Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
மும்பை தாக்குதல் பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது தீர்வாகாது

- க.முகிலன்

2008 நவம்பர் 26 இரவு 9 மணி முதல் 29 காலை வரை 60 மணி நேரம், மும்பை நகரத்தைத் திடுமென ஓர் அந்நிய நாட்டுப்படை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தியது போன்ற நிலை நீடித்தது. பாக்கிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்தியாவை உலுக்கிய இக்கொடிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். மும்பை நகருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து நகரின் 11 இடங்களில் தாக்குதல் நடத்தினர். தாஜ் ஓட்டல், ஒபராய் -டிரைடன்ட் ஓட்டல்கள், நரிமன் பகுதியில் யூதர் விடுதி ஆகியவற்றுள் பயங்கரவாதிகள் நுழைந்து அங்குப் பலரைச் சுட்டுக் கொன்றனர். மற்றும் பலரைப் பிணையாள்களாகப் பிடித்தனர். இப்பிணையாளர்களில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டினரைக் கண்டறிந்து சுட்டனர்.

இந்தியாவில் இதற்கு முன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் சில மணித்துளிகளுக்குள் முடிந்து விட்டன. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11 அன்று வெடிகுண்டுகள் நிரப்பிய வானூர்தி களைக் கொண்டு மோதித் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியும் சில மணித்துளிகளே நீடித்தது. ஆனால் தாஜ் ஓட்டலிலும் ஒபராய் ஓட்டலிலும் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்கவும், பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கவும் 60 மணி நேரம் ஆயிற்று.

அதனால் தொலைக்காட்சிகள் போர்க்களக் காட்சியைக் காட்டுவது போல் தாஜ் ஓட்டல் முற்றுகையை -மீட்பு நடவடிக்கைகளை ஒளிபரப்பின. குறிப்பாக ஆங்கில மொழித் தொலைக்காட்சிகள் அறுபது மணி நேரமும் தொடர்ந்து இதையே ஒளிபரப்பின. தாஜ் ஓட்டலிலும், ஒபராய் ஓட்டலிலும் சிக்கியிருந்தவர்கள் பணக்காரர்கள், வணிகர்கள், உயர் அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அடங்கிய மேட்டுக் குடியினராக இருந்தனர். அதனால் தாஜ் ஓட்டல் முற்றுகையே முதன்மை பெற்றது.

சத்திரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையப்பகுதியில் தொடர்வண்டிக்காகக் காத்திருந்த பயணிகள் கூட்டத்தை நோக்கிப் பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாகச் சுட்டனர். இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். இறந்த 56 பேர்களில் 22 பேர் இ சுலாமியர் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். 56 பேர்களில் பெரும்பாலோர் ஏழைகள். பிழைப்புக்காக பீகார், உத்திரப்பிரதேசம், மகாராட்டிரத்தின் தொலை தூரப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். 26 உடல்கள் கேட்பாரற்று மருத்துவமனையின் பிணவறையில் கிடந்தன. சிவாஜி தொடர்வண்டி நிலையப் பகுதியில் இறந்தவர்கள் பற்றித் தொலைக்காட்சிகள் எதுவும் காட்டவில்லை. மாறாக தாஜ் ஓட்டல் முற்றுகையை மட்டுமே காட்டி மக்களிடையே அச்சத்தையும் சினத்தையும் மூட்டின.

24‡9‡08 அன்று நடுவண் புலனாய்வுத் துறை மும்பை நகரின் தாஜ், ஒபராய், மாரியட் முதலான நட்சத்திர ஓட்டல்களை இல சுகர் -இ -தொய்பாத் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று மகாராட்டிர அர சுக்கு அறிக்கை அனுப்பி எச்சரித்தது. அக்டோபர் 18 அன்று நடுவண் புலனாய்வுத் துறை, இல சுகர்‡இ‡தொய்பாத் தீவிரவாதிகள் கடல் வழியாக வெடிப் பொருள்களுடன் வந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக நடுவண் அர சுக்கு அறிக்கை அனுப்பியது. மீண்டும் நவம்பர் 19 அன்று, மும்பை கடல் பகுதியில் ஒரு கப்பல் வந்திருப்பதாகவும் இலசுகர்இ-தொய்பாத் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இத்தகவல்களைப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் தெரிவிக்கவில்லை. உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது போல, எம்.கே. நாராயணனும் அப்பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும். மேலும் முன்னெச்சரிக்கையாகப் பெற்ற தகவல்களைப் பிரதமருக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கத் தவறியதற்காக நாராயணன் தண்டிக்கப்பட வேண்டும்.

