Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
அநாகரீகக் கோமாளி
தமிழரசன்


தொலைபேசியில் .........

விஜயதாகன்: சார்..... ஒரு கடிதம் எழுதியிருந்தேனே, படிச்சிட்டீங்களா?....

அந்தர ராமசாமி: கடிதம் வந்த உடனேயே பைண்டிங் செக்ஷனுக்கு அனுப்பிட்டேன். இன்னும் பைண்டிங் ஆகி வரலை. வந்ததும் ரெண்டு நாள் ராவா பகலா உக்காந்து எப்படியாவது படிச்சு முடிச்சிடறேன்.

தன்னை வளர்த்தெடுத்த விஜயபாரதம் வெற்றிபெற வேண்டும் என விழைந்து விஜய தாகன் எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டு வந்தேனே........ எல்லாம் தெரிந்த ஏகாம்பரன் நான் வந்தேனே வந்து நின்று என் இடது கால் சுண்டு விரலை அசைத்து சபைக்கு வந்தனம் தந்தேனே என்று அஜக்தா உஜக்தா போட்டுத் தமிழ் மண்ணில் வந்து குதித்தார் விஜயதாகன். கம்யூனிஸ்ட் கட்சியில் சோறு துன்னேன். விஜயபாரதத்தில் அறிவு துன்னேன் என்று ஒரு தன் வரலாற்றுச் சரடைத் தானே அவிழ்த்துவிட வாய்பிளந்து நின்றது அப்பாவிகள் நிறைந்த அச்சபை.

ரகேளா நாட்டுக்கு அதிபதியாக இருந்தது நானே. எனக்குத் தெரியாத வித்தை இல்லை விளையாட்டில்லை என்று நான்ஸ்டாப்பாக பேசியபடி குதித்துக் குதித்து மேடையை நாலு சுற்றுச் சுற்றி வந்தார். ஜனங்கள் அலுத்துப்போய் சரி சரி நீ பெரிய ஆளுதானப்பா! முதல்ல பேச்சிலே ஒரு இடத்திலாவது மூச்சுவாங்கப் பழகிக்க. முற்றுப்புள்ளி இல்லாம நீ பேச எங்களுக்குல்லா மூச்சு வாங்குது! என்று துண்டை விரித்துப் படுத்து விட்டார்கள் - விட்ட குறட்டையை மீண்டும் பிடிப்பதற்காக.

அதில் தூங்காமலிருந்த ஒன்றிரண்டு பேர் நீ கம்யூனிஸ்ட் கட்சியிலே சோறு துன்னேன்னு சொன்னியே! துன்ன இடத்து விலாசத்தைச் சொல்லு! என்று கேட்டு நின்றனர். விஜயதாகன் சொன்ன அட்ரஸில் கம்யூனிஸ்ட்கள் யாரும் இல்லையாம். கெட்டழிந்து போன டாங்கேயின் சிஷ்யப் பிள்ளைகள் தொழிலாளிகளைக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக மாற்றும் திட்டம் போடும் சதியாலோசனை மன்றக் கட்டிடம்தான் அந்த விலாசத்தில் இருந்ததாம். சரி. கம்யூனிஸ்ட்டுங்களுக்கு ரகேளா நாட்டில் சோறு போட்டு வளத்ததே நான்தான்னு சொல்லாம விட்டானே பாவி. அந்த மட்டுக்கும் தப்பிச்சோம் என்று தோழர்கள் விட்டுவிட்டார்கள்.

இனி யாரும் நம்மைக் கேள்வி கேட்கக் கூடாது ஏதாவது கேப் விட்டாத்தானே கேள்வி கேப்பான். கேப் விடாமப் பேசு. கேப் விடாம எழுது என்கிற கோஷத்தை முன்வைத்து இயங்கலானார். பிடித்தது சனி தமிழ் மண்ணுக்கு. ஒரு நாளைக்கு கவிஞர் தேவதூதன் ஒரு கவிஞரே இல்லை என்று தண்ணி குடிக்காமல் ஆறுமணி நேரம் பேசுவது. மறுநாளைக்கு மை அடைக்காமல் மளமளன்னு எழுதி தேவதூதக் கவிதையியல் என்று ஒரு புத்தகமே வெளியிடுவது. இன்னொரு நாள் தமிழ்நாட்டிலே எவரும் நாவலே எழுதலே என்று ஏழு மணி நேரம் விடாமல் பேசுவது (ஏன்னா இனிமேத்தான் அந்த நாவல் வரப்போவுது அதை நாந்தான் எளுதப் போறேன் ஹி ஹி என்பது பேசாப்பொருள்) சிருங்காரம் என்பவர் எழுதியது இலக்கியமே இல்லை என்று பேசுவது பிறகு ஆஸ்தான பதிப்பாளர் சிமிழினி சிந்துக்குமார் சிருங்காரத்தின் நாவல்களைப் போட்டதும் ஆகோ ஐயாகோ என்று முன்னுரை எழுதுவது - ஆனால் அந்த முன்னுரைக்கு அப்புறம் சிருங்காரத்தின் எழுத்தைப்பற்றி எங்கும் ஒரு வார்த்தை பேசாமல் தவிர்ப்பது - என்கிற பாணியில் நாளொரு பேச்சும் பொழுதொரு உளறலுமாக விஜய தாகனின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. பேசத் தெரியாத ஒரு செட்டு இன்னாமா பேசறாய்யா இந்த ஆளு என்று அவர் பின்னாடியே கூஜாவில் ஜலம் எடுத்துக்கொண்டு திரியலாச்சு. அது விஜயதாகனின் வேகத்தை இன்னும் கூட்டியது.

