Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
இந்தி - எழுப்பப்படும் புதிய கேள்விகளும் தேடல்களும்

ஓவியா

பெரியார் இந்தியை எதிர்த்துப் போராட்டங்களை நடத்திய காலத்தில் அவற்றில் பங்குபெறும் வாய்ப்புக் கிட்டவில்லை என்ற போதிலும், வடவர் ஆதிக்கம் - அதன் அடையாளமாய் இந்தித் திணிப்பு - இன்னொரு புறத்தில் கல்வியில் மேல்சாதியினரின் ஏகபோகம், அதனைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் கால்வாயாகப் பள்ளிக் கூடங்களில் நமது சிறுவர்கள்மீது ஏற்றப்பட்ட இந்திப்பாடச் சுமை. இவற்றை எதிர்த்த இயக்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட எனது வாழ்விலும் மனத்திலும் "இந்தி' என்பது ஒரு மொழியாக அல்லாமல், நம்மை அரசியல் மற்றும் கலாச்சாரத்தை மய்யமாக வைத்து அடிமைப்படுத்த நினைப்பவர் கையிலான ஓர் ஆயுதம் என்ற சிந்தனை ஆழமாக வேரோடியிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பாக “தினமணி''யில் ஒரு செய்தியையொட்டிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. மய்ய அரசு இணை அமைச்சர் சுப்புலெட்சுமி செகதீசன் அவர்கள் ஒரு விழாவில், “இந்தி படியுங்கள்'' என்று பேசியதாகவும், அதனை வரவேற்றும் திராவிட இயக்கம் கடந்த காலத்தில் இழைத்த தவற்றை இடித்துரைப்பதான வகையிலும் “தினமணி'' ஆசிரிய உரையில் வெளியிட்டிருந்தது.

இந்தக் கட்டுரையையொட்டி என் நினைவுகள் நான் சந்தித்த சில நிகழ்வுகளை நோக்கிச் சென்றது. நான் மய்ய அரசு நிறுவனமாகிய இந்திய விண்வெளித் துறையில் அலுவலில் இருந்தபோது, அங்கு அலுவலர்களுக்கு இந்தி வகுப்பும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. நானும் என்னைப்போல் உணர்வுகொண்ட சில நண்பர்களும் அந்த வகுப்புகளுக்குச் செல்லவேண்டி வந்தபோது, எங்களுக்கு இலவசப் பயிற்சி தேவையில்லை எனவும், எங்களுக்கு அதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்து வந்தோம். அந்த நேரத்தில் கேரளாவிலிருந்து அங்குமாற்றலாகி வந்த ஒரு நிர்வாக அதிகாரி, “தமிழ்நாட்டில் மகேந்திரகிரயில் உள்ள எங்கள் அலுவலகம் மட்டுமே இந்தி படிக்க மறுப்பவர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது'' என்றும், தான் அதனை மாற்றி, மேலிடத்தில் ஒரு நல்ல புள்ளியைப் பெற்றுவிடவேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டார். அதாவது ஆண்டறிக்கையில் அந்த அலுவலகத்தில் இந்தி அறிவு பெற்றோர் என்ற பத்தியில் 100 விழுக்காடு என்று எழுதிவிட வேண்டும் என்பது அவருடைய இலக்கு.

அதன்படி எங்கள் விருப்பத்தைக் கோராமலேயே இந்தி வகுப்புக்கு வரவேண்டிய வர்கள் பட்டியலில் எங்கள் பெயர்களையும் இணைத்துவிட்டார். அதில் முதல்பெயர் என்னுடையது. நானும் என் நண்பர்களும் வேறுசில அலுவலர்களுக்கும் இதனை மறுத்து வரமுடியாது என்று தெரிவித்தோம். அந்த அதிகாரிக்கும் எங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. மய்ய அரசுப் பணியாளர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்று துறைசார்ந்த ஓர் அலுவலக ஆணையை அவர் எங்களிடம் காட்டினார். மேலும் அவர் “நாங்கள் எல்லோரும் எங்கள் மாநிலத்தில் இந்தி படிக்கிறோம். உங்களுக்குப் படிப்பதற்கென்ன?'' என்றார். “இந்தி பேசாத மாநில மக்களை வற்புறுத்தி இந்தி படிக்க வைக்கமாட்டோம் என்று நேரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். எங்களை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது'' என்றோம் நாங்கள். “இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள். அந்தப் பணி விதி களுக்குக் கட்டுப்படவேண்டும்'' என்றார் அவர். “சட்டப்பின்புலம் இல்லாத பணி ஆணைகளுக்குக் கட்டுப்படவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் செய்ய ஒப்புக்கொண்டிருக்கும் பணிக்கும், இந்திக்கும் என்ன தொடர்பு என உறுதிப்படுத்தினால் படிக்கத் தயார்'' என்று கூறிவிட்டு, நாங்கள் படிக்க முடியாது, நீங்கள் மேல்நடவடிக்கை எடுப்பது என்றால் எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் சந்திக்கிறோம் என்று கூறிவிட்டோம். அதன்பின் அவருக்கும் மேலதிகாரியாக இருந்தவர் தமிழர் என்பதால், பிரச்சனையைக் கூறியவுடன், அவர் அழைத்தப் பேசியதன்பேரில், அந்தப் பிரச்சனைக்கு அவர் தற்காலிகமாக அப்போதைக்கு ஒரு புள்ளிவைத்தார். அதனால் எனக்கும் அவர்களது கோப்புகளில் புள்ளி வைத்துக் கொண்டார்கள்.