தாஜ், ஒபராய் ஓட்டல்கள், நாரிமன் இல்லம் ஆகியவற்றுள் பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்தோரைப் பிணையாட் களாகப் பிடித்து வைத்துள்ளனர் என்ற செய்தி அறிந்ததும் இரண்டு மணி நேரத்திற்குள் வந்திருக்க வேண்டிய தேசிய பாதுகாப்பு அதிரடிப் படையினர், ஒன்பது மணி நேரம் கழித்து வந்தனர். சண்டிகரி லிருந்து பயணிகள் விமானம் வருவதற்குக் காலத் தாழ்வாகிவிட்டது என்று நடுவண் அர சு காரணம் கூறுகிறது. தனி வானூர்தியில் தேசியப் பாதுகாப்பு அதிரடிப் படையி னரை ஏற்றி உரிய காலத்தில் மும்பைக்கு அனுப்பியிருந்தால் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். பயங்கரவாதிகளின் தாக்குதலை முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். முகம்மது அஜ்மல் அமீர் என்கிற ஒருவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டுள்ளான். இவன் பாக்கிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஒக்காரா மாவட்டத்தில் உள்ள பரீத்கோட் என்னும் ஊரைச் சேர்ந்தவன். மும்பை தாக்குதலில் இந்த பத்துப் பேர் மட்டுமே ஈடுபட்டதாக அர சு கூறுகிறது. ஆனால் இருபது அல்லது இருபத்தைந்து பயங்கரவாதிகள் இத்தாக்கு தலில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த பத்துப்பேர் தவிர மற்றவர்கள் தப்பியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

மும்பை நகரைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்குப் பாக்கிஸ்தானில் இல சுகர்‡இ‡தொய்பா அமைப்பும் அந்நாட்டின் உளவுத்துறையான அய்.எஸ்.அய்.யும் (ISI) ஓராண்டுக்கு மேல் தீவிர பயிற்சி அளித்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பயிற்சி அளித்த பாக்கிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் நால்வரின் பெயர்களை அமெரிக்கா, அய்க்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு அவையிடம் அளித்துள்ளது.

பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் ஜம்மு‡காஷ்மீர் நிலப்பகுதியில் மட்டும் நிகழ்ந்து வந்தன. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் 1993 முதல் படிப்படியாக இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவியிருப்பது ஏன்? புனிதப்போர் (ஜிகாத்) என்ற பெயரில் 1989 முதல் கா சுமீரில் பாக்கிஸ்தானில் பயிற்சிபெற்ற இளைஞர்களின் தாக்குதல் அதிகமானது ஏன்? பயங்கரவாதிகளை உருவாக்கும் உலகின் உலைக்களமாக பாக்கிஸ்தான் மாறியிருப்பது ஏன்?

பிரிட்டி சு இந்தியாவில் இ சுலாமியர் 25 விழுக்காட்டினர் “இந்தியத் தேசியம்”, “தேசவிடுதலை” என்ற பெயரில் காலங்காலமாக ஆளும் வகுப்பாக இருந்து வரும் இந்து மேல்சாதியினர் எல்லா வாய்ப்புகளையும் முற்றுரிமையாக்கிக் கொள்ள முயன்றனர். இசுலாமியர்களில் படித்த பணக்கார மேல் தட்டினர் இதில் பங்கு கேட்டனர். இந்த அதிகாரப் பகிர்வுக்காக இ சுலாமிய மதத்தைக் கருவியாகப் பயன்படுத்தினர். இந்த முரண்பாட்டின் விளைவாகவே பாக்கிஸ்தான் பிரிந்தது என்பது வரலாறு. ஆயினும் இதன் நீட்சியாகவே இந்தியா-பாக்கிஸ்தான் முரண்பாடும், மோதலும், பகையும் தொடர்கின்றன.

