடைக்க வேண்டும்) என்று கூறப்பட்டுள்ளது. இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பொதுப் போட்டிக்குரிய 50 விழுக்காடு இடங்களையும் மேல்சாதியினரே பெறும் வகையில் ஆதிக்க வர்க்கம் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது.

இந்திரா சகானி-இந்திய அரசு வழக்கில் உச்சநீதி மன்ற அமர்வு, "இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தான் பெறும் அதிக மதிப்பெண் தகுதி காரணமாக பிற பிரிவினர்க்கான பிரிவில் இடம்பெற்றால் அவரை அப்பிரிவுக்குரியவராகவே கருதவேண்டும். அதற்காக அவர் சார்ந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடத்தைக் குறைக்கக் கூடாது. பன்முகத் தன்மைகொண்ட இந்தியச் சூழலில் இத்தன்மையில் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே முறையானதாக இருக்கும்' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்படித் திட்டவட்டமாகத் தெரிவித்த பிறகும் விதி 16(2) நீக்கப்படாமல் இருப்பதால், அதன் அடிப்படையில் ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தலைதூக்கவிடாமல் தடுத்திட வழக்குகளைத் தொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்துவரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருட்டிணன், நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட ஆயம், 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இதுகுறித்து ஆராய்ந்து தீர்ப்பு கூறவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. (தி இந்து, 15.5.2009).

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடுநடைமுறைப்படுத்துவது போன்ற தன்மையில் நடுவண் அரசிலும், மற்ற மாநிலங் களிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியல்குல, பழங்குடி வகுப்புகளின் இளைஞர்கள் போராட வேண்டும். தமிழ்நாட்டு அரசு இதை முன்னெடுக்க வேண்டும். அந்தந்த வகுப்பினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்கக் கூடிய, வகுப்புவாரி விகிதாசார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது ஒன்றே முறையான தீர்வாகும். ஆகவே, நடுவண் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு விதி 16(2) உடனடியாக நீக்கப்படவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com