Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
யார் கூப்டதுங்க...?
உஷாதீபன்

`அவனை அழைத்தது என் தவறு. ஆம்! என் தவறுதான்!’

ஒரு கணம் இப்படி நினைத்தபொழுதில், `ஊஹும், இல்லையே, நான் அழைக்கவில்லையே?’ - சட்டென்று மனதிற்கு இப்படித் தோன்றியது.
அவன்பாற்பட்டு மனதில் ஏற்பட்ட அந்தக் கணத்திலான இரக்கம், என் கண்கள் கண்ட காட்சி, உடனடியாக என் நினைப்பை புரட்டிப் போட்டது.
அவனை அழைக்கவில்லை நான். அது உண்மைதான். ஆனாலும் என்னால் நிகழ்ந்த நிகழ்வுதானே அது?

குற்றவுணர்ச்சி தலையெடுத்தது. அட, ஆண்டவனே! ஏன் இப்படியெல்லாம் இந்த மனதுக்குத் தோன்றுகிறது? ஒரு கணத்தில் நிகழ்ந்துவிட்ட இந்தச் சம்பவத் துளிக்கு துளி என்று கூடக் கூறலாமா கூடாதா? ஏன் இத்தனை சங்கடம் கொள்கிறது? இந்த மனது ஏனிப்படி மயிலிறகாய் நின்று வருடி உறுத்துகிறது?

“நான் வேண்டாம்னு சொன்னேன்.. அது உங்க காதுல விழலை. நானென்ன பண்ணட்டும்...” உள்ளேயிருந்து லலிதா கத்தினாள். ஜன்னல் வழியாக அங்கிருந்து அவள் கண்ட காட்சி அவளையும் உறுத்திவிட்டதோ என்னவோ? வரிசையாக நின்ற நெட்டுலிங்க மரங்களின் இடையே அவன் தன் சைக்கிளையும் அதன் காரியரில் உயரமாக நிறுத்திவைத்துக் கட்டப் பட்டிருந்த மூட்டையையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி கண்ணில் பட்டது.

உள்ளே போவதா அல்லது அங்கேயே நிற்பதா? என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் நிச்சயம் அப்படி அந்தரத்தில் விட்டுவிட்டு உள்ளே போக முடியாது. போய், எனக்கென்ன என்று உட்கார முடியாது. அது பண்பாடாகவும் எனக்குத் தோன்றவில்லை. அந்த மாதிரி மனசும் எனக்கில்லை.

என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லையே? நான் என்ன செய்யட்டும்? உள்ளே போய் அக்கடா என்று உட்கார்ந்து விடலாம்தான். மனசாட்சி உறுத்துமே! மனசு பூராவும் வெளியிலேயே இருக்குமே? சக மனிதனை, அவனது உணர்வுகளை, உழைப்பை, மதிக்காத தன்மையல்லவா அது? அப்படியிருக்க என்னால் முடியாதே?

“உப்பு வேணுமா....?”- அப்படித் திண்ணையில் அமர்ந்துகொண்டு உள்ளே பார்த்துக் கத்திக் கேட்டது என் தவறுதான். வீட்டைக் கடந்து கொஞ்ச தூரம் போய் விட்ட அவன், சைக்கிளிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். அவன் வைத்திருக்கும் பின் பாரத்திற்கு அப்படித்தான் குதிக்க முடியும். சாவகாசமாய் இறங்க முடியாது. குதித்த ஜோரில் வண்டியைத் தாங்கிப் பிடிக்க வேண்டுமே?

அவன் அப்படி வண்டியைத் தாங்கிப் பிடித்தது ஒரு கணம் என்னை உலுக்கித்தான் விட்டது. பின்னால் நாலு ஆள் கனமுள்ள அந்த உப்பு மூட்டையைக் கட்டிக் கொண்டு அதில் எப்படி ஏறினான் அவன் என்று ஆச்சரியமாயிருந்தது. ஏறின பின்னால் உழட்டாமல் பாலன்ஸ் செய்து, எதிர்வரும் நபர்களையும் வாகனங்களையும் சமாளித்து ஒதுங்கி எப்படி ஓட்டி வந்தான்?

எங்கிருந்து, எவ்வளவு தூரம் இப்படி ஓட்டி வருகிறான்? அங்கங்கே இறங்கி, ஏறி, இறங்கி ஏறி இந்த உப்பு அத்தனையையும் படிபடியாய் அளந்து போட்டு, விற்று முடித்து, சாக்கை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் எப்பொழுது திரும்ப வீடு போய்ச் சேருவான்? சே! நான் ஒரு முட்டாள்! தெருத் திரும்பும் பொழுதே, அந்த முதல் வீட்டில் வாங்கிய போதே இறங்கியவனை, அப்படியே அழைத்திருக்கலாம். மூன்றாவதாக இருக்கும் தனது வீட்டிற்கு அப்படியே உருட்டிக் கொண்டாவது வந்திருப்பான்? அதல்லாமல் அங்கிருந்து அவன் ஏறிய பிறகு, கொஞ்ச தூரத்தில் அவன் மறுபடியும் இறங்க வேண்டி வந்துவிட்டதே?

