Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
குறிஞ்சி நிலத் தலைமக்களும் இனக்குழு மணமுறை தோற்றமும்
முனைவர். அ.செல்வராசு

சங்க இலக்கியப் பாடல்கள் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டன. திணை அடிப்படையில் பாடல்களைப் பார்க்கும் பொழுது பாலைத் திணைக்கு அடுத்தபடியாகக் குறிஞ்சித் திணைப்பாடல்களே மிகுதியாக உள்ளன. அகநானூற்றில் 80 பாடல்களும் நற்றிணையில் 129 பாடல்களும் குறுந்தொகையில் 143 பாடல்களும் ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும் கலித்தொகையில் 29 பாடல்களும் என 481 பாடல்கள் குறிஞ்சித்திணைக்கு உரியனவாக உள்ளன.

குறிஞ்சித் திணையிலுள்ள பெரும்பாலான பாடல்கள் களவுப் பாடல்களே ஆகும். தலைமக்களின் திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்க்கையே களவு எனப் பெறுகிறது. களவு என்பதே ஒரு திருமண முறை என்பாரும் உண்டு. தலைவி தினைப்புனத்திற்குச் செல்வதும், அங்கே எதிர்பாராமல் வரும் தலைவனைக் கண்டு காதல் கொள்வதும் குறிஞ்சித்திணைப் பாடல்களுக்குரிய பொதுத்தன்மையாகும். தலைவி அருவியிலே நீராடும் பொழுது எதிர்பாராமல் இடர, அங்கு வரும் தலைவன் அவளைக் காப்பாற்ற அதனால் இருவரும் இணைவது ‘புனல் தரு புணர்ச்சி’ எனப்பெறுகிறது. அம்பு பட்ட யானை அல்லது அடிபட்ட யானை சினங்கொண்டு எதிர்பாராமல் தலைவி இருக்கும் இடம் நோக்கி வர, அதனிடமிருந்து தலைவன், தலைவியைக் காப்பாற்ற, அதனால் இருவரும் இணைவது ‘களிறு தரு புணர்ச்சி’ எனப்பெறுகிறது. இவ்விரு நிகழ்வும் எதிர்பாராமல் நடைபெறுவதால் இவை இயற்கைப்புணர்ச்சி எனப் பெறுகின்றன.

குறிஞ்சித்திணைப் பாடல்களை மீளாய்வுக்கு உட்படுத்தும் பொழுது அந்நிலத்துத் தலைமக்களிடையே மெல்லிய வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது. குறிஞ்சி நிலத் தலைமக்கள் இருவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்களாகப் பெரும்பாலும் காட்டப் பெறவில்லை. தலைவியரைக் காணவரும் தலைவர்கள் வேற்று ஊரைச் சார்ந்தவர்களாகவே காட்டப் பெற்றுள்ளனர். தலைவன் தலைவி ஆகிய இருவரும் மலைநாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள் அல்லர். தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே வந்து செல்வதைப் பல பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.

தலைவன் ஒருவன் தம் ஊரிலிருந்து வந்து தலைவியைத் தழுவிச் செல்கின்றான். அவன் ஊருக்குச் செல்லும் வழி இடர்மிகுந்ததாகும். எனவே அவன் ஒவ்வொரு நாளும் இன்னல் ஏதுமின்றிச் செல்கின்றானோ என்ற கவலை தலைவியையும் தோழியையும் ஆட்கொள்கிறது. எனவே ‘தோழி அவனிடம் ‘தலைவனே, நீ உன்னுடைய நாட்டிற்குச் (ஊருக்கு) சென்று சேர்ந்து பிறகு வேட்டை நாய்களை அழைப்பதற்காக வைத்திருக்கும் உன் ஊது கொம்பினை ஊத வேண்டும்’ என்கிறாள். நீ உன் ஊருக்குச் சென்று சேர்ந்த பிறகு ஊது கொம்பின் ஒலி கேட்டால் நீ நலமுடன் சென்று சேர்ந்ததாக நாங்கள் உணர்ந்து கொள்வோம் என்பதைச் சுட்டுவதற்காக அவள் மேற்சுட்டியபடி பேசுகிறாள்.
“எம்முறு துயர மொடியாமிவ ளொழிய
வெற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு
வேய்பயி லழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே”
(அகம். 318) என்பது தோழியின் கூற்றாகும்.