அதேபோல் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்ச்சி. மய்ய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பயற்சிக்காக எனக்குத் தில்லி செல்ல வேண்டி நேர்ந்தது. ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருக்குமாறும் நேர்ந்தது. அய்.எஸ்.டி.எம். என்ற அந்த நிறுவனம்தான் மய்ய அரசின் அனைத்து அலுவலர் களுக்கும் பயிற்சி தருகின்ற இடம். இ.ஆ.ப. தகுதிபெற்றவர்களும் அங்கேதான் பயிற்சி பெறுகிறர்கள். அங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்தும் வந்திருந்த அரசு அலுவலர்களுடன் நான் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டேன். இதில் என்னுடைய அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களில் பிறர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து. மொத்த மாணவர்களில் தமிழ்நாட்டிலிருந்து, நானும் இன்னோர் உருது பேசும் இசுலாமியரும் பங்குகொண்டோம். அவருக்கு உருது தாய்மொழி என்பதால் இந்தி தெரியும் என்பதை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொண்டிருந்தார். அப் பயிற்சியில் இந்தியில் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் எத்தனிக்கும்போதெல்லாம் அவர்களின் எரிச்சலை பெறும்வண்ணம் நான் ஆங்கிலத்தில் தான் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். கேரளாவைச் சேர்ந்த என்னுடைய மற்ற அலுவலக நண்பர்கள், "புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன? இது அவர்களுடைய இடம், இங்கு வந்து பிரச்சனை எதற்கு?' என்றார்கள். (அவர்களும் பள்ளி வகுப்பில் இந்தி படித்தவர்களாம், ஆனால் இந்தி புரியாது) “இந்த இடம் (தில்லி) அவர்களுக்குரியதாக இருக்கலாம். ஆனால் இந்த நிறுவனம் அவர்களுக்குரியது மட்டுமல்ல'' என்றேன் நான். அவர்கள் இந்தியில் நடத்தினால் நான் தமிழில் அவர்களிடம் பதிலளிக்கத் தொடங்கினேன்.

