Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
கண்ணை இழந்துவிட்ட காங்கிரசுத் தோழர்களே! காங்கிரசுமுறையீட்டை ஏற்ற தமிழக அரசினரே!

கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், பெ.மணியரசன் பேரில் வழக்குப் போட்டது எதற்காக? திருமாவளவனைக் கைதுசெய்! என்ற கூக்குரல் ஏன்?
-வே. ஆனைமுத்து

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி என்பது முன்னாள் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பெ. மணியரசன் தலைமையில் இயங்குவது. தமிழீழ விடுதலையைக் கொள்கை அளவில் ஆதரித்து எல்லா வடிவங்களிலும் பரப்புரை செய்வது. இக்கட்சியின் சார்பில் ஈரோடு கருங்கல் பாளையத்தில் 14.12.2008இல் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பெ.தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, திரைப்பட இயக்குநர் சீமான் இருவரும் 19.12.2008 அன்று தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அடுத்து பெ. மணியரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“இவர்களுள் சீமானும், மணியும் ஈழ விடுதலையை ஆதரித்துக் கருங்கல் பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இராசிவ் காந்தியைப் பற்றியும், காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி அம்மையாரைப் பற்றியும் உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் (Provocation) பேசினார்கள். எனவே அவர்களைக் கைது செய்யவேண்டும்; அவர்கள் பேரில் வழக்குப் போடவேண்டும்'' என, மொடக்குறிச்சித் தொகுதி காங்கிரசுச் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.எம். பழநிசாமி அவர்கள் காவல்துறைக்கு முறையீடு செய்தார். அந்த முறையீட்டில் காணப்பட்டக் குற்றச்சாட்டுகளைப் பற்றி அரசு சட்டத்துறையின் கருத்தைக் கேட்டுக்கொண்டு அதன் பேரிலும்; சிறப்பு உளவுத்துறையினர் இவர்களின் பேச்சுப் பற்றித் தந்த அறிக்கையை ஆய்வுசெய்தபிறகும் மணி, சீமான், மணியரசன் மூவரும் தமிழக அரசினரால் 19.12.2008 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

எந்தச் சூழலில் இது நடந்துள்ளது?

இந்திய தேசிய காங்கிரசு, பொதுவுடைமைக் கட்சிகள், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்றக் கட்சிகள், “இலங்கை அரசினர் இலங்கைத் தமிழ் மக்கள் பேரில் நடத்தும் போரை உடனே நிறுத்தும்படி இந்திய அரசினர் வற்புறுத்தவேண்டும்'' எனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு; தமிழக முதலமைச்சர் தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைக் கண்டு இக்கோரிக்கையை வைத்த பிறகு, அப்படித் தீர்மானம் நிறைவேற்றிய சட்டமன்றம், “ஈழ விடுதலையை இந்திய அரசு அங்கீகரித்திட வேண்டும்'' என்று கோரித் தீர்மானம் போடவில்லையே தவிர, ஈழத்தில் விடுதலைப் புலிகளினால் கோரப்படும் தமிழீழ விடுதலைக் கோரிக்கையைக் குலைப்பதற்காக, ஈழப் பகுதியிலுள்ள ஊர்களின் பேரில் வான்வழித் தாக்குதலையும், தரைவழித் தாக்குதலையும், கடல்வழித் தாக்குதலையும் நடத்துவதை தமிழர்களைக் கொன்று குவிப்பதை இலங்கை அரசு நிறுத்தச் செய்தால், அப்போது அங்கே அமைதி வரும் என்கிற நல்ல எண்ணத்தின்பேரில்தான் சட்டமன்றமே இப்படித் தீர்மானம் நிறைவேற்றியது. போருக்குக் காரணம் ஈழவிடுதலைக் கோரிக்கை;

அக்கோரிக்கையை நசுக்கி தமிழீழத் தமிழரை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பது சிங்கள வன்கொடுமை அரசின் நிலைப்பாடு. அது நன்றாகத் தெரிந்தபிறகுதான், “போரை நிறுத்தச் சொல்லுங்கள்!'' என்று இந்திய அரசுக்குத் தமிழகச் சட்டமன்றம் கோரிக்கை வைத்தது. இப்படிக் கோருவது என்பதே கொள்கை அளவில் மறைமுகமாக ஈழவிடுதலையைத் தமிழகச் சட்டமன்றம் ஆதரிப்பதுதான் அல்லவா? ஆனால், அந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்கவில்லை என்பது கடந்த ஒருமாதமாக எந்த நடவடிக்கையையும் பிரதமர் மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது. ஏன் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை?

