Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
தமிழீழம் மலர வேண்டுமானால்...
வே. ஆனைமுத்து

தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும் -மலர முடியும் என்கிற எண்ணம் உலகத் தமிழரிடையே 22.2.2002க்குப் பிறகு மிகவும் கெட்டிப்பட்டது. 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தமிழீழ மண் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2002க்குப் பின்-அய்ந்தே ஆண்டுகளில், கிழக்கு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களின்-விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்களின் தலைமையில் ஒரு மாகாண ஆட்சி நடைபெறுகிறது.

சிந்தனையாளன்


ஆசிரியர்
வே. ஆனைமுத்து

ஆசிரியர் குழு
து. தில்லைவனம்
க. முகிலன்
தமிழேந்தி
சங்கமித்ரா
வையவன்
சா.குப்பன்
ஆ.முத்தமிழ்செல்வன்
இரா. பச்சமலை
சி. நடராசன்
மங்கலம் அரசன்

அனைத்துத் தொடர்புகளுக்கும்:
"சிந்தனையாளன்'
19. முருகப்பாதெரு
சேப்பாக்கம்
சென்னை - 05.
தொலைபேசி :
044 - 2852 2862.
இன்று 18.5.2009க்குப் பிறகு, கிழக்கு மாவட்டங்களின் கடல் எல்லை மாவட்டமான முல்லைத் தீவு முழுவதுமாகச் சிங்களக் காடையரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. ஈழ விடுதலைப் போரில் 2006 ஆகஸ்டு முதல் 1.5.2009 வரை 1,00,000 தமிழ் மக்கள் பதைக்கப் பதைக்கக் கொல்லபட்டிருக்கிறர்கள். இரசாயன குண்டுமழை பொழிந்தும், டேங்குகளிலிருந்து கனரக பீரங்கியால் சுட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 35,000 பொதுமக்களைச் சாகடித்து விட்டது இலங்கை இராணுவம். அத்துடன், விடுதலைப் புலிகள் 22,000 பேரை கடந்த 33 மாதங்களில் கொன்று குவித்துவிட்டனர்.

இன்னுயிரை ஈந்த மறவர்களுக்கு நம் வீர வணக்கம்! இராணுவத்தினரின் கூற்றுப்படி 9,100 விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். சாகடிக்கப்பட்டவர்களை அந்நியில்-2,71,967 தமிழ் மக்கள் ஆண்களும், பெண்ளும் குழந்தைகளும் தாங்கள் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24.5.2009 அன்று முல்லைத் தீவுப் பகுதிக்கு வருகைதந்த அய்.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் அகதிகள் முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தரப்பில் 6261 வீரர்கள் இறப்புக்கு உள்ளானதாகவும், 2526 பேர் காயம் பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையயல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளாவட்டத்தில்தான் அறிய முடியும். விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 17.5.2009 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 19.5.2009 காட்டப்பட்ட உடலே பிரபாகரனுடையது என்றும் சாதனையாகக் கூறி, அவருடைய உடலை எரித்து, சாம்பலை இந்து மாக்கடலில் தூவி விட்டதாக மகிழ்ச்சிபொங்கிட இலங்கை இராணுவத் தளபதி உலகுக்கு அறிவித்து உள்ளார்.

உலகத் தமிழர் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதுபோன்ற கொடுமையான துன்பச் செய்தியாகும் இது. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்கிற செய்தியை ஒரு வதந்தியாகவே, ஊகத்துக்கு இடந்தருவதாகவோ நீண்ட நாள்களுக்கு நாம்விட்டு வைக்கக் கூடாது. உலகத் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்கள் கவலையால் கவ்வப்பட்டுள்ள இந்த நேரத்திலும் நாம் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. இன்று ஏற்பட்டுள்ள தோல்வியை, வெற்றியாக மாற்றிட ஏற்ற ஏற்பாடுகளை-மானம், மரியாதை-கருத்து வேறுபாடு கருதாமல், ஈழ விடுதலையில் அக்கறையுள்ள எல்லோரும் ஒன்றுகூடி மனம் விட்டுப் பேசி பிழைகளை அடையாளங்கண்டு, ஏற்ற செயல் முறைக்கும், உலகச் சூழலுக்கும் ஏற்ப முடிவுகளை மேற்கொண்டு, தந்தை செல்வநாயகமும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனும் காண விரும்பிய தமிழீழம் மலர்ந்திட, எல்லாம் எல்லோரும் இணைந்து செய்வோம், வாரீர்!உலக மானிட உரிமைப் பாதுகாப்பு அமைப்பும், அய்க்கிய நாடுகள் அவையும்; ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சு முதலான அய்ரோப்பிய நாடுகளும் இந்த மாபெரும் மானிடக் கொலையை வெளிப்படையாகக் கண்டிக்கின்றனர். தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பினர் எல்லோரும், மகிந்த ராஜபக்சேவின் பேரில், “தமிழ் இன அழிப்பு-மானிட அழிப்புக் குற்றம் ஆகும் என்பதால், உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், அவர் பேரில் வழக்குத் தொடர்ந்து அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்பட வழிகாணவேண்டும் என ஒங்கிக் குரல் எழுப்புகின்றனர்.

