Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
சிறுகதை

சிறப்பு விடுப்பு
ப.கோவிந்தராசு

நெய்வேலி பொது மருத்துவமனை, நுழைவு வாயிலைக் கடந்து இடது பக்க மாக திரும்பி அவசர சிகிச்சைப் பகுதியைத் தாண்டி ஐ.எம்.சி.க்கு (இன்டஸ்ட்ரியல் மெடிக்கல் சென்டர்) செல்லும் செங்குத்தான மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் சுகுமார். வேலைக்கு வரும்போது திடீரென ஏற்படுகின்ற விபத்து மற்றும் அதனால் ஏற்படும் வேலை செய்ய இயலாத திறனற்ற நிலைக்காக வழங்கப்படுகின்ற ஸ்பெஷல் டிஸ்சபிலிட்டி லீவு (ளுனுடு) வேண்டி, அதனைப் பெறுவதற்காக வந்திருந்தான்.

ஒருநாள் விடிகாலை முதல் பணிக்கு தன் சொந்த ஊரிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தான். ஒரு நிறுத்தத்தில் பேருந்துநின்று பிரயாணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்குந்து ஒன்று பேருந்து மீது பயங்கரவேகத் தில் மோதி நின்றது. விடிகாலை என்பதால் சரக்குந்து ஓட்டுனர் தூக்கத்தில் இருந் திருக்கலாம். அல்லது முன்னால் நின்றிருந்த பேருந்தை மூடுபனியின் காரணமாக சரியாக கவனிக்காமலி ருந்திருக்கலாம். பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்தி ருந்த சுகுமாருக்கு தலையில் பலமான அடி. எதிர் இருக்கையில் கம்பியில் மோதிய தில் நெற்றியில் பலத்த காயம் அடிபட்ட மற்றவர்களெல்லாம் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு சென்றிருந்தனர். சுகுமார் நெய்வேலி யில் வேலை செய்வதினால் அவன் அங்குள்ள பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப் பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தான். வருடக் கடைசி, விடுப்பு ஏதும் இல்லாத நிலையில் அந்த மூன்று நாட்களுக்கும் சம்பள பிடித்தம்தான் வரும் என்று எண்ணியிருந்தான். வேலைக்கு வரும் போது விபத்து நடந்திருக்கிறதுனால ளுனுடு வாங்கிக் குடுத்திடுங்க என்று அதனைப் பெறுவதற்கான வழி முறைகளையும் சொன்னார் வருகை நேரப் பதிவாளர். நல்ல வேளை சம்பள பிடித்தம் வராமலிருக்க அவர் சொன்ன யோசனையின் பேரில்தான் அதனைப் பெறுவதற்காக இங்கு வந்திருந்தான் சுகுமார்.

விசாலமான கூடம். காத்திருத்தலுக்காக நான்கு பேராய் அமரக்கூடிய பிளாஸ் டிக் நாற்காலி அறைக்கு வெளியில் ஆங்காங்கே போடப்பட்டிருந்தது. அறையின் நடுவில் பெரிய மேஜை, அதனைச் சுற்றி அதேப் போன்ற பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. நிசப்தமான அந்த கூடத்தில் பிரவேசித்த போது ஏதோ ஒரு பிரார்த்தனைக் கூடத்தில் இருப்பது போன்ற அமைதி மனதுக்கு சுகமாய் இருந் தது. பூட்டப்பட்டிருந்த ஒன்றிரண்டு அறைகளை கடந்து திறந்திருந்த அறையினுள் மெல்ல எட்டிப்பார்த்தான்.

வெளுத்த மாதிரியான பச்சை நிற சீருடையில் நாற்பத்தைந்து வயது மதிக்கத் தக்க செவிலியர் ஒருவர் வாசலைப் பார்த்த படி அறையின் நடுவில் மேசை முழுக்க நிறைய தஸ்தாவேஜூகள் நிறைந்திருக்க நாற்காலியில் அமர்ந்திருந்தார். முகத்துக்கு நேரே கையைத் தூக்கி பணிவாக “வணக்கம் சிஸ்டர்” என்றான்.

