Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
மேல்நிலைக் கல்வி: முதல் ஆண்டிலும் பொதுத்தேர்வு காலத்தின் கட்டாயம்

பேராசிரியர் பிரபா. கல்விமணி

20.10.2008 தினமணி ஆசிரியவுரையில் “ஒரு காலத்தில் இந்திய அரசுப் பணியில் தொடங்கி அனைத்து இந்திய எல்லாத் தேர்வுகளிலும், தமிழகம் முதலிடத்தில் இருந்ததுபோக, இப்போது அறிஞர் அண்ணா எழுதியதுபோல "ஏ தாழ்ந்த தமிழகமே' என்று நாமெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள. மேற்கண்ட கூற்றிற்கு ஆதாரமாக இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் தொழில்நுட்பக் கழகத்திற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1697பேர் என்றால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 202 பேர்தான். இது போன்றே திருச்சியில் உள்ள பிராந்தியப் பொறியியல் கல்லூரியிலும் பெருவாரியான இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கே சென்றுவிடுகின்றன என்பதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

boy இந்தப் பின்தங்கிய நிலைமைக்கு, நம் மாநிலக் கல்வித் திட்டத்தில் - பழைய மெக்காலே கல்வி முறை யில் மனப்பாடம் செயயும் அடிப்படை தொடர்வதும், ஒரு தேர்வுக்கும், அடுத்த தேர்வுக்கும் இடையில் மாணவர்களுக்குப் படித்ததை மீள்பார்வை செய்ய நடுவண் வாரிய இடைநிலைக் கல்வி (சி.பி. எஸ்.இ.) முறையில் உள்ளது போல் நான்கைந்து நாள்கள் இடைவெளி மாநிலத் தேர்வு முறையில் இல்லை என்பதையும், கேந்த்ரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் போன்றவைகள் தொடங்கப் படுவதற்குத் தமிழக ஆட்சியாளர்கள் தடையாக உள்ளதையும் காரணங்களாக மேற்படி ஆசிரியவுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இவை எல்லாவற்றை யும் விட 11ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தாதது தான் மேல்நிலைக் கல்வியில் நாம் மிகவும் பின்தங்கிய நிலைமைக்கு முதன்மைக் காரணமாகும். மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளும் பொதுத் தேர்வு நடத்தி வருவதுதான் ஆந்திரத்தின் முன்னேறிய நிலைக்கு மிகவும் அடிப்படையானதாகும்.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் அரசின் அறிவுரைப்படி தமிழகத்திலும் கல்வியில் 10, +2, +3 என்ற முறை அறிமுகமானது. அதாவது 10 ஆண்டுகள் பள்ளிக்கல்வி, இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக்கல்வி, மூன்றாண்டுகள் பட்டப்படிப்பு என்பனவாகும். இங்குப் பட்டப்படிப்பு என்பது கலை, அறிவியல் பட்டப்படிப்புகளைக் குறிப்பதாகும். அப்போது +2 மேல்நிலைக் கல்வியை, கல்லூரியில் சேர்ப்பதா அல்லது பள்ளிக் கல்வியோடு சேர்ப்பதா என்ற ஒரு பெரிய விவாதமே நடந்தது. அதுவரை பள்ளிக் கல்வியை அடுத்து புகுமுக வகுப்பு (PUC- Pre University Class) கல்லூரியில் இருந்து வந்ததால், கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் +2வை, கல்லூரிக் கல்வியோடு சேர்க்கவேண்டும் என்று வாதிட்டார்கள். மேல்நிலைக் கல்வியைப் பள்ளிக் கல்வியோடு இணைப்பதால், கல்லூரி ஆசிரியர்கள் எவரும் வேலையிழக்க மாட்டார்கள் என்ற உறுதிமொழியை அப்போதையக் கல்வி அமைச்சர் அரங்க நாயகம் அளித்தார். இதையடுத்து அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் ஆந்திர அரசு மேல்நிலைக் கல்வியைப் பள்ளியோடும் சேர்க்காமல், கல்லூரியோடும் சேர்க்காமல் +2வுக்கென்று இளநிலைக் கல்லூரி (Junior College) யை ஏற்படுத்தியது. ஆந்திர அரசின் இந்த முடிவு தான் அனைத்து இந்திய அளவில் கல்வியில் ஆந்திராவின் இன்றைய முன்னேறிய நிலைக்கு முதன்மைக் காரணமாகும்.

