சூடு வைப்போம்...
தமிழியலன்
ஈழத்து மக்கள்நம் சொந்தமன்றோ
இக்கருத்தில் சண்டையிடல் மடமையன்றோ?
ஆழத்து உணர்வினிலே பொங்குமன்பை
அடைத்துவிட்டால் வரலாறு தூற்றுமன்றோ?
தாழட்டும் தமிழர்நிலை என்றுயெண்ணி
தரங்கெட்டுப் பிரிக்கும்குரல் கேட்டதென்றால்
வீழட்டும் நமதுபகை விரைவிலென்று
விரட்டிவிடல் தலையாய கடமையன்றோ?
வாழவழி தேடுவோர்தம் போராட்டமோ
வான்வெளியின் கீழ்ப்பரப்பில் எங்குமுண்டு
பாழாகக் கூடாதே மனிதமென்று
பண்பாட்டுக் குரலுடையோர் தடுப்பதுண்டு
ஊழல்பெருச் சாலிகளோ அக்குரலை
உடைத்துவிடத் தந்திரங்கள் செய்யும்போது
சூழட்டும் தமிழுணர்வு மண்ணிலென்று
சூளுரைத்துச் சூடுவைத்தால் நன்மையுண்டு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|