Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
சிறுகதை

அரூபத்தொட்டி
வேலாயுதம் பொன்னுச்சாமி

காளிச்சாமியிடம் ராத்திரியே சொல்லி இருந்தார் கருப்பையா. காளிச்சாமியும் வர ஒப்புக் கொண்டிருந்தான். விடிந்து வெகுநேரமாகியும் படுத்துக் கிடந்தான். ராத்திரி குடித்த மப்புக் குறையாமல் குப்பம்மாள் எழுப்பி எழுப்பிப் பார்த்தாள். எழுந்திரிக்கும் குறிப்பில்லாமல் புரண்டு முணங்கிச் சொணங்கினான் காளிச்சாமி.

குறக்குடி கிழங்கள் கூடைமுடைந்து கொண்டிருந்தன. பூலாமாறும், ஓடங் கொடியும் சிதறிக்கிடக்க சங்கங்கம்புகள் மட்டும் சரியான நீளத்தில் தரித்து கிடந்தன. பேச்சி தனித்து கடவாபெட்டி வேய்ந்து கொண்டிருந்தாள் பனை நாரால்.

‘புல்லுமாறு, ஈஞ்சமாறு, ஈக்கிமாறு, சில்லாட்டமாறு, பரத்தி வைத்திருந்த பெறுக்குமாறுகளை கூவி விற்றுக் கொண்டிருந்தாள் முப்பிடாதி. நினைவு வர மறு கூவலில் கட்டுக்கொடி மாறையும் சேர்த்துக் கொண்டாள்.

காளிச்சாமியை “குடிகாளி” என்று தான் தெரு அழைத்தது. காளிச்சாமி என்று கூப்பிட்டால், திரும்பிப் பார்க்காத “குடிகாளி” என்று கூப்பிட்டவுடன் திரும்பிப் பார்க்கும் கெத்தில் காளிச்சாமி இருந்தான். காளிச்சாமி மீன் தெல்லி கட்டுவதில் கில்லாடி. இப்பொழுதைக்கு குறக்குடியில் மீன்தெல்லி கட்டத் தெரிந்தது அவன் மட்டுமே.

கருப்பையா வீட்டுச் சந்தில் கிடத்தி வைத்திருந்த ஏணி, வாளி, கல்மூங்கில் கம்பு, சுத்தியல் சங்கதிகளை ரோட்டடியில் இருந்த மர நிழலில் எடுத்து வைத்துக் கொண்டே யாரை அழைத்துச் செல்ல யோசனையில் காளிச் சாமியை திட்டித் தீர்த்தார்.

வடக்கில் இருந்து தெரு நுழையும் பிள்ளையார் தலை தெரிந்தது. கழுத்து உடைந்த பிளாஸ்டிக் குடங்களில் நிரம்பிய ஹோட்டல் மிச்சம் மிச்சாடி அலம்பிய சைக்கிளை பன்றிகளுக்காக உருட்டி வந்தான். ஊருக்குள் பீக்காடு குறைந்துவிட்டது. பன்றிகளுக்கு முந்தி மாதிரி தீனி கிடைக்கவில்லை. திரிஞ்சு அலையும் பன்றிகளை நகராட்சியும் சுட்டுவிட, பன்றிகளை கொட்டிலில் அடைத்து வளர்க்க வேண்டிய உயிராகிவிட்டது. கறிக்கு மட்டு மான பிராணியாக பன்றிகள் அருகிப்போனது. சாப்பிட்ட ருசி யைவிட முடியாதவர்களாலும், மூலத்துக்கு ஆப்ரேசன் செய்ய பயந்து போனவர்களாலும் பன்றிக்கறி வியாபாரம் நடந்தது. சனி ஞாயிற்று கிழமைகளில் மட்டும் கறி வியாபாரம் செய்து வந்தான் பிள்ளையார்.

