Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
கல்வி வணிகக் கொள்ளையும் கண்மூடி அரசுகளும்

- பொ.இலெனின் புகழேந்தி, கோவை

முன்னுரை :

“வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது'' என்பது கல்வியின் சிறப்பு. ஆனால் இன்று கல்வி, வணிகம் என்ற வெந்தணலில் வெந்து கொண்டிருக்கின்றது. கோடி கோடியாய்க் குவிந்து கிடக்கும் பணத்தாள்களை, அதாவது கறுப்பை வெள்ளையாக்க, பண முதலைகள் பயன்படுத்திக் கொண்ட உத்திதான், “கல்வி நிலையம்''. மழலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, மெட்ரிக் என்னும் நுழைமுகப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று காடும் மேடும் கட்டடம் எழுப்பிக் கல்வி வணிகம் தொடங்கி விடுகின்றனர். ஆயிரம் இறைத்தால் ஆசிரியக் கூட்டம் மளமளவென்று வரிசையில் நிற்கின்றது. கறுப்பை எல்லாம் வெள்ளையாய் மாற்றுவதற்கும், கணக்கு வழக்கின்றிக் காசைக் குவிப்பதற்கும் நல்வழியாக இது அமைந்து வருகின்றது.

கல்வி வள்ளல் என்னும் புகழ்மொழியோடு வெள்ளுடை பூண்டு வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்தியும் சுரண்டிக் கொள்ளையடித்தும் வல்லரசாகத் திகழ்ந்துவரும் அமெரிக்காவில்கூடத் தனியாரிடம் இருபத்திரண்டு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் தொண்ணூற்று ஆறு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன.

சந்தைப் பொருளாகக் கல்வி மாறக் காரணம் :

கடந்த சில ஆண்டுகளாக நடுவண் மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பக் கல்விக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகமயமாக்குதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து நடுவண் மற்றும் மாநில அரசின் பொதுச் செலவிலிருந்து ஒரு பெரிய அளவு நிதிக் குறைப்பை உயர்கல்வித்துறை சந்தித்து வருகின்றது.

உலக வணிக அமைப்பில் இந்திய நாடு கையயழுத்திட்டுள்ள காரணத்தால் நமது உயர்கல்வி நிறுவனங்கள் சமூகத் தொண்டு நிறுவனங்கள் என்ற நிலையைத் தாண்டி வணிக நிறுவனங்களாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கல்வித் தொண்டுக்கான கொள்கை மற்றும் விவகாரங்களில் தலையிடும் உரிமையைக் "காட் ஒப்பந்தம்' வாயிலாக நடுவணரசின் உயர்கல்வித்துறை பறிகொடுத்திருக்கிறது என்பதே உண்மைநிலை.

அண்மைக்கால நிகழ்வுகளால் உயர்கல்வி மெதுவாக ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக உருமாறி விட்டது. "அரசு மானியம் ஒரு விவாதம்' என்ற நடுவண் நிதியமைச்சகப் பரிந்துரையால் உயர்கல்வித்துறை “Non - Merit - Good'' என்று தரம் பிரிக்கப்பட்டு மானியம் பெறும் தகுதி இழக்கிறது.

2004ஆம் ஆண்டு வெளியான நடுவணரசின் மானிய அறிக்கையின்படி உயர்கல்வி மாநில அரசின் வரம்பிற்குள் வந்தது. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையுடன் செயல்படும் மாநில அர சுகள் உயர்கல்வி மானியத்தை நிறுத்தி விடுகின்றன. இதனால் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவது தடுக்கப்பட்டதுடன் தன் நிதிப் பாடப் பிரிவுகள் தொடங்க மட்டுமே இசைவு வழங்கப்பட்டது. பல தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்க வழிவகை செய்யப்பட உதவிய இந்தப் புதிய கல்விக் கொள்கை மற்றும் நடுவண், மாநில அரசுகளின் உதவி மற்றும் ஊக்கத்துடன் பல நூறு கல்லூரிகள் தொடங்கப்பட்டு இன்றைக்குக் கல்வி ஒரு சந்தைப் பொருளாக (Higher Education is a Saleable Commodity) உருமாறிவிட்டது.