ஒருமுறை அவர் டாக்டரிடம் போக வேண்டி வந்தது. பிரச்னை இதுதான். காலைக் கடன் கழிக்கக் கக்கூஸ் போனால் வலது கை வெட்டி வெட்டி இழுக்குது டாக்டர் எல்லாம் ஆராய்ந்த டாக்டருக்கு ஒண்ணும் விளங்கவில்லை. நீண்டநாள் ஆய்வுக்குப் பிறகுதான் மருத்துவருக்கே பிடி பட்டது. நீங்க எழுதாம இருந்தா அந்த நேரத்தில் உங்களுக்கு வலிப்பு வருது விஜயதாகன். அது உண்மைதான் டாக்டர் சாப்பிடும் போதும் கூட எனக்கு வலது கை வெட்டி வெட்டி இழுக்குது டாக்டர் என்றார். இந்த வியாதி பற்றித் தெரிந்த பிறகு இன்னும் ஆவேசம் கொண்டு எழுதலானார். காதல் மனையாட்டி ஊட்டி விட அந்த நேரத்திலும் அவர் எழுதலானார். அலுவலகத்துக்குப் போகையில் அனைவரும் அதிசயமாகப் பார்க்க நடந்து கொண்டே எழுதினார். எழுதினார். எழுதிக்கொண்டே நடந்தார்.

வந்து குவிந்தன - வாரம் ஒரு 700 பக்க நாவல் என்கிற விகிதாச்சாரத்தில் பெருமாள்புரம், ஏழாவது கலகம், முன்னிருந்து இழுக்கும் நிஜம், அற்றவை, ஆனவை, போனவை, வெறும் நாவல் மட்டும் என்று எண்ணிடாதே தமிழ் மண்ணே என்று தத்துவப்பித்துவ நூல்கள் என்று வகைவகையாக எழுதலானார். என்ன எழுதியும் போதவில்லை. எழுதுவதை நிறுத்தினால் வலிப்பு வந்துவிடுகிறது. எல்லாப் பத்திரிக்கைகளுக்கு எழுதியும் போதாமல் சொந்தமாக பத்திரிக்கை ஆரம்பித்து கல் புதிது என்று பெயரிட்டு சாமியார்களைப்பற்றியும், பண்டாரங்களைப் பற்றியும் பின்தொடரும் விஜய பாரத நிழலின் குரலுடன் எழுதிப்பார்த்தார். அதுவும் பத்தலை. இணையதளத்தில் எழுதினார். போஸ்ட்டு கார்டில் எழுதும் பாவப்பட்ட வி.க.சி யை நக்கல் பண்ணிப் பேசியபடியே 700 பக்கங்களுக்குக் குறையாத கடிதங்களை எழுதி வயதான காலத்தில் அந்தர ராமசாமிக்கு அனுப்பி பாவம் அவரை டார்ச்சர் பண்ணலானார். இப்படி எழுதி டார்ச்சர் பண்றானே என்று தமிழகமே அலற திடீரென ஒரு நாள் இனிமே நான் எழுத மாட்டேன். சிவாஜி நடிச்ச பழைய படம் பார்த்து மனம் திருந்திட்டேன் என்று தயிர்மை பத்திரிக்கையில் அறிக்கை விட்டார். தமிழகமே திரண்டுவந்து அவர் வீட்டு வாசலில் நின்று கண்ணீர் தாரை தாரையாக வழிய நீங்க எழுதாட்டி நாங்க எப்படி அண்ணா உயிர் பொளச்சி வாழறது என்று கேட்கும். கெஞ்சும். கதறும் என்று எதிர்பார்த்த கனவு நிறைவேறவில்லை. கல்புதிது போட்டாலும் கலங்காத கிணறாக தமிழகம் அமைதி காத்தது. (சினிமாவுக்கு வசனம் எழுதப் போவதால் தயிர்மையிலும் அகட விகடத்திலும் எளுத நேரமில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா என்ன?)

