Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
பெண்மை என்றொரு கற்பிதம் - 10
பண்படுத்தும் கல்வி
ச.தமிழ்ச்செல்வன்


நாங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாவது இரண்டாவது வகுப்புகளில் இருந்தபோது ஒரு பழக்கம் இருந்தது. ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்லாவிட்டாலோ அல்லது பாடம் தப்பில்லாமல் ஒப்பிக்கத் தெரியா விட்டாலோ அடிப்பது முட்டங்கால் போட வைப்பது தலையில் குட்டுவது போன்ற தண்டனைகளை சில ஆசிரியர்கள் வழங்குவார்கள். வேறு சிலர் தப்பாகப் பதில் சொன்ன பையன்களை பொம்பளைப் பிள்ளைகள் உட்கார்ந்திருக்கும் பலகையில் அவர்களுக்கு நடுவில் உட்கார வைத்து விடுவார்கள்.

பல பெண் உடல்களுக்கு நடுவில் ஒரே ஒரு ஆண் உடல்.

பிற பையன்களின் கேலிச்சிரிப்பு உடனே பின் தொடரும்.அவமானத்தால் நாங்கள் கூசிப்போவோம். ஆண் உடல் வேறு பெண் உடல் வேறு என்கிற தன்னுணர்வு பால்பேதம் பற்றிய எவ்வித உணர்வும் தோன்ற வாய்ப்பில்லாத அந்தப் பால்ய நாட்களிலேயே பள்ளிக்கூடத்தில் எமக்குத் தோன்றிவிட்டது.

“சமூகத்தால் கட்டமைக்கப்படும் உடல்கள் மற்றும் உடல் அசைவுகள்” குறித்து இன்று உலக அளவில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் படிக்கும்போது எமது பள்ளியில் நடந்த அத்தண்டனைச் சம்பவங்கள் தவிர்க்கவியலாத படி நினைவுக்கு வருகின்றன.

“இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும்-புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு” - (ஏலாதி)

என்று நம்பிப் பள்ளிக்கூடம் போனால் அங்கே பாடத்திட்டத்துக்கு அப்பால் பல கல்வி நடக்கிறது. ஆண்-பெண் உடல் பேதம் ஒரு முக்கியமான கல்வி அல்லது பண்படுத்தல். பால பாடங்களில் குடும்பம் பற்றிய படத்தில் அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும் அம்மா சமையல் செய்வதும் போன்ற காட்சிப்படுத்தலில் துவங்கி , சமூகத்தில் ஆண்- பெண் இருவரின் இடம் எது- அந்தஸ்து என்ன என்பது பற்றிச் சமூக மனதில்-பொதுப்புத்தியில் என்ன இருக்கிறதோ அதைப் பள்ளிக்கூடம் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக .” வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் “என்பதாக அடிக்கோடு இட்டுப் பிள்ளைகள் மனதில் அழுந்தப் பதிக்கிறது.அதாவது மேலும் நுட்பமாகப் பண்படுத்து கிறது .அவள் ஏன் மனையுறை மகளிர் ஆக்கப்பட்டாள் என்று கேள்வியைப் பள்ளிக்கூடம் நம் மனதில் எழுப்புவதில்லை.

ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கிற பள்ளி களை விட பெண்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்று தனித்தனியாக இருப்பதே நலம் என்கிற கருத்து வலுவாக நம்மிடம் உள்ளது.

“ஈன்றவள்,மகள், தம் உடன் பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும்

தாங்கற் கரிதாகலன்”

(ஆசாரக்கோவை)

( தாய், மகள், சகோதரியே ஆனாலும் அவர்கள் தனித்திருக்கையில் அவர்களோடு உடன் உறையக் கூடாது -ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்குவது என்பது அவ்வளவு லேசான காரியமில்லையே) என்று பாடிவைத்தவர்கள் ஆயிற்றே நாம்.(என்ன கேவலமான பாட்டய்யா இது! ) இவ்விதமாக ஆண்களும் பெண் களும் சாதாரணமாகக் கலந்து பழகுதல் தவறென்று நம் பண்பாட்டில் நிறுவப்பட்டுள்ள ஒன்றையே கல்விச் சாலைகளும் கறாராகக் கற்றுத் தருகின்றன. நடை முறைப்படுத்துகின்றன. அதாவது மனங்களைப் பண் படுத்துகின்றன.

விளையாட்டிலும்கூட பெண்களுக்கான விளையாட்டுகளாகப் பரவலாக நம் பள்ளிகள் வைத்திருப்பது த்ரோ பால் (வாலிபால் கிடையாது),கோக்கோ, வளை பந்து எனப்படும் டென்னிகாயிட் இவைபோலச் சிலவே.அதிலும் பேதம்தான்.

மாணவர்களைத் திட்டுவதற்கு (மாடு மேய்க்கத் தான் லாயக்கு போன்றவை) வேறு வசவுகள் மாணவிகளைத் திட்டுவதற்கு (ஆக்கிப் போடத்தான் லாயக்கு) வேறு வசவுகள். பெண்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் பெண்களின் வருகையே பாதிக்கப்படுவது தனியாகப் பேச வேண்டிய ஒன்று.