அய்.நா. அவையில், மகிந்த இராஜபக்சே, முதலானோர் பேரில், 26.5.2009 அன்று, மானிட உரிமை மீறல் குற்றம் பற்றி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்- “பயங்கரவாதத்தை-பயங்கரவாதிகளை அழிப்பது இனப்படுகொலை ஆகாது'' என்று கூறி வாதிடப் போவதாகவும் இராஜபக்சே துணிச்சலோடு கூறுகிறார். இந்தத் துணிச்சல் இவருக்கு வர என்ன காரணம்? இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, இரஷ்யா, முதலான நாடுகள், அவரவர் நாட்டில், பயங்கரவாத அழிப்பு என்கிற போரால் இன அழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறவர்கள். இவர்கள் இராஜபக்சேயின் தமிழ் இன அழிப்புக் கொள்கைக்கு எல்லா ஆதரவையும் தந்தனர்; இனியும்தர ஆயத்தமாக உள்ளனர்.

ஈழ மண்ணிலேயே அகதிகளாக வைக்கப்பட்டு இன்று அல்லல்படும் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் முதலானவற்றைத் தருகிற பணியை மட்டுமே இந்திய அரசு செய்கிறது. இராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா இடையே, 29.7.1987இல் ஏற்பட்ட “இந்திய-இலங்கை ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு மாறானது என்றாலும்-அதில் உள்ள ஒரு கூறான, “வடக்கும்-கிழக்கும் இணைக்கப்பட்ட தமிழீழப் பகுதி ஒரே அரசு அலகு'' என்பதை இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று வற்புறுத்துவதைக்கூட, இந்திய அரசு செய்திட முன்வரவில்லை.

“பிரபாகரனைக் கொல்ல வேண்டும் அல்லது அவரை உயிரோடு பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்''-என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்த இந்திய அரசும்-சோனியா காந்தி-மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசும், இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இன்று 322 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் களின் ஆதரவுடன் இரண்டாவது தடவையாகத் தலைமை அமைச்சராகிவிட்ட மன்மோகன்சிங், சோனியாகாந்தியின்-காங்கிரசின் விருப்பத்தை நிறைவேற்றித் தரும் ஏவலராகச் செயல்பட்டே தீருவார். இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்திடத் தமிழகத் தமிழரும், உலகத் தமிழரும் வலிமையாகக் குரல் கொடுத்துப் போராட வேண்டும். இது மிகக் கடினமானது; ஆனால் தேவையானது.

தமிழகத்தில் உள்ள வாக்கு வேட்டைக் கட்சிகளின் பின்னால் செல்லுவதை விட்டு விட்டு, தமிழ்த் தேசத் தன்னுரிமை கோரும் அமைப்புகள் ஓரணியில் திரண்டு நின்று தமிழகத்தில் காங்கிரசுக்கு-காங்கிரசு ஆதரவுக் கட்சிகளுக்கு உள்ள ஆதரவை அழித்திட முயல வேண்டும். அதே போல், இன்று ஏற்பட்டுள்ள ஈழ விடுதலை ஆதரவு எழுச்சியைத் தனக்குப் பயன்படக்கூடிய ஒரு கெட்டியான புணையாகப் பிடிக்கத் துடிக்கிற பார்ப்பனப் பெண்மணி ஜெயலலிதாவின் செல்வாக்கு வளர இடம் தருவது கொள்ளிக் கட்டையை எடுத்து தலை அரிப்பைச் சொரிந்துகொள்ள முயலுகிற மூடத்தனம் போன்றதே ஆகும். ஏன்?

