Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
அமெரிக்க குடியரசுத் தலைவராக, கறுப்பினத் தலைவர் ஒபாமா வென்றார்
பெரிய மாற்றம் வந்தது உண்மை! அமெரிக்க ஆதிக்கம் மாறுமா என்பது கேள்விக்குறி!
வே. ஆனைமுத்து

obama அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக இரண்டு தடவைகள் ஜார்ஜ் டபிள்யு புஷ் பதவியைப் பெற்றுவிட்டார். அவர் அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர். அவர் உள்பட 43 குடியரசுத் தலைவர்களும் வெள்ளையர்களே.

இன்று, 4.11.2008இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்காவின் 44ஆவது குடியரசுத் தலைவர். இவர்தான், முதலாவதாக இப்பதவியைப் பெற்ற கறுப்பு இனத் தலைவர் -ஆப்பிரிக்க அமெரிக்கரான பாரக் உசைன் ஒபாமா. இதனால் அமெரிக்காவில் மிகப்பெரிய மாற்றம் வந்தது உண்மை. ஏன்? அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை 32 கோடி; இதில் 4 கோடிப்பேரே ஆப்பிரிக்க அமெரிக்கர். இந்தச் சிறுபான்மை கறுப்பர் இனத்தைச் சார்ந்தவர்கள் சமூக சமத்துவம் மறுக்கப்பட்டவர்கள்; வாழிடங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்; அடிமைகளாக இருந்தவர்களின் வழிவந்தவர்கள்.

அந்த அடிமை முறைக்கு அமெரிக்காவில் சாவுமணி அடித்தவர், 1861 - 1865இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக விளங்கிய - புகழ்பெற்ற தலைவர் ஆபிரகாம் லிங்கன். அவர் அடிமை முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிய 1865ஆம் ஆண்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டப்படி அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் சமூக வாழ்க்கையில் வெள்ளையர் - கறுப்பர் வேறுபாடு ஒழியவில்லை. சமூகத்திலிருந்து கறுப்பரை ஒதுக்கி – விலக்கிவைக்கிற(Apartheid - Apartness) பழக்கமும் வழக்கமும் மாறவில்லை.

கறுப்பரின் நாடான ஆப்பிரிக்காவில் குடியேறி ஆட்சியை அமைத்து ஆதிக்கம் செலுத்திய மிகச் சிறுபான்மையரான வெள்ளையர்கள் - ஆப்பிரிக்க நாட்டின் சொந்தக்காரரான - பெரும்பான்மை மக்களான கறுப்பரை அடக்கி ஒடுக்கி ஒதுக்கி வைத்தனர். ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் அமெரிக்காவுக்கு அடிமை வேலை செய்வதற்கு ஏற்றிக்கொண்டு வரப்பட்டவர்கள் - அடிமைகளாக ஒதுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட சிறுபான்மை மக்கள். அந்த இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா வெள்ளையர் ஆதிக்க அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பெரு வெற்றிபெற்றது ஒரு பெரிய மாற்றமே!

இந்த மாபெரும் மாற்றத்துக்கு அமெரிக்காவில் வித்திட்டவர் ஒரு பெண்மணி ரோசா பார்க்ஸ்(Rosa Parks) என்பவர். பொதுப்பேருந்தில் தான் உட்கார்ந்திருந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு, ஒரு வெள்ளையர் உட்கார இடந்தரமுடியாது என அவர் மறுத்துவிட்டார். 40 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. அவர் கைது செய்யப்பட்டார்; வழக்கு நடந்தது; 381 நாள்கள் பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதை ஒட்டி அமெரிக்க உச்சநீதிமன்றம், “பொதுப் பேருந்தில் இன அடிப்படையில் ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிப்பது அரசமைப்புச்ச சட்டப்படி செல்லாது'' எனத் தீர்ப்பு அளித்தது. அமெரிக்காவில் சமூக சமத்துவ உரிமை இயக்கத்தின் தோற்றுவாய் அதுதான்.

அமெரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடி அதனால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்). அதே சம காலத்தில் ஆப்பிரிக்காவில் கறுப்பரின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறையில் கருகிய வீரர் நெல்சன் மண்டேலா, விடுதலைபெற்று, ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவர்களின் ஈடு இணையற்ற ஈகத்தின் நேரடி விளைவு தான், 4.11.2008இல் ஒபாமா அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இது ஒரு மாபெரும் மாற்றம்.