தெரு நுழையும் பிள்ளை யாரை மரத்தடியில் நின்றிருந்த கருப்பையா “வேலைக்கு வாரை யா?” என்று சப்தம் கொடுத்து அழைத்தார். பன்றிகளுக்குக் கழணித் தண்ணீ ஊத்திவிட்டு வந்துவிடுவதாக சொல்லிச் சென்றான் பிள்ளை யார்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த குறக்குடி, பஸ் ஸ்டாண்டு, பஜார் என்று ஊர் பெருக்க மைய மாகிவிட்டது. பிரதானச் சாலை யில் அமைந்துவிட்ட குறக் குடிசை களை முதலாளிகள் குடிக்கும், நல்ல சாப்பாட்டுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கொடுத்து கணக்கை ஏற்றி வஞ் சனையாக குறைந்த விலையில் வாங்கிப் போட குறக்குடி மறைந்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஜவுளிக் கடை, லாட்ஜ்களாகிவிட்டது. குறக்குடியில் இருந்து வெளிவர சிறு சந்து மட்டும் வழிவிட்டது.

“இந்தா வந்துருதேண்ணு சொல்லிவிட்டுப் போன முட்டா பயலுக்கு இவ்வளவு நேரமா!” என்று சலித்துபோனார் கருப் பையா.

மரத்தடியில் அலங்கோல நிலையில் சாய்ந்தபடி பீடி புகைத்துக் கொண்டு பிள்ளை யார் வருவதாக சொல்லிச் சென்றதை கவனித்தும் கவனிக் காதவாறு படுத்திருந்தான் ஒரு வழிப் போக்கன். கருப்பையா வின் சலிப்பைக் கேட்டதும் இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணி முடித்த நிலையில் சட்டென ஏணி, வாளிகளை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“ஏலே! ஏலே! கிறுக்கு முட்டாப் பயலே...” என்று பின் தொடர்ந்து தளவாடச் சாமான் களை பிடுங் கிய கருப்பையா கெட்ட வார்த்தை களை வாய் கொட்ட ஆங்காரம் தீர முடித் தார்.

“உங்களுக்கு ஒத்தாசையா வேலைக்கு வர்ரேன் சாமி.”

வழிப்போக்கன் தன்னை ‘சாமி’ பட்டம் சொல்லி அழைத்த நொடியில் நிலை இழந்து இயல்பு திரும்ப சற்று நேரம் பிடித்தது கருப்பையாவிற்கு. மனதுள் கெட்டவார்த்தைகளால் திட்டி விட்டமே என்ற பரிவும் நம்மளை விட கீழ்சாதியா இருப்பானோ? நம்மளை விட கீழ்ச்சாதி ஏது? என்ற யோசனையை தாண்டி

“நான் செய்யிற வேலைய செய்வியா? சாப்பாடு போட்டு ரூபா தாரேன்” கேள்வியை முன் வைத்தார் கருப்பையா. தலையை ஆட்டி ஏணியை தூக்கி நடந் தான் வழிப்போக்கன். என்.ஜி.ஓ. காலனி நோக்கி முன் நடந்தார் கருப்பையா.

பன்னீர் மரமும் பவள மல்லி யும் கேட்டை ஒட்டி இரு புறமும் நிற்கும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார் கருப்பையா. நேரம் தாமதித்து நிலைக்கதவு திறக்க மூர்த்தி வெளியே வந்தான்.

“சொன்னது ஒரு நேரம், வர்றது ஒரு நேரம், ஒஞ்சோலியே எப்பவும் இப்பிடித்தாண்டா” என்ற அதட்டலுடன் கேட்டை திறந்துவிட்டான். அருகம்புல் படர்ந்த பசுந்தரையாய் முற்றம். எரிக்காத வர்ணம்பூசிய சுவரும் ஜன்னல்களும் தெற்கு பார்த்த வீட்டின் பின் மேல்புறத்திற்கு அழைத்து சென்றான் மூர்த்தி.

“எவ்வளவு கேக்க?”

“தொட்டிய பாத்துட்டு சொல்றேன் சாமி”

“நீ கணக்கு பாத்துச் சொல்லி நான் கூலி கொடுக்க! வெளங் குமே? காண்ட்ராக்டா ஐநூறு ரூவா வாங்கிக்கோ. சுத்தமா முடிச்சு கொடுத்துரு”

“கட்டுப்படியாகாதுயா. இரண்டு பேரு வந்துருக்கோம்.”