தனிநாடாகி விட்ட பாக்கிஸ்தானில் உள்ள ஆளும் வகுப்பினருக்குத் தம் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு காசுமீர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு காசுமீர் மக்கள் தம் தேசிய அடையாளங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில் தமக்கான சிறப்புரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 370 மூலம் நிலை நாட்டிக் கொண்டனர். இந்த நிபந்தனையின் பேரில்தான் இந்தியாவுடன் இணைந்தனர். ஆனால் நேருவும், இந்திராகாந்தியும் காசுமீர் மக்களின் தேசிய உரிமைகளை நசுக்கினர். இந்த உரிமைப் பறிப்பை ஒடுக்குதலை எதிர்த்துக் கா சுமீர் இளைஞர்கள் போராடத் தொடங்கினர்.

காசுமீர் தேசிய இன எழுச்சியை நடுவண் அரசு தொடர்ந்து ஒடுக்கியது. காசுமீர் தேசிய உரிமை வேட்கைக்கு இசுலாமியத் தீவிரவாதம் என்ற முத்திரையை இந்துத்துவ-இந்தியத் தேசிய ஆளும் வகுப்பினர் குத்தி ஏமாற்றி வருகின்றனர். தில்லி ஆட்சியாளர்களின் கேடான இப்போக்கைப் பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் பயன்படுத்தி காசுமீர் இளைஞர்கள் சிலருக்குப் பாக்கிஸ்தானில் பயிற்சி அளித்து அனுப்புகின்றனர். காசுமீர் மக்களின் தேசிய உரிமைகளை உறுதி செய்வது ஒன்றே இதற்குத் தீர்வாகும். படை வலிமையைக் கொண்டு அடக்கி விடலாம் என்கிற வல்லாதிக்க மனப்போக்கு தில்லி அதிகாரவர்க்கத்திடம் நீடிக்கும் வரை காசுமீரில் மோதல்களும், உயிரிழப்புகளும் ஓயமாட்டா.

பயங்கரவாதம் என்பது அந்தந்த நாட்டிலும் உலக அளவிலும் நிலவும் அதிகார அமைப்பு, அரசியல் நிலைமை ஆகியவற்றிலிருந்தே தோன்றுகிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் காசுமீரிலும் பஞ்சாபிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அம்மக்களின் தேசியத் தனித்தன்மைகளை அழித்து “இந்தியத் தேசிய நீரோட்டத்தில்” கரைத்து விடுவதற்காக தில்லி வல்லாதிக்க ஆட்சி ஏவிய ஒடுக்கு முறைகளின் விளைவாக ஆயுதப் போராட்டங்கள் வெடித்தன.

நெருக்கடி நிலைக்குப்பின் 1977இல் நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியும் இந்திராகாந்தியும் படு தோல்வி அடைந்தனர். இந்துமத வெறி அமைப்பான ஜனசங்கத்தின் வாஜ்பாயும் அத்வானியும் தில்லி ஆட்சியில் இடம் பெற்றனர். இந்திராகாந்தி மென்மையான இந்துத்துவப் போக்கை மேற்கொண்டார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் காங்கிரசுக் கட்சிக் கான கொள்கையாக அதை அவர் ஆக்கினார். பெயரளவில் இருந்த மதச் சார்பின்மைக் கொள்கை கை விடப்பட்டது. 1980 இல் ஜனசங்கம் என்பது பாரதிய சனதாக் கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. “இந்துத்துவம்” என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டது. இதற்காக அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் இராமர் பிறந்தார், எனவே அங்கு இராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்ற மதவெறி கோரிக்கையை நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரப்பியது. 1992 டிசம்பர் 6 அன்று சங்கபரிவாரங்கள் பாபர் மசூதியைத் தகர்த்து தற்காலிக இராமன் கோயிலை அங்கே எழுப்பினர்.