“ஈழ விடுதலைப் புலிகளைக் கொன்று ஒழியுங்கள்; பிரபாகரனை உயிரோடு பிடித்தோ, சாகடித்தோ இந்திய அரசிடம் ஒப்படையுங்கள்; உங்களுக்கு வேண்டிய ஆயுதங்கள், படைத் தளபதிகள், பணம் எல்லாமே நாங்கள் தருகிறோம்'' என்று, இராசபக்சே அரசுக்குக் கமுக்கமாக வாக்கும் உறுதியும் கொடுத்துவிட்டது இந்திய அரசு. அப்படி இந்திய அரசினர் செய்கிறார்கள் என்பதை இலங்கை அரசின் படைத்தலைவரே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உலகுக்குக் கூறிவிட்டார்.

“போர் நிறுத்தம் பற்றி இந்தியப் பிரதமர் எங்களிடம் எதுவுமே கூறவில்லை'', என்று இராசபக்சே பலதடவை கூறிவிட்டார். இவை எல்லாமே உலகுக்குத் தெரிந்தே நடக்கின்றன. இந்த அநீதியைப் பொறுக்க முடியாத தமிழகத் தமிழர்கள், தமிழகத் தலைவர்கள், தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகள் வெளிப்படையாகவே ஈழ விடுதலையை ஆதரித்து வாய் அளவில் பேசி, ஏட்டில் எழுதி, உண்ணா நோன்பு இருந்து, ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தி தார்மிக ஆதரவை, கொள்கை அளவு ஆதரவை அளிக்கின்றன. இப்படிச் செய்ய மக்களுக்கு உரிமை இருக்கிறது என, வைகோ பேரிலான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இங்கே இராசிவ் காந்தியைப் பற்றிப் பேச வேண்டியது ஏன் நேருகிறது? எங்கள் தலைவர் இராசிவ் காந்தியைக் கொன்றவர்கள் புலிகள். எங்கள் தலைவரைக் கொன்ற விடுதலைப்புலிகளைக் காங்கிரசு ஒருபோதும் மன்னிக்காது. எனவே அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் பேரில் அரசத் துரோகக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று மய்ய அரசில் காங்கிரசு சார்பில் இணை அமைச்சர்களாக உள்ள தோழர்கள் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், ஜி.கே. வாசன், மற்றும் செயந்தி நடராசன், தமிழகக் காங்கிரசுத் தலைவர் கே.வி. தங்கபாலு முதலான காங்கிரசுத் தலைவர்கள் இடைவிடாது மேடைதோறும் முழங்குகிறார்கள். அதனால்தான் சட்டமன்ற காங்கிரசுக் கட்சி உறுப்பினர், ஈழவிடுதலை பற்றிப் பேசுவோர் பேரில் குற்றவியல் வழக்குப் போடுகிறார்.

அதேபோல் இவர்கள் அனைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் “ஈழ விடுதலை அங்கீகார மாநாடு'' என நடத்த அனுமதி தரக்கூடாது என மேடைதோறும் பே சுகிறார்கள். திருமாவளவனை உடனே கைது செய்யவேண்டும் எனக் கூரைமேல் நின்று கூவுகிறார்கள். தமிழக முதல்வருக்கும் காவல்துறைக்கும் அழுத்தம் தருகிறார்கள்; சிறுத்தைகள் மாநாட்டுக்கு அரசினர் தடை விதிக்கிறார்கள்; அத்தடையை நீக்கிய உயர்நீதிமன்றம், “சில நிபந்தனைகளுடன் சிறுத்தைகள் கட்சிக்கு அனுமதி அளியுங்கள்'' எனத் தமிழக அரசுக்குக் கூறுகிறது.

