Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
ஆஸ்கார் படங்களை திருடி எடுக்கும்போது தமிழ்ப்படத்திற்கு எங்கிருந்து ஆஸ்கார் கிடைக்கும்?
ப.கவிதாகுமார்


இந்தியாவில் எத்தனையோ மொழிகளில் திரைப்படங்கள் வெளியானாலும், தமிழ்மொழியில் வெளியாகும் படத்துடன் முடிந்து போவதில்லை. அப்படம் குறித்த தாக்கங்கள். வெற்றி, தோல்விகளைப் பற்றி அக்கறைப்பட்டு படங்கள் எடுத்த காலம் போய், அடுத்த முதல்வர் கனவோடு படங்கள் எடுக்கும் சமூக அவலம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாததாகும்.

கடந்த நாற்பதாண்டு தமிழக வரலாறு என்பது திரையுலகத்தோடு பின்னப்பட்டது என்றால் அது மிகையாகாது. அறிஞர் அண்ணா துவங்கிய அப்பயணம் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா எனத் தொடருகிறது. அதன் நீட்சியாக அடுத்த முதல்வர் நான்தான் என்ற விஜயகாந்தின் சபதங்களும், அவரை எதிர்த்து எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கத்தயார் என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கோபதாபங்களும் திரையுலகம் என்ற விளம்பர வெளிச்சம், பதவி நாற்காலியைப் பிடிக்கும் கருவியாக மாற்றப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் தமிழ்சினிமாவில் ஜொலித்து அரசியலில் தோற்றுப்போனவர்களின் வரலாறுகளும் பதிவுக்குள்ளாகியுள்ளது. நடிகர் திலகம் எனப்போற்றப்பட்ட சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு என வர்ணிக்கப்பட்ட கே.பாக்யராஜ், எதுகை, மோனையாக எப்போதும் வசனம் பேசும் டி.விஜய ராஜேந்தர் என பலர் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.

தமிழ் திரை ரசிகனின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என கதையம்சம் உள்ள படம் எடுத்தவர்களும், கதையம்சம் அல்லாத படம் எடுத்தவர்களும் அங்கலாயிப்பது தொடர்கதையாகவே உள்ளது. நல்லபடம் எது என்ற சர்ச்சை நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. கதையம்சம் இல்லாமல் படம் எடுத்து கமர்சியல் ரீதியாக வெற்றி பெறும் படங்களை அப்படி நல்லபடம் என ஏன் சொல்லக்கூடாது என்ற கேள்விகளும் முடிவுறாத நீள்கோடாகவே இருக்கிறது. ஆனால், மக்கள் மனதில் மாற்றங்களை விதைக்கக்கூடிய, அனைவரும் பார்க்கக்கூடிய, அருவருப்பற்ற காட்சிகளைக் கொண்ட படங்களை பாராட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தயங்கியதில்லை. படைப்பாளிகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசளிக்க தவறுவதும் இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து தமுஎச மேடைகளில் பாராட்டு பெறும் கலைஞர்கள் சமூக அக்கறையின் மீது கொண்ட காதலால், மேலும் அப்படிப்பட்ட படைப்புகளைத் தரமுயன்று கொண்டிருப்பது அவர்கள் அந்த அமைப்பின் மீது கொண்டுள்ள மரியாதையின் வெளிப்பாடாகவே உள்ளது.

மதுரையில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மதுரை மாநகர் மாவட்டக்குழுவும், மதுரை கல்லூரி ஊடக ஆய்வுமையமும் தத்துவத் துறையும் இணைந்து நடத்தின. தமிழ்த்திரை-சின்னத்திரை குறித்த மாநில அளவிலான அந்த கருத்தரங்கில் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பதை விட சமூகம் குறித்த அக்கறையோடு பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்கள் மிக முக்கியமானவை. இக்கருத்தரங் கிற்கு தமுஎச மாநகர் மாவட்டச் செயலாளர் ந. ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஜி.சுரேஷ்பாபு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரசா துவக்கவுரையாற்றினார்.

மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை வழங்கிய இயக்குநர் ஞான ராஜசேகரன், தமிழ் சினிமா: இயக்கமும், தணிக்கையும் குறித்து ஆற்றிய உரை உணர்வுப்பூர்வமாக இருந்தது. “தமிழ் சினிமா சரியானால், சமூகம் சரியாகும் என ரசிகன் நினைப்பு உள்ளது. தற்போது வரும் இயக்குநர்கள் விஷயஞானத்தோடு, தொழில் நுட்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் பலருக்கு சமூகப்பொறுப்புணர்ச்சி இல்லை. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற நினைப்புடனே 99 சதம் பேர் கோடம்பாக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அன்றைய திரைப்படங்களில் , சமுதாயப் பொறுப்புணர்வு இருந்தது.

இன்றைய படங்களில் வாழ்க்கை என்றாலே அது பெண் சம்பந்தப்பட்டதாக உள்ளது. நல்ல சினிமா வராததற்கு காரணம் அது தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ் படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளை விட வன்முறை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. வன்முறை செய்பவனை விட அதை அங்கீகரிப்பது கொடுமையானது என மகாத்மா காந்தி சொன்னார். அதைத் தான் தமிழ்சமூகம் செய்து கொண்டிருக்கிறது. கதாநாயகன் என்றால் பழைய படங்களில், அவனுக்கு கூடுதல் திறமை இருப்பது போல சித்தரிக்கப்படும். ஆனால், இன்றைய படங்களில் கதாநாயகன் என்றாலே, அவனை ஒரு பொறுக்கி போல சித்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல. நாமும் தான். தணிக்கையால் மட்டும் சினிமாவை மாற்ற முடியாது.

நம்மிடம் சுயக்கட்டுப்பாடு உள்ள தணிக்கை முறை வந்தால் நல்லது.வெளிநாட்டு படங்களின் டிவிடிகளை வாங்கி தமிழ்படம் செய்கிறார்கள். ஆஸ்கார் படங்களைத் திருடி எடுத்து விட்டு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற முயற்சிகள் மலையாளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுபோல மறுவாசிப்பு தமிழிலும் தேவைப்படுகிறது. நல்ல சினிமாக்கள் தமிழிலும் உள்ளது. ஆனால் அதன் எண்ணிக்கை போதாது” என்று ஞான ராஜசேகரன் பேசினார்.

தமிழ்சினிமாவின் அழகியலும், அரசியலும் என்ற தலைப்பில் பேரா. ஆர்.முரளி உரையாற்றினார். “பெரும்பாலான தமிழனின் உணர்வு சினிமா மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆடைகுறைப்பை விட, போர்வைக்குள் இருப்பது போன்ற காட்சிகளை வைத்து ஆபாசத்தை சிருஷ்டிக்க வைக்கும் படைப்பாளிகள், நல்ல படங்களை வர விட மாட்டார்கள். “பாதை தெரியுது பார்” என்ற படம் உண்டியல் மூலம் வசூலிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இது மாதிரி படங்களை விட்டால் தப்பு என நினைத்த ஏவிஎம் நிறுவனம் அப்படத்தை வாங்கியது. இப்போது அப்படத்தின் பிரதி எங்கேயிருக்கிறது எனத்தெரியவில்லை. சித்தாந்த ரீதியான படங்கள் வெளியாகும் போது, சிவப்புமல்லி போன்ற படங்களை ஏவிஎம் எடுக்கும். ஆனால் அப்படம் பேசிய அரசியல் யாருடையது என்பது முக்கியம். இப்படம் எனக்குத் தேவையில்லை என்றால் அதை நிராகரிக்கும் போக்கு தமிழர்களுக்கு வரவேண்டும்” என்று ஆர்.முரளி பேசினார்.