சமத்துவ உரிமை கோரி கறுப்பரான ரோசா பார்க்ஸ் உட்கார்ந்தார்; கறுப்பரான மார்ட்டின் லூதர் கிங் நடந்தார் - போராடினார்; ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பரான பாரக் ஒபாமா தேர்தல் போட்டியில் ஓடினார்; வெற்றிபெற்றார். இவருடைய தந்தை பாரக் உசைன் ஒபாமா - ஒரு கென்யா நாட்டவர்; தாய் ஆன்டன் ஹாம் - ஓர் அமெரிக்கர். இவர்களின் மகனாக, ஆகஸ்டு 1961இல் பிறந்தவரே பாரக் ஒபாமா. இவருடைய தாயார் 1964இல் மணவிலக்குப் பெற்றார்; 1967இல் ஓர் இந்தோனேசியரை மணந்தார். பெரிதும் தாய்வழிப் பாட்டியினால் வளர்க்கப்பட்டவரே ஒபாமா.

ஒபாமாவின் பாட்டனார் இஸ்லாமியர்; எனவே தந்தையும் இஸ்லாமியர். இஸ்லாமியராக வளர்க்ப்பட்ட ஒபாமா, 1988இல் கிறித்தவராக மதம் மாறினார். 1979க்கும் 1989க்கும் இடையில் உயர்தர சட்டக் கல்வியைப் பெற்றார். ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் சட்ட இதழின் ஆசிரியர் குழுவின் முதன்மை ஆசிரியராக அமர்ந்த முதலாவது கறுப்பர் ஒபாமாவே. ஒபாமாவின் மனைவியாக வாய்த்தவர் மிச்சல்; அவரும் சட்டம் படித்தவர்; ஒபாமாவைவிட மூன்று வயது மூத்தவர்.

இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒபாமா, இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோவில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கறுப்பு இனமக்கள் வாக்காளர்களாகச் சேர்க்கப் படாமல் இருந்ததைக் கண்டு, அந்த அநீதியைப் போக்கிட 1992 முதல் உழைத்து வெற்றிபெற்றார். இது ஒபாமாவின் பொதுவாழ்வின் தொடக்கம்.
1996இல் தேர்தலில் ஈடுபட்ட அவர், மத்திய சட்ட மேலவை உறுப்பினராக 2004இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 - 2010வரை மேலவை உறுப்பினராகத் தகுதிபெற்ற ஒபாமா, இன்று குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றுள்ளார். தன்னையொத்த மக்களுக்கு உரிமைகள் வரப்பாடுபட்ட அவர் அமெரிக்காவின் மிக அதிகாரம் வாய்ந்த பதவியான குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பேருரையாற்றிய ஒபாமா, “நாம் ஒரு மாற்றத்தை வென்றெடுத்திருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார். இது அமெரிக்காவிலுள்ள ஒதுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்கும் வெற்றி என்பதைக் குறிக்கும். இங்கு, அமெரிக்காவின் மக்களாட்சிமுறை அமைப்பு மற்றும் - சட்ட அவைகள் அமைப்புப்பற்றி நாம் அறிவது நல்லது.

இந்தியாவிலுள்ள மாநிலம் - யூனியன் பகுதி ஒவ்வொன்றுக்கும் ஒரு சட்டப்பேரவை (Assembly) இருக்கிறது. அமெரிக்காவில் அய்ம்பது மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு செனேட் (Senate) சட்டப்பேரவை உண்டு. இந்தியாவில் உள்ள மத்திய சட்டப்பேரவை - மக்கள் அவை (House of people) என அழைக்கப்படுகிறது. அமெரிக்க மத்திய சட்டப்பேரவை - மக்கள் பேராளர் அவை (House of Representatives) எனப் பெயர் பெற்றுள்ளது. இந்தியாவில், மத்திய சட்ட மேலவை, மாநிலங்கள் அவை (Council of states) என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் செனட்டர்கள் பேரவை என மத்திய சட்ட மேலவை அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மக்களவைக்கு மொத்தம் 543 மக்கள பேராளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்கள் அவைக்கு, 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் பேராளர்களின் எண்ணிக்கை யில் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையினர் ஆவர். மறைமுகத் தேர்தல் மூலமாகவும் நியமனம் வழியாகவும் வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலுள்ள மத்திய சட்டமேலவைக்கு - ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சரிசமமான எண்ணிக்கையில் - இரண்டுபேர் மட்டுமே மாநிலச் சட்டப்பேரவையால் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரிய மாநிலம், சிறிய மாநிலம் என்கிற வேறுபாடு இல்லை. இது கூட்டாட்சிக் குடியரசு. என்பதன் ஒரு நல்ல கூறு.

