Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
நாளைக்குச் செத்துப்போனவன்
ம. காமுத்துரை


நாளைக்கு நாஞ்செத்துப் போயிடுவேன்ணே....!” தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னான் பரமன். உலகத்து வருத்தங்களை எல்லாம் தலைமேல் சுமந்து திரிகிறவனின் அலுப்பு அவனது வார்த்தைகளில் வடிந்தது. முகமெல்லாம் நகங்களால் கீறியது போல தாரை தாரையாய் தாடிமயிர் இறங்கி இருந்தது. மயிரற்ற கிடங்களிலெல்லாம் தோல் சுருக்கங்கள் நிரம்பி இருந்தது. கழுத்து திருகப்பட்ட ஊசி மூக்கு சேவல் போல முகத்தை தன் மார்பில் பதித்திருந்தான். பேசுகிற போது மட்டும் இமைகள் மேலெழும்ப, விழிவெண்படலம் உருண்டு உயிர்ப்பை உறுதிப் படுத்தியது. கோழிகளின் உடல் மொழி போல கையையும் கால்களையும் விரைத்துக் கொண்டு நின்றிருந்தான். கடைக்குள்ளிருந்து வெக்கை விரட்ட, வாசலில் நாற்காலி போட்டு, வராக்கடன் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருக்கும் போதுதான் பரமனின் வருகை. இது புதிதல்ல.... என்றாலும் இன்றைய உரையாடல் சுவாரஸ்யம் மிக்கதாய் இருந்தபடியால் வராக்கடன் சற்று பின்வாங்கியது.

பரமன். சமையல்காரன். ‘நல்ல’ என்கிற பதம் அவரவர் உசிதப்படி....! சத்துணவுக்கூடத்தில் வேலை, தனது வேலை நேரம் போக, ஓய்வு நேரம் போக.... போதை நேரத்தில் மட்டும் இங்கே வந்து விடுவான். என்னதான் நேர்த்திக் கடனோ....?

பக்கத்திலிருக்கும் அடைத்த கடையின் வாசல் அவனுக்கு ‘அனுபவ பாத்யதை’.... சுமார் இரண்டு வருடங்களாக -லாட்டரிச் சீட்டு சட்டப்பூர்வமாக நிறுத்திய நாளிலிருந்து கடை அடைத்துப் போட்டுக்கிடக்கிறது. மீண்டும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இன்னமும் மாதாமாதம் வாடகையை தவறாமல் கொடுத்துக் கொண்டு கடையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு புண்ணியவான். பரமனுக்கு அதுதான் கைலாசம்... வைகுந்தம். தப்பித் தவறி யாராவது இப்படிக் குறுக்கிட்டால் தத்தித்தத்தி நடந்து வந்து எதையாவது ஒப்பிப்பான்...அழுவான்.... வருத்தப்படுவான்.

வருத்தப்படுபவனின் பாரம் சுமப்பது யாருக்கும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

“ந் நெசம்ம்மாண்ணே....! நாளைக்கு நாஞ்... செத்துப் போயிடுவேன்...! ”- ரெம்பவும் அழுத்தமாகச் சொன்னான். நானும்அதே அழுத்தத்தில் தலையை ஆட்டிக் கொண்டேன். கையிலிருந்து கடலைப் பருப்பு பொட்டலம் கொஞ்சம் கொஞ்சமாய்க் காலியாகிக் கொண்டிருந்தது. அது கூடாத செயல்தான். சகமனிதனின் உணர்ச்சிக்குக் கொஞ்சமேனும் மரியாதை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் கடலைப் பருப்பை ஒளித்து வைத்தாவது அசைப்போட வேணும். அது செயற்கையாய் இருக்கும் என, மனசு சொன்னது.

மூன்றாவது முறையாகவும் அவன் அதனைச் சொன்ன போதுதான் பொட்டலத்தைக் கீழே வைத்தேன். என்னதான் போதை வயப்பட்ட வார்த்தையாயிருந்தாலும் அது ஒரு வாழ்க்கையின் வெளிப்பாடல்லவா...?

அவனிடம் என்னப்பா விஷயம் எனக் கேட்டால் இன்றைய வேலை தொலைந்து விடும். கேட்காமல் விட்டால் மனசு நம்மைக் கொன்று போடும்.

“அப்புடியா....?” என்றேன் பொதுவாக.

அதன் பிறகுதான் தலையை நிமிர்த்தினான். இமையோரம் நீர் கசிந்திருந்தது.

