Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
ஆசிரியர் பக்கங்கள்

ரஷ்யா - ஜார்ஜியா போர்

சோவியத் யூனியன் சிதறிய பிறகு தற்போது ஜார்ஜியா அமெரிக்க ஆதரவு நாடாக மாறிவிட்டது. ஜார்ஜியாவிலிருந்து தெற்கு ஒசெட்டியா, அல்காசியா ஆகிய இரண்டு மாநிலங்கள் பிரிந்துவிட்டன. அமெரிக்கத் தூண்டுதலின் பேரில் ஜார்ஜியா தெற்கு ஒசெட்டியா மீது படையெடுத்து இரண்டாயிரம் மக்களைக் கொன்று குவித்தது.

ஜார்ஜியாவின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்ய டாங்கிப் படையும், விமானப்படையும் ஜார்ஜியா மீது தாக்குதல் தொடுத்தன. தெற்கு ஒசெட்டியாவிலிருந்து ஜார்ஜியப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. இதை அமெரிக்கா கண்டித்தது. ஆனால், ஆப்கனிலும், இராக்கிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்காவுக்கு இதைக் கண்டிக்க யோக்கியதையில்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்தது. இரண்டே நாளில் ஜார்ஜியா வுக்கு ரஷ்யப்படைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன. இது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக் கும் ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கையாகும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


காஷ்மீர் கலவரங்கள்

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ஜம்முவிலும் காஷ்மீரிலும் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் வேலை தொடங்கிவிட்டது. பிரிவினைவாதிகளும் மதவெறியர்களும் களத்தில் இறங்கி நிற்கின்றனர். கலவரங்கள் துவங்கி ஒரு மாதமாகிவிட்டது. 23.6.2008ல் அமர்நாத் கோவிலுக்கு நூறு ஏக்கர் நிலம் காங்கிரஸ் முதல்வர் குலாம்நபி ஆசாத் வழங்கினார்.

காஷ்மீரில் முஸ்லீம்களும் ஜம்முவில் இந்துக்களும் பெருவாரியாக உள்ளனர். அமர்நாத் கோவில் காஷ் மீரில் உள்ளது. அமர்நாத் குகையில் பனிக்காலத்தில் ஐஸ் கட்டியாய் லிங்கம் போன்ற உருவம் படிவதைக் கண்டு பிடித்ததே முஸ்லிம்கள்தான். பின்னாளில் அது கோவிலான பின்பும் இந்துக்கள் அங்கே சென்று வணங்க உதவியதும் முஸ்லிம்கள்தான். எனினும் முஸ்லிம்கள் தங்கள் நிலத்தைக் கொடுப்பதை ஏற்க முடி யாது என்று களமிறங்கி நிற்கின்றனர். பிரிவினைவாதிகள் இதைப் பெரிதாக்கி ‘நாங்கள் இந்தியர்களல்ல ‘பாகிஸ்தானிகள்’ என்று முழக்கமிடுகின்றனர்.

ஜம்முவில் உள்ள ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், கோவிலுக்கு வழங்கிய நிலத்தை அரசு திரும்பப் பெறுவதை ஏற்க முடியாது என்று களமிறங்கிவிட்டன. கோவிலுக்கு நிலம் கொடுத்ததைப் பெரிதுப்படுத்தி ஜம்மு பகுதியி லுள்ள இந்து வாக்குகளை வரும் தேர்தலில் பெறலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரசின் கதை ஆப்பசைத்த குரங்கு கதைப் போல ஆகிவிட்டது. நிலத்தைத் தராதே என்று ஒரு பகுதியினரும், நிலத்தை விடாதே என்று ஒரு பிரிவினரும் கலவரத்தில் இறங்கி நிற்கின்றனர்.

காஷ்மீருக்குப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு முசாராபாத் நகருக்கு கொண்டு போய் விற்பனை செய்வோம் என்று கிளம்பும் அளவுக்கு நிலைமை மீறிவிட்டது. பிரிவினைவாதிகளுக்குத் தீனி போடும் மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் தலைவர் யூசுப் தாரிகாமி கண்டித்துள்ளார். போக்குவரத்தைச் சரி செய்து அமைதி திரும்பச் செய்ய வேண்டு மென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்வானி இந்தச் சூழ்நிலையை அரசியலாக்கி ஆதாயம் பெற டில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு ரதயாத்திரை நடத்தப் போவதாய் அறிவித்தார். ஆனால் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா அத்வானியை ஜம்முவுக்குள் அனுமதிக்க முடியாது என்று அறிவித்துவிட்டார். இது அவர் களுக்குள் நடக்கும் போட்டி.

அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்பும் மக்கள் ஆயுதமேந்திய தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் கண்டு பயந்து செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள். காங்கிரசும், பிஜேபியும் நிலைமையைத் தங்களுக்கு வாக்கு வங்கிகளாக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். தேசம் கவலையோடு நிற்கிறது.