“மோட்டார் வச்சு தொட்டி அள்ளுறவன அமத்தத் தெரியா மலா? அறிஞ்ச பயலுக்கு வேல கொடுப்போனுதான் உன்ன கூப்புட்டேன்”

“அவங்கள கூப்பிட்டிங்கனா ஆயிரத்து ஐந்நூறுக்கு கொறையா வரமாட்டாங்க சாமி. சாமிட்ட தர்க்கம் பண்ண வரல. நீங்க பாத்து மனசு வைங்க. சீமெண்ணையும் குதிரலத்தியும் வாங்கி வச்சிட்டிகளா சாமி.”

“குதிரலத்தி கிடைக்கல, சிவ காசி போய் வாங்கணும். எவன் அலைய? கெரசின் கேன்ல மூலையில இருக்கு எடுத்துக்கோ” வீட்டுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான் மூர்த்தி.

இரண்டுக்கு மூன்றடி சைஸில் மூன்று சிலாப் போட்டு மூடி இருந்த செப்டிங் டேங்கை பார்வை யால் அளந்தார் கருப்பையா. ம்ம் என்ற பெரு மூச்சுடன் சுத்தியலை யும் உளியையும் கொடுத்து சிமெண்ட் பூசிய விளிம்பை உடைக்கச் சொன்னார் வழிப் போக்கனிடம். மண்ணெண்ணை கேனை தூக்கிப் பார்த்து கையில் எடுத்துக் கொண்டார்.

“ஏலே சரக்கு போடுவியா?” நிதானித்த யோசனைக்குப்பின் வாய் திறக்காமல் ‘ம்’ என்றான்.

“சாப்பிட்டியா?” இல்லை என்று தலையாட்டினான்.

“சீமெண்ணைய ஊத்தி மண்டி மகுலிய கலக்குனா வீச்சம் கம்மியாத்தான் அடிக்கும். இல் லாட்டி ரொம்பத்தான் தூக்கும். பொறுத்துக்குவோம். வீட்டுக் காரரு கறார் பேர்வழி. டீ காபிக்குகூட துட்டு வாங்க முடி யாது. கூலியும் மனசார தர மாட் டாரு. சீமெண்ணைய வித் துட்டு மேற்படி எல்லாம் வாங்கிட்டு வாரேன். ஐயா வந்து கேட்டா காபி குடிக்க போயிருக்கேணு சொல்லு”

கேட்டை ஓசைவராமல் திறந்து வெளி நடந்தார் கருப்பையா.

தனக்குத்தானே உள்முகமாக பேசிக் கொண்டே சுத்தியலை அடிக்க ஆரம்பித்தான். இதை யும் கடந்துவிட வேண்டும், என்ற திடப்பிரக்ஞையுடன் சுத்தியல் சுழன்றது. எதிர்க்கேள்வி கேட்ட தற்காக மடத்தைவிட்டு விரட்டி வெளியேற்றிய கபால ஆனந்தர் நினைவு வந்தது.

ஏதேதோ நினைவுகள் தெறித்து தெறித்து தொடர்ந்த முக பாவனை யில் மகிழ்வு தளுதளுத்தது. ஏறு வெயிலின் ஸ்பரிச உணர்வற்று மனம் குவிந்த நிலையில் உளியின் மேல் சுத்தியலின் ஒவ்வொரு அடியும் லயமாய் விழுந்தது. சிலாப்பு விளிம்பின் சிமெண்ட் பூச்சை விலக்கி பாவிய கற்களை தூக்க ஏதுவாக்கிய நிலையில் வீச்சம் கசிய ஆரம்பிக்க கருப்பை யாவும் வந்து சேர்ந்தார்.