பதிலுக்கு வணக்கம் சொல்லி, “வாங்க என்ன வேணும்?” என் றார் செவிலியர்.

தயாராக எடுத்துச்சென்றிருந்த டிசிபிஎம் அதிகாரி கையெழுத்துப் போட்டிருந்த தஸ்தாவேஜூகளை அவர் முன் நீட்டினான்.

சிறப்பு விடுப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரியால் பரிந்துரை செய்யப்பட்ட கடிதம், விபத்து அறிக்கை, சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான மருந்து சீட்டுகள் என்று ஒவ்வொரு காகிதமாகப் புரட்டிப் படித்துக் கொண்டே வந்த செவிலியரின் பார்வை விபத்து அறிக்கையில் நிலை குத்தி நின்றது நிமிர்ந்து சுகுமாரைப் பார்த்து கேட்டார்.

“விபத்து தொழிற்சாலைக்கு வெளியில் நடந்திருக்கு போலிருக்கே?”

“ஆமாம் சிஸ்டர்”.

“இதுவரையிலும் தொழிற் சாலைக்கு உள்ள நடந்த விபத்துக்கு மட்டும்தான் ஸ்பெஷல் லீவு அலாட் பண்ணியிருக்கோம். இது வெளியில் நடந்திருக்கிறதுனால RMO கிட்ட கேட்டுதான் செய்யணும்” என்றார்.

“வேலைக்கு வரும்போது நடந்திருக்கிறதுனால, லீவு கிடைக்கும்னு சொன்னாங்களே சிஸ்டர்.”

“வேலைக்கு வரும்போது நடந்திருந்தாலும்கூட, தொழிற் சாலைக்கு வெளியில் நடந்திருக்கு இல்லியா... அதனால் ஸ்பெஷல் லீவு கிடையாது. எதுக்கும் இது விஷயமா சுஆடி கிட்ட கேக்கறேன். குடுக்கலாம்ன்னு சொல்லிட் டார்ன்னா குடுத்திடறேன்” என்று கேள்வியைக் கேட்டு அதற் கான பதிலையும் சொல்லி அவரே தொடர்ந்தார். “நாளைக்கு சனி யா...” என்று சொல்லி ஏதோ யோசித்தபடி, வலக்கையை நிமிர்த்தி கட்டைவிரலால் சுண்டு விரலிலிருந்து வரிசையாகத் தொட்டு “ஞாயிறு, திங்கள், செவ் வாய்....” என்று சொல்லி நிறுத்தி யவர். “புதன்கிழமை வந்திடுங்க” என்றார்.

எப்படியோ ஸ்பெஷல் லீவு கிடைத்தால் போதும் என்கிற தவிப்பிலிருந்த சுகுமாருக்கு சற்று ஆறுதலாயிருந்தது. ஆனால், புதன்கிழமை வருவதற்குள்ளா கவே மூன்று நாளைக்கும் ஆப்சண்ட் போட்டு வருகைப் பதிவை பி அண்டு ஏக்கு அனுப்பி விட்டால் என்ன செய்வது என்கிற யோசனையும் இருந்தது. அப்படி அனுப்பிவிட்டால் அவ்வளவு தான் மூன்று நாளைக்கும் சம் பளம் கட்தான். ‘கொஞ்சம் பொறுத்து அனுப்பச் சொல்ல வேண்டும்’ என்று எண்ணினான். பிள்ளைகள் படிப்பு செலவு, துணிமணி, கொழுந்தியா பொண்ணு கல்யாணம், தம்பி பொண்ணு மஞ்சள் நீராட்டு என்று இன்னும் ஏதேதோ, எல்லா வற்றிற்குமாக வாங்கிய கடனுக்கு சம்பளத்தில் பிடித்தம் போக மீதி கையில் வாங்குகிற சம்பளத்திற் கும் அவ்வப்போது வாங்கிய கை மாத்து, வட்டி கடன் என்று கொஞ்சகொஞ்சமாக குரல் வளையை நெருக்குவதாகவே செலவுகள் இருந்து கொண்டி ருந்தன. இந்தச் சூழ்நிலையில் மூன்று நாள் சம்பள பிடித்தம் என்பது ஒரேயடியாக கழுத்துக்கு சுருக்கு மாட்டியது போலத்தான் இருக்கும்.

