Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
சட்டக்கல்லூரியில் சாதியத் தீ

வழக்கறிஞர் சரவணன்

அண்மையில் சென்னை டாக்டர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே நடந்த மோதல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. கல்லூரிக்குள் "சாதிச் சங்கங்கள் தொடர்பான விழாக்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் தடுத்து நிறுத்த கல்லூரி நிர்வாகம் தவறிய தால் இம் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சட்டக் கல்லூரி விடுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிபதி பக்தவத் சலம் அளித்துள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப் படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஏற்கெனவே'பல ஆண்டுகளாக இருந்த சாதிய உணர்வுதான் 12.11.2008 அன்றும் மோதலாக வெடித்துள்ளது. மாணவர்கள் அடிபட்டதன் காரணம் என்ன? என்ற ஒற்றைக் கேள்வியின் விடையில் மேற்கண்ட மோதல்களுக்கான காரணங்கள் உள்ளன.

lawstudent அந்த ஒற்றைக் கேள்வியின் கசப்பான விடை "சாதி' என்பதுதான்'. தேவர் சமூகத்தைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் பாரதி கண்ணன் என்ற மாணவர் (வாயிலில் அடிபட்டவர்) கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற "தேவர் ஜெயந்தி' விழாவிற்கு அடித்த சுவரொட்டியும், அதில் விடுபட்ட சொற்களுமே இவ்வளவுக்கும் காரணம்.
இதை விரிவாகக் காணுமுன் அந்த மாணவர்கள் பற்றிச் சில செய்திகளைக் காண்போம்.

பாரதிகண்ணன் சென்னையில் இயங்கிவரும் தேவர் பேரவையின் உறுப்பினர் (அடிபட்டதற்கு அடுத்த நாள் தேவர் பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது). இவர் தந்தை கே. கருப்பையா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள “பாலம் குளம்'' பஞ்சாயத்தில் மூன்றுமுறை தலைவராகப் பதவி வகித்து வந்தவர். தற்போதும் இவர் மனைவி கே.ஆர். பிரேமாவே பஞ்சாயத்தின் தலைவராக உள்ளார். மேற்கண்ட பின்னணியால் தன் சாதி மீதான பெருமை யுடன், தன் சுய சாதி விருப்பம் மேலோங்கக் கல்லூரிக்குள் வலம் வந்திருக்கின்றார் பாரதிகண்ணன்.
இதுமட்டும் அல்லாமல் அவர், தீவிர ஆளும் கட்சிச் சார்பாள ராகவும் இருந்துள்ளார். தி.மு.க. தலைவர் மற்றும் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு விளம்பரப் பலகைகள் வைத்தது மட்டுமல்லாமல் மேற் கண்டோர் உருவங்கள் பொறித்த மோதிரமும் கைவிரல் களில் அணிந்து வலம் வருபவர் என மாணவர்கள் கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருப்பதால் சக மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே ஒருவித செல்வாக்குடன் வலம் வந்திருக்கின்றார்.

எனவே பணம், பதவி, அரசியல் செல்வாக்கு முதலியவை களுடன் சாதிச் செருக்கும் சேர்ந்து கொண்டால் என்ன நடக்குமோ இதுதான் நடந்திருக்கிறது. பாரதி கண்ணன் தான் சார்ந்த தென் மாவட்டங்களில் நடந்துவரும் சாதிய அடக்குமுறைகளைத் தான் பயிலும் கல்லூரியிலும் நடைமுறைப்படுத்த முயன்றுள்ளார். “ஒருமுறை உடன் பயிலும் (தலித்) மாணவர் தான் உணவு உண்ட தட்டைத்தொட்டுவிட்டார் என்பதால் உணவு விடுதியி லேயே தட்டைத் தூர எறிந்து சண்டையிட்டவர். அப்பொழுதே கல்லூரி நிர்வாகம் இவர்மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இவரின் வன்மையான நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க முயலவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்களின் பின்னணியில்தான் தேவர் ஜெயந்தி விழாவும் நெருங்கி வந்துள்ளது.

பாரதி கண்ணனுக்குத் தன் சாதி இருப்பைக் காட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாக இது அமையவே, தேவர் ஜெயந்தி விழாவிற்கான வாழ்த்துச் சுவரொட்டியை அடித்துள்ளார். அந்தச் சுரொட்டியின் இறுதியில் கல்லூரியி ன் பெயரைப் போடுவதற்கு முன் டாக்டர். அம்பேத்கர் என்கிற பெயரை நீக்கும் முடிவிற்கு வந்திருக்கின்றார். எனவே மேற்கண்ட சுவரொட்டியில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பதற்குப் பதிலாக சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் என அச்சடித்து அதனைக் கல்லூரியிலும் ஒட்டியுள்ளனர்.
இதை ஒட்டும்போதே உடன் படிக்கும் (தலித்) மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அதனைத் தன் கையில் வைத்திருந்த கத்தியுடனே சமாளித்திருக்கிறார். அப்போது இவரது கும்பலுக்கும் உடன்படிக்கும் தலித் மாணவர்களுக்கும் மோதல் உருவாகி உள்ளது. அப்போதும் கல்லூரி நிர்வாகம் இவர்மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இவ்வாறு அக்டோபர் 30ஆம் தேதியை மய்யமாக வைத்து முன்னும் பின்னும் சில மோதல்கள் உருவாகி உள்ளன.