தமிழகத்தில் கல்வியின் நிலை

கல்வியை வணிக மயமாக்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் வழங்கப் படும் தொகை, ஒருவரது மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் தொகைக்கு இணையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய இடவசதியும், ஆசிரியர்களின் பற்றாக் குறையும், கல்லூரிகளில் அனைத்துப் பாடப் பிரிவும் ஆங்கிலத்தில் உள்ளதும், அடிப்படையிலேயே குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தின் கல்வித் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலத்தவர்கள் பலர் உயர்கல்வி பெற இங்கு வந்து கல்வி கற்பது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் பல அரசின் நிதி உதவியுடன் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நிருவாகத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கொண்டு இயங்கி வருவதும் கல்வியாளர்கள் முதல் பொதுமக்களும் அறிந்ததே.

இவ்வாறு சிறப்புடன் இயங்கும் அரசின் உதவி பெறும் தொழில் நுட்பக் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக் கழகங்களாக உருவாக்க மாநில அரசின் உயர்கல்வித்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த உயர்கல்வி நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, இப்போது செயல்படும் பல தனியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கருதாமல் வணிகமாகக் கருதும் நிலையே உள்ளது. இப்போது தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் பல்லாண்டுகளாக உயர்கல்விக்குத் தொண்டு செய்துவரும் நிலையில், தனியார் பல்கலைக் கழகங்களாக உருமாறும் போதும், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகளுடன் கட்டமைப்பு வசதிகளைப் பெற்று, அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிறது.

இங்குப் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் நிலையும், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியை நடுவில் இழக்கும் நிலையும் ஏற்படலாம். இப்போது இங்குப் பணி புரியும் பேராசிரியர்களின் நிலை, அவர்களின் வாழ்வுரிமைகள் பற்றி பல்வேறு வினாக்கள் எழுகின்றன. தமிழகத்தின் பல பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் பல அரசு உதவிபெறும் கல்லூரிகள் “தனியார் கல்வி நிறுவனங்களாக'' உருமாறும் போது, ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுவிடும். இடஒதுக்கீடும் கிடைக்காமல் போகும். உயர்கல்விச் சாலைகளில் அடியயடுத்து வைக்காத நிலையில் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் உள்ள நிலையில் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்விக் கொள்கையில் தகுந்த மாற்றம் செய்யவேண்டும்.

வணிகமயமாகும் பொறியியற் கல்வி :

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தன்நிதிப் பொறியியற் கல்லூரிகளில், கண்களுக்குத் தெரியாமல் உலக மயப் போர்வையில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது இந்திய நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்குத் தகுதியானவர்களை உருவாக்குவதே இன்றைய கல்வி முறையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் 278 தன்நிதிப் பொறியியற் கல்லூரிகளுக்கு அரசு ஏற்பு அளித்துள்ளது. இந்த ஆண்டு தன்நிதிப் பொறியியற் கல்லூரிகளில் 65 விழுக்காடும், சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதிப் பொறியியற் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்குவதாகத் தன்நிதிப் பொறியியற் கல்லூரிகள் சங்கம் கூறியுள்ளது.