ஆனாலும் இந்த வலிப்பு காரணமாக எழுதுவதை நிறுத்தமுடியவில்லை. அவருடைய ஆத்ம நண்பர்களான எஸ்ரா குண்ட் மற்றும் கூனங்க்கீ இருவரிடமும் ரகசியமாக தன் வியாதி பற்றிப் பிரஸ்தாபித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். இதுக்கு ஒரே மருந்து எழுதறதுதான் என்று எஸ்ரா குண்ட் ஒரே வரியில் சொல்லி விட்டார். கூனங்க்கீயோ சாம்பல் பேனாவில் மறையும் கருத்த ஒளிச்சிதறலின் வழியே நடந்து விழத் தருணம் இது என்று ஐடியா கொடுக்க விஜயதாகன் வேப்பிலை அடித்த சாமி கொண்டாடி போல இன்னும் தினசரி, வாரந்தரி, மாதாந்தரி என்று தேடித்தேடி எழுதலானார்.

உண்மையில் குடிகாரர்களுக்குச் சில உண்மைகள் சட்டென்று பிடிபட்டு விடும். இவன் ஒரு வலிப்புக்காரன் என்று கையின் சைஸை வைத்தே கண்டு சொல்லிவிட்டான் கவிஞன் சரஸ்வதிமணாளன். வந்ததே கோபம் விஜயதாகனுக்கு. பலபேர் பார்க்க அடி பிரித்து எடுத்து விட்டார். அடித்து முடித்து விட்டார் என்று நம்பி சரஸ்வதி மணாளன் ஆசுவாசப்படும்போது சற்று தூரம் சென்றுவிட்ட விஜயதாகன் எங்கவீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர் போல திரும்ப ஆவேசத்துடன் ஓடி வந்து மீண்டும் தாக்கினார். சாகாக்களில் கற்ற அடிமுறைகளையெல்லாம் நோஞ்சான் கவி மீது பிரயோகித்துப் பரீட்சித்தார். ஆனால் ரொம்பநேரம் கவிஞரை அடிக்க முடியவில்லை. அடிக்கிற நேரத்தில் எழுத முடியாதே. உடனே வலிப்பு வந்துவிட்டது. வெட்டிவெட்டி இழுக்கலாச்சு. இதைத்தானே நான் சொன்னேன் என்று அளவற்ற கருணையுடன் சரஸ்வதிமணாளன் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அடச்சீ என்று அதைத் தள்ளிவிட்டு சிமிழினி சிந்துகுமாருடன் காரில் ஏறி உடனே ஒரு பேப்பரை எடுத்து எழுதலானார்.

என்ன எழுதியும் யாரும் கண்டு கொள்ளாத துயரம் அவரை வாட்டி வதைத்தது. ஆகவே கூடவே யாராவது முக்கியமானவர்களை பிரபலமானவர்களைத் தாக்கி ஏதாவது பேசிக் கொண்டே இருப்பதை சைடு தொழிலாக ஆரம்பித்தார். தமிழ் கணத்தின் தானைத் தலைவர் ஒரு ஆம்பிளையே இல்லை என்று ஒரு போடு போட்டார். ஆனால் அது ஒரு வாரத்துக்கு மேல் பரபரப்பை உண்டாக்கவில்லை. தேவதூதனில் துவங்கி தானைத் தலைவர் வரை தனி நபர்களையே தாக்கி எழுதினால் ஒரு பரபரப்பும் வராததால் அறிவு மிகப்பெற்று அமுதத்தில் விஷம் கலந்த பாவக்கறை நீக்கச் சமீபத்தில் துவக்கப்பட்ட தோராய நதி பத்திரிக்கையில் நாடுபூராவும் இயங்கும் இலக்கிய அமைப்பைத் தாக்கி லொள்ளு லொள்ளுத் தொடர் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதிவிட்டார்.

சங்கத்தைத் தாக்கினால் மாவட்டம் மாவட்டமாக கிளை கிளையாக தன்னைத் தாக்கிப் பேசுவார்கள். தட்டி போர்டு கூட வைப்பார்கள். எது எப்படியானாலும் யாராவது எப்போதும் என்னைப் பற்றிப் பேசிட்டிருந்தாப் போதுமே என்று தனது விஜயபாரத நிழலின் நிஜமான தலைவரின் பிரச்சார பீரங்கி கோயபெல்சைப் போலப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்க... தன் நீண்ட நெடும் பயணத்தில் மக்களோடு கைகோர்த்துப் பயணிக்கும் அச்சங்கமோ இந்த அநாகரிகச் கோமாளியைக் கண்டு கொள்ளவே இல்லை.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com