இந்தியாவில் 13 விழுக்காட்டினராக உள்ள இசுலாமியர் மனக்கொதிப்புற்றனர். தம் எதிர்ப்பை அமைதியான ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுத்தினர். மும்பையில் இவ்வாறு ஊர்வலம் சென்ற இசுலாமியர் தாக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளின் தொடர் விளைவாக 1993 மார்ச் 13 அன்று மும்பையில் பங்குச் சந்தை வணிக வளாகம் இ சுலாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. 257 பேர் இறந்தனர். பாக்கிஸ்தானில் இயங்கும் இலசுகர் இதொய்பா அமைப்பு இக்கொடுஞ் செயலைச் செய்ததாக அறிவித்தது.

1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியாவின் பயணிகள் வானூர்தியை இலசுகர் இதொய்பாத் தீவிரவாதிகள் ஆப்கானில் கந்தகாருக்குக் கடத்திச் சென்றனர். 1993 மும்பைத் தாக்குதலை நடத்திய மவுலானா மசூத் அசாரை இந்தியச் சிறையிலிருந்து விடுவித்து ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். வாஜபாய் ஆட்சி இந்த நிபந்தனையை ஏற்றுச் செயல்பட்டது.

2002 பிப்பிரவரி 27 அன்று கோத்ரா நிலையத்தில் தொடர்வண்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் இருந்த பெட்டிகளை இசுலாமியர் தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்று கூறி நரேந்திரமோடி அரசும், சங்பரிவாரங்களும் இணைந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்களைக் கொன்றன. இந்நிகழ்வு இசுலாமிய பயங்கரவாதப் போக்கிற்கு எரியும் தீயில் நெய்யூற்றியது போலாயிற்று.

இதற்கு முன் 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டன. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தும் எனப் புஷ் அறிவித்தார். 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையயடுத்து அந்நாட்டைக் கைப்பற்றியது.

2003 மார்ச் சு மாதம் அமெரிக்கா ஈராக் மீது படையயடுத்தது. சதாம் உசேனைத் தூக்கிலிட்டது. பல இலட்சம் ஈராக்கியர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக என்று கூறிப் புஷ் எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதிகளை மேலும் வளர்த்துள்ளது; வலுப்படுத்தியுள்ளது; அவர்களின் செயல் களத்தைப் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது என்பதே உண்மையாகும். இச் செயல்களின் ஒரு பகுதியாகவே 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் பல நகரங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப் பட்டன. இதன் உச்ச கட்டமாக மும்பை தாக்குதல் நடந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் நடந்த பயங்கரவாதச் செயல்களுக்கும், படுகொலைகளுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியமே மூல காரணமாக இருக்கிறது. பாக்கிஸ்தானை பயங்கரவாதிகளை உருவாக்கும் உலைக்களமாக ஆக்கியதும் அமெரிக்காவே! மு சுலீம்கள் பெரும்பான்மையினராக வாழுகின்ற வேறு எந்தவொரு நாட்டிலும் இ சுலாமிய ஜிகாத் அமைப்புகள் செயல்படவில்லை. இ சுலாமியப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஈரானில் கூட “புனிதப்போர்” என்ற பெயரில் தீவிரவாத அமைப்பு எதுவும் செயல்பட அனுமதிக்கப்பட வில்லை. பயங்கரவாத அமைப்புகளுக்குப் பெரும் பணத்தை அள்ளித் தரும் சவூதி அரேபியா தன் சொந்த நாட்டில் இ சுலாமிய பயங்கர வாத அமைப்பு உருவாவதை ஒடுக்கி வருகிறது.

ஆனால் பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் விளை நிலமாக இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் உலக வரைபடத்தில் பாக்கிஸ்தான் அமைந்துள்ள நிலப்பகுதியே ஆகும். பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சோவியத் ஒன்றியம், சீனா, ஆப்கானிஸ்தானம், ஈரான், இந்தியா முதலான நாடுகள் அமைந்துள்ளன. சோசலிச அரசமைப்பைக் கொண்டிருந்த சோவியத் நாட்டையும் சீனாவையும் அரசியல் இராணுவ நிலையில் கட்டுப்படுத்துவதற்காக பாக்கிஸ்தானை அமெரிக்கா தன்னுடைய கையாளாகப் பயன்படுத்திக் கொண்டது. இதற்காக ஏராளமான ஆயுதங்களை அளித்தது. பெருமளவில் நிதி உதவி செய்தது. தன் சொல்படி பாக்கிஸ்தான் செயல்பட வேண்டு மென்பதற்காகப் பாக்கிஸ்தானில் தொடர்ந்து இராணுவ ஆட்சியே நீடித்திருக்கும் வகையில் செயல்பட்டது. நேரு காலம் முதலே இந்தியா சோவியத் நாட்டுடன் நெருக்கமான உறவும், பெயரளவில் சோசலிசச் சார்புச் சிந்தனையும் கொண்டிருந்தது. இந்தியாவை மட்டந்தட்டி வைக்கவும் பாக்கிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.