அந்த ஆசிரியரின் முகம் அவமானத்தில் இறுகியது. என்னுடைய எதிர்ப்பு அவர்கள் எதிர்பாராததாக இருந்தது. இந்திக்காரர்களுக்கு நான் எதிரியாகவே தென்பட்டேன். நான் ஊருக்குத் திரும்பிவந்த பிறகும்கூட இழிவான சொற்களால் எனக்கு மடல்கள் எழுதி அவர்கள் எரிச்சலைக் காட்டிக்கொண்டார்கள். அப் பயிற்சியின் கடைசி நாள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் வைத்து இயல்பாக பழைய இந்திப்படமான "ஷோலே' திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறார்களா? என்று கேட்டார்கள். நான் பார்த்திருக் கிறேன் என்று பதில் சொன்னேன். ஒட்டுமொத்த அரங்கமும் கை யொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. அதிலிருந்து நாம் இந்தித் திரைப் படங்களைப் பார்ப்பதுகூட அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அவர்கள் உணர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த வேளையில் அங்கு வேறொரு பயிற்சிக்கு வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நண்பர் என்னிடம் “ஏன் இப்படிப் பிடிவாத மாக இந்தி படிக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார். பட்டென்று "தன்மானம்' என்று பதில் சொன்னேன். இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பின் பல ஆண்டுகள் கழித்து என் தொழில் காரணமாக உயர் பொறுப்புகளிலுள்ள இரு தமிழர்களிடையே நான் உரையாட நேர்ந்தது. இருவருமே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிருவருமே ஒரே கருத்தைத்தான் வெளிப்படுத் தினார்கள். தங்கள் மாநிலம் தங்களுக்குப் பள்ளியில் இந்தி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தராததால் தங்களுடைய உயர்வு பாதிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் அது. வெளிப்படையாகவே அவர்கள் இதற்காகத் திராவிட இயக்கங்களைக் குறை கூறினார்கள். (ஆனால் அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்குத் திராவிட இயக்கம்தான் காரணம் என்பதுபற்றி எந்த உணர்வும் வெளிப்படவில்லை என்பதை எண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது). இந்திய அளவில் தமிழர்கள் உயர்நிலைக்கு வருவதை இந்தியை அறியாத காரணத்தினால் அவர்கள் இழந்துவிடுகிறார்கள் எனவும் அவர்கள் கூறினார்கள். உங்களது பணிக்குத் தேவைப்படும்போது இந்தி படித்துக் கொள்வதிலிருந்து உங்களை யாரும் தடுக்கவில்லையே? என்று நான் கேட்டபோது வசதி இருப்பவர்கள் படிப்பது என்பது வேறு. பள்ளியில் அனைத்து ஏழை எளிய மாணவர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைப்பது என்பது வேறு என்று பதில் வந்தது.

பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுத்த வரையில் மொழிப்போராட்டத்தை மொழித் தூய்மைக்காகவும் மொழியின் மேலாண்மையை நிலைநாட்டவும் போராடுபவர்கள் அல்லர். பெரியார் பள்ளிக் கூடங்களில் இந்தி கற்பிக்கப்படுவதை எதிர்த்தபோது அதற்குக் கூறிய காரணம் இந்தியிலே தேர்ச்சி பெறும் விழுக்காடு மீண்டும் பார்ப்பனச் சமுதாயத்திற்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்டு முதல் தலைமுறையாக திராவிட இயக்கத்தின் பெருமுயற்சியால் கல்வி வாசலை அடைந்திருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும் அமையும் என்பதுதான். அவர் யாருடைய நலனுக்காக இந்தித் திணிப்பை எதிர்த்தாரோ அந்த மக்களில் படித்து உயர் பொறுப்புகளுக்கு வந்திருக்கும் பிரிவினர் இன்று இப்படிச் சிந்திக்க தலைப்பட்டிருக்கிறார்கள். ஒரு மொழியைப் படிக்கும் வாய்ப்பை ஏன் அடைத்தீர்கள்? என்று மிகமிக மலினப்படுத்திக் கேள்வி கேட்கிறார்கள். இந்த உணர்வு பரவலாக இருக்கிறது என்பதைத்தான் தினமணியில் கட்டுரையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

சரி, இனி இவர்களின் ஆற்றாமை குறித்துப் பார்ப்போம். இவர்கள் இரண்டு செய்திகளை முன்வைக்கிறார்கள். ஒன்று மய்ய அரசின் உயர் பொறுப்புகளுக்கு இந்தி தெரியாததால் வர முடியவில்லை. மற்றொன்று தொழிலை மய்யமாக வைத்து வளர்ச்சி யடைவதற்கு இந்தி தெரிந்திருந்தால் இந்தியாவின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தி தெரியாத காரணத்தினால்தான் தமிழர்களால் பிற மாநிலத் தவர்களுடன் போட்டியிட்டு முன்னுக்கு வரமுடியவில்லை. இதில் சில வினாக்களை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்தி படிப்பதையே தவறு என்று நாம் சொல்லவில்லை. ஒரு கட்டாயத்திற்கு ஆட்பட்டு படித்தே தீரவேண்டிய சூழலைத்தான் நாம் எதிர்த்துப் போராடினோம். உயர் பதவிகளுக்காகவும், தொழில் தேவைகளுக்காகவும் இடம் மாறவேண்டிய சூழல் ஏற்படும் போது இந்தி படிக்கவே கூடாது என்று யாரும் எக்காலத்திலும் கூறவில்லை. இன்றளவும் கிராமத்துப் பள்ளிகளில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் அதிகம் தோற்பது ஆங்கிலப் பாடம் என்பதாகத்தான் இருக்கிறது. அவ்வாறிருக்க இன்னொரு மொழியை அவர்கள்மீது திணிப்பது எப்படி அவர்களுக்குச் செய்யும் நன்மையாக முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. எப்படி - ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் தொழில் கல்வியாகாதோ, அதேபோல்தான் இந்தி மொழியைக் கற்பிப்பதன் நோக்கம் மாணவர்கள் அறிவாற்றலில் மொழிப் பன்மையைக் கொண்டுவருவதன்று. மாறாக அரசியல் வாயிலாக உனது மொழி அரியணை ஏறாதபோது, இன்னொரு மொழியை நீ தெரிந்துகொண்டால் மட்டுமே நீ இந்த நாட்டில் வாழ முடியும் என்பதுதான். ஏன் தொழில் உயர்வுக்கும், பதவி உயர்வுக்கும் நமது மொழியல்லாத இந்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அரசியலமைப்பு இங்கு நிலவுகிறது என்று சிந்திப்பதற்குப் பதிலாக, இந்தி தெரிந்திருந்தால் எப்படியோ அந்த நாற்காலியைப் பெற்று அதைத் தேய்த்துவிட்டு வந்திடலாமே என்று சிந்திப்பது எப்படி நல்ல சிந்தனையாகும்?

