Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
மார்க்சிய - லெனினிய - பெரியாரிய - அம்பேத்கரிய தத்துவப் பயிற்சி நிறுவனம் எதற்காக?
வே. ஆனைமுத்து

இன்றைய உலகில் 630 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களுள் 230 கோடிப் பேர் கிறித்துவர்கள்; 100 கோடிப் பேர் இஸ்லாமியர்கள்; 100 கோடிப் பேர் பவுத்தர்கள். இந்திய மக்கள்தொகை 120 கோடி. இவர்களுள் ஏறக்குறைய 100 கோடிப் பேர் இந்துக்கள்; 12 கோடிப் பேர் இஸ்லாமியர்; 3 கோடிப் பேர் கிறித்துவர்கள்; 3 கோடிப் பேர் சீக்கியர்கள்; 1 கோடிப் பேர் பவுத்தர், சமணர் ஆவர். பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினருமான 25 கோடிப் பேரும், சட்டப்படி இந்துக்களில் அடக்கம்.

இந்துக்களில் எந்த மாநிலத்தவரும், எந்த மொழிக்காரரும் தத்தம் மொழி-இனத்துக்கு என்று தனி வாழ்க்கை முறையை மேற்கொண்டிருக்கவில்லை. இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்கள் வீட்டு வாழ்க்கை, சமூக வாழ்க்கை, மானிட உறவு, குடும்ப உறவு, சமய வாழ்வு எல்லாவற்றிலும் பார்ப்பன மத-வேத ஆகம சாத்திர நெறியின் படித்தான் கடந்த 1500 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். இதனால், இன்றும் 100க்கு 97 இந்துக்கள் தென்னாட்டில் சூத்திரர்கள்; 100க்கு 90 பேர் வடநாட்டில் சூத்திரர்கள். 2009இலும் இந்த வருண அமைப்பு அப்படியே இருக்கிறது. இதைப் பாதுகாப்பவை இந்திய அரசு; இந்துச் சட்டம்; இந்திய அரசமைப்புச் சட்டம் முதலானவை.

இது, இப்படியே நீடித்திட வேண்டி, வலுவான தத்துவத் தளத்தைப் பலப்படுத்திக்கொள்ளுவதற்கான ஏற்பாட்டை பார்ப்பனர்கள் உருவாக்கிக் கொண்டனர். அதற்கான முழுப் பொறுப்பையும் -இந்தியா முழுவதிலும், அந்தந்தக் காலத்திய அரசர்கள் மிகக் கெட்டியாகச் செய்துவிட்டார்கள்.

இந்து மதத்தினர்

அப்படி இயங்கும் இந்துமதத் தத்துவப் பயிற்சி நிறுவனங்கள் வேத பாடசாலை, ஆகம பாடசாலை என அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட இந்துமதப் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளன; இந்தியாவில் ஆயிரக் கணக்கில் உள்ளன. நம் தமிழகத்தில் உள்ள பழைய வேத பாடசாலை குடந்தையில் 1542இல் நிறுவப்பட்டதாகும். அதன் நிறுவனர் கோவிந்த தீட்சிதர் ஆவார். அதற்கு எல்லா வசதிகளையும் செய்து அளித்தவர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள். இன்றும் அங்கே பயிலுவோர் அனைவரும் பார்ப்பனர்கள். அதுபற்றிய உண்மையை அருள்கூர்ந்து உணருங்கள்; சிந்தியுங்கள்!

இதோ வரலாறு :

தஞ்சாவூரில் நாயக்க மன்னனான சேவப்பன் என்பவனுக்கு 1532 முதல் அமைச்சராகவும், குலகுருவாகவும், சேனாதிபதியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய கோவிந்த தீட்சதர் என்கிற கர்நாடகப் பார்ப்பனர் வேதப் பண்பாட்டை நிலைநிறுத்தவும், அப்பண்பாட்டைத் தொடர்ந்து மக்களிடையே பரப்பிடவும் வேண்டி, 1542இல் "இராஜா வேத காவிய பாடசாலை' என ஒன்றை கும்பகோணத்தில் நிறுவினார்.

