Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
யதார்த்தவாதமும் தலித் நாவல்களும்
எஸ்.தோதாத்ரி

இன்று இலக்கியக் கொள்கை உலகில் உரத்த குரலாகக் கேட்பது ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது’ என்பதாகும். இதனைப் பின் நவீனத்துவவாதிகள் திறமையாகச் செய்கிறார்கள். இதற்கு மாற்றாக அவர்கள் முன்வைப்பது மாஜிக்கல் ரியலிசம் என்ற மாந்திரீக யதார்த்தவாதம் என்பதாகும். தலித்தியவாதிகள் பின் நவீனத்துவத்தினை ஏற்றுக் கொண்டு யதார்த்தவாதத்தினை போதாது என்று கூறுகின்றனர். யதார்த்தவாதம் மொத்தத்தைக் (Total, Universal) காணும் இலக்கியக் கொள்கையாகும். எனவே, தலித் பிரச்சனையைத் தனித்துக் காண அக்கொள்கை போதாமல் உள்ளது. அது மொத்தத்தின் வன்முறை சார்ந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தலித் இலக்கியம் என்பதன் கூறுகளாக அ.நயூன் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்: “சாதியை ஒழிப்பது, தலித் பிரச்சனைகளைப் பேசுவது, கலக இலக்கியத்தினை உருவாக்குவது, கடுமையான அரசியல் எதிர்வினையை உருவாக்குவது, ஒடுக்கப்பட்ட நிலைமையின் ஆழமான உளவியல் உலகத்தை நோக்கிப் பார்வை நீள்வது, பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற தலித் உணர்வை உசுப்பிவிட்டு அவனை ஒடுக்கப்பட்ட தலித்தோடு அடையாளம் காணச் செய்வது, தலித் விடுதலைப் போராட்டத்தின் ஒரு வடிவமாக இயங்குவது, எதிர்மறையான சொல்லாடல்களைப் பற்றி நிற்பது, புதிய தொன்மங்களை நிர்மாணம் செய்வது, மரபுகளை உடைப்பது, தலித் மொழியால் எழுத்து வடிவ முறையை மாற்றுவது, இலக்கியத்திற்கென வரையறுக்கப்பட்ட எல்லாவிதமான அத்துக்களையும் மீறுவது, நாட்டுப்புறக்கலை மரபுகளின் நீட்சியாக விளங்குவது” (தலித்தியம்... நயூன் 86 - 87)

மாற்குவின் ‘யாத்திரை’ துவங்கி, சோலை சுந்தர பெருமாளின் ‘மரக்கால்’ வரையுள்ள நாவல்களில் இக்கூறுகள் அனைத்தையும் காணலாம். டி.செல்வராஜ், பொன்னீலன், கு.சின்னப்பபாரதி ஆகியோரது நாவல் களில் இவற்றின் பல கூறுகளைக் காணலாம். ஆனால் தலித் இலக்கியவாதிகள் மலரும் சருகும், கரிசல், தாகம் போன்ற படைப்புகளை சுத்த தலித் நாவலாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் கூற்றுப்படி இந்தப் படைப் பாளிகள் வர்க்கப் போராட்டம் என்ற பார்வைக்குள் தலித்தியத்தினை அடக்குகிறார்கள் என்பதாகும். இந்த விமர்சனம் என்பது மறுபடியும் யதார்த்தவாதம் என்பது சரியல்ல என்று கூறுவதற்கு இணையானதாகும். ஏனென்றால் செல்வராஜ், பொன்னீலன், சின்னப்பபாரதி ஆகியோர் சோஷலிச யதார்த்தவாதிகள் ஆகிவிடுகிறார் கள். எனவே, அவர்கள் மொத்தப் பார்வை உடையவர் கள் என்று அவர்களைத் தலித்தியக் கொள்கையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

இவ்வாறு யதார்த்தவாதமானது புறக்கணிக்கப்படுகிறது. தலித் இலக்கியங்களில் யதார்த்தவாதத்தின் கூறுகள் உள்ளன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் இலக்கியப்போக்கு ஒரு கோட்பாடு அல்ல. யதார்த்தவாதம் ஒரு இலக்கியக் கோட்பாடு ஆகும். தலித் இலக்கியக் கொள்கை என்பதனை வைத்துக் கொண்டு எல்லா இலக்கியங்களையும் விளக்க முடியாது. யதார்த்தவாதம் என்பதன் மூலம் எல்லா இலக்கியங்களையும் விளக்க முடியும். இது இலக்கியக் கோட்பாட்டாளர்கள் கண்ட அனுபவம். எனவே, ஒரு சில தலித் நாவல்களில் யதார்த்தவாதம் செயல்படும் முறையை நாம் காண இங்கு முயற்சிப்போம்.

தலித் நாவல் என்ற வரிசையில் இன்று பல வெளி வந்துள்ளன. அவற்றில் அழகிய பெரியவனின் “தகப்பன் கொடி”, தருமரின் “கூகை”, சோலை சுந்தரபெருமாளின் “மரக்கால்” ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம்.