இவ்வளவு கெடுபிடிகளும் ஏன்? “ஈழப் புலிகள் இராசிவ் காந்தியைப் படுகொலை செய்தவர்கள்'' என்று காங்கிரசாரும் பாமர இந்தியரும், பத்திரிகையாளர்களும் இடைவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக இதையே திருப்பித் திருப்பிக் கூறுவதால்தான். இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி'' என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் எவரும் ஒருபோதும் எழுதவும் இல்லை; பேசவும் இல்லை. 1984 அக்டோபரில் பிரதமர் இந்திராகாந்தி அவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள், அவருடைய மாளிகையிலேயே இருந்த, அவருடைய மெய்க்காப்பாளர்களான -சத்வந்த் சிங், சேகர் சிங் என்னும் சீக்கியார்கள் ஆவர்.

அப்படிக் கொலை செய்தவர்களைப் பாராட்டி, அவர்கள் இருவருக்கும் ‘தியாகிகள்' என்று பட்டம் அளித்து, சீக்கிய மதத் தலைமை அமைப்பான, “அகல்தக்தித்'' 6.1.2008இல் அமிர்தசரசில் நடத்திய மதவிழாவில், புகழ்ந்தும் பாராட்டியும் பேசியுள்ளனர்.அவர்கள் சீக்கியர்கள். இந்திராவின் கொலையாளிகளை அவர்கள் பாராட்டியதுபோல, கொலைக்காக விடுதலைப் புலிகளைத் தமிழர்களில் எவரும் பாராட்ட வில்லையே! சீக்கியருக்குத் தில்லி அஞ்சுகிறது; தமிழகத் தமிழருக்கு அச்சுறுத்தல் தருகிறது என்பதுதான் இதன் பொருள்.

ஆனால் செயவர்த்தனா கேட்டுக் கொண்டவுடன் 20,000 வீரர்களையும், டேங்குகளையும் ஆயுதங்களையும், பணத்தையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொன்றிடவும், தமிழீழத் தமிழரைக் கொன்று குவிக்கவும் காரணமாக இருந்தவர் பிரதமராக இருந்த இராசிவ் காந்திதான் -அவர் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் சேர்த்துத்தான் பிரதமர்.

அவர் இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படையும், டேங்குகளும் செய்துவிட்டுவந்த அழும்புகளை நான் 2005 சூனில் நேரில் ஈழப்பகுதியில் பார்த்தேன்; விவரம் கேட்டறிந்தேன். இதுபற்றி மனித மனம் படைத்த காங்கிரசுத் தோழர்கள் எப்போதாவது நினைத்தார்களா? அருவருப்பு அடைந்தார்களா? அது அநீதி என்று கருதினார்களா? மனித மனம் இருப்பதால்தான் -தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்கிற சாதாரண மனித நேய உணர்வு காரணமாகத்தான் -ஈழ விடுதலை ஆதரவு பற்றிப் பேச, எழுத நேரிடும் ஒவ்வொருவரும் இராசிவ் காந்தியைப் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டியதாக இருக்கிறது. கொல்லப்பட்ட இராசிவ் காந்தி வெறும் காங்கிரசுத் தலைவர்தான்; பிரதமர் அல்ல.

இதில் அரசத் துரோகம் -இராஜ நிந்தனை எங்கே வந்தது? இது, அரசுக்கு எதிரான ஏவலோ, தூண்டுதலோ என்கிற குற்றம் என எப்படி வரும்? ஆனால் இப்படிக் கூறித் தமிழக அர சுக்கும் முதல்வருக்கும் காவல் துறைக்கும் அழுத்தம் தருகிற காங்கிரசுத் தோழர்கள், காங்கிரசு-தி.மு.க. கூட்டணி உறவை நம்பிக் கொண்டு, தமிழக மக்களை -இவர்கள் ஈழவிடுதலைப் புலிகளுக்குத் தரும் ஆதரவைக் கொச்சைப்படுத்தக் கூடாது. அதற்கு இங்குள்ள அறிவார்ந்த தமிழர்கள் இடந்தரக்கூடாது; இடந்தர மாட்டார்கள். ஏன்?

