Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
அஞ்சலி : சுர்ஜித் எனும் பாஞ்சால சிங்கம்!

அது 1932ஆம் ஆண்டு. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் மீது 16 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் மிகத் தைரியமாக ஏறுகிறான்; அதன் உச்சியிலே இந்தியாவின் மூவர்ணக் கொடியினை ஏற்றுகிறான். அந்த இளைஞனின் மேனி சிலிர்க்கிறது. உள்ளமெல்லாம் பெருமிதம் பெருக்கெடுக்கிறது. பிரிட்டிஷாரின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடந்த பாரத அன்னையின் விடுதலையை நெஞ்சிலேந்தி இயங்கிக்கொண்டிருந்த அந்த இளைஞனை வெள்ளை அரசின் போலீஸ் கைது செய்கிறது. சிறுவர்களை அடைக்கும் சிறைக் கொட்டடியாம் சீர்திருத்தப்பள்ளியில் அவனை அடைக்கிறது.

தேசபக்திமிக்க அந்த இளம் சிங்கம்தான் பின்னாளில் மார்க்சியப் பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவராக நம் சமகால வரலாற்றில் பல அற்புதக் கடமைகளை சீருடன் செய்து, மறைந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆவார்.

தமது 93 ஆவது வயதில் மறைந்த சுர்ஜித்தின் அரசியல் வாழ்வென்பது 75 ஆண்டுகளைக் கடந்தது.

தமது 17வது வயதிலேயே (1934ல்) கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட சுர்ஜித் 1935 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகச் செயல்பட்டார். 1938லேயே பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கச் செயலாளரானார். உத்தரப்பிரதேசத்தின் சரண்பூரியிலிருந்து ‘சின்காரி’ எனும் பெயரில் பத்திரிகையொன்றைத் துவக்கினார். ‘சின்காரி’ என்றால் தீப்பொறி என்று பொருள்.

சுர்ஜித் அனுபவித்த சிறைக் கொடுமைகளைச் சொல்லிமாளாது. தேசவிடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றமாக மட்டுமல்லாமல், பொருளாதார, சமூக விடுதலையாகவும் அது மலர வேண்டுமென்ற கம்யூனிஸ்ட் லட்சியத்தை இதயத்தில் சுமந்து கொண்டு, அதற்காகத் தம்மையே அர்ப்பணித்திருந்த சுர்ஜித்துக்கு சிறைக் கொடுமைகள் பரிசாகக் கிடைத்தபோது அதைத் தம் தோள்வலிமையாலும், உள்ள உறுதியாலும் கம்பீரமாக ஏற்றார்.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 ஆண்டுகள் சிறைவாசம். 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.

நாட்டு மக்களுக்காகப் போராடியமைக்காக சுர்ஜித் பெற்ற வெகுமதிகள் இவை!

பிரிட்டிஷ் இந்தியாவில் தேச விடுதலைக்காகவும், விடுதலை பெற்ற இந்தியாவில் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றைப் பேணி, வளர்த்துக் காக்கும் பொருட்டும் சுர்ஜித் ஆற்றிய பங்களிப்பு தனித்துவமானது. மிகத் துல்லியமாக அடையாளம் காணக் கிடைப்பது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன் றாவது அகில இந்திய மாநாடு 1954ல் நடை பெற்றது. அதில் பங்கேற்ற சுர்ஜித் கட்சியின் மத்தியக்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் கருத்து மோதல் ஏற்பட்டு 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உருவாகும் வரையில் ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்புகளிலேயே சுர்ஜித் இருந்தார்.

கட்சியில் ஏற்பட்ட திருத்தல்வாதத்திற்கெதிரான மகத்தான தத்துவப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுர்ஜித்தும் ஒருவர். தனது உறுதிமிக்கப் போராட்டத்தால் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் சுர்ஜித்தும் பங்காற்றினார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் 1959ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த விவசாயிகள் இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர், தலைவர் பொறுப்புகளை நீண்டகாலம் சுர்ஜித் நிறைவேற்றினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு 1964ல் நடை பெற்றது. அதில் கட்சியின் மத்தியக்குழுவுக்கும், அரசியல் தலைமைக்குழுவுக்கும் சுர்ஜித் தேர்வு செய்யப்பட்டார். அன்று தொடங்கி, கட்சியின் 19வது மாநாடு வரையிலும் அவர் அந்தப் பொறுப்புகளைத் திறம்பட வகித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி உதயமானது தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை உத்திகளை உருவாக்குவதில் சுர்ஜித்தின் பங்களிப்பென்பது குறிப்பிடத்தக்கதாக இருந்து வந்தது.

கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல்வடிவம் அளிக்கும் மிகக்கடும் பணியில் சுர்ஜித் ஒரு உள்ளொளி மிக்கத் தலைவராக விளங்கினார் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் மதவெறிக்கு எதிரான யுத்தத்தின் அதி முக்கியம் வாய்ந்த தளபதி சுர்ஜித் ஆவார். இந்திய வரலாற்றில் 1989, 1996 மற்றும் 2004 ஆகியன மதவெறி சக்திகளின் கைகளில் மத்திய ஆட்சி வந்துவிடாமல் தடுக்கப்பட்ட மகத்தான முக்கியத்துவம் பெற்ற ஆண்டுகளாகும். மதவெறி அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்திடும் வகையிலான அரசியல் அணிசேர்க்கைக்கு எப்போதும் ஒரு அழுத்தம் கொடுத்துச் செயல்பட்டு வந்த சுர்ஜித்தையே இதன் பெருமைகள் சாரும்.

