Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
விளையாட்டும் பொழுதுபோக்கும்

க.ப.அறவாணன் (முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

நம் பாரம்பரியத்தில் வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளும் உள்ளன; வீட்டுக்கு வெளியே தெருவிலும், திடலிலும், மைதானத்திலும் விளையாடும் விளையாட்டுகளும் உள்ளன. சடுகுடு, உப்புக்கோடு முதலான ஆடவர்க்கே உரிய விளையாட்டுகள், தாயம், பல்லாங்குழி முதலான பெண்களுக்குரிய விளையாட்டுகள் என ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் வேறுவேறு விளையாட்டுகளும் நம் மக்களால் பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வந்தன. இவ்விளையாட்டுகள் நம் உழைப்பு நேரத்தில் நடப்பன அல்ல. அவ்வாறு உழைப்பு நேரத்தை விட்டுவிட்டு விளையாடுவதும் நம்முடைய மரபாகவோ பழக்க வழக்கமாகவோ இல்லை.

மகாபாரத்தில் வரும் சூதாட்டம் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக இருந்தது. சூதாட்டத்தை விளையாட்டாகக் கருதுவதற்கு இல்லை. அன்றியும் சூதாட்டத்தை ஏற்கத்தக்கது என்று கூறுவார் எவரும் இல்லை. அதனைத் தொடர்ந்து எதிர்த்தே வந்துள்ளனர். சூதாடிக் கெட்டதற்குப் பஞ்சபாண்டவரை எடுத்துக்காட்டாகச் சொல்லுவது வழக்கம். நம் வாழ்விலும் அவ்வாறு நொடித்துப் போனோரைப் பார்க்கிறோம்.

விளையாட்டுகளில் மிகு ஈடுபாடு கொள்ளுவோர் குழந்தைகளும் சிறுவர்களுமே. எனவே தான் மகாகவி பாரதி ‘ஓடி விளையாடு பாப்பா’ எனச் சிறுமியைப் பார்த்துப் பாடுவதாக அமைத்துள்ளார். பெரியவர்கள் முழு விளை யாட்டில் முழு நேரத்தையும் செலவழிப்பதில்லை. அவ்வாறு செலவழிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதும் இல்லை. அவர்கள் உழைக்கும் மக்கள்; உழைக்கவே போதிய நேரம் இல்லாத மக்கள்.

நம்முடைய விளையாட்டு மரபு தற்போது மேற்கத்திய பண்பாட்டுப் படையயடுப்பால் மாறி வருகிறது. இது விரும்பத்தக்க மாற்றமா என்பது சிந்திக்கத்தக்கது. விளையாட்டு ஒரு பொழுதுபோக்காக இருந்த சமுதாய அமைப்பில் விளையாட்டே ஒரு தொழிலாகவும், வணிகமாகவும் மாறிவிட்டதை அண்மையில் கண்டுவருகிறோம். இது நம் பண்பாட்டின் எதிரொலி அன்று. விரும்பத்தக்கதும் அன்று. அயல்நாட்டி லிருந்து இறக்குமதி ஆகியுள்ள உடல் சோம்பலை வளர்க்கும் விளையாட்டுகள் இன்னொரு இருள் குணத்தை யும் நம்முள் வளர்க்கின்றன. அது சில பேர் விளையாட நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது; ஆரவாரிப்பது; ஊளையிடுவது. கணிசமானோர் தாம் செய்யும் வேலையை விட்டுவிட்டும், விடு முறை எடுத்துக் கொண்டும் வேடிக்கை பார்க்கின்ற வழக்கம் அண்மைக் காலங்களில் திட்டமிட்டு வளர்க்கப்பெறுகிறது.

நம் பாரம்பரியத்தில் விளையாடும் பழக்கம் இருந்தது. அது பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. அது எந்தக் கட்டத்திலும் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தைப் பெருக்குவதாகவுமில்லை. அவ்வாறு வேடிக்கைப் பார்ப்பதற்குக் காசு வாங்கிச் சீட்டு விற்கும் பழக்கமும் இல்லை.