செவிலியர் வரச் சொல்லி யிருந்த புதன்கிழமை நிசப்தம் நிலவிய அந்தகூடத்தில் போடப் பட்டிருந்த நாற்காலியில் அமர்ந் தான். சிறிது நேரத்திற்கெல்லாம் செவிலியர் வந்தார்கள். சுகுமா ரைக் கண்டவுடன் பழைய மாதிரி யான “யார் நீங்க... என்ன வேணும்” என்ற மிடுக்கான கேள்வி.

இன்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட சுகுமார், “அந்த லீவு விஷயமா...” என்றிழுத்தான்.

“ஓ... ஆமாமாம்.... அது...” என்று நினைவு வந்தவராக நெற்றியைத் தேய்த்துக் கொண்டே, “சாரி நான் ரெண்டு நாளா லீவுல இருந்திட்டேன். இன்னும் RMO கிட்ட கேக்கல. நாளைக்கு வர்றீங் களா...” என்றார்.

மறுநாள் அவர் சொன்ன அதே நேரத்தில் வந்து அவர் முன் நின்றவன், “எம்பேரு சுகு மார் சிஸ்டர். ஸ்பெஷல் லீவு அலாட் பண்றது சம்பந்தமா RMO கிட்ட கேட்டு சொல்கி றேன்னு வரச் சொல்லியிருந்தீங்க” என்று அவர் கேட்பதற்கு முன்பாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டான் சுகுமார்.

“ம். அது கேட்டேன். உங் களுக்கு வீடு அலாட் ஆகி யிருக்கா?”

“இல்லீங்க சிஸ்டர்.”

“உங்களுடைய சம்பள சிலிப்பை காட்டுங்க. அதுல ஹெச் ஆர் ஏ வாங்கிட்டு இருந் தீங்கன்னா குடுக்கலாம்ன்னு சொல்லிட்டாரு” என்றார் செவி லியர்.

ஹெச்ஆர்ஏ வாங்கிட்டு இருந் தால் இன்னும் வீடு கிடைக்கலே சொந்த இடத்திலேயிருந்துதான் வரணும் என்பதை உறுதி செய்வ தற்காக கேட்கிறார்கள் என்று

புரிந்தது. சம்பள சிலிப்பைக் காட்டினால் லீவு கிடைத்து விடும் என்கிற சந்தோஷத்தில் அவசர அவசரமாக சட்டைப் பையிலிருந்த சிலிப்பை எடுத்து கொடுத்தான். பார்த்த செவி லியர், “இத ஒரு ஜெராக்ஸ் போட்டுக் குடுத்திடுங்க” என்றார்.

சுகுமார் தவிப்பாய் யோசித் தான். எங்கே சென்று ஜெராக்ஸ் போடுவது. படியிறங்கி ஓடினான். ஸ்பெஷல் லீவுன்னு ஒன்னு இருக் கிறதே அவனின் வருகை நேரப் பதிவாளர் (டைம் கீப்பர்) சொல்லலேன்னா அவனுக்குத் தெரியப்போறது இல்ல. இதுல இவ்வளவு விஷயம் இருக்கும்ங் கறது தெரியாமலே, கேட்டவுடனே கெடச்சிடும்ங்கற எதிர்பார்ப்பில் வந்திருந்தான் சுகுமார். ஒவ் வொருமுறை அலையும் பொழு தும் கடன் வலியே தேவலை போலிருந்தது அவனுக்கு. எங் கெங்கோ அலைந்து, வியர்வைக் குளியலில் தன்னை முழுமை யாக நனைத்துக் கொண்டவன் ஒரு வழியாக ஜெராக்ஸ் போட்டுக் கொண்டு வந்தபோது மணி ஒன்றாகியிருந்தது. செவிலியர் கிளம்பிவெளியில் வந்து கொண் டிருந்தார். இவனைப் பார்த்த தும், “என்ன இப்ப வர்றீங்க? எல்லாரும் சாப்பிட கிளம்பி யாச்சு. மதியம் மூணு மணிக்கு வாங்க” என்று சொல்லி விருட் டென்று அவனைக் கடந்து நடந்து கொண்டிருந்தார் செவிலியர்.