இந்திய உழைப்பாளி மக்களின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலம் சார்ந்த மக்கள் ஒற்றுமைக்கான கொள்கை உருவாக்கத்தில் அக்கறை மிகக் கொண்டிருந்த சுர்ஜித், இந்த மண்ணில் சீர் குலைவுச் சக்திகளை முறியடிப்பதிலும் எப்போதும் விழிப்புடனிருந்து செயல்பட்டவர்.

பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதம் தலைதூக்கியபோது அதற்கெதிராக மன உறுதியுடன் கட்சியின் சார்பில் நிலையெடுத்த அவரின் தீரமிக்க நடவடிக்கைகள், 1950களிலிருந்தே காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர் முன் வைத்த ஆலோசனைகள், 1980களில் ஏற்பட்ட அஸ்ஸாம் உடன்பாட்டில் அவராற்றிய பங்கு பணி போன்றவை அவரின் அப்பழுக்கற்ற, அக்கறைப்பூர்வமான தேசபக்தியை உலகுக்கு உணர்த்தும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பில் அவரது முனைப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வியட்நாம், பாலஸ்தீனம் மற்றும் கியூபா போன்ற ஏகாதிபத்திய சதிவலை பின்னப்பட்ட தேசங்களின் நலனுக்காக சுர்ஜித் குரல் கொடுத்தார்.

மாபெரும் சோவியத் யூனியனைத் தவறான பாதையில் கொண்டு சென்று படுகுழியில் விழச்செய்த அதன் அன்றைய அதிபர் மிகையில் கோர்ப்பச்சேவிடமே, அதன் வீழ்ச்சிக்குப் பலகாலம் முன்னமே, வரப்போகும் கேட்டினை தீர்க்க தரிசனத்தோடு உணர்ந்து, நேருக்கு நேராக எச்சரித்த துணிவும், நேர்மையும் சுர்ஜித்தை நம் காலத்தின் மகத்தான மனிதர்களுள் முக்கியமானவராக உயரத்தில் உயர்த்துகின்றன. 1990களில் சோவியத் யூனியன் அவர் முன்பே கணித்தது போலச் சிதைந்து போனபோது அதன் அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு, சரியான நிலைபாட்டினை எடுப்பதற்குக் கட்சிக்கு அவர் வழி காட்டினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக கட்சியை மார்க்சிய தத்துவ வெளிச்சத்தில், மிகத் திறம்பட சுர்ஜித் நடத்திச் சென்றவிதம் பற்றியொழுகத்தக்கது.

இந்தியாவின் பன்முகத்தன்மையில் அதிகப்பிரியம் கொண்டிருந்த தலைவர் அவர். அவரின் இந்தப் பண்பானது இடதுசாரி - ஜனநாயக அணிசேர்க்கைகளை உருவாக்குவதில் அவருக்குத் துணைநின்றது எனலாம்.

அதிகம் கல்வி பயில வாய்ப்புகள் பெறாத சுர்ஜித், சுயகல்வியின் மூலமாக நிறையக் கற்றார். தத்துவக் கல்வியுடன், ஆங்கிலம் போன்ற மொழிப்புலமையும் தன் சொந்த விடாமுயற்சியின் பயனாய்க் கற்றார். எழுதுவதையும், மக்களைச் சந்தித்து உரையாடுவதையும் அவர் இறுதி வரையில் விடவேயில்லை. கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, நிலச்சீர்திருத்தம், பஞ்சாபில் நடப்பது என்ன? போன்ற நூல்களும், இன்னும் பல நூல்களும், ஏராளமான கட்டுகரைகளும் எழுதியுள்ளார்.

பிஜேபிக்கு எதிரான மாற்று அணியை உருவாக்குவதில் - குறிப்பாகத் தமிழகத்தில் அவரது ஈடுபாடுகளுக்கு எப்போதும் மக்கள் வெற்றிப் பரிசினையே வழங்கியிருக்கிறார்கள்.

தேசம், கொள்கை, மக்கள் என்று தம்வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக்கிடந்த அந்தப் பாஞ்சால சிங்கம் இப்போது இயற்கையன்னை மடியிலே ஓய்வுகொள்ளச் சென்று விட்டது. “சும்மா இருப்பதுதான் எனக்கு மிகவும் கடினமான செயல்!” என்று ஒருமுறை சுர்ஜித் கூறினாராம்.

ஆமாம்! இப்போதும் அவரது நினைவுகளும், அவர் இட்டுச் சென்ற தடமும் நம்மை அறைகூவித்தான் அழைக்கின்றன. சுர்ஜித் வழியிலே, ஒரு சுத்தமான விடியலைப் படைக்க ஓயாது - தலை சாயாது - இமைப் பொழுதும் சோராது உழைக்க அழைக்கும் அந்த உன்னதச் சங்க நாதம் உங்கள் செவிகளிலும் விழுமே தோழர்களே!

வாழ்க சுர்ஜித் புகழ்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com