அப்பொழுதே கேட்டிருக்க வேண்டும் லலிதாவிடம். கேட்டதுதான் கேட்டோம். உள்ளே போய் கேட்டிருக்கக் கூடாதா? அதென்ன திண்ணையில் இருந்த மேனிக்கே கத்துவது? சுவாரஸ்யமாய்ப் படித்துக் கொண்டிருந்த தினசரிக்கு மத்தியில், இருந்த படிக்கே யதார்த்தமாய்க் குரல் கொடுக்கப் போக, அவன் கீழே பொத்தென்று குதித்து வைக்கப் போக... என்ன தர்ம சங்கடம் இது?

உனக்கு வாழ்க்கையின் ஒரு நாள் பொழுது இப்படி இதமாய்த் துவங்குகிறது. இடது கையில் தினசரி, வலது கையில் டிகாக்ஷன் காபி என்று எல்லோருக்கும் அப்படியா? உழைத்து உருகி, செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பி, பிறகு உலை வைத்து, அதற்குப் பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள அல்லவா வேண்டியிருக்கிறது பல பேருக்கு? மனசாட்சி உறுத்தி உருக்குலைத்தது என்னை!

யார் அழைத்தது என்று தெரியாமல் அவன் இன்னும் நின்று கொண்டிருப்பது புரிந்தது. இறங்கியது இறங்கியாயிற்று. இறங்கி இறங்கித் தானே விற்றாக வேண்டும். அதற்கு இணங்கித் தானே கிளம்பி வந்தது? மனம் சம்மதித்துத்தானே சுமந்து புறப்பட்டது? “உப்பு...கல் உப்பூ!...உப்பூ... கல்லுப் பூ!!...” - குரல் ஓங்கி ஒலித்து அந்த வீதியையே எதிரொலித்தது.

“யம்மா... கூப்டீங்களா....? அய்யா கூப் டீங்களா சாமி...? யார் கூப்டது தெரிய லியே...?” - அடுத்தடுத்த வீடுகளின் வாசல்களில் அவன் குரலின் எதிரொலி. இவள் வேறு வேண்டாம் என்று விட்டாள்! என் குரல் கேட்டுத்தானே அவன் இறங்கினான்? திருடனைப் போல் மறைவாய் நின்று கொண்டிருந்தேன்.

‘உள்ளேதாம்ப்பா கேட்டேன்... நீ சத்தம் கேட்டுப் படக்குன்னு இறங்குவேன்னு கண்டேனா?’- எப்படிச் சொல்லுவேன்? யாரென்று தெரியாமல்தானே நிற்கிறான். அப்படியே கொஞ்ச நேரம் கேட்டுவிட்டுக் கிளம்பிப் போய்ச் சேரட்டும். வேறென்ன செய்வது? எது எதெற்கெல்லாம்தான் மனிதன் வருத்தப்படுவது? எழுந்தேன். அடிமடியில் மூத்திரம் முட்டுவதுபோல் ஒரு பிரமை. செய்தித்தாளை ஓரமாய் வீசிவிட்டு, கழிப்பறையை நோக்கி ஓடினேன்.

“மெதுவாய்ப்போக வேண்டிதானே? இதுக்கெதுக்கு இவ்வளவு அவசரம்?”

“அவசரமா வருதுடி.. உனக்கென்ன தெரியும் என் கஷ்டம்....?”

எதற்கோ ஓடி ஒளிந்து கொள்வது போல் இருந்தது. உள்ளுணர்வு உறுத்தியது. இன்னும் நின்று கொண்டுதான் இருப்பானோ? ஒருமுறை வண்டியில் இருந்து இறங்கிவிட்டால் அதுவே அவனுக்குப் பெருத்த ஆசுவாசமோ? இறங்குவது பயனுள்ளதாக இருக்க வேண்டும். இறங்கினால் உப்பு விற்க வேண்டும். அதுதான் அப்பொழுதுதான் பலன். உழைக்கும் உழைப்புக்குப் பலன். அப்படித்தானே? அங்கங்கே அந்தப் பலமான, சுமையான, பின் மூட்டையுடன் சைக்கிளிலிருந்து இறங்காமல் வெறுமே காலூன்றி நிற்க முடியாதே? செய்து தான் பார்க்கட்டுமே யாரேனும்? அவனுக்கல்லவா தெரியும் அந்தக் கஷ்டம்?

அப்பாடா...! என்ன சுகம்...! என்ன சுகம்...! பெருத்த ஆசுவாசத்தோடு கழிப்பறையை விட்டு வெளியே வந்தேன். கை, கால்அலம்பிக் கொண்டேன். எனக்குக் கிடைத்த இந்த ஆசுவாசம், அவனுக்கு எப்பொழுது கிடைக்கும்? இன்று மதியமா? மாலையா? அல்லது இரவாகுமா? அந்த உப்பு மூட்டை முழுவதும் விற்று முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவனுக்கு? இன்னும் எங்கெங்கெல்லாம் போக வேண்டியிருக்கும் அவன்?

அவனை நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு கனக்க ஆரம்பித்தது. இறைவா! இந்த மனதை ஏனிப்படிப் படைத்தாய்? படைத்ததா? வந்ததா? இருக்கட்டுமே! நல்லதுதானே? முகமறியா ஒருவனுக்காகக் கூட இரக்கம் கொள்வது பெருத்த நேய உணர்வு அல்லவா? அந்தப் பண்பாட்டு அசைவைப் பெற்றதே பெரும்பேறல்லவா?