10ஆம் வகுப்பிற்குப் பின்னால் வருவதால் +2 மேல்நிலைக் கல்வி என்பதை 11ஆம் வகுப்பு என்று குறிப்பிடுவது தவறா கும். பி.ஏ., அல்லது பி.எஸ்சி., என்பதை 13ஆம் வகுப்பு, 14ஆம் வகுப்பு, 15ஆம் வகுப்பு என்று நாம் குறிப்பிடுவதில்லை. அதனை நாம் இளங்கலை (பி.ஏ.,) முதலாம் ஆண்டு, இளங்கலை (பி.ஏ.,) இரண்டாம் ஆண்டு, இளங்கலை (பி.ஏ.,) மூன்றாம் ஆண்டு என்றுதான் குறிப்பிடு கிறோம். காரணம் பி.ஏ., அல்லது பி.எஸ்சி., என்பது மூன்றாண்டுத் தொடர் படிப்பாகும். இது போன்றே +2 என்பதும் இரண்டாண்டு தொடர் படிப்பாகும். இதனையும் மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு என்றுதான் குறிப்பிடவேண்டும்.

அப்படியானால் வகுப்புக்கும், தொடர் படிப்புக்கும் என்ன வேறுபாடு? ஓர் எளிய எடுத்துக்காட்டைக் கொண்டு விளக்கலாம். அறிவியல் புத்தகத்தை எடுத்துக்கொணடால் 9ஆம் வகுப்பிலும் வெப்பவியல் பாடம் இருக்கும். 10ஆம் வகுப்பிலும் வெப்பவியல் பாடம் இருக்கும். அதாவது, வெப்பவியல் பற்றி அடுத்தடுத்த வகுப்புகளிலும் தொடர்ந்து படித்துவர வேண்டும். ஆனால் மேனிலை முதல் ஆண்டு இயற்பியல் பாடப் புத்தகத்தில் இயக்க வியல், வெப்பவியல் உண்டு. மின்னோட்டவியல், மின்னணுவியல் போன்ற பாடங்கள் இல்லை. மேலும் +2 இரண்டாம் ஆண்டில் இயக்கவியல், வெப்பவியல் போன்ற பாடங்கள் கிடையாது. மாறாக, மின்னோட்டவியல், மின்னணுவியல் போன்ற பாடங்கள் உண்டு. அதாவது +2 வுக்கான இயற்பியல் தாளுக்கான (Physics Paper) மொத்த பாடத்திட்டத்தில் ஒரு பாதியை முதல் ஆண்டும், மறுபாதியை அடுத்த ஆண்டும் படிக்கவேண்டும். இது போன்றுதான் கணக்கு, வேதியியல் போன்ற ஒவ்வொரு தாளுக்குமான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்படி பாடத்திட்டத்தின்படி இயற்பியல், கணக்கு, வேதியியல் போன்ற ஒவ்வொரு தாளிலும் முதல் ஆண்டு முதல் பாதியிலும், இரண்டாம் ஆண்டு அவற்றின் மறு பாதியிலும் தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களையும் சேர்த்தே அம்மாணவர்களுக்கு அந்தந்த தாளுக்கான மொத்த மதிப்பெண் அளிக்கப்பெறல்வேண்டும். அதாவது முதல் ஆண்டு 100 மதிப்பெண், இரண்டாம் ஆண்டு 100 மதிப்பெண், ஆக மொத்தம் இயற்பியலில் 200க்கு மதிப்பிடவேண்டும்.

இப்படித்தான் மேனிகைக் கல்வி (+2) அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஆந்திர மாநிலத்தில் முதல் ஆண்டு ஒரு பொதுத் தேர்வும், 2ஆம் ஆண்டு ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டு இரண்டை யும் சேர்த்து மேனிலைக்கான தேர்ச்சிச் சான்று அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் என்ன நடைபெற்று வருகிறது? தமிழகத் தில் மேனிலைக் கல்வி (+2) அறிமுகமான நாளி லிருந்தே முதல் ஆண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படுவதில்லை. இரண்டாம் ஆண்டில், இரண்டாம் ஆண்டிற்கான பாடங்களில் மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதாவது இயற்பியல் தாளுக்கான மொத்தப் பாடத்திட்டத்தில் ஒரு பாதிக்கு முதல் ஆண்டு பள்ளித் தேர்வும், மறுபாதிக்கு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வும் என்பது எப்படிச் சரியாகும்? மேலும் மேனிலைத் தேர்ச்சிச் சான்றில் முதல் ஆண்டுப் பாடத்திட்டத்தில் பெற்ற மதிப்பெண்கள் எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விக்கு நடந்துவந்த நுழைவுத் தேர்வுகளிலும், மேனிலை முதல் ஆண்டுப் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப் படுவதில்லை. இரண்டாம் ஆண்டுப் பாடங்களில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுவந்தன.