ஜெயலலிதா, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 29.4.2009இல் நாமக்கல், முசிறி முதலான ஊர்களில், பின்வருமாறு வீராவேசமாகப் பேசினார். அது இது: “மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவால், நான் சொல்வதைக் கேட்கும் அரசு மத்தியில் அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் போர்ப்படையை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்'' (“தமிழ் ஓசை'', 30.04.2009) இந்தியாவில் ஓர் ஆட்சியை அமைப்பது பற்றிய அடிப்படை என்ன என்று தெரிந்தபிறகும்,-இந்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றாக இருக்க ஆசைப்பட்ட ஒரு கட்சி இப்படிக் கூறியதைத் தமிழகக் கட்சிகள் சிலவும் தமிழகத் தலைவர்கள் சிலரும், உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் ஏன் நம்பினார்கள், ஏன் தூக்கிப் பிடித்தார்கள் என்பது ஒரு புரியாத புதிராகப் போய்விட்டது.

அந்தப் புதிர் இதுதான். தமிழீழ ஆதரவு அமைப்பினரும், தமிழக மாணவர் உலகமும் தனித் தமிழீழத்துக்கும், பிரபாகரனுக்கும் ஆதரவான எழுச்சியைத் தமிழகத்தில் மூட்டிவிட்டிருக்கிறார்கள். அதைக் கையில் எடுத்துக்கொண்டால், தேர்தல் களத்தில் தன்னுடைய அணி வெற்றியைக் குவிக்கும் என்பது பார்ப்பன “சோ''வும், பார்ப்பன என்.ராமும், பார்ப்பன அரசியல்வாதிகளும் ஜெயலலிதாவுக்குச் சொல்லித் தந்த தந்திரம் ஆகும். ஏன் இப்படிக் கூறுகிறோம்?

மேலே கண்டது போன்ற ஓர் உரையை ஜெயலலி தாவைத் தவிர்த்த ஒருவர் (அ) ஈழவிடுதலை ஆதரவுத் தலைவர்களில் எவரேனும் ஒருவர் எப்போதேனும் ஆற்றி யிருந்தால்-”அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கீழ்ச் சிறைப்படுத்து'' என்று, “The Hindu”, “துக்ளக்'', “தினமலர்'', முதலான பார்ப்பன ஏடுகள் தங்கள் குடுமியைத் தட்டிக் கொண்டு, கூக்குரல் எழுப்பியிருப்பார்கள். ஆனால், அதற்கு மாறாக ஜெயலலிதாவின் கோரிக்கையைப் பற்றிய செய்திகளைக் கொட்டை எழுத்துகளில் “The Hindu” ஏடு பலநாள்கள் வெளியிட்டது.

“சோ''வின் “துக்ளக்'' ஏடு, “இந்திராகாந்தி பங்களாதேஷிக்குப் படையை அனுப்பியதும், இலங்கைக்குப் படையை அனுப்பக் கோருவதும் ஒன்றல்ல. ஜெயலலிதா இப்படிப் பேசுவது சரியல்ல'' என்று இடித்துரைப்பதுபோல் எழுதிவிட்டு, “இது நல்லதல்ல'' என்ற தலைப்பில், 13.5.2009 இதழில் ஒரு கட்டுரை எழுதி செல்லமாகக் கண்டித்துக் கூறியது. ஈழ விடுதலை ஆதரவுப் பரப்புரை பெரிய அளவுக்குத் தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியின் வெற்றியைப் பாதித்துள்ளது என்பது உண்மை. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஜெயலலிதா கட்டிக்கொண்டு ஆடியது ஒரு பொய்வேடம் என்பதும் அம்பலமாகிவிட்டது. அதனால்தான் அ.இ.அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது என்பது இதை எண்பிக்கும்.

இந்நிலையில் தமிழீழ விடுதலையைத் தூக்கிப் பிடிப்போர் அனைவரும்-தமிழ்நாட்டில் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கோரிக்கையை வளர்த்தெடுக்க விரும்புவோர் எல்லோரும், ஈழவிடுதலைச் சிக்கலில் தேர்தல் கட்சிகளிட மிருந்து எட்டியிருப்பது மிகவும் நல்லது. நிற்க. தேர்தலில் "பணநாயகம்' விளையாடியது என்பது உண்மை. எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ரூ.10 கோடிக்குக் குறைவாக எந்தக் கட்சி வேட்பாளரும் செலவு செய்ய வில்லை. ரூ.100 கோடிவரையில் கூட, செலவழிக்கப்பட்ட தொகுதிகளும் உண்டு. இது 1962 முதல் வளர்த்தெடுக்கப்பட்டது; காங்கிரசால்தான் இது வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று தேர்தல் கட்சி ஒவ்வொன்றும் இதைச் செய்கிறது. இதைச் செய்தும் தோற்றுப்போன கட்சியினர்-”அதோ திருடன் பிடி! பிடி!'' என்று உண்மைத் திருடன் கூச்சலிடுவதுபோல், வென்ற கட்சியைப் பார்த்துக் கூறி, உளறிக் கொட்டுகிறார்கள். இது நகைப்புக்கு இடமானது.