ஆப்கானில் சோவியத் ஆதரவுடன் 1979 இல் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற ஆட்சியை ஒழிப்பதற்காக அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பெருந்தொகையைச் செலவிட்டு ஆப்கான் எல்லையையயாட்டிய பாக்கிஸ்தான் பகுதிகளில் இசுலாமிய இளைஞர்களுக்குப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கான பயிற்சியை அளித்தன. பாக்கிஸ்தானில் மதரசாக்கள் இதற்கான களமாக மாறின. பாக்கிஸ்தான் இராணுவத் தளபதிகளும் மதத் தலைவர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அமெரிக்காவின் சி.அய்.ஏ. இதில் முக்கிய பங்காற்றியது. இவ்வாறு முடுக்கிவிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக 1988இல் ஆப்கானில் மதச்சார்பற்ற அரசு வீழ்ந்தது. சோவியத் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறின. அமெரிக்கா நிறுவிய பொம்மை ஆட்சி அகற்றப்பட்டுத் தலீபன்கள் ஆட்சி நிறுவப்பட்டது.

ஆப்கான் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தபின், அமெரிக்கா -பாக்கிஸ்தான் கூட்டுச் செயலால் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளில் ஒரு பகுதியினர் காசுமீருக்குள் ஊடுருவினர். அதனால் 1988 முதல் காசுமீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாயின. தலீபன்கள் ஆட்சியை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. அதனால் அமெரிக்காவுக்கு எதிரான போக்கினை இவர்கள் மேற்கொண்டனர். 2001 முதல் அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கு அடிவருடியாக உள்ள நாடுகளுக்கும் எதிராகப் போராடி வருகின்றனர்.

ஈராக்கில் போர் ஓரளவு ஓய்ந்துள்ளது. ஆனால் ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படைகளுக்கும் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தாப் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. கூடுதலாக 30,000 படையினரை ஆப்கானுக்கு அனுப்பி, தேவைப்படின் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, ஜிகாத் பயங்கரவாதப் படைகளை ஒழிக்கப் போவதாக பராக் ஒபாமா கூறி வருகிறார்.

2008 நவம்பரில் மும்பை நகரின் மீதான தாக்குதலின் நோக்கம், ஆப்கான் எல்லையில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள ஓர் இலக்கம் பாக்கிஸ்தான் படையினரை வியக்கச் செய்வதேயாகும். மும்பை மீதான தாக்குதல் இந்தியா -பாக்கிஸ்தான் போராக வெடிக்கும். அப்போது ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தான் படையில் பெரும்பகுதி இந்திய எல்லைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஆப்கானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் இடைவேளை கிடைக்கும். மீண்டும் ஆட்களையும், ஆயுதங்களையும் திரட்டிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். 2001 டிசம்பரில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தியா -பாக்கிஸ்தான் எல்லையில் பெரும்படையைக் குவித்தது.

இந்தியாவின் போரை எதிர்கொள்ளப் பாக்கிஸ்தானும் தன் படையை நிறுத்தியது. இரண்டு நாடுகளையும் சேர்ந்த பத்து இலக்கம் படைவீரர்கள் பத்து மாதங்கள் போருக்கு அணியமாக நேர் எதிரெதிர் நின்றனர். இதற்காக இரண்டு நாடுகளும் சேர்த்து பத்தாயிரம் கோடி உருபா செலவிட்டன. வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்றது போதும், எல்லையிலிருந்து விலகிச் செல்லுங்கள் என்று அமெரிக்க எசமான் ஆணையிட்ட பிறகு தான் இரு நாடுகளும் தத்தம் படைகளை விலக்கிக் கொண்டன.