மீண்டும் தினசரியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தேன். லலிதா கையில் ஜாடியோடு திரும்பிக் கொண்டிருந்தாள். மேலே கும்மாச்சியாக உப்பு நிரம்பியிருந்தது. அது சரிந்து விடாமல் அவள் கை அதை அணைத்து மூடியிருந்தது. “இருக்குன்னு சொன்னே...?”- அவளைப் பார்த்துக் கேட்டேன்.

“இருக்குதான்... யார் இல்லைன்னு சொன் னா? நீங்க வேறே கூப்பிட்டுட்டீங்க... ரொம்ப நேரமா நிக்கிறான் அவன்.. யாரும் வாங்குறாப்புல இல்லை.. பாவமா இருந்தது... உப்பென்ன கெட்டா போகப் போறது? கூடக் கொஞ்சம் கெடந்தா கெடந்துட்டுப் போறதுன்னு வாங்கிட்டு வந்தேன்... உப்பு நல்லா வெள்ளை வெளேர்ன்னு இருக்குங்க.. சில பேர்ட்டக் கொஞ்சம் கலங்கலா இருக்குமாக்கும்...”

“உன் மனசு போல இருக்குன்றே....?”- என் மனதில் ஏற்பட்ட சட்டென்ற ஒரு திருப்தியில் இப்படிப் புகழ்ந்தேன் அவளை. காதில் வாங்கிக் கொண்டாளா தெரியவில்லை. இப்பொழுது தைரியமாய்த் தெருவில் இறங்கி, முழுசாய் என்னைக் காண்பித்துக் கொண்டு, அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தேன். உப்பு மூட்டையை உடம்பில் சாத்தித் தாங்கினமேனிக்கு, வலது முழங்காலை சற்றே மடித்து நின்று கொண்டு, வழித்தோடிய வியர்வையை அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான் அவன்!

‘சைக்கிள் நிப்பாட்டுன சத்தங்கேட்டு ரொம்ப நேரமாகுது... இன்னும் உள்ள வராம என்னா செய்யிது....!’ - பாரதி எட்டிப் பார்த்தாள்.

“அங்க என்னா செடிக்கி காவகாத்து இருக்கியா...? உள்ள வராம....” -வீட்டுக்கு வெளியே போட்டிருந்த முள்வேலியில் முளைத்திருந்த வேலிப்பருத்திச் செடியின் கீழே உட்கார்ந்திருந்தவனைக் கேட்டாள்.... “கொஞ்ச நேரங்கழிச்சு வாரேன்”னு சொல்லிவிட்டுத் திரும்பவும் அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இடதுகை மணிக்கட்டில் கன்னம் தாங்கியபடிக் கண்களை நெடுநேரம் நிலை குத்தவிட்டிருந்தான்.
வழக்கமாக அன்றைய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் வந்தவுடன் அவளுடம் பேசத்துவங்கி விடுவான். அது நிமித்தம் கோபம், வைராக்கியம், சந்தோஷம் எனப் பல விதங்களில் தன் மனநிலையை முகத்தில் வெளிப்படுத்திச் சற்று நேரத்தில் சமநிலையும் அடைவான்.

“இருட்டுற நேரம் பூச்சி பொட்டு ஊறப் போகுது.. உள்ள வந்தாவது ஒக்காரேன்....” சொன்னவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே வந்தான். களைத்த உடம்பால் சுவரோரம் சாய்ந்து அமர்ந்தான். கை, கால், முகத்தைக் கழுவவும் இல்லை. வெள்ளை பூத்த உடம்பிற்கு எண்ணெய் தேய்க்கவுமில்லை.

“டீ வேணுமா...?”

“.........................................”

“குளிக்க தண்ணி காயவைக்கவா.....?”

“வேண்டா... அப்பறங் குளிச்சுக்கிறேன்.” மீண்டும் அமைதியாக இருந்தான்....

“என்ன ஆச்சு இன்னக்கி?”

‘மனசு சரியில்லாம இருக்கும் போல... இல்லனா மாமா இப்டி இருக்காது.... கலகலன்னு பேசும்....’ ஜோதியைத் தூக்கிக் கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சும்! விடுங்கப்பா உங்க மீச குத்துதுன் னாலும் விடாது...! அன்னக்கி ஆக்கிக் குடுத்த சோறு கொழம்பைப் பத்தி சூப்பர்னு சொல்லும்... கிண்டல் பண்ணும்...! ஆளு யாரும் இல்லாட்டி அவசரமா பஸ் பிடிக்கப் போறது மாதிரி கன்னத்துல ஒண்ணே ஒண்ணு முட்டு குடுன்னு தவியாத் தவிக்கும்....! என்னமோ இன்னக்கி உம்முன்னே இருக்கு....!

கட்டடத்துல யாருகிட்டயும் சண்ட போட்ருச்சா... நாளப்பின்ன வேலகீல இல்லியா... இல்ல... பெரிய கொத்தனாரண்ணே வேலையில என்னமும் கொற சொல்லிட்டாரா? என்னான்னு தெரியலையே.... எதுக்கு மாமா பேசாமயே இருக்கு? காசு குடுத்தாலும் சோத்த எறக்கிட்டு கருவாடு வாங்கிட்டு வந்து கொழம்பு வைக்கலாம்...’ அவளின் மனசு பலவாறாய் நினைத்து நிலையை யூகித்தது.

