Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
அண்ணா நூற்றாண்டு : முத்தமிழ் வித்தகர் அண்ணா...
- இரா.ஜோதிராம்

செப்டம்பர் 15,2008 பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து ஒட்டு மொத்த தமிழகத்தையும் தன்பால் ஈர்த்த ஒரு அரசியல்வாதி. இலக்கிய வாதி. நடிகர், கவிஞர், வசனகர்த்தா, பள்ளி ஆசிரியர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.

நூற்றாண்டு விழா காணும் அண்ணாவினுடைய படைப்புகளும், அவர் கடந்து வந்த அரசியல் பாதைகளும் நிச்சயம் இக்காலத்தில் திரும்பிப் பார்க்கப்படும். திறனாய்வு செய்யப்படும்.

பொதுவாக, ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக இறுதி வரை வாழ்ந்து மறைபவனே வரலாற்றில் நிலைத்து நிற்பான். அந்த முறையில் பார்த்தால் அண்ணாவும் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக நின்றவர், வென்றவர்.

அண்ணாதுரையாக அரசியலில் நுழைந்தவர் தளபதி அண்ணாதுரை யாகி, பின்னர் அறிஞர் அண்ணாவாகி, பின்னரே பேரறிஞர் அண்ணா வாக உருமாற்றம் பெற்றார்.

கட்சியின் தலைவர் என்ற முறையில் அன்றாடம் தான் படித்த, உணர்ந்த கருத்துக்களை தன்னைப் பின்பற்றும் தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதில் தாளாத விருப்பம்கொண்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிய பின்னர் பல நாளிதழ்களை உருவாக்கி தன்னுடைய எண்ணங்களை எல்லாம் தனது தொண்டர் களுக்கு அன்றாடம் அந்த இதழ்களின் மூலமே தன்னுடைய கருத்துக் களை பதிவு செய்தார். இந்த நடைமுறை தமிழகத்தில் வேறெந்த அரசியல்வாதியாலும் இதற்கு முன் பின்பற்றப்படவில்லை.

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் ``உன்னைத்தான் தம்பி’’ என்று அவர் அன்றாடம் எழுதும் மடல்கள் அனைத்துமே வித்தியாசமானவை.

அரிச்சந்திராவும், இராமாயணமும், மகாபாரதமும், வள்ளி திருமண மும், பவளக்கொடியும் கோலோச்சிக் கொண்டிருந்த நாடக உலகில் சமூக சீர்திருத்த கருத்துக்களைப் புகுத்தி அடியோடு மாற்றம்காண வைத்தார். மூடநம்பிக்கைகளையும் மதவெறித்தனத்தையும் எதிர்த்துப் போராடினார்.

எழுதுவதிலும், படிப்பதிலும் சலிப்பில்லாத உற்சாகம் கொண்டிருந் தார். சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் அல்லது சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம், சொர்க்கவாசல், நல்லவன் வாழ்வான், பணத்தோட்டம், கோமளத்தின் கோபம், காதல் ஜோதி, வேலைக்காரி, ஓர் இரவு, தீ பரவட்டும், ஆரிய மாயை, கம்பரசம் உட்பட எண்ணற்ற நாடகங்களை யும், திரைப்பட வசனங்ளையும், கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சிவாஜியாக நடிக்க வைத்து அதில் வரும் ஒரு துணைப்பாத்திரமான காகப்பட்டராக அண்ணா நடித்திருக்கிறார்.

போரில் வெற்றி பெற்றாலும் நீ பிற்படுத்தப்பட்டவன். ஆகவே மன்ன ராகக் கூடாது என்று சனாதனவாதிகள் சொல்வதுதான் இந்த நாடகத்தின் உட்கரு. இதற்காக சிவாஜி பேசுவதாக 90 பக்கங்களுக்கு அண்ணா வசனம் எழுதியிருக்கிறார். அதை 7 மணி நேரத்தில் மனப்பாடம் செய்து சிவாஜி கணேசன் பேசியிருக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி மட்டுமல்ல, சிவாஜி கணேசன் என்ற ஒரு மாபெரும் கலைஞனை நாடக உலகிலும், பராசக்தி திரைப்படத்திற்கு சிபாரிசு செய்ததின் மூலமும் அடை யாளம் காட்டிய பெருமை அண்ணாவையே சாரும்.