தன்நிதிக் கல்லூரிகளில் கட்டணக்கொள்ளையும், நன்கொடை வாங்குவதும் தீவிரமாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது. ரூ.32,500 என்பது அர சு நிர்ணயித்தக் கல்விக் கட்டணமாகும். ஆனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வாங்கப்படும் தொகையோ ரூ.60,000, ரூ.70,000 என்று. இங்கே இவ்வளவு தொகையையும் வாங்கியும்கூட, இவர்கள் கொடுக்கும் இரசீதில் போட்டுத்தரும் தொகை அதே ரூ.32,500. இதுதவிர பேருந்து, விடுதி, நூலகம், புத்தகம் மற்றும் வேலைவாய்ப்புக் கட்டணம் என்று பணத்தையும், நடுத்தர வர்க்கத்தின் உழைப்பையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கட்டாய நன்கொடை பெறுவது குற்ற நடவடிக்கை என்றும், அப்படிப் பெறுவோர் மீது சட்டப்படிக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசால் 1992இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் எந்தத் தன் நிதிப் பொறியியற் கல்லூரி நிருவாகத்தின்மீதும் பாயவில்லை. தமிழக அரசு, பால சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையின்படி அரசு நிருவாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவருக்கு ஆண்டொன்றுக்குக் கல்விக்கட்டணம் ரூ.32,500 எனவும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.62,500 எனவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ரூபாய் கூட வருமானம் இல்லாதவர்கள் 35 விழுக்காட்டினர் என்று அரசின் ஆய் வறிக்கை கூறுகிறது. ஆனால், தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயில ஏழை மாணவன் ஆண்டுக் கட்டணமாக ரூ.32,500 என்றும், ரூ.62,500 என்றும் எப்படிச் செலுத்த முடியும்? இந்தக் கல்வியாண்டில் பொறியியற் கல்வி பயில விண்ணப்பித்து, நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் ஏறக்குறைய 19 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு வரவில்லை. தன்நிதிப் பொறியியற் கல்லூரிகளில் 27 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அதில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சாதியினருக்கான இடங்கள் 10 ஆயிரம் நிரப்பப்படாமல் உள்ளன.

உயர்கல்வி மீதான நீதித் துறையின் தீர்ப்புகள் :

தில்லிப் பல்கலைக் கழகத்திற்கு (1992) எதிராகப் புனித ஸ்டீபன் கல்லூரி தொடர்ந்த வழக்கில் "கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் கிடையாது. எனவே, அவை சொத்துகளைப் பெருக்குவதை ஏற்க முடியாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதே நிலைப்பாட்டைத்தான் கருநாடக நீதித்துறையும் மோகினி ஜெயின் வழக்கில் அதிகப்படியான கல்விக் கட்டணம் பெறுவது தவறு' எனத் தீர்ப்பு வழங்கியது.

1993ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடந்த புகழ்பெற்ற உன்னிகிருட்டிணன் தொடுத்த வழக்கில் நீதித்துறை கல்வி நிறுவனங்களின் மேல் மாநில அரசின் அதிகாரத்தை மறு ஆய்வு செய்து நிலைநிறுத்தியது. காரணமற்ற, அநீதியான, அடிப்படைச் சட்டத்திற்கு எதிரான கல்விக் கட்டணம் நிறுத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் உயர்கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு இடங்கள் அர சு தீர்மானிக்கும் அடிப்படையிலான கட்டண முறையும், திறமையினால் தேர்வாகும் மாணவர் களுக்கு இலவச இடங்கள் முறையும் (Free Seat on Merit) நடைமுறைக்கு வந்தது.

கருநாடக மாநில அரசுக்கு எதிராகத் தனியார் கல்வி -நிறுவனமான டி.எம்.ஏ.பாய் பவுண்டேசன் தொடர்ந்த வழக்கில், 11 நீதிபதிகள் கொண்ட குழு 2002ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதிக அளவு கல்விக் கட்டணம் பெறக்கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பில் நியாயமான கட்டமைப்புக் கட்டணங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு -தன் நிதிக் கல்வி நிறுவனங்கள் மறைமுகமாக அதிகக் கல்விக் கட்டணம் பெறமுடியாது.

மராட்டிய மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அரசின் மானியம் பெறாத தன்நிதிக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் தலையிட மாநில அர சுகளுக்கு உரிமையில்லை என்றும், வேண்டுமானால் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறை செய்ய வலியுறுத்தலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி மாணவர் சேர்க்கை, கட்டட நிதி பெறுதல் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாநில அர சு தலையிடமுடியாத நிலை நடைமுறைக்கு வந்தது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பல தனியார் பல்கலைக் கழகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மாநில அர சுகள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தங்களின் சுதந்தரச் செயல்பாடுகளுடன் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம், தகுதிகளைத் தீர்மானித்துச் செயல்பட்டு வருகின்றன.