முதலில் அழகிய பெரியவனின் தகப்பன்கொடியை எடுத்துக் கொள்வோம். நாவலின் மையமான பிரச்சனை பஞ்சமி நில மீட்சிப் போராட்டம் ஆகும். இது ஒரு காலத்தில் இனாம் நில மீட்சிப் போராட்டம் என்பது போன்றது. தலித்துக்கள் கதை என்று அழகிய பெரியவன் கூறினாலும், இதன் உள்ளடக்கம் வர்க்கப் போராட்டம் தான். ஆசிரியர் இதனை உணர்ந்து சித்தரிக்கவில்லை என்றாலும், நாவலின் போக்கு இதனைக் காட்டுகிறது.

அம்மாசியின் மூலமாகக் கதை நகர்கிறது. அம்மாசி ஊரை விட்டுச் செல்கிறான். அவனுக்குப் பிழைப்பதற்கு வழியில்லை. அவனது கிராமத்தில் ஆண்டைகளாக உள்ள மேல்சாதிக்காரர்கள் பறையர்களை ஒதுக்கி வைக்கின்றனர். தீண்டாமைக் கொடுமை, பண்ணையடிமைச் சுரண்டல் ஆகியன அம்மாசியை நிலத்தை விட்டு வெளியேறச் செய்கின்றன. திருமலய்யன் அவர் களது நிலத்தை ஏமாற்றிப் பிடுங்கிக்கொள்கிறான். அம்மாசியின் குடும்பம் முழுவதும் தாமுத்தனுக்கு அடிமையாகிறது. தாமுத்தனை ஒரு கட்டத்தில் அம்மாசி எதிர்க்கிறான். பின்னர் தோல் தொழிற்சாலையில் வேலைக்குச் செல்கிறான். அந்த ஆலை சாய்பு ஒருவருக்குச் சொந்தமானது. அங்கு அவன் முதலாளித் துவச் சுரண்டலுக்கு உள்ளாகிறான்.

அங்கு தோழர் ரங்கசாமியின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கிறது. இது அம்மாசியிடம் ஒரு குணாம்ச மாறுதலைக் கொண்டு வருகிறது. அம்மாசியிடம் ஏற்படும் மாறுதலை அழகிய பெரியவன் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். உழைக்கும் வர்க்கம் உணர்வு பெறும் பொழுதுதான் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்த மாறுதல் மூலம் ஆசிரியர் காட்டுகிறார். இங்கு அம்மாசி இரண்டு விதமான சுரண்டலுக்கு உள்ளாகிறான். ஒன்று நிலப்பிரபுத்துவச் சுரண்டல்; இரண்டு முதலாளித்துவச் சுரண்டல்- இந்த இரு சுரண்டலிலிருந்தும் விடுபடுவதற்கு அவன் நாடுவது தோழர் ரங்கசாமியை ஆகும்.

‘மரக்கால்’ நாவல் நந்தன் கதையாகும். இது அடிப்படையில் வர்க்கப் போராட்ட நாவல். ஆண்டைக்கும், அடிமைக்குமான முரண்பாடு மதவடிவம் பெறுவதுதான் நந்தன் கதையாகும். இதனைப் பலர் கையாண்டாலும் நந்தனது கண்ணோட்டத்தில் இதனை சோலை சுந்தரபெருமாள் செய்துள்ளார். இதுவும் யதாத்தவாத நாவல் ஆகும். மேலும், இது சோஷலிச யதார்த்தவாதத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதனை சோஷலிச யதார்த்தவாத வரலாற்று நாவல் என்று கூட அழைக்கலாம்.

இந்த இரு நாவல்களிலும் யதார்த்தவாதத்தின் கூறுகளைக் காணலாம். இவற்றில் சமூக ஆய்வு என்பது மிக ஆழமாக இடம் பெறுகிறது. அழகிய பெரியவன் ஆய்வு செய்ய விரும்புவது அடித்தளத்தில் உள்ள மக்களது வாழ்வு ஆகும். இம்மக்களைச் சூழ்ந்துள்ள மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை விவரிக்கிறார். அவற்றினை இவர்கள் மீறும் நிகழ்ச்சிகளையும் பதிவு செய்கிறார். இந்தப் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தும் அடிப்படையைச் சுற்றிச் சுழல்கின்றன. இந்த அடிப்படை மாறும்பொழுது பழைய நம்பிக்கைகள் தகர்கின்றன. அம்மாசி நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பிற்கு மாறும் பொழுது அவனிடம் ஏற்படும் குணாம்ச மாறுதல் இதனைக் காட்டுகிறது. இதனை அழகிய பெரியவன் மிக நுணுக்க மாகக் காட்டுகிறார்.