வீட்டுக்குள் இருந்து யாரும் பார்த்துவிட முடியாத கோணத் தில் சுவரை ஒட்டி குத்துகாலிட்டு அமர்ந்து கொண்டார் கருப் பையா. டிஸ்போஸ்பிள் டம்பள ரில் கருரத்த ரம் சரக்கை முக் கால் வாசி நிரப்பி தண்ணீர் பாக்கெட்டில் இருந்து சிறிதள வான தண்ணீரையும் கலந்து குடித்தார். அதே பங்குக்கு வழிப் போக்கனுக்கும் ஊற்றிக் கொடுத் தார். இரண்டு சுற்றில் பாட்டிலை காலியாக்கி பீடியை பற்ற வைத் தார். வாங்கி வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை வழிப்போக்கனி டம் கொடுத்தார். அன்றைய தினசரியத்தை எண்ணி எண்ணி அவதானித்தபடி வழிப்போக் கன் சாப்பிட்டு முடித்தான்.

போதையின் நமைச்சலில் வேலை தொடர்ந்தது. வழிப் போக்கன் துண்டால் மூக்கை மூச்சுவிடத்தக்க அளவுக்கு கட்டிக் கொண்டான்.

“ஏலே.. நீ கீ(ழ்) சாதிப்பய தானே! பின்ன மூக்க முடிஞ்சு கிட்டா?”

வழிப்போக்கன் சிரிப்பு பதிலா கியது.

சிலாப்புக் கல்லை புரட்ட செப்டிக் டேங்கில் அழுந்தி உறைந்த வாயுவின் வீச்சம் காற் றில் பற்றிக் கொண்டது. நிரம்பி மீறி நுரைத்து பிதுங்கியது. பீக் குவியல். கல்மூங்கில் கம்பால் கலக்க கலக்க அடிமண்டி வீச்சம் வெயிலை எரித்தது. மூச்சை விரிய விடாமல் தடுத்து உயிர் பச்சை யத்தை கருக்கியது. பீ வீச்சம். நுரையீரல் உடன் துருப்பிடித்து அறுந்து விடும் கெட்ட வீச்சம். நல்ல காற்றுக்கு நெஞ்சுச் சுவலை ஏங்கி துடிதுடிக்க விடும் பீ வீச்சம். வாளியில் கருப்பையா அள்ளித் தர தள்ளி இருந்த ஓடையில் கொட்டி வந்த வழிப்போக்க னின் உடல் நாடிகளில் நடுக்கம். வைராக்கியத்தை அசைத்துப் புரட்டியது பீ வீச்சம்.

வெய்யில் காந்தச் செய்யும் ஆவியாகி சுட்டது. அரும்பென பூத்த வியர்வை கருப்பையாவின் திரேகத்தையும் கரு மொழுகாய் மினுக்கியது. ஏணியை தொட்டி யுள் இறக்கி பீயை கோதிக் கொடுத்த கருப்பையா இளைப் பாற, மேலே ஏறி வந்து பீடியை பற்றவைத்தார். வழிப்போக்க னுக்கு பீடிக் கட்டை நீட்ட, வேண்டாம் என்று தலை அசைத் தான்.

“ஏலே ஏதோ ஊர்ல வீட்டுக்கு வீடு ஒரு சட்டி வச்சிருப்பாகளாம். மழை பெய்யும் போது வீட்டுக்கு வெளியில் போயி பேள முடி யாது. அதுக்காக. சட்டியில் காவாசிக்கு தண்ணீய ஊத்தி வெளிக்கு வரும்போது சட்டில பேண்டுட்டு மழை நின்ன பெறகு வெளில போயி கொட்டிருவாக ளாம். இங்க நம்ம ஊர்ல பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன் னாடி பணக்காரக வீட்டுகள்ல மட்டும் எடுப்பு கக்கூஸ் இருக்கும். பேள்ற அடுப்புக்குள்ள வாளி இருக்கும். நம்ம மக்க அதுலயும் ஒழுங்கா பேள மாட்டாக. வாளிக் குள்ள விடாமா, வாளிலச் சுத்தி பேண்டு வச்சுருப்பாக. நாம கொண்டு போற வாளிய பீய தட்டிட்டு அவுக வாளிய அலசி அடுப்பையும் அலசி, சாம்பல தூவிட்டு வருவோம். மாசத்துக்கு ஐஞ்சோ பத்தோ தருவாக. அந்த பீகூட இப்பிடி நாறாதுலே. இது கழுத கெட்டு கெடல? ஆளையே கெறக்குது. “சாமி! வெஷத்த குடிச்ச ஆளுக்கு பீய கலக்கி கொடுத்து வாந்தி எடுக்க வப்பா களாம்ல! மூத்திரத்தை மருந்தா குடிக்குற ஆளுக இருக்காக, தெரியுமாசாமி! மூத்திரத்தை அவுங்க சிவனார் அமிர்தம்னு சொல்றாங்க” அருவருப்பும் புரட்டலுமான பதைபதைப்பு ஆழ் நீரோட்டமாய் பிரவகித்தது வழிப்போக்கனிடம். “உடல்ல தடிப்பு தடிப்பா பேமுஷ்ட வந்தா மூத்தரத்தையும் சாம்பலையும் கொழப்பி பூசுவாகள்ல.”