இந்தியாவில் இது அப்படி இல்லை. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு மக்கள்தொகை 6 கோடி; மக்களவை உறுப்பினர்கள் 39 பேர்; மாநிலங்கள் அவைக்கு 18 பேர். உத்தரப்பிரதேசத்துக்கு மக்களவை உறுப்பினர்கள் 80 பேர்; உ.பி.யிலிருந்து மாநிலங்கள் அவைக்கு வரும் உறுப்பினர்கள் 31 பேர். பெரிய மாநிலம் சிறிய மாநிலம் என்ற வேறுபாடு இந்தியாவில் உண்டு. இது கூட்டாட்சிக் கொள்கைக்கு நேர் எதிரானது. பெரிய மாநிலங்கள் மத்தியில் செல்வாக்கோடு திகழவும், சிறியவை செல்வாக்கு இல்லாமல் போகவும் இது வழி வகுக்கிறது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு என்று வாக்காளர்கள் (Electiors)தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், எப்படி? ஒவ்வொரு மாநிலத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள் பேராளர்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில், வாக்காளர்களை அமர்த்துகிறார்கள். அப்படி அமர்த்தப்பட்ட வாக்காளர்கள் அவரவர் மாநிலத்தில் கூடி, இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்குச் சீட்டு மூலம், வாக்களிக்கிறார்கள். இவ் வேட்பாளர்களில் இருவருள் ஒருவர் வாக்கெடுக்கப்படும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது.

இதேபோல் 50 மாநிலங்களிலும் வாக்காளர்கள் வாக்குப் போடும் தேர்தல் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட தேர்தலில்தான் மக்கள்நாயகக் கட்சி - சனநாயகக் கட்சி (Democratic Party)வேட்பாளராக பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளராக மெக்கெயினும் போட்டியிட்டனர். இதில் முதன்மையானது என்ன? குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சிக்கான வேட்பாளர் தேர்தல் அமெரிக்கா முழுவதிலும் நடைபெற்று முடிய 21 மாத காலம் ஆயிற்று. கட்சி வேட்பாளராக வரவிரும்புகிற இருவரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்; ஆங்காங்கு - ஒருவர் மட்டுமே கட்சி வேட்பாளராகத் தேர்வு பெறுகிறார்.

இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட ஒபாமாவும், மெக்கெயினும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றுகிறார்கள். தேர்தல்கூட்டத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடை தருகிறார்கள். 1789 முதல் 219 ஆண்டுகாலமாகக் குடியரசு ஆட்சி முறையை நடைமுறைப்படுத்திவரும் அமெரிக்காவில், இப்படிப்பட்ட மக்கள் நாயகக் கூறுகள் வளர்ந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால், ஒன்று. ஒரு மக்கள் நாயகக் குடியரசாக விளங்குகிற அமெரிக்கா - 32 கோடிக்களை மட்டுமே கொண்ட அமெரிக்கா, 1945 முதல் திட்டமிட்டு, உலகத்தையே ஆட்டிப் படைக்கிற நாடாகவும், நிதி ஆதிக்கம், தொழில் ஆதிக்கம், படை ஆதிக்கம் இவற்றைப் பெற்ற நாடாகவும் எப்படி வளர முடிந்தது?