“உம்ம தாண்ணே.... நாளைக்குச் செத்துருவே...!”

போதை வாசிகளின் உரையாடல்கள் விதம்விதமாய்த் தானிருக்கும். சில சமயம் நம்மையே போதையாக்கி விடுவதும்... குழப்ப நிலைக்குத் தள்ளி, மயிர் பிய்த்துக் கொள்ளச் செய்யும். மனசை அலைக்கழித்து - கொதிகலனாய் ஆக்கிவிட்டு - அவர்கள் ஏதுமறியாதவர்களாய் போய்விடுவார்கள். அதனாலேயே கரைந்து விடாமல் கடந்து நின்றுதான் கதை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

பொதுவாகவே, பரமன் சாதுவானவன். நடை, பேச்சு, செயல் எல்லாமுமே சப்தமின்றித்தான் நிகழும். எத்தனை மீறிய போதையிருந்தாலும் கடைக்குள் கால் வைக்கமாட்டான். கடன் வேண்டுகிற போது மட்டும் மிகவும் சுத்தபத்தமாய் வந்து, நமது நிபந்தனை களுக்கெல்லாம் ஒப்புக் கொடுத்து வாங்கிப் போவான். வார வட்டிதான். எதிர்ப்பேச்சு - கேள்வி. என்றைக்கும் கிடையாது. வட்டிக்காரர்களுக்கு இதுபோன்ற புள்ளி தான் சவுண்ட் பார்ட்டி. அதற்காக இப்படிப்பட்ட சிற்சில உபத்திரவங்களும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தொழில் ரீதியில் லாபந்தான்.

“போதுண்ணே.. ரெம்ப வாழ்ந்தாச்சூ...!”.... இனி..... போய்ச் சேர வேண்டிதே...!”

“ரைட் பரமா... எல்ல்லாத்தியும் அனுபவிச்சாச்சு. இல்லியா....?”

ஆமென தலையசைத்தான்.

“எல்ல்லாத்தியும்....!” - அழுத்தம் கொடுத்தேன்.

அவனும் அழுத்தமாய்த் தலையசைத்தான்.

“சரி... அப்ப... போய்ச் சேரலாம்!”

போ... என்ற பாவனையில் வலது கையை உதறி ஆமோதித்தான். இவர்களிடம் நமது உரையாடல் இப்படித்தான் இருக்க வேண்டும். நான் இரக்கமற்றவனாகத் தெரிய லாம். ஆனால் பரமன் போன்றவர்களைச் சந்தித்தவர்கள் உண்மை உணர்வார்கள். உண்மையிலேயே பரமன் வாழ்ந்திருக்கிறானா.... எனக் கேட்டால்.. பரிதாபம்தான் மிஞ்சும். அரசாங்க ஊழியன் தான். மாசம் வெறும் ஐநூற்று சொச்சம் சம்பளம். புறாக்கூண்டு வீட்டுக்காக ஊரெல்லாம் அலசினாலும். குளத்தோரமாகவோ - சுடுகாட்டுக்குப் பக்கமாகவோ தான் குடியிருப்பு அமையும்.

ஒத்திக்கு வீடு பிடிக்க வேண்டும் என்பது பரமனின் மனைவிக்கு நீண்ட நாள் கனவு. ஒரு நாள் அதனை நிறைவேற்றித் தந்தான் பரமன். ஓடிக் கொண்டிருந்த ஏலச் சீட்டை பாதியில் எடுத்தான். மீதிக்குக் கடன்வாங்கினான். மாச வாடகைப் பிரச்சனை ஒழிந்தது என சந்தோசப்பட்டு அவள் அவனுக்கு நிறைய முத்தங்கள் தந்தாள் அன்றைக்கு.