“மாமா அஞ்சுரூவா குடேன்... உப்புக் கருவாடு வாங்கிட்டு வர்றேங்....” குடுத்தான். வாசலைத் தாண்டினாள். அரை கிலோ மீட்டர் நடந்தால்தான் ‘சிங்கராசண்ணன் கடை’ வரும். இப்போது இருட்ட வேற ஆரம்பிச்சுட்டது. வால்கரடு அடிவாரத்தில் அரசாங்கம் புதிதாய்க் கட்டியிருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு அருகாமையிலே அமைத்திருந்தான் வீடு... அதுக்கே பாவம் படாதபாடு! ‘எத்தன நாளக்கித்தே பரதேசிக மாதிரி வீடு வீடா சாமாஞ்சட்ட தூக்கிட்டு அலையிறது... நமக்குன்னு சொந்தமா ஒரு குடிசகிடச வேண்டாமா’ - மனதின் ஓரத்தில் ஐந்தாறு வருடங்களுக்கு முன் முளைத்த நினைப்புக்கு சமீபத்தில்தான் விடை கொடுக்க முடிந்தது. அதுவும் பெரிய கொத்தனாரண்ணன் ஆலோசனையும் ஆதரவும் கொடுக்கப்போயி!

“ஏண்டா பாண்டி....! கரட்டுச்செவ பெரிய கண்ணு தேவரு காட்ட உழுது சென்டு கணக்குல சேல்ஸ் பண்றாருல்ல... அதுல ரெண்டு சென்ட வாங்கிப் போடுடா... நமக்குன்னா அனுசரிச்சு குடுப்பாரு... பெறகு தோது வாக்குல ரெண்டு ரூம்ப கட்டி தகரமோ குடுசயோ போடலாம்டா” -சொன்னார். கரட்டோரம் என்பதால் பத்திரச் செலவெல் லாம் சேர்த்து இரண்டு சென்ட் பத்தாயிரத் திற்குள்ளே முடிந்தது. பெரிய கொத்தனாரண்ணனும், மொத்த காண்ட்ராக்ட் எடுத்து அதில் மிஞ்சி தன் வீட்டுக்கு வெளியே போட்டிருந்த மணல், ஜல்லி, செங்கல், கருங்கல் என தன்னால் முடிந்த மட்டும் உதவினார். இருக்காதா பிறகு...! அவன்தான் சிறு வயதிலிருந்தே சித்தாள், நிமிந்தாள், கொத்தனார் என்று படிப்படியாக அவரிடம் பல வருடங்களாகத் தொடர்ந்து வேலை செய்கிறானே!

பாண்டிக்கு அப்பா இல்லை.... ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒருநாள் தன் தோஸ்துகள் முருகன், ரவி ஜேம்ஸ் மற்றும் பலருடன் ‘சின்ன குளம்’அருகே இருந்த அரசமர அடியில் ‘கிட்டி’ விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மூச்சிறைக்க சைக்கிளில் வந்த அவனின் ஒன்றுவிட்ட சித்தப்பா “வீட்டுக்கு வாடா”ன்னு வேகவேகமாக் கூட்டிட்டுப் போனார்.

அழுகுரல் மத்தியில் மாலையுடன் கட்டை பெஞ்சியில் அப்பா உட்கார வைக்கப்பட்டிருந்தார்! மாரடைப்பில் செத்துப் போனதாக அழுதார்கள். “என்ன பெத்த மவராசா... எந்திரிச்சு வாய்யா....” பலரது மார்புகள் தங்கள் கைகளாலேயே அடிவாங்கியது.... அப்பாவோடு வேலை பார்த்த லோடு மேன்கள் பலர் வந்து போனார்கள்.

அதன்பிறகு புளி தட்டுதல், நாத்து நடுதல், களையெடுத்தல், தேங்காய், மாங்காய் சுமத்தல் என பலவேலைகளையும் அம்மா செய்து குடும்பத்தைப் பார்க்க நேரிட்டது. அப்பா செத்த பிறகு அம்மாவின் களையான முகம் களையிழந்து விட்டது. அவன் அடுத்த ஒரு வருடம் மட்டுமே படிக்கப் போனான். சுத்தமாக ஏறவில்லை. எல்லா டெஸ்டிலும்... பெயில். வகுப்பு டீச்சர் ‘சுமதி’ ஒருநாள் அம்மாவை அழைத்து வரச் சொல்லி “உங்க மகனுக்கு நாலு எருமமாடு வாங்கிக் குடுங்க... அதயாவது ஒழுங்கா மேய்க்கட்டும்” என உரைத்தார். அந்த வருஷத்தோடு சரி புத்தகப்பை தூக்குவதை நிறுத்திவிட்டான்.

சைக்கிள் கடை, டிராக்டர் ஒர்க்ஸ், பல சரக்குக்கடை என ரகரகமாய் வேலைகளை அலசியவனுக்கு எதுவும் ஒத்துப் போகவில்லை.
‘போம்மா அந்தாளு பொழுதன்னைக்கும் பீடி வாங்கிட்டு வரச் சொல்லுது... ஒர்க்ஷாப்பு வேலபாக்குற அந்தண்ணே பொம்பளைகள லகள பண்ணுது.... ரெஸ்டே இல்லாம வேல வாங்குறாங்க’ என, சென்ற வேலைகளையெல்லாம் உதறினான். கிட்டி, குண்டு, பந்து என விளையாடவும் திங்கவும் தூங்கவும் என பல நாள் மறைந்தது.