“மலத்துக்கு அருவருப்பு படாத நீங்க பொம்பள தீட்டுக்கு அரு வருப்பு படுறீக சாமி, ஒரு நாட்டுல ஆதிவாசிக உடம்புக்கு முடியாட்டி போனா மாதவிடாய் இரத்தத்த உடல்ல பூசி வைத்தியம் செய்வா களாம் சரியாய்யுறுமாம்”

“ஏலே, ஏதோ சாமியாரு பீயில செம்புத்துட்ட போட்டு பாத்து பீ புளிச்ச ருசி இருக்குமுணு சொன் னாராம்ல!”

“ஆமா.. சொல்லி இருக்காரு சாமி.”

‘சாமி’, ‘சாமி’ என்று வழிப் போக்கன் சொல்லச் சொல்ல போதையுடன் மறுபோதை ஏற “ஏலேய்” என்று அழுத்தமாக வழிப்போக்கனை அழைத்தார். வார்த்தையை பிரயோகிப்பது நிறைவேறாமையை உணர்வற்று நிரப்ப மீண்டும் மீண்டும் உச்சரித் தார்.

தொட்டியை எட்டிப்பார்த்த கருப்பையா “ஏலே இன்னும் காத்தொட்டிதாம்ளே அள்ளி வீசிறுவோம்” என்றவாறு தொட் டிக்குள் இறங்கி வாளியில் கோதிக் கொடுத்தார். வழிப்போக் கன் வாளியை வாங்கி ஓடையில் ஊற்றச் சென்றான். இனியும் அருவருப்பையும் பீ யின் வீச்சத் தையும் தாங்க முடியாத வரை வெல்லையை மனம் தாண்டி விட்டிருந்தது. பீ வீச்ச அவஸ்தை யில், நான் அறுபட வேண்டும் என்ற திடப் பிரக்ஞையின் வலு வான சங்கல்பம் சிதறி துகளாய் கரைந்து போனது.

உக்கிர வெய்யிலில் மாந்தம் பீடித்து கிடந்தது மதியம். கானல் நிரம்பிய வெளி திரவத்தில் மிதந்தது.

வெகு நேர நடைக்கு பின் தென்பட்ட இச்சி மர நிழலில்

சோர்ந்து அமர்ந்தான். கருப்பையாவின் சொரூபத்தை விழியுள் வரவழைத்து முழுமை யாக உதவாமல் வந்ததற்கு மன்னிக்க வேண்டினான். மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டான். கடந்து வந்த வழி யில் ஓடிக் கொண்டிருந்த பம்புச் செட்டில் குளித்து உயிரை வதை வதைத்த அருவெருப்பை போக்கி இருந்தான். பீயும், வீச்சமும் நுரையீரல் மையமிட்டு இரத்த நாளங்களைச் சுற்றி சுற்றி வந்தது. நாசி விழிகளுள் பீ ரூப அரூபமாக அப்பி இருப்பதாய் பிரமை கொண்டான்.