சத்துணவு அமைப்பாளர், கருணையால் அரிசியும் முட்டையும் வீட்டுக்கு வந்தாலும். மீதமிருந்த சீட்டுத்துகையும், கடன் - வட்டியும் கழுத்துப் பிடிபோட்டு இறுக்கின. மூச்சு வாங்க முடியவில்லை. அவசரத்திற்கு ஒத்திப் பணத்தில்தான் கை நீண்டது. வீட்டுக்காரம்மாளும் பாவம் பார்த்துத் தந்தார். பின்னால் அதற்கும் வட்டி சேர்ந்தது. ஆக, வட்டி குட்டி போடப் போட ஒத்திப் பணம் கரைந்து ஆறே மாசத்தில் ஒத்தி வீடு மறுபடி வாடகை வீடானது. வீட்டுக்குள் கால் வைக்க முடியவில்லை பரமனுக்கு. அவன் கால் வைக்காத வீட்டில் யார் யாரோ புழங்கலாயினர். வீட்டுக்குச் சொந்தக்காரரோடு ஒருதரம் வீட்டு வாடகையை அவன் மனைவி கழித்துக் கொண்டிருந்த போது பரமன் பார்க்க நேரிட்டது. ‘அன்றைக்கே செத்துப் போனதாய்ச் சொல்லியிருந்தான். அன்றிலிருந்து மனைவியோடு பேச்சைச் சுருக்கிக் கொண்டான். பிள்ளைகள் இரண்டும் தங்கமென்பான்.

“நீ செத்துட்டா பிள்ளைக என்னப்பா செய்யும்?” என்றேன்.

இரண்டு கைகளையும் மேலே உயர்த்தினான். “அதுக.... தெய்வப் பிறவிகண்ணே... பொழச்சுக்கும்..!”

மூத்த பிள்ளை ஊனப்பிறவி. நிறைய இடத்திற்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தான். அத்தனையும் இலவச வைத்தியம் தான். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான அரசு நலத் திட்டங்களை விசாரித்து ஏற்பாடு செய்து விடுவான். பள்ளி வேலை நேரம் போக இடைப்பட்ட நேரத்தில் மண்டபம், வெளிவேலைகள் என, தனக்குச் சாத்தியான சமையல் வேலைகளை எடுத்துச் செய்வான். வேலைமுடிந்த பின் கடைக்கு முன்னால் கிடை தான். எதையாவது பேசிக் கொண்டு, புலம்பிக் கொண்டிருப்பான். தெளிவான நேரங்களில் சந்திக்கும்போது பேப்பர் செய்திகளை விசாரிப்பான். அவன் சம்பந்தப்பட்ட துறைகளின் அறிவிப்பு ஏதும் வந்திருந்தால் வாசிக்கச் சொல்லிக் கேட்பான்.

“கலைஞரு.... எல்லாருக்கும் நல்லது செய்றாரு... எங்கள மாரி அடுப்புல வேகுற சீவாத்திகள மட்டும் கண்டுக்க மாட்டேங்குறாரேண்ணே...!”

“நீங்கள்ளாம் டபுள் சம்பாத்திய காரெங்க... ஒங்களுக்கென்னாப்பா....?” - அப்படிச் சொன்ன நிமிடத்தில் ஒரு அடி உயரம் வளர்த்து விட்டவன்போல முதுகை நிமிர்த்திக் கொள்வான். ‘பால்பன்’ சாப்பிட வற்புறுத்துவான். “எனக்காகச் சாப்புட்டுத்தே ஆகணும்...!” இப்படியேதான் எல்லாருக்கும் செல வழிப்பான் போலத் தெரிந்தது. கூடுதல் வார்த்தை களைப் போட்டு ஏத்திவிட்டு பரமனிடம் கட்டிங்கும். கரன்சியுமாய்க் கறந்து விடுகிறார்களெனத் தெரிந்தது.

“போறாங்கென்ணே...! மொதல்ல மக்கள் மனசக் கொள்ளையடிப்போம். பிறகு சம்பாதிச்சுக்குவம்ணே...!- “பெரிய கித்தாப்போடு பூரித்துப் போய்ச் சொல்வான். உடன் வேலைக்கு வருகிற எடுபிடி ஆட்களுக்கு தன்வேலையின் சூட்சுமத்தைக் கத்துக் குடுத்து அவர்களைத் தனி வேலைக்கு அனுப்பி வைப்பான். அது அவனுக்கான வாடிக்கை வேலைகளைக் குறைத்தது.

“ஒந் தலையில நிய்யே மண்ணள்ளி போட்டுக்கிறியேப்பா.....”