அரசும் மத நிறுவனங்களும், மக்களுக்குக் கல்வி அறிவைத் தருவதைத் திறம்படச் செய்தனர். மக்கள்நாயக உணர்வு பெற்றிட-மானிட உரிமை உணர்வு முகிழ்த்திட இது அடிப்படையாக விளங்கியது. இரண்டாவது உலகப் போரின் முடிவில் அமைக்கப்பட்ட உலக நிறுவனங்களான- அய்க்கிய நாடுகள் அவை(U.N.O) பாதுகாப்பு அவை, பன்னாட்டு நிதியம் (I.M.F.)உலக வங்கி முதலான நிறுவனங்களில், அதிகச் செலவுப் பங்குகள் ஏற்றல், முதலீடு செய்தல் இவற்றின் வழியாக, ஆதிக்கம் செலுத்தும் போக்கை வளர்த்துத் தக்க வைத்துக்கொண்டது, அமெரிக்கா. இதில் அவர்களிடையே கட்சி வேறுபாடுகள் இல்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. 1990இல் சோவியத் சோசலிசக் குடியரசு கலைக்கப்பட எல்லாம் செய்தது, அமெரிக்கா; மேற்கு அய்ரோப்பிய நாடுகளும் இதில் பெரும்பங்கு ஏற்றன.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும், தொழில் நிறுவனங்களும் வளரும் நாடுகளில் ஊடுருவவும், கால் பரப்பவும், ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும் திட்டமிட்டு முயற்சித்தது அமெரிக்கா. இதில் அமெரிக்கரிடையே கட்சி அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. எரிபொருளில் முதன்மையானதாக உள்ள எண்ணெய் வளம் தேங்கிக் கிடக்கும் அரபு - இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்துத் தாக்கியும், தலையீடு செய்தும் இசுலாமியரின் வெறுப்பையும், வெறியையும் தேடிக்கொண்டது, அமெரிக்கா. வியட்நாம் போருக்குப் பிறகு வெடித்த இசுரேல் - பாலஸ்தீனப் போராட்டத்தில் தலையிட்டு, இஸ்ரேலிய யூதர்களின் ஆதிக்கம் அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும் கொடிகட்டிப் பறக்க எல்லாம் செய்தது, அமெரிக்கா.

1945 முதல் 60 ஆண்டுகளாக அணு ஆயுத உற்பத்தியை வளர்த்துக்கொண்டு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மற்ற நாடுகளின் பேரில் திணித்துவிட்டு, தம் நாட்டில் அக்கொள்கையை ஏற்க மறுப்பது அமெரிக்கா. அமெரிக்க ஆய்வு அதிகாரிகளே அறிக்கை தந்த பிறகும், அதைக் குப்பையில் எறிந்துவிட்டு, ஈராக்கின்பேரில் படை யெடுத்து இசுலாமியரிடையே உள்ள உள்பிரிவு வெறுப்பைத் தூண்டிவிட்டு, அந்நாட்டை அழித்து வருவது, அமெரிக்கா. மின் உற்பத்திக்கு உதவுவதற்காக என்று, 123 அணு ஒப்பந்தத்தை இந்தியாவின்மீது திணித்து - இந்தியா தன் இயற்கை வளங்களைக் கொண்டும், எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டும் முன்னேற முடியாத தன்மையில் ஒரு தடையைப் போட்டது அமெரிக்கா.

இவற்றுள் - ஈராக் படையெடுப்பு ஒன்றை எதிர்த்ததைத் தவிர - அமெரிக்காவில் வேறு எந்த ஒன்றையும் குடியரசுக் கட்சியோ, சனநாயகக் கட்சியோ எதிர்க்கவில்லை; எதிர்க்க மாட்டார்கள். இந்தச் சூழலில்தான் ஒரு கறுப்பரான பாரக் ஒபாமா, வெள்யைர் 85% பேர் உள்ள அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஒரு மாபெரும் திருப்பம் என்பது உண்மை.

