Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
வர்க்கப் பார்வையில் பெண்மை
ச. தமிழ்ச்செல்வன்

ஆண்மை - பெண்மை என்பவை வெறும் உயிரியல் ரீதியானவையோ உடலியல் ரீதியானவையோ மட்டும் அல்ல. கடவுளால் அல்லது இயற்கையால் இப்படி இருக்கக்கடவது எனப் படைக்கப்பட்டவையும் அல்ல. நூற்றாண்டுகளாக மனித குலம் கடந்து வந்த பாதையில் - வரலாற்றின் போக்கில் - அவர்கள் கட்டமைத்துக் கொண்ட சமூக ஏற்பாடுகளின் - சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகளின் பகுதியாகவே ஆண்மையும் பெண்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆண்மை அல்லது பெண்மை என்பவற்றின் பொருளும் பரிமாணமும் முக்கியத்துவமும் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறக் கூடியவையே. மாறிக் கொண்டேதான் வந்திருக்கின்றன.

இது தொடர்பாகப் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் வேறு வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. மார்க்சிய சிந்தனைப் பள்ளிகள் ஆண் - பெண் உறவு, ஆண்மை - பெண்மை மற்றும் குடும்பம் இவை பற்றியெல்லாம் விரிவான ஆழமான முழுமையான பார்வையை முன்வைக்கிறது. பாலினம் அல்லது பால்பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தமல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயல்பாட்டு ரீதியானவை மாத்திரமல்ல, சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக - பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம், பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை - பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

புரிதல் என்பது எப்போதும் இயங்கியல் ரீதியானது. இந்த உலகத்தை மனிதன் புரிந்து கொள்வது அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவோ அதை வெறுமனே வியாக்கியானம் செய்யவோ அல்ல. மாறாக அதை இன்னும் சிறந்த உலகமாக மாற்றுவதற்காக.

மனித குலம் இரண்டு விதமான பொருளியல் நடவடிக்கைகள் மூலம் தன்னைத்தானே வாழ வைத்துக் கொள்கிறது. ஒன்று உற்பத்தி. இன்னொன்று மறு உற்பத்தி. ஒரு சமூகம் தனக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகச் செய்யும் சகல நடவடிக்கைகளையும் உற்பத்தி என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. மறு உற்பத்தி என்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இச்சமூகத்துக்குத் தருவது - இதில் வெறும் உடம்பாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதை மட்டும் மறுஉற்பத்தி என்று சொல்வதில்லை. இந்த உலகத்தின் போக்கை - நிலவும் வாழ்முறையை ஏற்று அதற்குத் தக்கவாறு குழந்தைகள் தம்மை மாற்றியமைத்துக் கொள்வது உள்ளிட்டதுதான் மறுஉற்பத்தி. அவ்விதம் தகவமைக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே அச்சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளின் படிநிலையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை - பாத்திரத்தை - எதிர்ப்பின்றி ஏற்று வாழப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுவின் மகன் நிலப்பிரபுவாக கூலியின் மகன் கூலியாக, பிரச்சனை இல்லாமல் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு உற்பத்தி முறை அமலில் இருந்து வந்துள்ளது - வருகிறது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம் என.... அவ்வச்சமூக ஏற்பாட்டுக்கேற்ற மக்களைத் தயாரிக்கும் பாசறைகளாகக் குடும்பங்கள் கடமையாற்றுகின்றன. பிள்ளைகளை மறு உற்பத்தி செய்யும் உடலியல் வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உற்பத்தி முறையில் வேறொரு முக்கியப்பணியை வர்க்க சமூகம் வழங்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் தமக்குரிய - தமக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் மனப்பூர்வ மாக உட்கார்ந்து கொள்ளும் பிள்ளைகளாக மனிதர்களைப் பயிற்றுவிக்கிற கடமை. இதையே சமூகவயமாக்கல் என்கிறோம். குடும்பமும் மதமும் தான் இதில் பிரதானப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் குடும்ப விளக்குகளாகவும் பக்தியின் உருவங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுதான். பண்பாட்டுக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து தலைமுறை தலைமுறைக்கும் கடத்திச் செல்பவர்களாகவும் மத ஆச்சாரங்கள் கடமைகள் குடும்பச் சடங்குகளை வழுவாது கடைப்பிடிப்பவர்களாகவும் பெண்கள் வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த வர்க்கக் கடமையை நிறைவேற்றத்தான்.

இந்தப் புரிதலோடு பண்பாடு என்றால் என்ன என்கிற கேள்விக்குள் நாம் புக வேண்டும். பண்படுத்துவது எதுவோ அதுவே பண்பாடு. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்றே கலித் தொகையும் கூறுகிறது. சமூகத்தின் பாடறிந்து - செல்நெறி அறிந்து - ஒழுகுதலே பண்பாடாகிறது. நிலத்தைப் பண்படுத்துவதை Agriculture என்கிறோம். மனதைப் பண்படுத்துவதை Culture என்கிறோம். யார் நிலத்தை யார் பண்படுத்துவது நல்லது என்று நாம் கேட்பதில்லை. யார் மனதை யார் பண்படுத்துவது யாருக்கு நல்லது என்றும் நாம் கேட்பதில்லை.

ஆதிகாலம் தொட்டு - இனக் குழு சமூகத்திலிருந்து - மனித குலம் தன் வாழ்வனுபவத்தினூடே உட்செறித்த மதிப்பீடுகள் வாழ்வின் அர்த்தம் பற்றிய புரிதல்கள், நடை, உடை, பாவனை எனப்பெறும் வாழ்முறைகள் எல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பர். ஆனால், வர்க்க சமூகமாக மனித குலம் பிளவுண்ட பிறகு பண்பாட்டுக்கு வேறு பணிகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்னும்போது ஆண்மை, பெண்மை, குடும்பம், பண்பாடு என்கிற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் - வர்க்க நலன் என்பதை நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் பண்படுத்தும் பணி பிரதானமாக மனித மனதின் பொதுப்புத்தி எனப்படும் Common sense என்கிற தளத்தில்தான் வலுவாக நடக்கிறது. பட்டறிவும், வாழ்பனுபவமும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் (அது பெற்றுள்ள இடத்தின் காரணமாக இயல்பாகவே) சிந்தனைகளும் கலந்த கலவைதான் பொதுப்புத்தியாக வடிவெடுக் கிறது. பொதுப்புத்தியில் எல்லாம் கலந்துதான் கிடக்கும். நம்பிக்கைகள், சமூக விழுமியங்கள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் என எல்லாமும் குழம்பிக் கிடக்கும். அதில் சக்திமிக்க தலையீடு செய்து ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமான திசை வழியில் மனித மனங்களை வழி நடத்திடப் பண்படுத்துகிறது.

பண்படுத்தும் இவ்வர்க்கக் கடமையை நிறைவேற்றும் தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் தொழிற்சாலைகளாக இருப்பவை பண்பாட்டு நிறுவனங்கள். குடும்பம், கல்விச் சாலைகள், மதம், மீடியா, கலை - இலக்கியங்கள் என விதவிதமான பண்பாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் சாதி எனும் நிறுவனம் நம் சமூகத்தின் வர்க்க ஏற்பாடாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும், இருவிதப் பணிகளைச் செய்கிறது. இந்நிறுவனங்களின் எல்லாப் பணிகளையும் விரித்துப் பார்க்க இங்கு இடமில்லை. ஆண்மை - பெண்மை உருவாக்கத்தில் இவை எவ்விதமான பண்படுத்தலைச் செய்கின்றன என்று பார்ப்பதே இப்போதைய தேவை.

(தொடரும்)

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com