முதன்முதலாக தனது எழுத்துப்பணிக்கு உரிய அங்கீகாரமாக 1934ல் ஆனந்தவிகடனில் கொக்க ரக்கோ என்ற சிறுகதை எழுதி ரூ.20 அன்பளிப்பும் பெற்றுள்ளார்.

அண்ணா எழுதியவற்றில் பாதுகாக்கப்பட்ட நூல் களின் பக்கங்கள் மட்டும் சுமார் 16,000 பக்கங்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல, சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதிலும் முதன்மையானவராக இருந்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் அண்ணாவை பற்றிச் சொல்லும்போது, அண்ணா இரவெல்லாம் கண்விழித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் காகிதங்களை யெல்லாம் அடுக்கி பக்கம்போடும் வேலையை நான் மகிழ்ச்சியோடு செய்திருக்கிறேன் என்று குறிப்பிடு கிறார்.

ஆரியமாயை என்ற நூல் அந்தக்காலத்தில் மிகவும் பரபரப்பூட்டியதாகும். 1941ல் அண்ணாவால் எழுதப் பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டு அண்ணா கைது செய்யப்பட்ட துடன் சிறைதண்டனையும் பெற்றார். அபராதமும் விதிக்கப்பட்டது.

பெரியாரோடு பிரச்சனை ஏற்பட்டு அவரை விட்டு பிரியும் காலத்தில் அவருக்கே உரிய பாணியில் பெரியார் கண்ணீர்த் துளி பசங்கள் என்றார். அதையே கருப்பொருளாக்கி கண்ணீர்த் துளிகளே, கழகக் கண் மணிகளே என்று எழுதத்துவங்கி அதை மக்கள் மனங் களில் நீங்கா இடம்பெற்ற சொல்லாக்கிவிட்டார் அண்ணா.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றதற்கு அண்ணா சொன்ன பதில், நீங்களோ ஆளும்கட்சி. அதுவும் அகில இந்திய கட்சி. அத்தோடு நீங்கள் முதலமைச்சர் வேறு; அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. நானோ ஒரு சின்னக் கட்சியின் தலைவன். என்னைப்போய் நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது, பட்டாக்கத்தியை எடுத்து பட்டாம்பூச்சியைவெட்டுவது போல; வெட்டரி வாள் கொண்டு வெண்ணையை வெட்டுவதுபோல என்பது மாதிரி 18 வகையான உதாரணங்களை சொன்னாராம்.

இதேபோல், அண்ணாவுக்கும், நேருவுக்கும் கடுமையான கருத்து மோதல்கள் வந்த காலத்தில் நேருவின் பேச்சு தரமற்றதாக இருப்பதை இப்படி நளினமாகச் சொன்னாராம்:

``நீங்களோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நானோ கொட்டிக்கிடக்கும் செங்கல்’’.

ஒரு வகையில் தன்னைத் தாழ்த்திக்கொண்ட போதிலும் மறுபுறத்தில் செங்கல்கள் இல்லாமல் கோபுரங்கள் கட்டமுடியாது என்பதை எச்சரிக்கையாகவும் உணர்த்தும் விதத்தில் சொல்லியிருக்கிறார். மாற்றாரையும் மதிக்கும் எண்ணம் வேண்டும் என்ற நோக்கில் அவர் சொன்ன வார்த்தை கள்- ``மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ என்பது.

தான் தம்பிக்கு எழுதும் மடல்களில்கூட சில தலைப்புகளையும் மிக அற்புதமாக சொல்லியிருப்பார். ‘கிளிக்கு பச்சை பூசுவதா, குன்று குடைப்பிடித்துக் கொள்ளுமா, ஜனநாயக சர்வாதிகாரி, ஐயா சோறு இதோ நேரு பாரு, பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டி, குருட னிடம் காட்டிய முத்துமாலை, செவிடன் கேட்ட சங்கீதம்’ - போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும்.

எழுதுவதைப் போலவே படிப்பதிலும் அண்ணா எவ்வளவு ஆர்வம் கொண்டவர் என்பதற்கு நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.