வாக்காள மக்களும் தலைக்கு ரூ.50 முதல் ரூ.2,000 வரை வாக்குக்குக் கூலி பெறுகிற ஈனப் புத்தியிலிருந்து விடுபடவில்லை. ஏனெனில், எந்தக் கட்சியும் மக்களையோ, இளைஞர்களையோ, மாணவர்களையோ அரசியல்படுத்தவில்லை. அரசியல்படுத்துதல் என்றால் என்ன? இந்தியாவில் இன்று உள்ள அரசமைப்புச் சட்டம் வெகுமக்களின் நலன்களுக்கு எதிரானது. இதனை மேதை அம்பேத்கர் 1953இலும், 1955இலும் துலாம்பரமாக அறிவித்துவிட்டார். தந்தை பெரியார் 1946 முதல் 1973வரை 27 ஆண்டுக்காலம் இதை இடைவிடாது முழங்கினார்.

இன்றுள்ள இந்திய அரசமைப்பு முதலாளியம்-பார்ப்பனியம் இரண்டையும் கெட்டியாகப் பாதுகாப்பது ஆகும். இந்திய முதலாளியமும் பார்ப்பனியமும் ஒன்றை மற்றொன்று பாதுகாக்கின்ற பண்பு கொண்டவை. எனவே இவர்கள் மனமார உலக முதலாளியத்தை-உலகமயமாக்கலை-பெரிய பெரிய சந்தைகள் தேடுவதை உயரிய கொள்கையாக மேற்கொண்டுவிட்டன. மேலும் உலகின் எந்தப் பகுதியில் மானிட உரிமைப் பறிப்பு, தேசிய இன விடுதலை எழுச்சி ஒடுக்கப்படுதல் நடைபெற்றாலும் அதைத் தட்டிக் கேட்கும் செல்வாக்கை அய்க்கிய நாடுகள் அவையும், உலகப் பாதுகாப்பு அவையும் 1990க்குப் பிறகு இழந்துவிட்டன.

இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசுக்கோ மற்றெந்த மாநில அரசுக்கோ ஏற்புடையது அன்று. இந்தியப் பார்ப்பன அரசு இலங்கையில்-இந்திய அய்.ஓ.சி. (IOC), பஜாஜ், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், “The Hindu” ஆகிய இவர்களின் வணிக ஆதிக்கப் பரவலை வளர்க்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் முந்திக் கொண்டு செயல்படுகிறது. இது இலங்கை-இந்தியத் தொழில்-வணிக உறவு வளர ஒரு கட்டாய ஏற்பாடாக இருக்கிறது. இதையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு, 2006 ஆகஸ்டு முதல் இந்திய அரசிடமிருந்து போருக்கான எல்லா உதவிகளையும் தாரளமாகப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு-எல்லாவகைப் படை வலிமையையும் ஓரளவு பெருக்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது.

ஈழ விடுதலைக்கு முதலாவது எதிரி இலங்கைச் சிங்கள அரசு என்பது இயல்பு. இரண்டாவது எதிரி இந்தியா என்பதும்; மூன்றாவதான எதிரிகள் பாகிஸ்தான், சீனா, இரஷ்யா, லிபியா முதலான நாடுகள் என்பதும் இயல்புக்கு எதிரானது. ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் இத்தனை இக்கட்டுகளையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இச் சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இலங்கையிலுள்ள எல்லாத் தரப்புத் தமிழரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.

புறநானூற்றுத் தமிழர் வீரம் 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. 1800 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழர் வரலாற்றில், ஓர் அரசை எதிர்த்துப் போராடி-அஞ்சச் செய்த மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து 26 ஆண்டுக்காலம் போர்க்களத்தில் முகங்கொடுத்த ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே ஆகும். இவர்கள் இனிமேலும் சிலிர்த்தெழ வேண்டும். இதற்குத் தமிழகத் தமிழரும், உலகத் தமிழரும் எல்லா வகைகளிலும் என்றும் துணை நிற்கவேண்டும். இதற்கு நாமும் துணைபுரிவோம்.

1.6.2009 - வே. ஆனைமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com