26/11 மும்பை தாக்குதலுக்குப் பின், பாக்கிஸ்தானில் உள்ள இலசுகர் இதொய்பா, ஜமாத் உத்தாவா, ஜெய்ஷ் இமுகமத் முதலான பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்து அழிக்க வேண்டும் என்ற கருத்து பலதரப்பினரால் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய தாக்குதல் இந்தியா -பாக்கிஸ்தான் போராக மூளும். பயங்கரவாதிகளின் நோக்கம் இதுவேயாகும். பாக்கிஸ்தானின் இராணுவ மத ஆதிக்க சக்திகளும் இதையே எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் பாக்கிஸ்தானில் சனநாயக ஆட்சி முறை வளர்வதைத் தடுக்க முடியும். ஆப்கான் எல்லையில் நடக்கும் சண்டையை இந்திய எல்லைக்குத் திசை மாற்றம் செய்ய முடியும். இதுவே மும்பை தாக்குதலின் முதன்மையான நோக்கமாகும். ஆனால் போர் என்பது இரு நாடுகளுக்கும் கேடு பயக்கும். எந்தவொரு நன்மையும் விளையாது.

மகாராட்டிர முதலமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் நீக்கப்பட்டு, அப்பொறுப்பை ப. சிதம்பரம் ஏற்றுள்ளார். காங்கிரசுக் கட்சியும் நடுவண் அர சும் பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் காட்டும் நடவடிக்கைகள் இவை. இதன் தொடர்ச்சியாக, தேசிய புலனாய்வு அமைப்பு என்கிற ஒன்றை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டவரைவு முன் மொழியப் பட்டுள்ளது. நடைமுறையில் இச்சட்டம் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள சட்டம்‡ஒழுங்கு உரிமையில் தலையிடுவதாக அமையக்கூடிய வாய்ப்பு மிகுதியாக உள்ளது. மேலும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திருத்த வரைவும் முன்மொழியப்பட்டுள்ளது. 1985 முதல் 1995 வரை இருந்த தடா (TATA) 2002 முதல் 2004 வரை இருந்த பொடா (POTA) போன்றே மனித உரிமை மறுப்புச் சனநாயக உரிமை பறிப்புக் கூறுகள் மென்மையான மொழிகளில் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. “இந்தியத் தேசியம்”, “பயங்கரவாதத் தடுப்பு”என்கிற போர்வையில் மாநில உரிமைகளும், மனித உரிமைகளும் பறிக்கப்படாமல் விழிப்புடன் இருக்கவேண்டும்.

பாக்கிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளைக் களையயடுக்குமாறு உலக நாடுகள் வாயிலாக இந்தியா தொடர்ந்து பாக்கிஸ்தானுக்கு நெருக்குதல் தரவேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அய்க்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின்படி பாக்கிஸ்தான் செயல்படுமாறு செய்யவேண்டும். ஜம்மு காசுமீர் மக்களின் தேசிய உணர்வுகளை ஏற்று, அரசமைப்புச் சட்டம் விதி 370 இல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அம்மக்கள் முழுமையாகப் பெற்றிடச் செய்யவேண்டும்.

காங்கிரசு பின்பற்றும் மென்மையான இந்துத்துவ அரசியல் பா.ச.க.வின் தீவிர இந்துத்துவ அரசியல் ஆகிய இரண்டும் ஒழிந்து உண்மையான மதச்சார்பற்ற அரசியல் உருவாகவேண்டும். சச்சார் அறிக்கையின் பரிந்துரைகளின்படி முசுலீம்கள் கல்வி, சமூக, பொருளியல் நிலைகளில் முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இழிவானவர் என்று கருதும் மனப்போக்கு, மு சுலீம்களைத் தாழ்வானவர் எதிரானவர் என்று கருதும் மனப்போக்கு ஆகிய இரண்டையும் ஒழிக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற எண்ணத்தால் அதன் ஏவலாளாக இந்திய அரசு செயல்படும் நிலையை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழா. உண்மையான சனநாயகம் மலரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com