“குடும்ப நெலம தெரியாம திரியாதடா... உங்கப்பன் என்னா ஏக்கர் கணக்குலயா சொத்த சேத்து வச்சுட்டு போயிருக்கு... ஒன்னு படிக்கணும்.... இல்ல... தாட்டியமா வேல செஞ்சாவது பொளக்கிற வழிய பாக்கணும்...! என்னாடா சொல்ற?” இதுபோல் அம்மா பலதடவை அவன்மேல் கோவப்பட்டது.

“ஜி.டி.நாயுடு... எம்ஜிஆர்.... காமராஜர் இவங்கள்லா படிச்சா முன்னேறுனாங்க... உழைப்பால் உயர்ந்துருக்காங்கய்யா...” இப்படி ஆறுதலா உற்சாகமா நாலு வார்த்தையை அந்த தெருவில் இருந்த நான்கு பேர் சொல்லவும் அவனுக்கு வேலைக்கு போகணும் உழைச்சு முன்னேறணும் என ஆசை வந்தது.

அந்த நாட்களை அனுசரித்துதான் இந்த பெரிய கொத்தனாரின் பழக்கம் ஏற்பட்டது..... “வேலைக்கு ஆள் பத்தலை”ன்னு சொல்லி பக்கத்து வீட்டு மாரியக்கா கூட்டிட்டுப் போச்சு... சுடுகாட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் ஏற்பாட்டில் இருந்தார் கொத்தனார். வேலைக்குச் சேர்த்துக் கிட்டார். முதன் முதலில் முப்பது ரூபாய் சம்பளம்.. ஆரம்பத்தில் கடினமாகத்தான் தோன்றியது. இருந்தாலும் பெரிய கொத்தனாரின் அனுசரிப்பான போக்காலும் மற்றவர்களின் ஐக்கியத்தாலும் அவ்வப்போது கரண்டி பிடிக்கும் ஆர்வம் ஏற்பட்டதாலும் எதிர்காலத்தில் தானும் ஒரு கொத்தனாராகி விட வேண்டும் என எண்ணி நிலைத்தான்.

நாட்கள் கடந்து ஓட ஓட சித்தாள், நிமிந்தாள், கொத்தனார் என உயர்ந்து விட்டான். பெரிய கொத்தனாருக்கு இவனை ரொம்பவும் பிடிக்கும்... தன்னிடம் வேலை பழகிய தொழிலாளர்களில் இவன் மட்டுமே இன்று வரை இவரிடம் நிலைத்து நிற்கிறான். நுணுக்கமாக வேலை பார்க்கும் திறமைசாலி... தான் எடுக்கும் கட்டிடங்களில் இவனுக்கு முதலிடம் கொடுப்பார். சித்தாள், நிமிந்தாள் தேர்வு செய்வது என இவன் விருப்பத்துக்கு விட்டு விடுவார்.

தீபாவளி, பொங்கல் எனப் பல நாட்களில் பண உதவியும் செய்வார். கல்யாணத்தைக்கூட இவர்தான் முன்நின்று நடத்தினார். ஐந்து மாதத்திற்கு முன் அவனின் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்தபோது சக வேலையாட்களும் வந்து போக வேண்டுமென்று எல்லோருக்கும் லீவு கொடுத்தார். காரியம் முடியவும் செலவிற்குப் பணமும் கொடுத்து மனதைத் தேற்றிவிட்டுப் போனார். இன்று அனுதினமும் வாங்கும் ‘இருநூறு ரூபாய்’ சம்பளம் கந்து கட்டுவதற்கும் மனைவி ஒரு மகளுடன் குடும்பம் நடத்துவதற்கும் போதுமானதாயிருக்கிறது. அடுத்தபடியாக அவள் தற்போது மூன்று மாதம் வேறு...! இனி செலவுகளும் அதிகரிக்கும்....
...........
பகலின் சுவடுகள் மறைந்து நட்சத்திர முத்திரையோடு வானம் நிலவைத் தவழவிட்டு இருளை இறக்கியிருந்தது. கருவாட்டு வாசனை தைலம் போல மூக்கை வருடியது.

“ஜோதி சாப்டுருச்சா...?” நெடுநேரம் கழித்து வாய் திறந்தான்.

“ம்.... பள்ளிக் கொடம் விட்டு வந்தவொடனே சாப்ட்டுப் படுத்துருச்சு”

“...........................”

“ஒனக்கு சோறு வைக்கவா மாமா..?”

“கொஞ்ச நேரமாகட்டும்”

மெதுவாய் அருகினில் வந்தாள். “ஏம் மாமா ஒரு மாதிரியாவே இருக்க?.... வந்ததுலயிருந்து சரியா பேசக் கூட மாட்றியே... ஒடம்புக்கு என்னமு சரியில்லயா? திரும்பவும் தலை வலிக்கிதா மாமா” நெத்தியில் கைவைத்துப் பார்த்தாள்.

“......................”

“சொல்லு மாமா, என்னாச்சு...?”