முற்காலத்தில் பெண்ணைப் பெற்றோர் அப் பெண்ணுடன் கூட, காளைகளை வளர்த்தனர் என்றும், பெண்ணுக்கு உரிய வயது நெருங்கும்போது காளைகளும் நன்கு வளர்ந்து கொழுத்திருக்கும் என்றும், அத்தகு வளமான காளையை அடக்கும் ஆடவர்க்குப் பெண்ணை மண முடித்துக் கொடுப்பது என்றும், ஒரு வழக்கம் இருந்துள்ளது. அது பெரும்பாலும் முல்லை நிலத்தில் நடந்துள்ளது. அதனை ‘ஏறு தழுவுதல்’ என்று வழங்கினர். இன்றும் ஏறு தழுவுதலில் மாற்று வடிவமான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் சில ஊர்களில் நடந்து வருகிறது. ஏறு தழுவுதல் நிகழும்போது ஊர் இளைஞர்கள் கூட்டமாகக் கூடிப் பார்ப்பது வழக்கம். இது தவிர வேறு வகையில் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கட்டணம் திரட்டி விளையாட்டுகளை வியாபாரமாக்கும் போக்கு நம் பண்பாட்டிற்கு மாறானதாகும்.

நம் விளையாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் அறிவு சார்ந்த நோக்கம் இருந்தது. சான்றாக, பல்லாங்குழி, தாயக்கட்டை ஆகியவற்றை ஆடும்போது கணக்கறிவும், ஊக அறிவும், எதிர்நோக்கு அறிவும், ஆடுவோர்க்கு மறைமுகமாக வளர்க்கப்பட்டன. அதுபோலவே, சடுகுடு, உப்புக்கோடு முதலான விளையாட்டுகளில் மூச் சுப் பயிற்சியும், ஓடும் பயிற்சியும், உடல் அங்க அசைவுப் பயிற்சியும் மறை முகமாகப் பழக்கப்படுத்தப்பட்டன. இவை மனித உடலைப் பேணுவதுடன், நோய் வருதலையும் தவிர்க்கும்; அவர்தம் வாழ்நாளையும் பெருக்கும். இத்தகு நன்மைகள் இறக்குமதி விளையாட்டுகள் வழிக் கிடைப்பதில்லை. அவ்விளை யாட்டுகளை வேடிக்கை பார்ப்போர்க்குச் சோம்பேறித்தனம் தவிர வேறு எதுவும் வளர்வதில்லை. எனவே, நம்முடைய விளையாட்டு, பொழுதுபோக்குகள் ஆகியவற்றில் சுதேசி மனப்பான்மையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

அய்ரோப்பிய அடிமைப்படுத்தலும், பண்பாட்டுப் படையயடுப்புகளும் வலிய திணிக்கப்பட்ட சூழலில், பிழைக்கும் வழி மாறியது; உழைப்புக் குறைவு பெருகியது; அய்ரோப்பியரைப் பின்பற்றித் திரைப்படங்கள் அறிமுகமாயின. திரை, நம்முன்னோர் வாழ்வையே விழுங்கி விட்டது. திரைப்பட நிழல், நிஜமாகவே கருதப்பட்டது. நாட்டின் நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திரைப்படம் பேயுருவம் எடுத்து நின்றது. அதன் பின் திரைப்படங்களின் இடத்தைத் தொலைக்காட்சி வரவு பங்கு போட்டுக் கொண்டது. பொழுது போக்கு வடிவில் வந்த தொலைக்காட்சி, இன்று பொழுதாகவே ஆகிவிட்டது. 24 மணி நேர அலைவரிசைகள் இயங்குகின்றன. ஆக, ஓய்வுக் காலக் களைப்பாறுதலாக இருந்த விளையாட்டும், பொழுதுபோக்குகளும் இன்று உழைப்பு நேரத்தை விழுங்கும் சக்திகளாக மாற்றப்பட்டு விட்டன. இது சரிதானா என்பது சிந்திக்கப்பட வேண்டியது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com