இப்பாடல், தலைவனிடம் தோழி (தலைவிக்காக) இரவுக்குறி மறுத்துத் திருமணத்திற்குத் தலைவனை வேண்டுகிறாள் என்ற மையப் பொருளைக் கொண்டிருப்பினும், தலைவன் மலைநாட்டைச் சார்ந்த மற்றொரு ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்பதைத் தெளிவாக விளக்கி நிற்கிறது.
குறிஞ்சித் திணைக்குரிய முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகப் பாடப்பெற்றுள்ள குறிஞ்சிப்பாட்டிலும் தலைவன் ஊரும் தலைவி ஊரும் வேறு வேறு என்பது சுட்டிக் கூறப்பெற்றுள்ளது. அது மட்டு மின்றித் தலைவன் வந்து செல்லும் வழி புலி, யாளி, கரடி, ஆமான், யானை, உருமு, கொடுந்தெய்வம், பாம்பு, முதலை, இடங்கள், கராம், பிசாசு, பெரும்பாம்பு முதலியன இருக்கும் வழி எனச் சுட்டப்பெற்றுள்ளது. (252-261)
இவ்விரண்டு சான்றுகள் மட்டுமின்றிப் பெரும்பாலான குறிஞ்சித்திணைப் பாடல்கள் இத்தன்மையிலேயே பாடப்பெற்றுள்ளன. எனவே தலைவன் தலைவியர் ஊர் வெவ்வேறாகக் காட்டப் பெற்றுள்ளமைக்கான காரணம் கண்டறிவது அவசியமாகிறது.

வேட்டையாடுதல், தினை விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் முதலியன குறிஞ்சி நிலத்தவர்களது தொழில்களாகும். இவற்றுள் வேட்டையாடுதலும் தினை விதைத்தலும் முதன்மையான தொழில்களாகும். இவை இரண்டும் குறிஞ்சி நிலத்தவர்களுக்குரிய பொதுத் தொழில்கள் என்றாலும் இத்தொழில்களின் அடிப்படையில் குலப்பிரிப்பு முறை அவர்களிடம் இருந்திருக்க வேண்டுமோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போன்று நற்றிணைப் பாடல் ஒன்று அமைந்துள்ளது. தலைவனிடம் பேசும் தோழி ஒருத்தி, ‘எங்களை நாய்கள் வைத்து வேட்டையாடும் வேட்டுவ வீரரின் மகளிர் என எண்ணிவிடாதே, நாங்கள் குற மகளிர், எங்கள் ஊர் தினைப்புனத்து அருகே உள்ளது. நீ அங்கு வந்தால் மூங்கில் குழாயில் ஊற வைத்த கள்ளைப் பருகி மகளிர் குரவையாடுவதைப் பார்த்துச் செல்லலாம்’ என அவனுக்கு அழைப்பு விடுகிறாள்.
“கோடு துவையாக் கொள்வாய் நாயொடு
காடு தேர் நசைஇய வயமான் வேட்டு
வாயர் மகளிர் என்றி யாயிற்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங்காற் கழுதிற்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல்லகத்தது எம்மூரே, செல்லாது
சேர்ந்தனை சென்மதி நீயே பெருமலை
வாங்கமை பழுனிய நறவுண்டு
வேங்கை முன்றிற் குரவையங் கண்டே” (276)
என்பது அவளது கூற்றாகும்.

இவர்கள் சந்திக்கும் தலைவன் வேட்டையாடும் தலைவனாவான். இதே போன்றுதான் குறிஞ்சித் திணைப் பாடல்களின் தலைவர்கள் வேட்டையாடுவோராகவும், தலைவியர்கள் தினைப்புனல் காவல் செய்வோராகவும் காட்டப் பெற்றுள்ளனர். சங்க இலக்கியக்குறிஞ்சித் திணைப் பாடல்களில் 61 பாடல்கள் வெளிப்படையாகவே கிளி ஓட்டும் தலைவியர்களைச் சுட்டியுள்ளன.