எதையும் கண்டு கொள்ளாத வராய் கிளம்பிச் செல்லும் செவி லியரை பரிதாபமாகப் பார்த்து நின்ற சுகுமாருக்கு உச்சி வெயி லின் உஷ்ணத்தைவிட அவர் சொல்லிச் சென்ற வார்த்தை சற்று கூடுதலான கொதிப்பாய் மனதை சுட்டது. இதற்குப் பிறகு வீட்டிற்குச் சென்று மீண்டும் மூணு மணிக்குள்ளாக வரவும் முடியாது. பசி வேறு வயிற்றைப் பிசைவதாயிருந்தது. பேசாமல் இன்று வயிற்றுக்கு ஓய்வு கொடுத் திட வேண்டியதுதான் என்று எண்ணியவாறு கூடத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து மேசை யில் முகம் புதைத்து குட்டித் தூக்கங்களை அரங்கேற்றுவதும், அவ்வப்போது தலையைத் தூக்கி வழியைப் பார்ப்பதுமாய் இருந் தான். வேலையாய் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஊழியர் அவனின் தவிப்பைப் பார்த்து, “என்ன விஷயம் தம்பி இங்கேயே உக்காந்திருக்கே” என்றார். கேட்டவளுக்கு பொறு மையாய் எல்லாவற்றையும் சொன்னதில் பசி மரத்தது மட்டு மல்ல நேரமும் கடந்தது போலி ருந்தது.

மூன்று மணி சுமாருக்கு செவிலியர் வரவும் பவ்யமாக எழுந்து நின்றான் சுகுமார். ஜாடை யாகப் பார்த்துக் கொண்டே சென்ற செவிலியர், உள்ளே சென்று தன் நாற்காலியில் அமர்ந்தபடி ஊழியர் மூலம் உள்ளே வரச் சொல்லி அழைப்பு கொடுத்தார்.

“உக்காருங்க....” உட்கார்ந்தான்.

மெடிக்கல் ரெக்கார்டுகளில் தேடி அவனுடைய கோப்பு களை எடுத்து விடுப்புக்கான காரணங்கள் குறித்து எழுதிக் கொண்டிருந்த செவிலியர் சட்டென ஏதோ நினைத்தவராக மீண்டும் அவன் கொடுத்திருந்த தஸ்தாவேஜூகளை புரட்டி னார்கள்.

போச்சு, இப்ப என்ன குறை கண்டுபுடிக்கப் போறாங்களோ தெரியலையே... என்ன குறை கண்டுபுடிக்கலாம்ங்கறதுலேயே குறியா இருக்காங்களே என்று நினைத்து வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.

“இதுல டிசிபிஎம் கையெ ழுத்து போட்டிருக்காங்களே, ஜி.எம். யில்ல போடணும். தொழிற்சாலைக்கு உள்ள விபத்து நடந் திருந்தா டிசிபிஎம் போட்டாலே போதும். இது ரோடு ஆக்சிடண்ட் றதுனால ஜி.எம்.தான். போட ணும்” என்று விபத்து அறிக்கை யைக் காட்டி கண்டிப்புடன் சொன் னார் செவிலியர். வேறு வழி யில்லை மீண்டும் அந்த தஸ் தாவேஜூகளோடு ஜி.எம். அலுவலகத்திற்கு விரைந்தான். விசாலமான அந்த மூன்று மாடிக்கட்டிடத்தின் மேல் மாடி யில் குளிர் சாதனம் பொருத்தப் பட்டிருந்த அறைதான் அவரின் அறை. நேரே அறையினுள் நுழைய முற்பட்ட வனை அவரின் பி.ஏ. தடுத்தி நிறுத்தி விவரம் கேட்டார்.