அரசின் கண்மூடித்தனமும், சீர்செய்யப்பட வேண்டிய முறைகளும் :

உயர்கல்வியைத் தனியாரிடம் கொடுக்கும், நடவடிக்கைகள், இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய 1980ஆம் ஆண்டுகளிலிருந்து விரைவாக நடைபெற்று வருகின்றது. கல்வி அளிப்பது அரசின் கட்டாயக் கடமை இல்லையா? பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது போலவும், பணம் இல்லாதவர்கள் தற்குறிகளாகவே அலைய வேண்டும் என்பது போலவும், அரசுகள் இங்குக் கருதுகின்றன.

படிக்க விருப்பமிருந்தும், தகுதி இருந்தும் கல்விக் கட்டணம் செலுத்த வசதியில்லாமல் வறுமையில் வாழும் மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலைக்குத் தள்ளப்படுவது, முறையற்ற செயலாகும். அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமை. தொடக்கக் கல்வி முதல் பொறியியல் கல்லூரிக் கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். உயர் கல்வியில் பயில வாய்ப்பில்லாத ஏழை மாணவர்களுக்காவது அரசே கல்விக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அப்பொழுதுதானே ஏழை மாணவர்களும் உயர் கல்வியான பொறியியல் கல்வியையும், மருத்துவத்தையும் எட்டிப்பிடிக்க முடியும். பல்வேறு இலவசத் திட்டங்களையும், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் செய்து வரும் அரசு, இவர்களுக்காகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதால் பெரிய இழப்பு ஒன்றும் நேரிடாது.

தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயில வரும் மாணவனிடம் அய்ந்து இலட்சம் முதல் பதினைந்து இலட்சம் வரை நன்கொடையாகக் கறந்து விடுகின்றனர். இதே நிலை மருத்துவக் கல்விக்கும் பொருந்தும். அங்கேயும் நாற்பது இலட்சம்வரை நன்கொடையாகப் பெறுகின்றனர். அரசியல் வாதிகளும், தொழிலதிபர்களும், பண்ணையார்களும் இக் கல்வி நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்கின்றனர். ஆனால், காலம் முழுவதும் வருமானம் ஈட்டும் வணிகமாகக் கல்வி நிறுவனங்களை ஆக்கி விடுகின்றனர். கோடி கோடியாக இலாபம் ஈட்டி வருகின்றனர்.

பல தன் நிதிப் பொறியியல் கல்லூரிகள் பட்டறிவும், பயிற்சியும், திறமையும், கல்வித் தகுதியும் இல்லாதவர்களை விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ளனர். இங்கே போதுமான ஆய்வகங்களும், நூலகங்களும், வகுப்பறைகளும் இல்லை. கல்வியின் தரம் இந்த நிலையில் எவ்வாறு உயரும்? பன்னாட்டு நிறுவனங்கள் தன்நிதிப் பொறியியற் கல்லூரி நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆற்றல் பெற்றவர்களாக நேர்காணல் என்ற பெயரில் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவர்கள் நடத்தும் நேர்காணலில் இடஒதுக்கீடு கிடையாது. பொறியியல் கல்வி முடித்து வெளியேறுபவர்களில் 30 விழுக்காட்டினர் மட்டும் வேலைவாய்ப்புப் பெற முடிகிறது. மற்றவர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

அறியாமை, ஏழ்மையின் காரணமாக பெரும்பாலும் ஊர்ப்புறங்களில் உள்ள பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடையே மக்கள் பெருக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. பெருகுகின்ற இம் மக்கள் அனைவரும் கல்வி பெற வாய்ப்புகளை அர சு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நகர்ப்புறங்களில் தெருவுக்குத் தெருவும், சிற்றூர்ப் புறங்களிலும் ஆங்கிலப் பள்ளிகளைத் திறக்க அரசு இசைவு கொடுப்பதேன்? அரசுப் பள்ளிகள் திறக்கப்படுவதைத் தடுக்கவும், இருக்கின்ற பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகிக் கூடுதல் ஆசிரியர்கள் போடுவதைத் தவிர்க்கவும், அர சு செலவைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் உத்தியாகவே கருதத் தோன்றுகிறது.