இவைபற்றியெல்லாம், தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கு அக்கறையே கிடையாதா என்ற வினாக்கள் எழலாம். முதல் ஆண்டிலும் பொதுத்தேர்வு நடத்துவதற்குக் கல்வித்துறை அவ்வப் போது சில முயற்சிகளும் அறிவிப்புகளும் செய்தது. அப்போ தெல்லாம் இரண்டாண்டுகளும் பொதுத்தேர்வா?. தேர்வு நடத்துவதே வேலையா? மாணவர்கள் தேர்வை விரும்பவில்லை... மாணவர் களுக்கு மன அழுத்தம் அதிகமாகும்... எனப் பல வடிவங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. பொதுமக்களின் வாக்குகளில் மிகவும் குறியாக உள்ள நம் ஆட்சியாளர்களும் நமக்கேன் வம்பு என்று இருக்கும் நிலையையே தொடர விட்டுவிட்டார்கள்.

இந்த எதிர்ப்பின் பின்னணி என்ன? தமிழகத்தில் மிகச் சிறந்த பள்ளிகள் எனப் பொதுமக்களால் நம்பப்படும் பள்ளிகளில் மிகப்பெரும்பாலானவற்றில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன. மேல்நிலைக் கல்வியில் முதலாம் ஆண்டில், முதலாம் ஆண்டுப் பாடத்தைப் பெயரளவில் மூன்று நான்கு மாதங்களில் கற்பித்தி விட்டு, இரண்டாம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முதல் ஆண்டிலிருந்தே கற்பித்து வருகிறார்கள். அதாவது முதல் ஆண்டுப் பாடத்திட்டத்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் அளிக்காமல் இரண்டாம் ஆண்டில் நடத்தப்படும் பொதுத் தேர்வையே குறியாகக் கொண்டு இரண்டாம் ஆண்டிற்கான பாடங்களைக் கற்பித்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான ஏழை, எளிய மாணவர்கள் பயின்றுவரும் அரசு பள்ளிகளிலோ, முதல் ஆண்டு பாடங்களைக் கற்பிப்பதில் கல்வி அதிகாரிகள் போதிய அக்கறையும், ஆர்வமும் காட்டுவதில்லை. அப்படியே கற்பித்தாலும் பொதுத்தேர்வு இல்லாததால் மாணவர்கள் அக்கறையோடு படிப்பதில்லை. இதனால் தமிழக மாணவர்களுக்குக் கல்வியின் முதன்மைத் திருப்புமுனையாகக் கருதப்படும் மேனிலைக் கல்வியின் பாடத்திட்டத்தின் ஒரு பாதி தவிர்க்கப்படுகிறது. அதாவது, ஓராண்டு மனிதவள மேம்பாடு முற்றிறுலுமாகத் தடைபடுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் மேலே சொன்ன பேர்பெற்ற பள்ளி நிருவாகி களுக்குக் கவலை இல்லை.

மேனிலை இரண்டாம் ஆண்டுக்கான பாடங்களில் மட்டுமே இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து தீவிரப் பயிற்சி கொடுப்பதன் மூலம் அங்குப் பயிலும் மாணவர்களைப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற வைக்கிறார்கள். ஆனால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அதே தேர்வை இரண்டாம் ஆண்டில் அதாவது ஒரே ஓர் ஆண்டு மட்டும் பயின்று தேர்வு எழுதுகிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு, பதின்நிலை (மெட்ரிகுலேசன்) ப் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோட முடியாத அவலநிலை உள்ளது.

இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அளிக்கப்படும் இலவச இடங்களைப் பதின்நிலைப் பள்ளி மாணவர்களே அள்ளிச் செல்கின்றனர். இதனை விளம்பரப்படுத்தியே மேற்படி பேர்பெற்ற பள்ளிகள் தங்கள் கல்வி வணித்தை மேம்படுத்திக் கொள்கின்றன. கட்சி வேறுபாடின்றி அரசியலில் பலரும் இக்கல்வி வணிகத்தில் முனைப்பாக உள்ளதால் இந்தக் கல்வி வணிகக் கொள்ளை கேட்பாரற்றுத் தொடர்கிறது.