விபத்து நடந்ததிலிருந்து டி.சி.பி.எம். கையெழுத்துக்குப் பதிலாக ஜி.எம். -ன் கையெ ழுத்து தான் வேண்டுமென்று செவிலியர் சொன்னதுவரை ஒன்று விடாமல் விலாவாரியாக ஒப்புவித்தான் அனைத்தையும் கேட்ட பி.ஏ. “ஜி.எம். மீட்டிங்குல இருக்கிறார். நான் கையெழுத்து வாங்கி வச்சிடறேன். நாளைக்கு வந்து வாங்கிக்குங்க” என்று கோப்பினை வாங்கி அவரின் மேசை மீதிருந்த ட்ரேயினுள் வைத்துக் கொண்டார்.

மறுநாள் பத்து மணிக்கெல் லாம் பொது மருத்துவமனை சென்று வர அவனது அதிகாரி யிடம் அனுமதி கேட்டான் சுகு மார். “உனக்கு வேற வேலையே இல்லியா....? பெரிய ஆஸ்பத் திரிக்குப் போறேன்னு இந்த வாரத்துல எத்தனையோ முறை பர்மிஷன் கேட்டுட்டே ...” என்று எரிச்சலடைந்து முறைத்தார்.

“இல்ல சார்... இன்னும் அந்த லீவு....” என்றிழுந்தான்.

“இதப்பாருய்யா... கதையெல் லாம் வேணாம். எதாயிருந் தாலும் இன்னையோட முடிச்சிக்க” என்று சத்தமிட்டார். அவர் சொன்னதிற்கெல்லாம் சரி சார் என்று இயந்திரகதியில் தலை யாட்டிய சுகுமார் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தான். நேரே அலுவலகம் சென்று ஜி.எம்.-ன் பி.ஏ. முன்னால் நின்றான். “நேத்தே கையெ ழுத்து வாங்கி வைச்சிட்டனே” என்றவர் எடுத்துக் கொடுத்தார்.

‘அப்பாடா ஜி.எம்.கிட்டேயும் கையெழுத்து வாங்கியாச்சு. சிறப்பு விடுப்பு கிடைச்சிடும்’ என்கிற குதூகலத்துடன் அவசரத் திற்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் மிதிவண்டி இரவல் வாங்கிக் கொண்டு பொது மருத்துவமனை நோக்கி விரைந்து செவிலியரிடம் கொடுத் தான்.

“கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுங்க. எழுதிட்டுக்கூப்பிட றேன்” என்றவர், சிறிது நேரத்திற் கெல்லாம் எல்லாவற்றையும் எழுதி முடித்து வெளியிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த அவனைக் கூப்பிட்டுக் கொடுத் தார்.

RMO கையொப்பமிட்டு சிறப்பு விடுப்பு கையில் கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியில் அதை உடனடியாக பி அண்ட் ஏ அலுவலகத்தில் சேர்க்க வேண்டு மே என்கிற நெருக்கடியான கால அவகாசத்தில், அதே சிந்த னையோடு அலுவலகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான் சுகுமார். அப்போதுதான் எதிரில் தூசிகளும், சருகுகளும், மண் துகளும் சூறாவளிக் காற்றில் சுழல் வட்டமாக வந்தது. இவனைக் கடந்து சென்ற காற்றுக்கு, கண் ணை மூடிக் கொண்டான். பை யை மூடவில்லை.

ஐந்தாறு நாட்களாய் மிகுந்த போராட்டத் திற்குப் பிறகு வாங்கிய, அவன் சட்டைப் பையி லிருந்த சிறப்புவிடுப்புக் காகிதம் சூறாவளிக் காற்றின் தூசி களோடு தூசியாக.... காற்றில் பறந்து கொண்டிருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com