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இன்று எந்த அளவில் சொந்த வலிமை இருக்கிறது? இது இல்லாமல் போனதற்கு யார் காரணம்? இந்திராகாந்தி அம்மையார்தான் -1969இல் அவர் மேற்கொண்ட காமராசர் ஒழிப்புத் திட்டம்தான் இதற்கு 100க்கு 75 பங்கு காரணம். தமிழகத்தில் புதிய வரலாறு படைத்தவர் காமராசர். 1957 முதல் 1975 வரையில் ஆண்டுக்கு இரண்டு தடவைகளாவது, நான் அவரைக் கண்டு பேசியுள்ளேன். 2.10.1975 அன்று மறைந்த அப் பெருந்தலைவரை, 30.9.1975 மாலை 4 மணிக்கு திருச்சி நோபிள். கு. கோவிந்தராசலு அவர்களும் நானும் நேரில் பார்த்துப் “பெரியார்'' - “பெரியார் இயக்கம்'' பற்றிய அவருடைய கருத்துகளைப் பதிவு செய்தோம். அதற்கு முந்திய தடவை நாங்கள் இருவரும் அவரைப் பார்த்துப் பேசியபோது, “முண்டை -நாட்டைக் கெடுத்துட்டாளே! இதுக்கா சுதந்தரம் வாங்குனோம்?'' என்று திரும்பத் திரும்ப மூன்று தடவைகள் கூறி, வெதும்பினார், அப்பெருமகனார்.

பெருந்தலைவர் காமராசர் அனைத்திந்திய அளவில் பார்ப்பனர் அல்லாத என். சஞ்சீவி ரெட்டியை உயர்த்தி, குடியரசுத் தலைவராக ஆக்கிட 1969 ஆகஸ்டில் முயன்றார். அதிகாரப் பூர்வமாகக் காங்கிரசு எடுத்த முடிவைக் காட்டிக் கொடுத்துவிட்டு, ஒரு மூன்றாந்தரப் பார்ப்பனரான வி.வி.கிரியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்திவிட்டு, அவரை வெற்றிபெற வைப்பதற்காக -131 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க. தலைவரும், அன்றைய முதல்வருமான கலைஞரிடம் 16.8.1969இல் அடைக்கலம் புகுந்த -காங்கிரசில் மக்கள் நாயகத்தைக் கொன்ற பெண்மணிதான் பிரதமர் இந்திரா காந்தி. அன்று தி.மு.க.விடமும், பிறகு அ.தி.மு.க.விடமும் என மாறி மாறி நாடாளுமன்றத் தேர்தலின் போதெல்லாம் இடப் பிச்சை கேட்டு, அதைக் கொண்டு மய்ய அரசைப் பிடித்து, பிறகு அவர்களையே காயடிப்பதுதான் காங்கிரசுப் பண்பாடும், யோக்கியதையும் ஆகும். காங்கிரசு உள்கட்சி மக்கள் நாயகத்தைக் கெடுத்த மாபெரும் மக்கள் நாயக எதிரி இந்திராகாந்தி அம்மையாரே ஆவார். அவரை “அன்னை'' என்று வாயாரப் புகழுவதால் மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே குப்பை கொட்டிவிட முடியாது; திராவிட இன உணர்வு -பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு உணர்வு இங்கே தேங்கிக் கிடக்கிற வரையில், -இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு “காமராசர் ஆட்சி'' அல்லது “காங்கிரசுஆட்சி'' என்று எதையும் அமைக்க முடியாது.

இதையயல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, தமிழ் இனம் -மொழி -பண்பாடு -குருதி உறவு காரணமாக ஈழத் தமிழ் மக்களை நேசிக்கும் தமிழ் மக்களை - “தேசத் துரோகக் குற்றம்'' சுமத்தி, சிறைப்படுத்தி, தண்டனைக்கு ஆளாக்கி அல்லது அவர்கள்பேரில் வன்தாக்குதல் நடத்தி அடக்கிவிடவோ, அழித்துவிடவோ முடியாது. சிற்றுளிதான் மலையை உடைக்கிறது; சிறு தீப்பொறி தான் ஊரை எரிக்கிறது. மா.பெ.பொ.க.வினராகிய நாங்கள் சிற்றுளிகள் -இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் என்கிற மலையை உடைப்போம்! இன்றில்லா விட்டாலும், நாளை உடைப்போம்!

கண்ணின் மணி போன்ற காமராசரை -தமிழர்க்குக் கண் திறந்து வைத்த கல்வி வள்ளலாக விளங்கிய காமராசரை ஒழித்த பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசைத் தமிழகத்திலும், இந்தியாவிலும் ஒழிப்பது தேவை! தேவை! தேவை! இது, எம் கட்சியின் 2009ஆம் ஆண்டைய வேலைத் திட்டம்!

1.1.2009 -வே. ஆனைமுத்து



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com