தலைவன் வேற்றூரிலிருந்து தலைவியை வந்து சந்தித்துச் செல்வதற்கும் தலைவன் தலைவியர் இடையேயான தொழில் வேறுபாட்டிற்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனச் சிந்திப்பதற்கும் இடம் உள்ளது. அதாவது தொழில் அடிப்படையில் குறிஞ்சி நிலத்தவர்களிடம் குழு வாழ்க்கை முறை இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

வேட்டைச் சமூகம் என்பது ஆடவரும் பெண்டிரும் குழுவாக வாழ்ந்த சமூகம் ஆகும். கூட்டத்திலிருப்போருக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொணர்ந்து அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கையே வேட்டைச் சமூக வாழ்க்கையாகும். இச்சமூகத்தில் உணவுபொருட்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பெறவில்லை. பெண்டிரும் அப்படியே பகிர்ந்து கொள்ளப்பெற்றனர். தொடக்க கால வேட்டைச் சமூகத்தில் கட்டுப்பாடற்ற பாலுறவுதான் இருந்துள்ளது. ஆனால் சங்க இலக்கியக் குறிஞ்சிப் பாடல்கள் மேற்கண்ட சமூகத்தைப் பிரதிபலிக்கவில்லை. அதை அடுத்த, ஒழுங்குபடுத்தப்பெற்ற வேட்டைச் சமூகத்தையே நமது இலக்கியங்கள் பிரதிபலித்துள்ளன.

சங்க இலக்கியத்திற்கு முந்தைய மகளிரைப் பொதுப்பகிர்வாகக் கொண்ட வேட்டைச் சமூகம் நீண்ட காலம் நிலை பெற்றிருக்கவில்லை. தாய்வழிச் சமூகம் தோற்றம் கொண்டதன் விளைவாகப் பெண்களைப் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் ஒழிந்திருக்க வேண்டும் எனலாம். காலப்போக்கில் ஒரு குழுவிற்குள் இருப்போர் அக்குழுவிற்குள் இருக்கும் பெண்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப் பெற்றது. வேறு குழுவில் உள்ளவர்களேயே திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்துள்ளது.

இன்றும் கூட உலகம் தழுவிய நிலையில் திருமணம் என்பது ஒரு குழுவிலுள்ள மணத்துணையை வேறொரு குழுவினர் பெறுவதைக் குறிக்கிறது என்பர் பக்தவத்சல பாரதி (2002; 35). மேலும் அவர் ‘சமூகத்தில் பெண்களை ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்குப் பரிமாற்றக்கூடிய அமைப்பு தகாப் புணர்ச்சி விலக்கு என்னும் அடித்தளத்தின் மீது அமைப்பாக்கம் பெறுகிறது’ என்ற லெவிஸ்ட்ராஸின் கூற்றையும் தம் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆக, தகப்புணர்ச்சி என்பது இரு வேறு குழுவினருக்கிடையேயான திருமண உறவை முன் வைத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது ஒரு குழுவில் உள்ளோர் அக்குழுவில் உள்ள பெண்களைத் திருமணம் புரிந்து கொள்ளக் கூடாது. அக்கூட்டத்தில் உள்ளோர் அவளுக்குச் சகோதர உறவுடையோரே ஆவர். அதே நேரத்தில் இன்னொரு குழுவினரோடு அவர்கள் மண உறவு கொள்ளலாம். அதாவது, ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவினருக்குப் பெண் கொடுத்து, அக்குழுவிலிருந்து பெண் எடுக்கும் இருமண முறை என இதனைக் கொள்ளலாம். இவ்விரு குழுவினருக்கும் இடையேயான வேறுபாடு என்னவென்று அறிய வேண்டியதும் அவசியமாகும்.