சிறந்த வேத அறிஞரான கோவிந்த தீட்சதர் தஞ்சாவூரை ஆண்ட சேவப்பன், அச்சுதப்பன், இரகுநாதன் என்கிற மூன்று அரசர்களின் காலத்திலும் 70 ஆண்டுக் காலம் தொடர்ந்து முதலமைச்சராகவும், சேனாதிபதியாகவும், வழிகாட்டியாக வும் விளங்கினார். பட்டீசுவரத்தில் குடியிருந்த அவர் கும்பகோணத்தில், காவிரிக் கரையில், பழங்கால குருகுல முறையில் மேற்கண்ட வேத பாடசாலையை நிறுவினார். அது தொடர்ந்து நடைபெறுவதற்கென நாககுடி, திருநள்ளூர், கதிராமங்கலம் போன்ற ஊர்களில் 70 ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கினார்.

ஏறக்குறைய 1620 இல் கும்பகோணம் மகாமகக் குளத்தில் கோவிந்த தீட்சதர் வழிபாடு செய்தபொழுது நிகழ்ந்த இறும்பூதெய்தும் ஒரு நிகழ்ச்சியை நேரில் கண்டு வியந்த, தஞ்சை அரசன் இரகுநாதன், கோவிந்த தீட்சதரைத் தங்க துலாபாரத்தில் ஏற்றி, அவருக்கு எடைக்கு எடை வைரம், வைடூரியங்களை அளித்தான். வைரம், வைடூரியம் முழுவதும் கோவிந்த தீட்சதரால் கும்பகோணத்தில் வைணவக் கோயில்கள் கட்டுவதற்கும், வேத காவிய பாடசாலைக்கும் அளிக்கப்பட்டது. இப்பாடசாலையின் பெயரை "இராஜா கோவிந்த தீட்சதர் வேத பாடசாலை' என அரசன் இரகுநாதனே மாற்றி அமைத்தான். இப்பாடசாலை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. கோவிந்த தீட்சதர் 1634இல் தம் 119 ஆம் வயதில் மறைந்தார்.

இப்படிப்பட்ட பாடசாலைகள் தமிழகத்தில் இன்றும் நடைபெறுகின்றன. ஆறுகோடி தமிழர்கள் உள்ள தமிழகத்தில் நூற்றுக்கணக்கான வேத பாடசாலைகள் நடைபெறுகின்றன என்பதையும், அதே தன்மையில் 100 கோடி இந்துக்கள் உள்ள இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான வேத பாடசாலைகள் உள்ளன என்பதையும் நாம் நன்கு அறிதல் வேண்டும். "வேத பாடசாலைகளில் வேத மூலங்களைப் பற்றிய தெளிந்த முழுமையான அறிவைப் பெறப் பயிற்றுவிப்பது என்பதே முதன்மையான நோக்கமாகும். இந்தப் பயிற்சிக்கான காலம், உறுதியாக நெடிய கால வரை யறையைக் கொண்டிருந்தது. அதாவது. ஒரு வேதத்தைக் கற்றுக்கொள்ள, ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டுள்ளவாறு 4டி மாதங்களைக் கொண்ட 12 பருவங்கள் கால எல்லையாக வகுக்கப்பட்டன.

இதுவரையில் சொல்லப்பட்டவற்றைக் கொண்டு இரண்டு உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

1. சனாதன, பார்ப்பன, வேத மத நெறியே குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் தமிழரிடையே நிலைபெற்று நின்றிட அரசர்களே-தமிழ் அரசர்களே வழி வகுத்தனர். இதன் விளைவாக, இந்து தர்மம் என்கிற பேரால் சனாதன தர்மமே தமிழரின் வாழ்க்கை நெறியாக இன்றும் இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

2. மிகச் சிறிய எண்ணிக்கையில்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுக்காலமாக ஆரியப் பார்ப்பனர்கள் உள்ளனர். ஆயினும் அரசுகளின் அல்லது அரசர்களின் துணைகொண்டும் மற்றும் சொந்த முயற்சியாலும் வேதங்களில் சிறந்த பயிற்சி உள்ளவர்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அவர்கள் தங்களுக்குள்ளேயே உருவாக்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட கொள்கைத் தத்துவப் பயிற்சி நிறுவனம் நடத்துவதை எல்லா மதத்தினரும் உலகம் முழுவதிலும் மேற்கொண்டுள்ளனர்.