மக்கள் நாயக உணர்வும் விழிப்பும் ததும்பும் அமெரிக்காவில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒபாமா திரட்டிய தேர்தல் நிதி 650 மில்லியன் - அதாவது 65 கோடி டாலர்; மெக்கெயின் திரட்டியது 35 கோடி டாலர். பணச் செலவும் பெரிய அளவில் இருந்தது. ஆப்பிரிக்கக் கறுப்பர் 4 கோடிப் பேரை அன்னியில், இந்தியர், ஆசியர் என்கிற கறுப்பர்களிலும் பெரும்பாலோர் ஒபாமாவுக்கே வாக்களித்தனர். சனநாயகக் கட்சியில் போட்டி வேட்பாளராக நின்று, வாய்ப்பை இழந்த ஹில்லாரி கிளிண்டனும், முன்னாள் அதிபர் கிளிண்டனும் - கட்சி நலன் ஒன்றையே கருதி, முழு ஆதரவையும் ஒபாமாவுக்கே அளித்தனர். இப்போது அவருடைய நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார், ஹில்லாரி கிளிண்டன். இத்தகைய உண்மையான கட்சிப் பற்று - அய்ரோப்பியர்களை, குறிப்பாக அமெரிக்கரை நிலையான ஆட்சி நடத்திடவும், அமெரிக்காவுக்கு உள்ள ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் மிகவும் பயன்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் உரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டி, 17 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை இப்போதே ஒபாமா உருவாக்கியுள்ளார். இதில் இந்திய அமெரிக்கர் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இப்போது உள்நாட்டில் அவரை எதிர்கொண்டுள்ள சிக்கல் என்ன?

தேர்தல் பணி தொடங்கப்பட்ட பிறகு, அமெரிக்கப் பெருநிதி நிறுவனங்கள் பெரும் இழப்புக்கு உள்ளாகி மூடப்பட்டன. லே மென்ஸ் நிதி நிறுவனம், ஏ.அய்.ஜி. நிதி நிறுவனம் இரண்டும் முதலில் திவால் ஆயின. அடுத்து 19 நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன. இது அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதால், ஜார்ஜ் புஷ் 70,000 கோடி டாலர் அரசு நிதியை நிதி நிறுவனங்களுக்கு அளித்து உதவ முன்வந்தார். C.I.T.I. வங்கி திவாலாகிவிட்டது. அதை மீட்கவும், தொடர்ந்து இயங்கச் செய்யவும் 30,600 கோடி டாலர் அரசு நிதியை புஷ் அரசு அளித்துள்ளது.

உலகில் இரண்டாவது செல்வநாடாக விளங்குகிற சப்பானில் நிதி நிறுவனங்கள் சரிந்தன. கடந்த ஏழாண்டுக் காலத்தில், இந்த நிலைமை முதன் முதலாக சப்பானுக்கு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளில் செருமனியிலும் மற்றும் 15 நாடுகளிலும் பொருளதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. இதிலிருந்து புரிவது என்ன? அமெரிக்க நாட்டில் ஏற்ட்ட பொருளாதாரச் சீரழிவிலிருந்து எந்த ஒரு நாடும் தப்ப முடியாது என்பதுதான். இத்தனை நாடுகளில் இரண்டே மாதங்களில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவின் காரணமாக, C.I.T.I. தொழில் நிறுவனம் 50,000 பேர்களை, காலவரையின்றி, வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டது. இந்தியாவில் இரண்டு இடங்களில் இயங்குகிற டன்லப் குழுமத்தில் 2000 பேர்களை ஆள்குறைப்புச் செய்யப்பட்டு விட்டது.

அயல்நாட்டில் செய்து பெறுவதற்கென கணினி மற்றும் செய்தித் தொடர்புத் துறைகளில் உள்ள வேலைகளை இந்தியா முதலான வெளிநாடுகளுக்கு அனுப்பி, குறைந்த கூலியில் செய்து பெறுகிற - வெளிநாட்டாரிடம் வேலைசெய்து பெறும் வேலையில் - இந்தியாவிலும் மற்றுமுள்ள நாடுகளிலும் பல இலட்சம் பேருக்கு வேலை போகப்போகிறது. அமெரிக்காவில் கல்விபெறச் சென்றுள்ள அயல்நாட்டு மாணவர்களுள் 15% பேர் இந்தியர்கள். இவர்களும் மற்ற அயல்நாட்டு மாணவர்களும் அங்கே வேலை செய்துகொண்டே படிக்கவோ, வங்கியில் கடன்பெற்றுப் படிக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. 2007 - 2008இல் 94,543 இந்திய WALL STREET, MAIN STREET என்று குறிப்பிடுகிறார்கள். “Wall Street” என்பது - பெருங்குழும நிறுவனங்கள், பெரிய வங்கிகள், பங்குச்சந்தை என்கிற இவற்றை நிறுவியுள்ள வர்க்கத்தினரைக் குறிப்பதாகும். “Main Street” என்பது அமெரிக்கப் பொதுமக்களை (Common Americans)க் குறிப்பதாகும். அமெரிக்க மக்களுள் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர். அவர்களுக்கு மிகப்பெரிய கேடு - வேலையின்மை, நலவாழ்வு வசதிக்குறைவு, வாழ்நாள் காப்பு வசதிக்குறைவு வரப்போகிறது.