இவர்களின் சிந்தனைக்கு, இன்னும் சில நிகழ்வுகளை நான் முன்வைக்க விரும்புகிறேன். இன்றும்கூட நமது தொடர் வண்டிகளில் ஏறுகின்ற வட இந்தியர்களை நம்மால் சமாளிக்க முடிகிறதா? அவர்கள் நம்மைப் போல் ஆங்கிலமும் படிக்க வில்லை. நமது பகுதிக்கு வரவேண்டியிருக்கிறதேயென்று தமிழும் படிப்பதில்லை. ஆனால் இது அவர்கள் நாடு என்ற உணர்வு அவர்களின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவியிருக்கிறது. அதுதான் - அந்த உணர்வுதான் அவர்களுக்கு துணிவைத் தருகிறது, மொழியல்ல. அந்த உணர்வை இந்தி படித்தாலும் நீங்களும் நானும் வட இந்தியப் பகுதிகளுக்குச் செல்லும்போது பெற்றுவிட முடியுமா? ஒருமுறை மதுரைப் பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன். சில வட இந்தியப் பயணிகள் ஒரு கூட்டமாக வந்து பேருந்து நடத்துநரிடம் அந்த வண்டி கன்னியாகுமரி போகுமா? என்று இந்தியில் கேட்டார்கள். நடத்துநர் ஆங்கிலத்திலும், தமிழிலும் முக அடையாளம் மற்றும் உடல் மொழியையும் துணைக்கு வைத்துக்கொண்டு அந்த வண்டி நாகர்கோவில் வரைதான் செல்லும் என்று பதில் சொல்லிப் பார்த்தார். அவர்கள் எதுவும் புரியாமலேயே பேருந்தினுள் ஏறிக் கொண்டார்கள். நடத்துநரும் நாகர்கோவிலில் இறங்கிக் கன்னியாகுமரி பேருந்துக்கு மாறிக் கொள்ளட்டும் என்று ஏற்றிக்கொண்டார். பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் பயணச் சீட்டு எடுக்கும்போது மீண்டும் கன்னியாகுமரி என்றார்கள்.

நடத்துநர் "நாகர்கோவில்' என்றார். திடீரென அவர்கள் நடத்துநர் தங்களை ஏமாற்றி விட்டதாக அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். நாங்கள் தலையிடாமலிருந்திருந்தால் அவரை அவர்கள் அடித்துப் போட்டிருந்தாலும் வியப்பில்லை. பிறகு "போலீசு' என்று ஒரு சொல்லைக் கேட்டபிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது.
இதேபோன்ற ஒரு நிகழ்வுதான் அண்மையில் சென்னை யில் கேளம்பாக்கத்திலுள்ள விடுதியொன்றில் நடந்திருக்கிறது. அவர்களை அணுகிப் பார்த்தால் ஒரு செய்தி புரியும். அவர்கள் நமக்கு இந்தி தெரியாததைத்தான் குற்றம் என்று கருதுகிறார்களே தவிர, தங்களுக்கு ஆங்கில அறிவோ, தாங்கள் வந்திருக்கும் பகுதியின் மொழியறிவோ இல்லாததைத் தங்களின் குறைபாடாகக் கருதுவதில்லை. இல்லையெனில் இங்குவந்து நம்மவர்களை அடிக்கும் அளவிற்கு அவர்களுக்கு எப்படித் துணிச்சல் வரும்?

இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் 196இல் இந்தி ஆட்சிமொழியாக இருப்பதை எதிர்த்துப் பேசும்போது குறிப்பிட்டார். “ஒரு பகுதி மக்களின் ஆட்சி மொழியை அனைத்திந்திய மக்களின் ஆட்சிமொழியாக அறிவிப்பது என்பது அப்பகுதி மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடியதும் அவர்களது மேலாண்மையைப் பிற பகுதி மக்களின்மீது ஏற்படுத்துவது மாகும். இதன் பொருள் இந்தி பேசும் மக்கள் நம்மை ஆள்கிறார்கள் என்பதுதான். இது இந்தி பேசாத மக்களை மூன்றாம்தர குடிமக்களாக்கிவிடும்.''

இன்று அதன் விளைவைத்தான் நாம் பார்க்கிறோம். இந்தி தெரியாதது தங்களுடைய குறைபாடு என்று நம்மில் பலர் எண்ணத் தலைப்படுகிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் எல்லாம் அரசாங்கமே இலவசமாக இந்தி சொல்லிக்கொடுக்கிறதே என்று இவர்கள் அங்கலாய்க்கிறார்கள். அவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படும் இந்தி எந்த வகையிலும் ஒரு மொழி என்ற அளவில் அந்த மாநில மக்களுக்குப் பயன்படுவ தில்லை. ஒரு மொழியாக "இந்தியை'த் தங்கள் பயன்பாடுகருதி தெரிந்துகொள்ள விரும்பும் எந்த வணிகரும் எங்கள் பள்ளிக் கூடத்தில் ஏன் இந்தி சொல்லிக் கொடுக்கவில்லை என்று கேட்பதும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் எந்த மொழியும் அவர்கள் வசமாகத்தான் செய்கிறது. உண்மையில் பள்ளி களிலும் அலுவலகப் பயிற்சிகளிலும் சொல்லிக் கொடுக்கப்படும் இந்தியை ஏற்றுக்கொள்வது இவர்கள் அந்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதற்கான ஓர் அடையாளம்தானே தவிர வேறல்ல. அந்தப் பணிவு அவர்களுக்கு இந்திய அரசியலில் மறைமுகமாக நன்மை களுக்கு வழிகோலுகிறது. இந்தி ஆட்சி மொழியாக இருக்கும் வரை எப்போது வேண்டமானாலும் இந்தி நம் மீது திணிக்கப் படலாம் அல்லது நம்மவர்களே எங்களுக்கு இந்தி வேண்டும் என்று கேட்கத்தொடங்கலாம்.

இந்தியாவும் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். இன்று மகாராட்டிரத்தில் இந்தி பேசும் மக்களை அடித்து விரட்டுகிறது ஓர் இயக்கம். அந்த மாநிலம் இந்தியை விரட்டிய மாநிலம் அல்ல. ஆனால் தமிழ்நாடு பெரியாரின் அறிவுசார் தலைமையின்கீழ் அணிவகுத்த காரணத்தால் மக்களை எதிர்த்து அல்ல; அரசியல் கருவியாக வந்த இந்தி மொழியை எதிர்த்துத்தான் இயக்கம் கண்டது. ஆனால் இந்தியை ஏற்காத மாநிலம் என்பதாலேயே தமிழ்நாட்டை இந்தியா அனைத்து பிரச்சனைகளிலும் பாராமுகமாகவே நடத்தி வருகிறது. மய்ய அரசுப் பணிகளிலும் மற்ற துறைகளிலும் நடந்துவரும் தமிழ் மொழிக்கு எதிராக அரசியலின் ஒரு வெளிப்பாடே தமிழர்கள் இந்தி படிக்காததைத் தங்களுடைய இழப்பாகக் கருதித் தங்களிடம் அடிபணியவேண்டும் என்ற புள்ளியைநோக்கி காய்நகர்த்தப்படுகிறது. இந்தி பேசாத மக்கள்மீது இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தக் கையோடு, இந்த நுட்பமான அரசியல் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் பெரியாருக்குப் பின் இந்த நுண் அரசியலுக்கு நாம் முறையாக முகம் கொடுத்திருக்கிறோமா என்பது சிந்தனைக்குரிய வினாவோடு நின்றுகொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com