"தமிழக மாணவர்களுக்கு மேனிலை முதல் ஆண்டுப் பாடத்திட்டத்தில் ஏற்படும் ஓராண்டு இழப்பு மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், ஏன் இந்தியாவிற்கும் ஏற்பட்டுவரும் பேரிழப்பாகும். இதன் பாதிப்புகள் பல்வேறு வடிவங்கள் கொண் டவையாகும். இவ்வாறு ஓராண்டுப் பாடங்கள் புறக்கணிக்கப் படுவதால் உயர்கல்வியில் குறிப்பாகப் பொறியியல் கல்லூரி களில் சேர்ந்து பயிலும்போது நம் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பாதிப்பால், தமிழகத்து மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும்போது பிற மாநில மாணவர்களோடு சமமாக நின்று போட்டியிட முடிவதில்லை.'

இறுதியாகத் தொழில்நுட்பக் கழகத்தின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வை நீக்கிய நிலையிலும், இந்திய அளவில் நுழைவுத் தேர்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. மேலும் தொழில் நுட்பக் கழகத்தில் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொண்டு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மேற்படி நுழைவுத் தேர்வில், +2 பாடத் திட்டத்தில் முதல் ஆண்டுப் பாடங்களிலிருந்து 50 விழுக்காடு வினாக்களும், இரண்டாம் ஆண்டுப் பாடங்களி லிருந்து 50 விழுக்காடு வினாக்களும் கேட்கப்படுகின்றன. அவ்வாறு வினவப்படுவதுதான் கல்வி அடிப்படையில் முறையானதும், சரியானதும் ஆகும்.

இத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கில வழியில் உள்ளதால் தமிழகத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களால் இத் தேர்வை எழுத முடிவதில்லை. இத் தேர்வை எழுதக்கூடிய பதின் நிலைப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆங்கில வழியில் பயின்ற மாணவர்களோ, மேனிலைப் பாடத்திட்டத்தில் முதலாண்டுப் பாடங்களைப் படிக்காததால் மேற்படித் தேர்வில் 50 விழுக்காடு வினாக்களுக்குத்தான் விடை அளிக்கமுடியும். இரண்டாண்டு களுக்கான பாடங்களைப் பயின்று, இரண்டு பொதுத் தேர்வை எழுதியுள்ள ஆந்திர மாநிலத்து மாணவர்களோடு, ஓராண்டுப் பாடத்தை மட்டும் பயின்றுள்ள தமிழக மாணவர்களால் எப்படிப் போட்டிபோட முடியும்? அதனால்தான் ஆந்திரத்திலிருந்து 1697பேர், தமிழகத்தில் இருந்து 202 பேர் தேர்ச்சி என்பது ஏற்பட்டது.

ஒருசில விவரம் அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்காக மேனிலை முதல் ஆண்டுப் பாடத்திலும் தனியாகப் பயிற்சி அளித்து வருகிறார்கள். “இந்து பிளஸ்'' என்ற அமைப்பும் சென்னையில் இதற்கென்று தனியாகப் பயிற்சி அளித்து வருகிறது. இல்லையென்றால் இந்த 202 இடம்கூடத் தமிழகத்திற்குக் கிடைத்திருக்காது. தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுக்கு இணையாகப் போட்டியிடுவதோடு மட்டுமின்றி, உலக அளவில் ஏற்படும் அறைகூவல்களையும் எதிர்கொள்வதற்கு மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டில் பொதுத்தேர்வு நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்திசையில் தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துவரும் முயற்சிகளை கல்வியில் அக்கறையுள்ள அனைவரும் ஆதரித்து வரவேற்க வேண்டும். மேலும் மாநிலத் தன்னாட்சியைத் தன் உயிர் மூச்சுக் கொள்கையாகச் சொல்லிவரும் தி.மு.க. அரசு, தொழில் நுட்பக் கழகத்திற்கான இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் தமிழிலும் நடத்தப்படுவதற்கு முயல வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளியையே நம்பிப் படிக்கும் குப்பனும், சுப்பனும் பிராந்திய அளவிலான பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கழகங்களிலும் சேரும் வாய்ப்பபைப் பெறுவார்கள்.
குறிப்பு : “தமிழகத்தில் அரசுத் தொடக்கக் கல்வி பாழாகிவிட்டது. அது ஏன்?'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதுங்கள்.

- ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com