“மரக்கால்”நாவலில் இடம் பெறும் ஆய்வு பண்ணையடிமை முறை பற்றியது. நந்தனது ஆண்டை முத்து தீட்சிதரிடமிருந்து சில உரிமைகளுக்காக நந்தன் போராடுகிறான். சோழர்கள் காலத்தில் இடம் பெற்ற பல சாதீய மோதல்கள் அடிப்படை மாறுதலுக்கானது அல்ல. அவை சில உரிமைகளைப் பெறுவதற்காக மட்டுமே இடம் பெற்றன. சில சாதியினர் தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக சில புதிய சலுகைகளைப் போராடிப் பெற்றனர். அச்சலுகைகள் வழங்கப்பட்டவுடன் பண்ணையடிமை முறை தொடர்ந்தது. நந்தனது போராட்டமும் அத்தகையது. சிவதரிசனம் கிடைத்தவுடன் நந்தனது போர்க்குணம் மங்கி விடுகிறது. இது மதவடிவம் பெற்று முக்தி, சிவனுடன் ஐக்கியமாதல் ஆண்டவன் மீது பக்தி என்ற உருவங்களை எடுக்கிறது. இதனை மரக்கால் நாவல் ஆய்வுக் குட்படுத்துகிறது. நந்தனது கலகம் என்பது அந்தக் காலகட்டத்தில் இத்தகைய முடிவினைத்தான் எட்டும்.

இதில் பண்பாட்டுப் போராட்டம் வெளிப்படையாக இருந்தாலும், உள்ளடக்கம் ஆண்டை -அடிமை முரண்பாடு ஆகும். நெல்லை அளந்துவிட்டு வெறும் மரக்காலைச் சுமந்து கொண்டு நந்தன் செல்வதன் மூலம் இதனை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இது அந்நியமயமான உழைப்பு. உழைப்பின் பலனான நெல் நந்தனுக்கு இல்லை. அது ஆண்டைக்கு உரியது. இது நந்தனது சிந்தனை உலகில் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. இதுசிவ பக்தி என்ற வடிவத்தினைப் பெறுகிறது.

யதார்த்தவாதம் மையப்படுத்துவது வகைப்பாடான கதாபாத்திரங்கள் ஆகும். ஏங்கல்ஸ் இதற்கு ஒரு வரையறை அளித்துள்ளார். “வகைப்பாடான கதாபாத்திரங்கள் வகைப்பாடான சூழ்நிலைகளில்” என்பது அது. இதன்படி இக்கதைமாந்தர்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட முறையில்தான் நடந்து கொள்வர். இந்த நாவல்களில் இடம் பெறும் உடைமை வர்க்கத்தினரை எடுத்துக் கொள்வோம். எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆண்டைகள் ஒன்று போலத் தான் இருக்கின்றனர். தகப்பன்கொடியின் திருமலய்யன், தாமுத்தன், சாய்பு எல்லோரும் ஒரே வர்க்கத்தினர்தாம். அவர்கள் மொத்தச் சுரண்டலின் பிரதிநிதிகள். அவர்கள் பண்பாட்டு ரீதியாக வேறுபட்டிருந்தாலும் உழைப்பாளியைச் சுரண்டுவதில் ஒன்றானவர்கள். திருமலய்யன் அம்மாசியின் நிலத்தினை ஏமாற்றிப் பெற்றுக் கொள்கிறான். தாமுத்தன் அம்மாசியை அடிமையாக்குகிறான். சாய்பு அம்மாசியைப் பாட்டாளி ஆக்குகிறான். இவர்கள் அனைவரும் ஒரே தன்மையர். இவர்கள் ஆளும் வர்க்கத்தினர்.

‘மரக்கால்’ நாவலில் முத்துச்சாமி தீட்சிதர், அவர் பற்றிய சித்திரம் மிக ஆழமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரது வர்க்கத் தன்மைக்கு உதாரணம் கனகதாசி. அவள் மகள் நீலாம்பாரி ஆகியோரிடம் உள்ள உறவு ஆகும். இந்த உறவு புறத்தோற்றத்திற்கு பால் உறவாக இருந்தாலும், அகத்தோற்றத்தில் பிரபுத்துவ ஆதிக்க உணர்வினைக் காட்டுவதாகும். மேலும் அவர் நந்தனுக்கு அனுமதி வழங்குகிறார். ஏனென்றால் அடிமைகள் பொருளாதார உரிமைகளுக்காகப் போராடினால் நில உடைமை தகர்ந்துவிடும். இதற்கு சமணம் என்ற மாற்று மத அபாயத்தினைக் காட்டி வைதீக மதத்தினைப் பாதுகாக்கவே இச்செயல் என்ற விளக்கமும் முத்துச்சாமி தீட்சிதர் போன்றவர்களால் முன் வைக்கப்படுகிறது. முத்துச்சாமி தீட்சிதரின் இச்செயலை மற்ற ஆண்டைகள் (முதலியார், உடையார், அகமடியர், மறவராயர்,) எதிர்க்கவில்லை. மௌனமாக ஆதரிக்கின்றனர். ஏனென்றால் இவர்கள் அனைவரும் வகைப்பாடான பாத்திரங்கள்.

உழைக்கும் கதாபாத்திரங்கள் அம்மாசி, மரக்காலன், நந்தன் ஆகியோரும் இதே போன்று வகைப்பாடான பாத்திரங்களே. இவை அனைத்தும் இந்த நாவல்களை தலித் இலக்கியம் என்ற எல்லையிலிருந்து விரிவடைந்து யதார்த்தவாதம் என்ற வட்டாரத்திற்குள் கொண்டு வருகின்றன எனலாம்.

- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com