சமூகத்தில் ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகள் கரை, கூட்டம், பரம்பரை, வகையறா, கிளை என்பன போன்ற பெயர்களைப் பெற்றுள்ளன. ஒரே கரையையோ, கூட்டத்தையோ, பரம்பரையையோ, வகையறாவையோ, கிளையையோ சேர்ந்தோர் தங்களுக்குள் மணஉறவு கொள்வதில்லை. மற்றொரு கூட்டத்தினருடன்தான் மண உறவு கொள்கின்றனர். இவர்களிடம் காணப்பெறும் கடவுள் வழிபாடுதான் இவர்களை வேறுபடுத்துகின்றது. குறிப்பாக, முத்தரையர் சமூகத்தினரிடம் பூவான் கூட்டம், முடியன் கூட்டம், கலியன் கூட்டம், செல்லாயி கூட்டம் என இன்னும் பல பிரிப்பு முறைகள் உள்ளன.

இவர்களில் ‘முடியலாயி’ என்ற தெய்வத்தை வழிபடுவோர் அனைவரும் பங்காளி உறவுடையோராவர். எனவே, இவர்களுக்குள்ளேயே மண உறவு கொள்வதில்லை. மாறாக, ‘கலியன்’ என்ற தெய்வத்தை வணங்குவோருடன் மண உறவு கொள்வர். இவர்கள் மாமன் உறவுடையோராவர். இவ்வாறே மற்ற குழுவினரையும் கருத்தில் கொள்கின்றனர். ஆக, முத்தரையர் சமூகத்தினரிடம் கடவுள் வழிபாடே குழு அடையாளமாக அமைகிறது.

இந்த அடிப்படையில் குறிஞ்சி நிலத்தவர்களிட மிருந்த வேட்டுவர்களையும், குறவர்களையும் இனங்காணலாம். (வேட்டுவர் - வேட்டைத்தொழில் செய்வோர்; குறவர் - தினை பயிரிடுவோர்) பிற்காலத்தில் தெய்வ வழிபாடு அடிப்படையில் குழுக்கள் பெயர் பெற்றது போலக் குறிஞ்சி நிலத்தவர்களிடம் தொழில் அடிப்படையில் குழு பிரிப்பு முறை இருந்திருக்க வேண்டும் எனக் கொள்வதற்கு இடம் உள்ளது. ‘நாங்கள் வேட்டுவக் குழுவைச் சார்ந்தவர்கள் அல்லர்; தினை விதைக்கும் குறவர்கள் எனத் தோழி பேசுவது மிகுந்த பொருளுடையதாகும். இக்கூற்றை உற்று நோக்கும் பொழுது தினை விதைக்கும் சமூகத்தினர் ஒரு குழுவாகவும், வேட்டையாடுவோர் ஒரு குழுவாகவும் இருந்துள்ளனர் என்பதையும், இவ்விரண்டு குழுவினர்க்கிடையேதான் மண உறவு நிகழ்ந்துள்ளது எனவும் கொள்ளலாம்.

தினை விதைத்துத் தொழில் செய்வோர் ஒரு குழுவாகப் பங்காளி உறவுடனும், வேட்டைச் சமூகத்தினர் ஒரு குழுவாகப் பங்காளி உறவுடனும் வாழ்ந்திருக்க வேண்டும் எனலாம். ஒரு குழுவில் உள்ளவர்கள் மற்றொரு குழுவினரை மாமன் உறவுடையோராக எண்ணி அவர்களோடுதான் மணஉறவு கொண்டுள்ளனர். அதே போன்று ஒரே தொழில் செய்வோர் ஓரிடத்தில் குழுவாகவும், மற்றொரு தொழில் செய்வோர் வேறொரு இடத்தில் குழுவாகவும் கூடி வாழ்ந்திருக்க வேண்டும். இவ்விரு குழுவினருக்கு இடையேயான மண உறவைத்தான் குறிஞ்சிப்பாடல்கள் முன் வைக்கின்றன என்று சிந்திப்பதற்கும் அப்பாடல்கள் இடந்தருகின்றன. பிற்கால இனக்குழுச் சமூக தோற்றத்திற்கான வித்து குறிஞ்சி நிலத்தவர்களிடமிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்று கருதுவோரை முன் வைப்பதற்கும் சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் இடம் தருகின்றன.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com