Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
மாமனிதர் வி.பி.சிங் மறைந்தார்
வே. ஆனைமுத்து

இந்தியச் சமூக வரலாற்றில் மேல்வகுப்பில் பிறந்தவர்களில் தென்னாட்டிலும் வடநாட்டிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பேரில் அக்கறை கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவர். அப்படிப்பட்டவர்களுள் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 60 கோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் மொழி, மாநிலம், கட்சி, உள்சாதி வேறுபாடு கருதாமல் "வாழ்க வி.பி.சிங்' என மனங்குளிர வாழ்த்தப்படுவதற்கான சீரிய வகுப்புரிமைச் சாதனையைப் படைத்தவர் ஆவார், மாமனிதர் வி.பி.சிங்! அன்னார் 25.06.1931இல் பிறந்தார். 2.12.1989முதல் 10.11.1990வரை இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். 27.11.2008 அன்று தம் 78ஆம் அகவையில் மறைவுற்றார்.

v_p_sing பிறப்பால் அவர் சத்திரிய வகுப்பினர் என்றாலும் 1989இல் பிரதமரான வி.பி.சிங் தந்தை பெரியார், மேதை அம்பேத்கர், இவர்களுக்கு முன்னோடியாக விளங்ய மகாத்மா புலே இவர்களின் வருணாசிரம ஒழிப்புக் கொள்கை, வகுப்புவாரி உரிமைக் கொள்கை இவற்றைப் புரிந்துகொள்வதிலும், வகுப்புரிமை வந்து சேரத் தன்னால் ஆன எல்லாப் பங்களிப்பு களையும் செய்வதிலும் ஈடு இணையற்ற இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கினார். பிற்டுத்தப் பட்டோருக்கு உரிமை வழங்கிய ஒரே காரணத்தினாலேயே - அன்று வெகுமக்களுக்கு எதிராக - மூர்க்கமாக மண்டல் பரிந்துரை அமலாக் கத்தை எதிர்த்த இந்துமத வெறி பிடித்த பா.ச.க., கண்மூடித்தனமாக எதிர்த்த காங்கிரசு இவற்றின் எதிர்ப்பைத் துச்சமெனத் தள்ளிவிட்டு மண்டல் பரிந்துரை அமலாக்கத்தில் உறுதியாக நின்றார்.

அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையின் தலைவராக விளங்கும் இராம் அவதேஷ்சிங் 1986 முதல் 1992 வரையில் மாநிலங்கள் அவையில் மண்டல் பரிந்துரை அமலாக்கத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அதனைக்கூர்ந்து நோக்கிய வி.பி.சிங் அவர்கள்தாம் இந்தியத் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்பு நேரிட்டவுடன், தக்க சமயம் பார்த்து, மண்டல் பரிந்துரையின் தலையான கூறாகிய மய்ய அரசு வேலைகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதை மிகத் துணிவாக 6.8.1990 அன்று மாநிலங்கள் அவையில் அறிவித்துவிட்டு அன்று இரவே இராம் அவதேஷ் சிங்குக்கு நன்றி கூறுவதற்காக அவருடைய இல்லம் நோக்கிச் சென்றார். தனக்கு அவ்வுணர்வை ஊட்டிய பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடேயே மிகப் பெருந்தன்மையாக அவருடைய இல்லத்திற்குச் சென்றார். அதனை உணர்ந்த இராம் அவதேஷ் சிங் அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவையின் சார்பில் அடுத்த சில நாள்களிலேயே அன்றைய தலைமை அமைச்சராக இருந்த வி.பி.சிங் அவர்களுக்குத் தம் இல்லத்தில், பாராட்டும் பெரு விருந்தும் அளித்துப் பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தம் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட இடஒதுக்கீடு ஆணையின் பயனாக முதன்முதலாக இடஒதுக்கீட்டினால் அரசு அலுவல் பெற்ற எளிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு அலுவலரின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு மலர் மாலை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். இத்தகு பெருந்தன்மைகள் மிக்கவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் புதுதில்லிக் குடிசை வாழ்வோர் நலனுக்கும் பாடுபடுவதிலும் தம் இறுதி மூச்சுவரை மனமார முயற்சித்தார். நாம் அன்னாரை 15.09.2001இல் நேரில் கண்டு அவருடைய ஆட்சிக்காலத்தில் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் அது எளிதாக நடப்புக்கு வந்திருக்கும் - தந்தை பெரியார் பாடுபட்டுத் தேடித்தான் கல்வியில் ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீடு தருவதற்கான விதி அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றது என்பதை அவருடைய கவனத்துக்குக் கொண்டுவந்தவுடன், அதற்காகப் பெரியார் நடத்தியப் போராட்டம் என்ன என்பதை விவரமாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார். அவற்றை அறிந்த அவர் இக்கோரிக்கை நிறைவேறத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்வதாகவும் மனமார உறுதி கூறினார். எப்போதெல்லாம் வாய்ப்பு நேருகிறதோ அப்போதெல்லாம் எனக்கு இதை நினைவூட்டுங்கள் என்று கூறிவிட்டு இன்று எனக்குச் சார்பான உறுப்பினர்கள் எந்தச் சட்டமன்றத்திலும் இல்லை, நாடாளுமன்றத்திலும் இல்லை என்பது தனக்கு உள்ள ஓர் இயலாத நிலை யாகும் என்பதையும் மனந்திறந்து கூறி அதற்காக வருத்தப்பட்டார். புதுதில்லி யில் நாம் ஏற்பாடு செய்த தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் பேச ஒப்புதல் அளித்த அவர் அன்றாடம் குருதித் தூய்மைப் படுத்திக்கொள்ளும் ஆய்வுக்கு (டயாலிசிஸ்) ஆளானநிலையில் திடுமெனக் காய்ச்சல் கண்டு நிகழ்ச்சிக்கு வரமுடியாதவர் ஆனார்.

மய்ய அரசில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற்றே தீரவேண்டுமென நீதிக்கட்சித் தலைவர்களும் தந்தை பெரியாரும் 1934இல் உறுதிகொண்டனர்; "பிற்படுத்தப் பட்ட வகுப்புக் குடிமக்கள்' அரசு அலுவல்களில் இடம்பெறு வதற்கான விதியை அரசமைப்புச் சட்டத்தில் மேதை அம்பேத்கர் முதன்முதலாக வகுத்துத் தந்தார். பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் வகுப்பினரும், பழங்குடியினரும் மய்ய அரசுக் கல்வியிலும் மாநில அரசுக் கல்வியிலும் இடம்பெறுவதறகான விதி அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறுவதற்கான போராட்டத்தை நடத்தி அதற்கான விதி அரசமைப்பில் இடம்பெறத் தந்தை பெரியார் காரணராக விளங்கினார். மய்ய - மாநில அரசுகளில் வேலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் கீடு வழங்கப் படுவதற்கான தெளிவான உரிமை ஆவணத்தை பி.பி. மண்டல் வழங்கினார். அந்த ஆவணத்தின் ஒரு பகுதியின் முதலாவது செயல்பாட்டை மாமனிதர் விசுவநாத் பிரதாப் சிங் வழங்கினார்.

மண்டல் அவர்களும், வி.பி.சிங் அவர்களும் கோடிக் கணக்கான பிற்படுத்தப்பட்டோரின் இல்லங்களில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த ஈகச் சுடரொளிகள் ஆவர். மண்டல் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். இன்று மாமனிதர் வி.பி.சிங் அவர்களும் மறைந்துவிட்டார். வாழ்க, வி.பி.சிங் புகழ்!

1.11.2008 - வே. ஆனைமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com