மும்மலம் நீக்கி சந்நியாசியாக வாழ்ந்துவிட வருடங்களாய் விடாப்பிடியாய் தொடர்ந்து செய்த சித்த யோகப் பயிற்சிகள் புகையெனக் காற்றில் கரைந்து விட்டது இப்போது. யோகப் பயிற்சிக்குத் தடையாக இருக்கும் உறக்கம், காமம், ருசி, சப்தம், மான அவனமானத் தடைகளை மீறி மீறி பரிணமித்து வந்திருந்தான் கருப்பையாவுடன் பீ அள்ளும் வேலையில் வீச்சத்தின் நுகர்ச்சி யை மீற முயற்சித்து தோல்வி அடைந்தவனாகிப் போனன். மூலக் கூறின் அமிலச் சுழல் என மனம் கருப்பையாவையும் மலத் தையும் சுற்றி வந்தது.

“நறுமணம் - வீச்சம் இருமை களுள் ஊடாடும் போது எப்படி மனம் ஓர்மையாக முடியும். மணத் தையும் வீச்சத்தையும் ஒன்றாக, பிரிவற்று அனுபவிக்க பழக வேண்டும். இருமை தவிர்த்து ஓர்மையாக அனுபவித்தால்தான் வீச்சத் தடையை மீற முடியும். இதுவரை இருமையை நிராகரித்து வந்த தன்னால் நுகற்சியின் இருமையை நிராகரிக்க முடியா மல் ஆக்கியது எது? கருப்பை யாவால் வீச்சத்தை எப்படி தாங்கிக் கொள்ள முடி கிறது? வீச்சம் கடந்த மனோநிலை யைப் பெற்று விட்டாரா? வீச்சத்தில் இருக்கும்போது வீச்சத்தையும் வாசனையில் இருக்கும் போது வாசனையையும் ஏற்றுக் கொள் ளும் பக்குவமா? பிறப்பும், பிறப் பினால் ஏற்பட்டு விட்ட வாழ்க்கை நிர்பந்தமா? எடுப்புக் கக்கூஸில் வேலை செய்த போது தான் பட்ட அவஸ்தை நினைவில் நிலைத்திருக்க... இன்று அள்ளிய பீயின் வீச்சத்தை எப்படி கருப்பை யாவால் மறக்க முடியும்? சாப் பிடும் பொழுது பீக்கிடங்கின் வீச்சம் கருப்பையாவின் ஞாபகத் தில் வந்துநிற்காதா? மகாத்மா காந்தி தன் ஆசிரமக் கழிப்பறை யைத் தானே சுத்தம் செய்திருக் கிறார். தீபத் திருநாள் உரையில், “மலம் அள்ளுவதை ஆன்மீகச் செயலாகச் செய்யச்சொன்ன” கபாலஆனந்தர் தன் ஆசிரமத்தில் அவ்வாறு செய்திருக்கிறாரா? எது எது மூக்கிற்கு வாசனையாக நிற்கிறதோ அதுவதுவை ஆத்மா வாக கருத வேண்டும் என்கிறது யோகம். யோகம், ஆன்மீகத்தைப் பேசி காவி கட்டித்திரியும் பீடா திபதிகளும் சன்னியாசிகளும் பீயை ஆத்மசொரூபமாக ஏற்றுக் கொண்டு யோகத் தடையை கடந்தவர்களா? கருப்பையா தான் ‘நான்’ அழிந்து நாற்றம் கடந்தவர். எவரெவர் மலத்தை யையே அள்ளிச் சுத்தம் செய்து ‘நான்’ அழிந்து நாற்றம் கடந்தவர். மூன்று நாட்களுக்குத் தேச மலம் எல்லாம் அள்ளாமல் போடப் பட்டால் என்ன நடக்கும்? ஆத்ம சோதனையில் மும்மலம் அறுபட பீ அள்ளுவார்களா? நிச்சயம் என்னால் முடியாது. என்னால் முடியவில்லை.”

தன்னுள்ளான தர்க்க வெம்மையின் கொதிப்பில் மறந்த தன் வீடு நோக்கி நடக்கலானான் சஞ்சாரம் செய்வதை நிறுத்தி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com