அமெரிக்க நடுத்தர வகுப்பு மக்களுக்கு வரியைக் குறைக்கப் போவதாக சனநாயகக் கட்சி சொல்கிறது. அத்துடன் உலக நாடுகளினிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும், ஈராக், கியூபா போன்ற நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாகவும் ஒபாமா கூறுகிறார். ஆனால், குடியரசுக் கட்சியோ பெருங்குழுமங்களுக்கு வரியைக் குறைப்போம் என்கிறது. ஆனால் அமெரிக்க நடுத்தர மக்களுக்கும், செல்வந்தர் களுக்கும் இடையே இருந்த ஏற்றத்தாழ்வு - வேறுபாடு 1980இல் இருந்ததைவிட 2001இல் அதிகமாகிவிட்டது.

பெற்றோருள் - ஆணோ, பெண்ணோ தனித்து வாழும் குடும்பங்களின் (Single parent families) எண்ணிக்கை அமெரிக்காவில் பெருகி வருகிறது. அவர்களுக்குப் பொருளுதவி செய்யவேண்டிய சுமை ஏறுகிறது, சரி! இந்தியாவைப் பற்றி இப்போது என்ன நிலைமை? இப்போது இந்தியாவில் பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிட்டது. இந்தியாவில், நவம்பர் 24க்கு முந்திய ஒருவார காலத்தில், 6 பொதுத் துறை நிறுவனங்கள், மற்றும் 4 தனியார் நிறுவனங்களுக்கு, பங்குச் சந்தையில், ரூபா. 30,474கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் பரவும்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்கிற பேராலோ, பாக்கிஸ்தானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளவோ திட்டமிட்டு, ஒபாமா அரசு காஷ்மீர் சிக்கலில் தலையிட்டால், அது பெரிய கேடுகளையே விளைவிக்கும். காஷ்மீருக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனை அனுப்ப இருப்பதாக, ஒபாமா சொன்னதை, இந்தியா விரும்பவில்லை என உடனே கூறிவிட்டது.
123 அணு ஒப்பந்தம் இந்தியருக்கு வாழ்க்கைப் பயன்பாட்டை வளப் படுத்துவதற்காக (Civil purposes) - மின் வசதிப் பெருக்கத்துக்குத் தான் என்றால், அதில் ஒபாமாவின் நிலை புதிதாக இருக்க இயலாது. இதனால், இந்தியாவில் 2020இல் மின் உற்பத்தி பெருகும் என்றால், அதற்கு இந்தியா கொடுக்கப் போகும் பெருவிலையும், அடையப்போகும் அடிமைத்தனமும், இயற்கை - மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடும் கணக்கில் அடங்காது.

‘Out Sourcing’ என்கிற - இந்தியருக்கு வேலை தருவதைக் குறைக்காமல், அமெரிக்கருக்கு ஒபாமா புதிதாக வேலையை உருவாக்கமுடியாது. மேலும், “பயங்கரவாத ஒழிப்பு'' என்று எந்த நாட்டு அரசு கூறி வாதிட்டாலும் - அது இனவழித் தேசிய விடுதலை, மொழி வழித் தேசிய விடுதலை, மார்க்சிய - இலெனினியப் பாதையில் ஆயுதம் தாங்கிய புரட்சி அல்லது பாராளுமன்ற முறையிலான மாற்றம் இவற்றை அடித்து நொறுக்கி அழிப்பதற்கு ஆளும் வர்க்கங்களும், வல்லாதிக்க நாடுகளும் மேற்கொள்ளும் வன்கொடுமையின் மறுபெயரே ஆகும். அத்தகைய வன்கொடுமையைத் தமிழீழத் தமிழர் பேரில் சிங்கள வன்கொடுமை அரசு 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சிங்கள அரசின் பார்வையிலும், இந்திய அரசின் பார்வையிலும் ஈழ விடுதலைப் புலிகள் - உலகின் வலிமையான பயங்கரவாதிகள் என்றே கொண்டு, இருநாட்டு அரசுகளும் கைகோத்துக் கொண்டு தமிழீழத்தைச் சீரழிக்கின்றன. இது தொடர்பாக, ஒபாமாவோ, கிளிண்டனோ, ஹில்லாரி கிளிண்டனோ தலையிட இந்தியா அனுமதிக்காது.