தலித் மாணவர்கள் மேற்கண்ட சுவரொட்டியில் கைகளால் அம்பேத்கர் பெயரை எழுதியபோதும் அதனையும் கடுமை யாகவே எதிர்த்துள்ளார் பாரதி கண்ணன். இப்படிப்பட்ட சூழலில் தேர்வுகளும் நெருங்கி வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட சில மாணவர்களைத் தேர்வு எழுதவிடாமல் தடுக்கும் முயற்சியால் பாரதிகண்ணன் கும்பலும், எதிர் தரப்பும் முயன்றதாகத் தெரிகின்றது. எனவே அந் நிகழ்ச்சி நடந்த 12.11.2008 அன்று கல்லூரிக்கு ஆயுதங்களுடன் வந்துள்ளனர் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை என்ற மாணவர்கள். இதில் பாரதி கண்ணனுக்கும், ஆறுமுகத்திற்கும் அன்று எந்தத் தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள் சித்திரைச் செல்வன் என்ற தலித் மாணவனைக் கட்டையால் அடித்தும், காதை அறுத்தும் காயப்படுத்தி உள்ளனர். ஏற்கெனவே பாரதி கண்ணனின் சாதிய வன்முறை எல்லைமீறிச் சென்றது, தலித் மாணவர்களின் மத்தியில் கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட மாணவர் தாக்கப்பட்டது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோலாகிவிட்டது. தகவல் அறிந்து கல்லூரியில் தலித் மாணவர்கள், ஒன்றுகூட ஓர் அசாதாரணச் சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உண்ணா நிலைப் போராட்டத்தின் செய்திகளைச் சேகரிக்க வந்த நிருபர்களும், புகைப்படக்காரர்களும் அருகில் இருக்கும் கல்லூரியின் அசாதாரணச் சூழல் சில வழக்கறிஞர்கள் மூலமாகத் தெரியவர எல்லோரும் அங்குக் குழுமியுள்ளனர்.

lawstudent சுமார் 5 மணியளவில் பாரதி கண்ணனும் அவருடன் வந்த ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை ஆகியவர்கள் ஆயுதங்களுடன் இருப்பதனால் தலித் மாணவர்களும் கையில் கிடைத்த கட்டை மற்றும் மண்வெட்டி ஆகியவைகளைத் தாங்கி வந்துள்ளனர். எனவே இரு தரப்பிற்கும் மோதல் உருவாகி உள்ளது. பாரதி கண்ணன் கத்தியுடன் பாய்ந்துவந்து தாக்கிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் பதிவாகிவிட்டது. மற்ற மாணவர்களும் திருப்பித் தாக்கி உள்ளனர். இதன் இறுதியாக பாரதி கண்ணன் கல்லூரி வாயிலில் அடிபட்டு விழுந்து கிடந்தார். ஆறுமுகம் என்ற மாணவர் (மரத்தில் தொங்கியவர்) மற்றும் அய்யாதுரை ஆகிய மாணவர்களும் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்தக் கட்டுரையில் கடந்த இரு வரிகளை மட்டும் படிப்பவர்களுக்கு என்ன தோன்றுமோ அதுதான் அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களுக்கும் தோன்றியிருக்கிறது.

ஆனால் நடந்த நிகழ்ச்சிக்குக் காரணம் சாதிவெறி என்றால், இதற்குப்பின் நடந்தவைகள் சாதி அரசியல். செயலலிதா, துரைமுருகன், வைகோ தொடங்கி கோ.க. மணி, திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், பசும்பொன் பாண்டி, திருவாடானை தொகுதி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் இராமசாமி வாண்டையார், யாதவர் குலம் என அனைத்து கட்சியினர், பொதுவுடைமைக் கட்சியினர் போன்றோர் அந்த நிகழ்ச்சிகளைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். ஏற்கெனவே நீதிபதி பக்தவத்சலம் தமது அறிக்கையில் கீழ்க்காணும் பரிந்துரைகள் உள்பட பல பரிந்துரைகளை அளித்துள்ளார்.

அ. கல்லூரி விடுதிக்குள் வரும் ஆள்கள் கண்காணிக்கப்பட வேணடும்.
ஆ. வெளியாள்கள் கல்லூரி விடுதியில் தங்குவதைத் தடைசெய்யவேண்டும்.
இ. விடுதிக் காப்பாளர் விடுதியிலேயே தங்க வேண்டும்.
ஈ. மாணவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

மேற்கண்ட எந்தப் பரிந்துரையும் நடமுறைப்படுத்தப்பட வில்லை. எனவே சாதிச் சங்கங்களைச் சேர்ந்த நபர்கள் மாணவர்களைச் சாதியை மய்யமாக வைத்துப் பிளவுபடுத்துவது முதல் காரணம். மேற்கண்ட சூழலில் இருந்து பயின்று பின் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும், சுயசாதி விருப்பு உள்ள சிலரின் ஆதரவும் மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. பல ஆண்டுகளாகக் கல்லூரிக்குள் நிலவிவந்த சாதிய உணர்வு 12.11.2008 அன்று பெரும் மோதலாக உருவெடுத்ததற்கு ஒரு சுவரொட்டி காரணமாகிவிட்டது. மேலும் சுற்றி நின்ற காவல்துறை "கையறு' நிலையில் இருந்ததும் ஒரு காரணம். கல்லூரி முதல்வரின் மெத்தனப் போக்கும், காவல் துறையின் கையாலாகாத் தனமும், மாணவர்களின் பெரும் மோதலைத் தவிர்க்க முடியாததாகி விட்டன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com