பெரியாரோடு அண்ணா திராவிடர் கழகத்தில் பணியாற்றும்போது இருவரும் ஒருநாள் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அண்ணா வோ படிப்பதில் ஆர்வமிக்கவர். பெரியாரோ சிக்கனத் தில் அதைவிட ஆசைமிக்கவர். இரயில் நிலையத்தில் இருந்த ஒரு புத்தக கடையில் ஹிட்லரைப் பற்றிய ஒரு புத்தகத்தை பார்த்த அண்ணா பக்கங்களை புரட்டி கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பது, திரும்ப பெரியாரி டம் போய் நிற்பது என அங்குமிங்குமாக நடந்தே புத்தகத்தைப் படித்துவிட்டார். இருந்தாலும் அதை வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பெரியாரிடம் போய் அந்த புத்தகத்தின் சிறப்பைச் சொல்லி இதை வாங்கிப் படிப்பது அவசியம் என்றாராம். பெரியாரோ, அதுதான் அங்குமிங்குமாக போய்ப் படித்துவிட்டு வந்துவிட்டீர் களே இனி எதற்கு அந்தப் புத்தகம் என்றாராம். இதிலி ருந்தே அண்ணாவின் படிப்பு ஆர்வத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருமுறை இவரோடு இருந்த நண்பர்கள் அகம் என்பதின் இலக்கணம் என்ன? புறம் என்பதின் முழுப் பொருள் என்ன? இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அண்ணா மிக அழகாக இவ்வாறு பதில் சொல்லியிருக்கிறார்:

‘அகம் என்பது உணர்ந்து மகிழத்தக்கது
புறம் என்பது பகிர்ந்து மகிழ வேண்டியது.’

-எவ்வளவு ஆழமான விஷயத்தை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தான் சார்ந்த இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது நாங்கள் கட்டிடம் இல்லாத கல்லூரிகள் என்று கூறி பெருமைப்பட்டிருக்கிறார். அண்ணாவின் நூல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் அண்ணாவை ‘உவமை களின் வங்கி’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

‘உவமானங்கள் ஏராளமாகக் கூறிப் பேசுகிறார் என்பதற்காகவே அந்தக்காலத்தில் அடுக்குமொழி அண்ணாதுரை’ -என்று போற்றப்பட்டிருக்கிறார். சில பேர் இதையே, ஏளனமாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஏளனங்கள் எடுபடவில்லை.

தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய பாதை யை வகித்துக்கொண்டவர். ஆடம்பரத்தை விரும்பா தவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். தான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டவுடன் தங்களுக்குண்டான சம்பளத்தில் சரிபகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்தவர். முதலமைச்சரானவுடன் அரசாங்கத்தால் வீட்டிற்கு கொடுக்கக்கூடிய உயர்தர மான மேஜை, நாற்காலி, சோபா போன்றவற்றைக்கூட வாங்க மறுத்துவிட்டவர். பதவி போய்விட்டால் மறுநாள் இதை எடுத்துப் போய்விடுவார்கள். பதவி காலத்தில் இந்த சவுகரியங்களுக்கு பழகிவிட்டால் பின்னால் அதிலிருந்து விலக முடியாது என்று தன் குடும்பத் தாருக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைத்தவர். இந்திய சுதந்திர தினத்தை துக்கநாளாக அனுஷ்டிக்கும்படி பெரியார் சொன்னபோது, தனது தலைவர் சொன்னது என்ற போதிலும் அதை ஏற்க அண்ணா மறுத்துவிட்டார்.

அண்ணா வாழ்ந்த காலத்தில் பி.ராமமூர்த்தி, ப.ஜீவா னந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் நல்லுற வும் இணக்கமும் கொண்டிருந்தார். 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கு தோழர் பி.ராம மூர்த்தி அவர்களுடன் பேசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யுடன் தேர்தல் உறவு ஏற்படுத்தியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது. 1967 தேர்தல் முடிந்து அவர் முதல்வ ராகப் பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே புற்று நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார்.

அண்ணாவுக்குப் பிறகு அந்த இயக்கத்தில் வந்தவர் கள் அவரது வழியைப் பின்பற்றினார்களா என்பது கேள்விக்கும் , விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உரியன.

இன்றைய தலைமுறையினர் அண்ணாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எளிமை, இணைக்கமான உறவு, அயராது படிப்பது, அதைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பது, நாட்டுக்கு உழைப்பது என்பதே ஆகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com