“மனசு சரியில்ல பாரதி... ரொம்ப கஷ்டமாயிருக்கு....!”

“எதுக்கு மாமா ரெண்டாவது புள்ள பொறந்துட்டா வச்சு வளக்குறது கஷ்டமேன்னு எதுவும் யோசிக்கிறியா?”

“ச்சீ....ச்சீ அதெல்லா இல்ல. எத்தன புள்ள பொறந்தாலும் நாம கஷ்டப்பட்டாவது பாத்துதான ஆகணும். அது இல்ல பாரதி... இன்னக்கி கட்டடத்துல ஒரு பாட்டி வேலைக்கி வந்துச்சு....!”

“எந்தப் பாட்டி? என்னாவாம்?”

அன்று காலை சூரியன் சுடுவெயிலை உதிர்க்க துவங்கிய நேரம். சுமார் பத்து மணியிருக்கும். கட்டிடத்தில் பூச்சு ஆரம்பம். பால் காய்ச்ச இன்னும் பதினெட்டு நாட்கள்தான் உள்ளன. நான்கு நாட்களுக்குள் பூச்சு முடிய வேண்டும். வீட்டுக் காரர் வேறு அணத்துகிறார். கைக்கு நின்று கலவை அள்ளிக் கொடுக்க போதுமான சித்தாள் இல்லை..... “வேலைய பாருங்க தியேட்டர் பக்கம் போயி ஆளு யாரும் இருந்தா கூட்டிட்டு வாரேன்” - பெரிய கொத்தனார் சொல்லிவிட்டுப் போனார்.

போனவர் ரொம்ப நேரங்கழித்து ஒரு பாட்டியை அழைத்து வந்தார். சுருங்கிய கருப்பு முகம், உள்வாங்கிய கண்கள், பிதுங்கிய உதடுகள், சிவந்த ஈரக்கண்கள், சாணிக்கலரில் அழுக்கு நூல் சீலை அணிந்து கையில் ஈயத்தூக்கு வாளியுடன் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க வகையில் அந்த பாட்டி காட்சி தந்தது. சித்தாள் வேலைக்கு வந்திருக்கிறதாம்.

‘வேலையின் அவசரம் புரிந்து கொண்டும் அண்ணன் ஏன் இப்படி செய்கிறார்?.. வயதுப் பிள்ளைகளே சுறுசுறுப்பா வேலை செய்யிறது இல்ல... இந்த லட்சணத்துல....’ “என்னாண்ணே நீங்க? நாலு நாள்ல பூச்சு முடியணும்னு வீட்டுக்காரங்க அவசரப்படுத்துறாங்க... கெழவிகள வச்சு எப்பிடிண்ணே வேல பாக்குறது. ஆளு இல்லாட்டி பெசாம வந்துருக்க வேண்டியதுதான... அஞ்சுபத்த குடுத்து அனுப்புங்கண்ணே” அப்படி இப்படி என்று பாட்டியை ஏற்க மறுத்தான்.
“பாவம்டா கெஞ்சிக் கெதறி வந்துருக்கு... இன்னக்கி ஒருநாள் மட்டும் வச்சு வேல பாருடா....”

“அண்ணே நெலம தெரியாம பேசாதீங்க.. நீங்க வேண்ணா அந்தக் கெழவிய வச்சு வேல பாருங்க... நான் வீட்டுக்கு போறேன்.....” எடுத்தெறிந்து பேசினான். அவனைப் பொறுத்தவரை தன் கைக்கு நிற்பவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.... கேட்டது உடனுக்குடன் வர வேண்டும். கலவை பதம் சீராக இருக்க வேண்டும்... அன்றைய வேலையை தீர்மானித்து விட்டால் நேரம் பாராது முடிக்க வேண்டும் எனச் செயல்படுபவன். அதனால்தான் என்னவோ ‘இந்தக் காலத்துல இப்பிடி ஒரு வேலைக்காரனா’ என்று அவனை எல்லோருக்கும் பிடித்துப் போனது.

சில நேரங்களில் கோவப்படுவதும் உண்டு. இறுதியாக “இன்னக்கி ஒருநாள் மட்டும் கெழவி வேல பாக்கட்டும்” என ஏற்றுக் கொண்டான்.
பாட்டிக்கு கட்டிட வேலையில் முன் அனுபவம் கிடையாது போல. சிரமப்பட்டது. மட்டக்கம்பு கேட்டால் சாரக்கம்பை தூக்கிக் கொடுத்தது. ‘புட்டுக் கலவை, ஈரக்கலவை, உதிரிக்கலவை எதுன்னு தெரியலை! ஒவ்வொன்னுக்கும் திணறியது... அதற்குத்தக்கபடி சுவரில் பூசிக் கொண்டிருந்த கலவைகள் ஆங்காங்கே சில இடங்களில் பொத்பொத்தென விழுந்தன.

மேலும் டென்ஷனாகிப் போனான்... கிழவி யுடன் சேர்ந்து தானும் தட்டுத்தடுமாறுவதாய் உணர்ந்தான். “காடு வா வாங்குது... வீடு போ போங்குது... இந்த வயசுல ஒன்னயெல்லாம் எவெ வேலைக்கி வரச் சொன்னது? ஒரே இம்சையாயிருக்கு....”