நிலக்கொள்ளைக்காரர்கள்

தமிழகத்தில் ரேசன் அரிசிக் கடத்தல், மணல் கொள் ளைக்கு அடுத்து நிலக் கொள்ளை தீவிரமாய் நடக்கிறது. லஞ்ச ஊழலில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை நிலங்களை வாங்கிப் போடுவதில் கொட்டுகிறார்கள். கரன்சிக் கட்டுகளைக் கொடுத்து புரோக்கர்கள் மூலம் விவசாய நிலங்கள் வேகமாய்க் கைமாறுகின்றன. தனிப்பட்ட கறுப்பு பணப் பேர்வழிகளும், மத்திய - மாநில அமைச்சர்கள் உள்பட இதில் தீவிரமாய் இறங்கியுள்ளனர். இதனால் ஒரு சென்ட் நிலம் லட்சங்கள், கோடிகளாகிவிட்டன. இதில் நிலத்தை விற்ற விவசாயிகளுக்கு? லாபமில்லை. அவனிட மிருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்குத்தான் லாப மெல்லாம்.

கரன்சிக்கு மயங்காத விவசாயிகளை மிரட்டி நிலத்தை வாங்குவதும், ஆளையே கடத்திக் காணாமல் ஆக்குவதும் நடக்கிறது. இதில் சில விஷயங்களே வெளியில் வருகிறது. ஊழல் பேர்வழிகள் நிலவெறியெடுத்துத் திரிகிறார்கள். வேட்டை நாய்களைப்போல என்றால் மிகையில்லை. இதில் அமைச்சர்கள் என்றால் கேள்வி கேட்பாரில்லை. உயர்நீதி மன்றம் தலையிட்டதால் தமிழக அமைச்சர் ஒருவர் நீக்கப் பட்டுள்ளார். வேறு சில அமைச்சர்கள் மீதும் புகார்கள் உள்ளன.

தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய் பெறுமான ரேசன் அரிசியும், ஆறுகளின் மணலும், காட்டு மரங்களும் கடத்தப் படுகின்றன. இக்கடத்தல்களில் லாரி டிரைவர், கிளினீர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். கடத்தியவர்கள் பெயரே வெளி வருவதில்லை. இப்படிக் கொள்ளை போவதை தமிழக மக்கள் கொந்தளிப்போடு கவனித்து வருகிறார்கள்- நிலக் கொள்ளைக்காரர்களையும்கூட.

முஷாரப் வீழ்ச்சி

பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரப் தானாகவே பதவிவிலகிவிட்டார். நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்யப் படும் முன்பு அவரே முந்திக் கொண்டு தனது எட்டாண்டுக் கால அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். இப்போது எங்கே குடியேறுவது? அமெரிக்காவிலா, சவூதி யிலா அல்லது பாகிஸ்தானிலேயே இருந்துவிடுவதா? - என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

முஷாரப் காலத்தில் ஐஎஸ்ஐ என்ற உளவு அமைப்பின் அட்டூழியங்கள் சொல்லிமாளாது. இந்தியாவில் அதன் ஏஜெண்டுகள் வெடிகுண்டுகளையும், பயங்கரவாதச் செயல் களையும் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டனர். மற்றொருபுறம் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆதரவளித்தார். இதன் விளைவாக இப்போது பாகிஸ்தானிலேயே பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

முஷாரப் ஒருபுறம் இந்தியாவுடன் அமைதியை விரும்புவ தாகக் காட்டிக் கொண்டே கார்கில் போரை நடத்திப் பார்த்த வர். இப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், முஷாரப்பைத் தூக்கிலிட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அழிந்துவரும் மலைகள்

தமிழகத்தை வர்ணித்துப் பாடிய பாரதி நெடிய மலைகள் சூழ்ந்த நாடு என்று பாடினான். போகிற போக்கைப் பார்த் தால் தமிழ்நாட்டு மலைகள் வெளிநாடுகளுக்குப் போய் விடும் ஆபத்து நெருங்குகிறது. மலைப்பாறைகள் கிரானைட் கற்களாக உருமாற்றமடைந்து கப்பல்கள் மூலம் வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாகின்றன. பல்லாயிரம் கோடிகள் பணம் புரளும் இந்த பிசினெஸ் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக் கிறது.

பல மலைகள் கிரானைட்டுக்காக வெட்டி, வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. புராதனச் சின்னங்களான சமண குகைகள், பௌத்தச் சின்னங்கள் உள்ள மலைகள்கூட கிரானைட் குவாரிகளாக மாறி வருகின்றன. இதைக் கண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் அலறுகிறார்கள். ஆனால் அவர் களது குரல் வெடியோசையில் வெளியே கேட்கவில்லை. அரசும் அதிகார வர்க்கமும் கண்டு கொள்வதில்லை.

இந்த மலை விழுங்கி மகாதேவன்களால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பலமலைகள் மறைந்துபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோடிகள் புரளும் தொழிலாதலால் கோடி மக்கள் திரளாமல் இதைத் தடுக்க முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com