தமுஎச சிறந்த படங்களாக தேர்ந்தெடுத்த காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், தமிழ்சினிமாவில் காதல் என்ற தலைப்பில் பேசினார். தான் இயக்கிய படங்களில் காதல் எந்தநிலையில் பதிவு செய்யப்பட்டது என்று கூறிய அவர், எதார்த்தத்திற்கு புறம்பாக சினிமா எடுக்க முயற்சித்து வருவதாகக் கூறினார். பாடல்கள் என்பதே எதார்த்தத்திற்கு புறம்பு என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. தாலாட்டில் இருந்து துவங்கியது நமது பாட்டுப்பயணம். ஆனாலும், மரத்தைச் சுற்றி பாட்டுப்பாடுவது போன்ற காட்சிகளை படங்களில் தவிர்ப்பதில் அக்கறையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “காதல் என்பது மூச்சுக்காற்று போன்றது.காதல் சாதி, மத, இனங்களைக் கட்டுடைப்பதால் அதை கருப்பொருளாக எடுத்துக் கொண்டுள்ளேன். சமூகத்தில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து அதை அழகியல் ரீதியாக சொல்ல முயற்சிக்கிறேன் என்றார்.

சினிமாவின் ரசிகனும், ரசிகனின் சினிமாவும் என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். “திரைப்பட படைப்பாளிகளுக்கு ரசிகன் ஒரு சொத்து. முதலாளிகளுக்கோ அவன் ஒரு சந்தை. மொத்தத்தில் சினிமா என்பது ஒரு கலைச்சந்தை.இன்றைக்கு தேசத்தின் பிற துறைகளைப் போலவே சினிமாத்துறையும் உலகமயச் சூழலில் சிக்கியுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றன. திரைப்படத் தயாரிப்பிலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் நுழைந்து கொத்து கொத்தாக ஒரே நேரத்தில் பத்து படங்களுக்கு பூஜை போடப்படுகிறது.

ரசிகப் பரப்பு என்பது திரை வர்த்தகத்தின் சந்தையாக இருப்பதால் அவர்களை ஒருவகையான மந்தை மனோபாவத்திலேயே நிலை நிறுத்தி வைக்க முதலாளிகள் முயல்கின்றனர்.ஒரு மிகப்பெரிய சமூகக்கொடுமையை காட்டிவிட்டு, ஹீரோ தனி மனிதனாக நின்று நான்கு பேரை அடித்து வீழ்த்துவதன் மூலம் அந்தச் சமூகக் கொடுமை முடிவடைந்துவிட்டதாக பெரும்பாலான திரைப்படங்கள் சித்தரிக்கிறது. ரசிகனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை அளிக்கிறது. எனினும் திரையரங்க புழுக்கத்தை விட்டு வெளியே வரும்போது அதே சமூக புழுக்கம் ரசிகனை சூழ்ந்து கொள்கிறது. திரையரங்கில் ரசிகனாக இருந்து அவன் பெற்ற ஆறுதல் சமூக மனிதனாக மாறும்போது காணாமல் போய்விடுகிறது. எனினும் தற்காலிக ஆறுதலும் தேறுதலும் மனிதனுக்கு தேவைப்படவே செய்கிறது.

இந்தத் தேவையை திரைப்படம் பூர்த்தி செய்கிறது.பாரதிராஜாவின் 16 வயதினிலேயே, மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் என ரசிகனின் அழகியலை உயர்த்த முயன்ற படங்களை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். ஆனால் இவ்வாறு திரைப்படத்தில் மனமாற்றம் நடைபெறும்போதெல்லாம் பெரிய முதலாளிகள் திட்டமிட்டு மசாலா குப்பைக்குள் சினிமாவை மீண்டும் தள்ளுவது வழக்கமாக இருந்துவந்துள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த உரையாடல்களின் தொடர்ச்சியாக, பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் வரும் தொடர்கள், விளம்பரங்கள், படங்கள், செய்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதனை ஸ்ரீரசா நெறிப்படுத்தினார். கர்ணமோட்சம் உள்ளிட்ட மூன்று படங்கள் திரையிடப்பட்டன. மாற்று சினிமாவிற்கான முயற்சிகளாக குறும்பட ஆக்கத்தில் தமுஎசவினர் பங்களிப்பு செலுத்தி வரும் வேளையில், தமிழ்திரை குறித்த ஆழமான உரையாடல்களை படைப்பாளிகள் மத்தியில் நடத்தி மேலும் பல படைப்புகளுக்கு விதைபோட்டுள்ளது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com