“அய்யோ அப்பிடி பாக்கக்குடாதுண்ணே” - தீவிரமாக மறுப்பான். “இது லட்சுமி. லட்சுமிய எல்லார்கூடயும் அனுப்பணும் எனக்குச் சொல்லிக் குடுத்தவரு இதே மாதிரி யோசிச்சிருந்தா....”- ஞானியைப் போல பேசுவான். “எல்லாஞ் சரிண்ணே, அனுப்பிச்சுவிடுற வேலையாளுக..... தந்தெறமய காட்டி வேலபுடிக்கணும். பரம குடிகாரெ... நெதானமில்லாம அலயறான்னு பயமுறுத்தி வேலய புடிக்கிறானு கண்ணே... அதான் கழுத்த அறுக்கறமாதிரி இருக்குது.... அப்பிடியாண்ணே நா அலயுறேன்...... சொல்லுங் கண்ணே!” - அழுதான்.

“இது... எல்லா தொழில்லயும் நடக்குறது தானப்பா.... என்னிக்கும் நகல் நகல்தே... அழுவாத....” - முடித்து வைத்தாலும், பரமன் மேலே சொன்ன வசனத்தை பல பாவங்களில் பேசிக் கொண்டே இருப்பான். அதில் உள்ளத்துள் உறைந்து கிடக்கும் ரணம் வெளிப்படும். இப்போது காலடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டான். இது ரொம்ப இம்சை. இனி உள்ளே எழுந்து போக முடியாது. அவனை எழுப்பி அனுப்பி விட்டுத்தான் நகர முடியும்..... தானாப் போற சனியன தண்டங்கட்டி வாங்குன கதையா இது...? சம்மணம் போட்டு உட்கார்ந்தவன். எனது பாதத்தைத் தடவலானான்.

“யே..... என்னாப்பா செய்ற...?” - கூச்சம் மேலிட கால்களை உள்ளிழுத்துக் கொண்டேன்.

“நீங்க தெய்வம்ணே...!”பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டான்.

பாலகுரு பக்கத்தில் இருந்தால், “தெய்வம்னா ரெண்டு பத்தி சூடத்த வாங்கி கொளுத்துடா....” என்பான். அவனையும் காணோம். வண்டியாய் மாட்டிக் கொண்டேன்.


“ஒங்கள நா... செத்தாலும் மறக்க மாட்டேன்...!”

“யே... பேயா வந்து புடிச்சு ஆட்டுவியாக்கும்....! பாவி... அம்புட்டு வம்மமாடா...?” பாலகுருவின் அசரிரீ.

“எம்பிள்ளைக்கு வலிப்பு வந்தப்ப.... எண்ணிப் பாக்காம காச அள்ளிக் குடுத்தீங்க.... நீங்க தெய் வம்ணே...!” கையெடுத்துக் கும்பிட்டான்.

“சரி பரமா...ஒனக்கு போத கூடுதலாயிருச்சு... டக்குன்னு வீட்டுக்குக் கௌம்பு... எனக்கும் வேல இருக்கு...” - எழ எத்தனித்தேன்.

“தப்பா பேசலண்ணே..... சொல்றதெல்லாம் இன்னிக்கிச் சொன்னாத்தே.. நாளைக்கி நா.... மேலருப்பேன்...” சிவாஜிகணேசனைப் போல முகத்தை யும் கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு பேசினான்.

“சரி சரி..... எல்லாரும் ஒருநா மேல போறவக தான். இப்ப வீட்டுக்குப் போப்பா.... பிள்ளைக தேடும்....”

சொன்ன வார்த்தைக்கு டக்கென எழுந்தான். மறுபடி கும்பிட்டான். “சரிண்ணே..... நீங்க சொன்னா சரி....”- என்றவன் முகத்தருகில் தன் முகத்தை நீட்டினான். பயமாயிருந்தது. முத்தங்குடுக்க வருகிறான் போலிருக்கிறது. பின்னால் சாய்ந்து கொண்டேன். அவன் தொடர்ந்துவந் தான். காதருகில் வந்து, “ஒரு ஆயிரம் ரூவா குடுத்தீகன்னா..... நான் சாக மாட் டேன்....”! - என்று கிசுகிசுத்தான். வார்த்தைகளோடு வந்த ஒரு கெட்டவாடை திரேகத்தை உலுப்பியது. தாங்க முடியவில்லை. என்னதான் குடிப்பானுகளோ.. மூக்கைப் பொத்திக் கொண்டேன்.

எனது விலகல் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் எட்ட நின்றான். “என்னாண்ணே... நாறுதா...?” என்றவன், “பீருன்னா வாடவராது.... இத ரெம்பக் கஷ்டப்பட்டுத்தான்ணே உள்ள எறக்க வேண்டிருக்கு...”- என்றபடி அதன் கம்பெனி பெயரை உளறினான்.