“சனியனா வந்துருக்கு...”

“அங்கிட்டு போயி தொல....”

சக வேலையாட்கள் முன் கிழவியைச் சகட்டு மேனிக்குப் பேசினான். ஆத்திரத்தைக் கொட்டினான். ஒரு கட்டத்தில் “ஒரு மயிருஞ் செய்ய வேணாம்” என ஓரங்கட்டினான். பின்பு ‘இன்னக்கி ஒரு நாள் மட்டும் வேல செய்யட்டுந் தொலஞ்சுபோ’ என தனக்குள் சமாளித்துக் கொண்டான்.
அவ்வப்போது பாட்டியின் மீதான முனங்கள். என்னவோ தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

மத்தியானம் இரண்டு மணி... சாப்பாட்டு நேரம். ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டார்கள். பாட்டியும் ஆளில்லாத ஒரு மூலையில் உட்கார்ந்தது... கட்டிடத்தின் குளுமை வேலையாட்களுக்கு சற்று இதமாக இருந்தது.

“கெழவிய எங்கடா காணாம்....”

“ஆளு வேலைக்கி புதுசா தெரியுதே....”

“அதுக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன்யா.... பாவம் அதப்போயி கத்திக்கிட்டு....”

அவனின் மனசும்கூட கொஞ்சம் உணர்வுக்கு இடங்கொடுத்தது.. ‘நாம அந்த கெழவிய ஓவரா பேசிட்டமோ... பாவம் ரொம்ப கஷ்டப் பட்டிருக்கும்’ மனசு அல்லாடியது. உள்ளத்தின் ஈரத்தை வெளிக்காட்டாத வண்ணம் அந்தப் பாட்டியிடம் ‘சும்மா ரெண்டு வார்த்தை பேசணும்’ போலத் தோணியது.

‘எங்கிட்ட அந்தக் கெழவி மொகங்குடுத்து நல்லா பேசுமா?.... பரவாயில்ல பேசிப் பாப்போம்....’ கொஞ்ச நேரங்கழிச்சு கிழவியைத் தேடிப் போனான். மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி இவனை பார்த்ததும் ‘அவக்கு துவக்கு’ என்று அவசரமாக பழைய சோறை வாய்க்குள் தள்ளியது. “வேல ஆரம்பிக்க லேட்டாகும் மெதுவா சாப்டு...” பழைய சோறு, மட்டை ஊறுகாய். அருகில் அமர்ந்தான். இரண்டொரு வாய் சாப்பிட்டு விட்டு பாட்டி கேட்டது ‘சாப்புட்டாயாப்பா...!” கண் கலங்கியது : “நீ சாப்டு பாட்டி.”

“ஏம்பாட்டி நா உன்னய வஞ்சதுனால எம்மேல எதுவுங்கோவமா?...”

“.... இல்லப்பா....! கோவப்பட்டு ரோஷப்பட்டு என்னய்யா ஆகப் போகுது.. இந்த கெழவி வாங்கி வந்த வரம் அப்பிடி” பழைய சோற்றிலே பாட்டியின் கண்ணீர்த் துளிகளும் விழுந்து சேர்ந்தன. உதடுகள் நெளிந்தன.

“நீ எங்க இருக்க...? இதுக்கு முன்னாடி ஒன்னய இந்த ஏரியா பக்கமா நான் சரியா பாத்ததில்லயே....”

“...............................................”

“பிள்ளைகள்ளாம் எங்க இருக்காங்க? உன்னய யாரும் பாக்கலயா....?” பாட்டியின் வாயும் கண்களும் கசிந்தன.

“என் சொந்த ஊரு இராமேஸ்வரம் பக்கத்துலய்யா.. மீன் பிடிக்கிறதுதா எங்க பொழப்பு... என் வீட்டுக்காரு மொதல்லயே எறந்துட்டாரு... ஒரே ஒரு புள்ள இருந்தான்.... வாட்டசாட்டமான ஒடம்பு... கெட்டிக்காரன் அவருக்கு பெறகு அவெந்தான் வீட்ட பாத்துக்கிட்டான். வாரத்துல நாலுநாள் கடலுக்கு போய் வருவான்... இருபத்து நாலு வயசிருக்கும்.... அவனுக்கு பொண்ணு பாக்குற நேரம்.... ஒரு நா கடலுக்கு போனவன்...” அவன் இமை கொட்டாமல் கேட்டான்.

தாரை தாரையாய் நீர் கொட்டியது... பீறிக்கொண்டு வந்த அழுகையை முந்தானை கொண்டு பொத்தியது.... பாட்டி கொஞ்ச நேரம் அதே நிலையிலே இருந்தது.....

“ஏம்பாட்டி அழுகுற... கடலுக்குப்போயி...? என்னாச்சு....?” கண்களை மட்டும் கசியவிட்டபடி “கடலுக்கு மீன் பிடிக்க போனவே திரும்பவேயில்ல.....!”

“.............”

“சாயந்தரோ ஆறு மணிக்கு மேலதா தகவல் கெடச்சது... மீன்பிடிக்கப் போன அவனையும் அவெ கூட்டாளிகளயும் தீவுரவாதிகன்னு நெனச்சு இவங்க ராணுவம் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு....!”

“.............”