உலக அளவில் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திருப்பி அழைப்பது, ஈரான் பேரில் அணு ஒப்பந்தத்தை முன்வைத்துப் படையெடுப்பது என்கிற இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒபாமா விரும்பினாலும்கூட, 2011க்குள் ஈராக்கி லிருந்து அமெரிக்கப் படைகளை முழுவதாகத் திருப்பி அழைக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தம் ஏற்கெனவே இருக்கிறது. “அய்ரோப்பியர்கள் என்றால் பேராசைக்காரர்கள்'' (greedy) என்பது, கி.பி.1500க்குப் பிறகு தெற்கு ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் அவர்களால் நிலைநாட்டப்பட்ட ஓர் உண்மை. அமெரிக்க அதிபர்கள் எல்லோரும் ஒரே தன்மையினர் ஆகத்தான் இருப்பர். பாரக் ஒபாமாவும் அப்படியே இருப்பார். “பாரக் ஒபாமா'' என்பது ஸ்வாகிலி (Swahili) மொழியில் “கடவுளால் ஆசி வழங்கப்பட்டவர்'' என்ற பொருள் கொண்ட பெயராகும்.

கடவுள் ஆசி பெற்ற எல்லோரும் - எல்லா மதத்தினரும் எப்படி ஒரு மதத்தாரை வேறுபடுத்தி நடந்து கொள்கிறார்களோ, அப்படித்தான், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நடந்துகொள்வார். அவருடைய தந்தையான பாரக் உசைன் ஒபாமா - (சீனியர்) வயது ஏற ஏற ஒரு நாத்திகராக மாறினார். இசுலாமியருக்குப் பிறந்து, இசுலாமியரால் வளர்க்கப்பட்ட பாரக் ஒபாமா (ஜூனியர்) 1988இல் கிறித்துவராக மதம் மாறினார். "ஒபாமா ஒரு இசுலாமியர்' என்று கிளப்பப்பட்ட வதந்தியை, அதனால் - தேர்தல் நேரத்தில் ஒழிக்க முடிந்தது.

அமெரிக்க அதிபர்கள் எல்லோரும் ஒரே தன்மையராகவே இருப்பர். அமெரிக்க ஆதிக்கம் 1945க்குப் பிறகு வளர்ந்ததற்கும், 1990க்குப் பிறகு உலக ஒற்றை ஆதிக்கத்தின் மய்யமாக அமெரிக்க நாடு உருவாகியதற்கும் “நான் ஓர் அமெரிக்கன்'' என்கிற ஆழமான உணர்வு ஒவ்வொரு அமெரிக்கனையும் ஆட்கொண்டிருப்பது பெரிய காரணம் ஆகும். இதிலிருந்து வேறுபட்டவராக ஒபாமா இருக்கமுடியாது. இது அமெரிக்காவுக்கு நல்லது; ஆனால் உலக நாடுகளுக்குக் கேடானது.
1.12.2008 - வே. ஆனைமுத்து

புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்

hilari "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்' என அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருமதி. ஹிலாரி கிளிண்டன் தெரிவித்து இருக்கிறார். “பயங்கரவாதம் என்பது சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களில் சிலருக்குத் தத்துவ ரீதியாகவும் மற்றும் சிலருக்குத் தங்கள் நாட்டு ரீதியாகவும் நோக்கங்கள் உண்டு. தனிப்பட்ட காரணங்களுக்காக வேறு சிலர் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைவரையும் ஒரேமாதிரியாகக் கருதமுடியாது. அவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, இலங்கையில் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையோ - அல்லது ஸ்பெயின் நாட்டில் போராடிக் கொண்டு இருக்கும் பாஸ்க் போராளிகளையோ பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. அவ்வாறு செய்வது தவறாகிவிடும்'' - என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டனின் துணைவியாவார். அவர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர் என்று குறிப்பிட்டு இருப்பது அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- (செய்தி: ‘தென் ஆசியச் செய்தி', நவம்பர் 16-30, 2007)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com