“சரி சாமி... கௌம்புய்யா..... வேலருக்கு....”- இருக்கையிலிருந்து எழுந்திருக்காமலேயேதான் சொன்னேன். உள்ளே போனால் அவனும் பின் தொடரலாம். அதன்பிறகு வெளியேற்ற ரெம்பக் கஷ்டப்பட வேண்டும்.

“சரிண்ணே... கோச்சுக்காதீங்க...” மறுபடி கும்பிட்டான். முகம் சோக பாவம் காட்டியது. “ஆயிர்ரூவா... குடுங்கணே”

“சம்பளம் வாங்கீருப்பீல்ல...!” தேதியைப் பார்த்தபடி சொன்னேன்.

“வாங்குனேண்ணே.. அயிரத்து எரநூறு... எல்லாங் காலி.....”

“சம்பளம் கூட்டிட்டாகளா...?”

“கொண்டாடியாச்சுண்ணே....” யார் யாருக்கு செலவழித்தேனென பட்டியல் போட்டான். “எரநூறு ரூவா மிச்சம்.... ஒரு ஆயிரத்த கடனா குடுத்தீகன்னா.... வீட்ல குடுத்துருவேன்....!”

“உள்ளத குடுக்க வேண்டிதானப்பா...”

தலையை ஆட்டினான். “முடியாதுண்ணே..... இப்பதே வீட்டுக்குப் போறேன்ணே.. அவகூட சேந்துட்ட...புள்ளீக பாவம்ணே...அதுகளுக்கு ஆத் தாளும் வேணும் அப்பனும் வேணும்ணே...எம் பொண்டாட்டி கூட சேந்துட்டேன்ணே!....”

“நல்லது பரமா... வாழ்க்கைல உருப்படியா யோசிச்சிருக்க” என்றேன். என்னதான் புகழ்ச்சி பாடினாலும், “ஆயுர்ரூவா குடுத்தா....” என்பதைக் கைவிடவில்லை. குறைத்துக் கொண்டு போனால் மனைவி அடிப்பாளாம். “வட்டி எம்புட்டு வேண்ணாலும் வாங்கிக்கங்க....”

“உங்க ஓனர்ட்ட கேக்க வேண்டிதானப்பா....” - பாத்திரம் வாடகைக்கு எடுக்கும் கடைக்காரரிடம் அவனுக்கு வரவு செலவு உண்டு.

“சேச்ச.. அது தப்புண்ணே. உங்ககிட் வாங்குறது வட்டி. வட்டிக்கு எம்புட்டு வேணாலும் வாங்கிக்கலாம். அவருகிட்ட தொழில் நேரத்துல செலவுக்கு வாங்குறதுதான் மொற...” முற்றுகையிடுவது போல நின்று கொண்டான்.

“சரி நாளைக்கிப் பாப்பம்.”

“நாளைக்கி செத்துப் போயிருவேன்ணே....!”

“செத்தா எனக்கு எப்பிடிப்பா காசு வரும்?”

“அதெல்லா கரெக்டா டைரில எழுதி வச்சிருக்கேன்ணே. ஒங்க தங்கச்சி (மனைவி) கரிக்ட்டா செட்ல் பண்ணீர்வா...”

“அதெப்பிடி பொதையல் பொதச்சு வச்சிருக்கியா....” - ஏளனமாய்ச் சிரித்தேன்.

“அண்ணே நா கவருமென்டு ஸ்டாப்பு. செத்தா ரெண்டு லட்சம் குடுப்பாகண்ணேய்..!”

“அப்ப.... நீ செத்துட்டா குடும்பத்துக்குக் கூட நல்லதுதேம்போல....”

ஆமோதித்தோ... யோசனையிலோ தலையசைத்தான்.

“அப்ப.. செத்துரட்டுமா...?”

எரிச்சல் வந்தது எனக்கு. கடுமையாய் முறைத்தேன்.

“நீங்க ரூவா தராட்டி செத்துருவேன்ணே....!”

“சரி.. செத்துரு...!” ரத்த அழுத்தம் மிகுந்து வந்தது. இப்படியான தொடர்புகளையெல்லாம் களைவது தொழில் ரீதியாக மட்டுமல்ல. உடல்ரீதியாக - மனரீதியாகவும் நல்லது எனப்பட்டது. போய்விட்டான் பரமன்.

சொன்னது போலவே மறு நாளைக்கு செத்தும்போனான்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com