அவனுக்கு பேச வாய் வரவில்லை. பாட்டிக்கு விழிகள் ஊற்றாய் மாறின. “புள்ளயில்லாம ரொம்ப வருஷங்கழிச்சு பொறந்தவனுய்யா... சுட்டு சாம்பலாக்கிட்டாங்க... அவெம் போன இந்த அஞ்சு வருஷமா மனசுல சீக்கு வந்தவளா சுத்திட்டு இருக்கேன்... ஏ ஊரு பக்கமா இருக்க மனசு கேக்கல... கடலு கரைய பாக்குறப்பயெல்லாம் அழுகையா வரும்.... செத்துப் போகலாம் போலத் தோணும்.. அப்பிடிச் செஞ்சா அது கோழத்தனம்... அதா இந்த ஊரு பக்கமா வந்து பொழுதக் கழிச்சுட்டு இருக்கேன்....” அமைதி!

“இப்ப எங்க இருக்க பாட்டி?...”

“இரயிலுவேடேசனு பக்கத்துல நரிக் கொறவங்காலனி ஓரத்துல இருக்கே...போன மாசம் வரைக்கு ஏலக்கா பொறக்கப் போனேன்... ரெண்டு கண்ணும் மங்கலாயிருச்சு... பெரியாஸ் பத்திரில போயி ஒவ்வொரு கண்ணா ஆப்ரேஷேன் பண்ணுனேன்... என்னால கூர்மையா பாத்து ஏலக்கா பெறக்க முடியல.... பிச்சை யெடுக்கவும் மனசு இடங்கொடுக்கல... பத்து நாளா சோத்துக்கே கஷ்டமுய்யா... என்னால இந்தக் கட்டட வேல செய்ய முடியுமான்னு தெரியல.. வேற வழியில்லாமதேய்யா வந்தேன்... என்னய வச்சு வேல செய்ய ஒனக்குக் கஷ்டமாயிருக்காய்யா....”
ரொம்பவே கஷ்டமாகத்தானிருந்தது. பாட்டியின் சோகத்தைத் தெரிந்து கொண்ட பிறகு.....

“ச்சே... ரொம்ப பாவம் மாமா அந்த பாட்டி.....”

“வாழ்க்கையில நாமதான் கஷ்டபடுறோம்னு நினைக்கிறோம்... ஆனா நம்மல காட்டிலும் வேதனப்படுறவங்க நெறயப்பேரு இருக்காங்க பாரதி.... அந்த பாட்டி நெலம தெரியாம நான் அத ரொம்பவும் பேசிட்டேன்.. அத நெனச்சாதா மனசுக்கு கஷ்டமாயிருக்கு... பாவம் இந்த வயசான காலத்துல எப்படி பொளைக்க போகுதோ....” சாப்பிட்டார்கள். இரவு எட்டரை மணியிருக்கும். அவன் தயங்கித் தயங்கிக் கேட்டதற்கு அவள் தெளிவாய்ப் பதில் சொன்னாள்:

“நீங்க ஏன் அப்டி நெனைக்கிறீங்க... உங்கம் மாவோ எங்கம்மாவோ இப்ப உசுரோட இருந்தா அவங்கள வச்சு நாம பாக்க மாட்டமா?”

“.............................”

“இரக்கப்பட்ட வசதி படைச்சவங்க முதியோர் இல்லம் அது இதுன்னு கட்டி வயசானவங்கள ஆதரிக்கிறாங்க... நாமளும் நம்மால முடிஞ்சத செய்யிவோம். அந்தப்பாட்டி பாரமாயில்ல... பாசமாயிருந்துட்டு போகட்டும்.. செத்துப்போன உங்கம்மாவா அத நெனச்சுக்குவோம்... நமக்கு ஆக்குற சோறு தண்ணியில அதுவும் வயிற நனைச்சிக்கிறட்டும்.. ஒதுக்குப் பொறமா இருக்க நமக்கு ஒத்தாசையா இருக்கட்டுமே...” -பாரதி அவன் மேல் சாய்ந்து ஆறுதலாய்ச் சொன்னாள்.

“போங்க மாமா; பாட்டிய கூட்டிட்டு வாங்க....”

“இந்த மாதிரி அனாதையா அலையிற வயசான வங்க இன்னும் எத்தன பேரு இருக்காங்களோ..... எல்லா குடும்பமும் இதுபோல ஒவ்வொருத்தரயும் ஆதரிச்சா நல்லாயிருக்கும்ல பாரதி!” சந்தோஷம் அடைந்தவனாய் உள்ளத்தை ஊற்றினான். ‘இருட்டிவிட்டதால் இப்போது இந்தக் கரட்டுப் பாதையில் பாட்டியை அழைத்து வருவது சிரமம். எனவே, நாளை பொழுது சாய்வதற்குள் கூட்டி வந்துவிடலாம். பாட்டி பாதையையும் பார்த்துக்கிணும்...’

“இந்த விசயத்த பாட்டிட்ட சொல்லிட்டு..

இதக் குடுத்துட்டு வந்துர்றேன். பாரதி...” எனத் தூக்கு வாளியில் சோறும், கருவாட்டுக் குழம்பும் வாங்கிக் கொண்டு தூரத்து மின்கம்பமும் நிலவும் உதிர்க்கிற வெளிச்சத்தின் உதவியுடன் சைக்கிளை மிதித்தான்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com