கல்விச்சாலைகள் என்பவை பண்பாட்டு நிறுவனங்களில் முக்கியமானவை.அவற்றை ஆளும் வர்க்கங்களே நடத்துகின்றன.சட்டப்படி நடக்கிற — சட்டத்தை மதிக்கிற— ஒருமனிதரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிகிற - மார்க் அடிப்படையில் தன் தகுதியை சமூகத்தில் தன் இடத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிற விதமாக மனங்களைப் பண்படுத்தும் தொழிற்சாலையே கல்விக்கூடம்.

இவ்விதமான வர்க்கக் கடமையை நிறைவேற்றும் கல்விச்சாலை வர்க்க வேறுபாடுகளைத் தன் பாடத்திட்டத்தின் மூலம் கற்றுத் தருவதில்லை.மாணவ மாணவிகளில் பெருவாரி யானவர்களான உழைப்பாளி மக்களின் பிள்ளை களுக்கு வர்க்க உணர்வை ஊட்டும் விதமான கல்வியைத் தருவதில்லை.ஏனெனில் அது அதற்கு எதிராக இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது.

அதே காரணங்களாலேயே அது பெண்களுக்கு ‘பெண் உணர்வையும்' ஊட்டுவதில்லை. பெண் உணர்வு என்று நாம் குறிப்பிடுவது பெண்ணிய உணர்வைத் தான்.அதாவது பெண் சமத்துவ உணர்வைத்தான்.மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் அல்ல என்று பல்வேறு வடிவங் களில் கல்விச்சாலை கற்பிக்கிறது.ஒன்று உடல் ரீதியாகப் பெண்ணை வேறுபடுத்தி நிறுத்துவது.

அடுத்து பெண்களுக்குப் பொறுத்தமான கல்வி - பாடப்பிரிவுகள் என்று சிலவற்றை உருவாக்கி வைப்பது. ஹோம் சயின்ஸ், அறிவியல் பாடங்கள், கல்வியியல்,செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி ,நர்ஸ், சித்த மருத்துவம் என்று துவங்கி இன்று கம்ப்யூட்டர் வரைக்கும் - அதாவது உட்கார்ந்த இடத்தில் படிக்கிற மாதிரி- அலையாத வேலைக்குத் தோதான கல்வி.ஆய்வு மாணவர்களுக்குக் கூட கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வு செய்து ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் தலைப்புகளைத் தவிர்த்து ‘ஜெயகாந்தன் படைப்புகளில் சமூகப்பார்வை' என்பது போல மேசை ஆய்வுகளையே தேர்வு செய்வது. இதுதான் பொதுவான போக்காக இருக்கிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கணினித் துறையில் வேலை பார்க்கும் பெண் வேண்டாம் என்று மறுக்கிற இளைஞர்கள் எண்ணிக்கை பெருகிவருவது விவாதத்தின்போது வெளிப்பட்டது. இது இப்படியே போனால் இன்னும் சில காலத்தில் கணினித்துறைக்கு இப்போது வேக வேகமாகத் தம் பெண்பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் பெற்றோர் அதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. என் பொண்ணு கணினியில் பெரிய ஆளாக வருவதை விட அவளுக்கு வரன் கிடைத்துக் கல்யாணம் ஆவதுதானே முக்கியம்!

கக்கூசிலிருந்து கணினி வரை எல்லாமே பெண் கல்விக்குத் தடையாக இருப்பது யதார்த்தம். இது ஒருபக்கம் இருக்க, பாலியல் கல்வி என்பதே நம் பாடத்திட்டத்தில் இன்றுவரை கிடையாது.ஆண்-பெண் இருபால் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி அளிப்பது நிச்சயமாக இன்று நிலவும் பால் பேதக் கொடுமைகளைக் குறைக்க சிறிதளவேனும் உதவ முடியும்.

சின்ன வயதிலேயே பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். பாலுறவுச் சுரப்பிகள் தம் பணியைத் துவக்குவதற்கு முந்திய பால பருவத்தில் இக்கல்வி அளிக்கப்பட்டால் ஆணோ பெண்ணோ தம் உடல் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான புரிதலோடு பரஸ்பரம் தங்களை மனுஷர்களாகவும் மனுஷிகளாகவும் பார்க்கத் துவங்கி விட வாய்ப்பு உருவாகும். உடல்களைக் கடந்து மானுடப் பிறவிகளாக ஆணும் பெண்ணும் வாழ என்ன மனநிலையைத் தகவமைக்க வேண்டுமோ அது பள்ளிக்கூடத்தில்தான் செய்யப்பட வேண்டும். இன்று அதற்கு நேர் மாறானது நடந்து கொண்டிருக்கிறது.

வரலாற்றைப் போதிக்கும்போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும்.இலக்கியம் போதிக்கும்போது அது பெண்ணியப்பார்வையோடு மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும். அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்ற வேலைகளைக் கையில் எடுக்கும் கல்விதான் நமக்குத் தேவை.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com