ஏழைகளுக்கும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலக் கல்விபெற வேண்டும் என்ற ஓர் இயல்பான ஆவல் இருக்கத்தானே செய்யும். இதைத் தூண்டி விடுவது அரசுதானே. கல்வி அறிவில்லாத ஏழைகள், இப்படிப்பட்ட பள்ளிகளில் குழந்தை களைச் சேர்த்துவிட்டு, படித்தவர்களின் குழந்தைகளுக்குச் சமமாக போதிக்க முடியாமலும், சரியான கல்வித் தரத்திற்குக் குழந்தைகளை உருவாக்க முடியாமலும் திணறிக் கொண்டிருக்கின்றனர். தரக் குறைவான பள்ளிகள் மீது அர சு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பின் தங்கிய மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் போன்றவைகளில் தொடர்ந்து பள்ளிக் கல்வியில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து வருகின்றது. இதைப் பற்றி அரசு ஒரு நாளாவது கவலைப்படவும் இல்லை; சீர் செய்யவும் இல்லை.

எங்குப் பார்த்தாலும் தன் நிதிக் கல்லூரிகள், செவிலியர் பள்ளிகள், மருந்தியல் கல்லூரிகள், தொழிற் பள்ளிகள், பட்டயக் கல்விக் கூடங்கள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் எனப் புற்றீசல் போல் கிளம்பிவிட்டன. எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென பேருந்துகளும், மூடுந்துகளும் வாங்கிக் குவித்துள்ளன. வணிகம் நன்றாகவே நடக்கின்றது. என்ன தான் அரசு தன் பள்ளிகளில் இடஒதுக்கீடு கொடுத்தாலும், அங்கே இடம் கிடைக்காதவர்கள், இத் தனியார் பள்ளிகளில் பணம் கொடுத்துத்தானே சேர்கின்றனர். ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கு ஒன்றரை இலட்சம் கொடுக்கின்றனர்.

பட்டியல் சாதியினரையும், பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளையும் முழுமையாக அரசு நடத்தும் நிறுவனங்களில் சேர்த்துவிட வேண்டும். பணம் படைத்தோரை எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு சில ஒதுக்கீடுகளுடன் அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் ஏழைகளின் வாழ்வில் ஒளி பிறக்கும்; சமநீதி, சமூகநீதி காப்பாற்றப்படும். சென்ற ஆண்டே சமச்சீர் கல்வி செயலுக்கு வரும் என்று அரசு கூறியது. ஆனால் இன்றும் நடைமுறைப்படுத்தவில்லை. கல்வி ஆண்டு தொடங்கும்போது ஆணை வெளியிடும் அரசு, பின்பு அதைக் கண்டுகொள்வதேயில்லை.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் படிக்கும் படிப்பை வைத்துத்தான் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்பதை அரசு உணரவேண்டும். தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வளாக நேர்காணலில் இடஒதுக்கீட்டு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமச்சீர்க் கல்வியை உடனடியாக அமல் படுத்தவேண்டும். இன்றைய அரசியல்வாதிகள் பெரும்பாலும் “தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு சம்பாத்தியம் தானுன்டென்போன் என்ற பாவேந்தரின் சொற்களுக்கேற்பதான் இருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வளர்வதற்குக் காரணமாக அவர்கள் விளங்கவேண்டும்.

முடிவுரை :

சாராயக் கடைகளையும், மணல் வணிகத்தையும் அரசே ஏற்று நடத்தும்போது, கல்வியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. குழந்தைகள் தங்களது சுய ஆர்வத்தைத் தாங்களே அறிந்து கொள்ளும் விதத்தில் கல்வி முறை இருக்கவேண்டும். அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் வகையில் செய் முறையுடன் கல்வி அமல்படுத்துவதே காலத்தின் கட்டாயம். இக்கல்விச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளின்மீது அக்கறை செலுத்துவது, அரசின் கடமையாகும்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இடஒதுக்கீடு பற்றிய தெளிவும், சீரிய சிந்தனைகளும், செந்தமிழ்த் தேனீ அறிஞர் அண்ணாவின் இன எழுச்சியும் மக்களிடத்திலும் வரவேண்டும். அப்பொழுதுதான் கல்வியிலும், சமுதாயத்திலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். தேவை, கல்வி முறையில் மாற்றம்!

(குறிப்பு : புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசுக் கட்டுரை)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com