கிறித்தவர்

உலகத்தில், மிகப் பெரிய எண்ணிக்கையிலுள்ள கிறித்துவர்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளனர். சிறு பிரிவுகள் பல உள்ளன. பெரும் பிரிவினராக உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் இறையியல் கல்லூரி என்னும் பெயரில்-SEMINARY அல்லது Theological College என நிறுவி, உலக நாடுகளில் பலவகையான கல்வித் தகுதிகளை அளிக்கும் தத்துவக் கல்வியை அளிக்கின்றனர். இங்குப் பயிலுவோர் Bachelor of Theology- B.Th; Master of Theology- M.Th; Doctor of Theology - D.Th என்னும் பட்டங்களைப் பெறுகிறார்கள்.

புரோட்டஸ்டண்ட் பிரிவினர்-இப்படிப்பட்ட இறையியல் கல்லூரியில், Bachelor of Divinity- B.D; Master of Divinity - M.D; என்னும் பட்டங்களைப் பெறுகிறார்கள். மத வேதத்தில் இப்படி முறையான கல்விப் பயிற்சியும், பட்டமும் பெற்றவர்கள் மட்டுமே-பிரசாரகர், பாதிரியர் (Father) பிஷப் (Bishop) மேற்றிராணியார் முதலான சமய குருமார்கள் பதவியில் அமர முடியும்.

இஸ்லாமியர்

இஸ்லாமியர்கள் அரபிக் கல்லூரி (Arabic College) என இந்தியா முழுவதிலும் நிறுவியுள்ளனர். மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் "மதரஸா' என்னும் பெயரில் இவை செயல்படுகின்றன. இங்கு ஏழு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையில் முறையாகப் பயின்று பட்டங்கள் பெற்றவர்கள் மட்டுமே மெளல்வி, ஆலிம் முதலான இஸ்லாமிய மத குருமார்கள் பதவிக்கு அமர்த்தப்படுவார்கள். குர்-ஆன், ­ரியத், அரபு மொழி இவற்றைக் கற்று இஸ்லாமியத் தத்துவ அறிவில் வல்லமை பெற்றவர்கள் தொடர்ந்து உருவாக்கப்படவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பெரியாரிய-அம்பேத்கரிய கொள்கைகள்

இத்தகைய முறையான பயிற்சியும், கல்வித் தகுதியும் பெற்றவர்களாக-மார்க்சியம், லெனினியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய கொள்கைகளை நிரம்பக் கற்றவர்களாக ஆயிரக்கணக்கானவர்களை உருவாக்கிட வேண்டும். இதற்காகவே பெரியார்-நாகம்மை தத்துவப் பயிற்சி நிறுவனம் நிறுவப்படுகிறது. இவ்வகையில் இது புதியவகைக் கல்வி நிறுவனம் என்பதை அருள்கூர்ந்து மனம் கொள்ளுங்கள்.

இது தமிழகத் தமிழ்ப் பெருமக்களாலும், உலகத் தமிழ்ப் பெருங்குடி மக்களாலும், மற்றும் இந்திய-உலகப் பகுத்தறிவாளர்களாலும், மார்க்சிய-லெனினிய-பெரியாரிய-அம்பேத்கரியப் பற்றாளர்கள் அனைவராலும் வளர்த் தெடுக்கப்படவேண்டிய-தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டிய நிறுவனம் ஆகும். இந்த உண்மையை அன்புகூர்ந்து மனங் கொள்ளுங்கள்! இந்த நிறுவனம் செழித்து வளரத் தமிழர் ஒவ்வொருவரும் அவராகவே முன்வந்து ரூ.5,000, ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000, ரூ.1,00,000, ரு.5,00,000, 10,00,000 என பெரிய அளவில் நிதி அளியுங்கள் எனப் பணிவான அன்புடன் வேண்டுகிறேன்.

அறங்காவலர் குழுவினர், மற்றும் ஆலோசனைக் குழுவினர், பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, மனை எண் 277/2, குப்பம், அம்பத்தூர்-ஆவடி நெடுஞ்சாலை, அம்பத்தூர், சென்னை-600 058.

1.6.2009 - வே. ஆனைமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com