Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
இளமதி பதில்கள்
ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்


செம்மலரில் பிரபலமானவரின் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோல் அறிமுகம் இல்லாத என் போன்றவர்கள் எழுதும் மெட்டுப் பாடல்களை பிரசுரிப்பது இல்லையே, ஏன்?

கவிதையானாலும், சிறு கதையானாலும், கட்டுரையானாலும் இசைப்பாடலானாலும் - வேறு எந்தப் படைப்பானாலும் ‘பிரபலமானவர்’ என்பதல்ல முக்கியம்; படைப்பே முக்கியம். பிரபலமானவர், பிரபலம் இல்லாத புதியவர் என்கிற பேதம் பார்க்காமல் தகுதியான படைப்புகள் அனைத்தையும் செம்மலர் பிரசுரித்தே வருகிறது.

ஒவ்வொரு மாதமும் செம்மலரில் புதிய படைப்பாளி அல்லது படைப்பாளிகளின் படைப்பு அல்லது படைப்புகள் வெளியாகியிருப்பதைப் பார்க்க முடியும். ஓர் எடுத்துக்காட்டாக, கடந்த அக்டோபர் இதழில் மொசைக்குமார், நந்தன் ஆகிய புதியவர்களின் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய செப்டம்பர் இதழில் ப.கோவிந்தராசு, மன்னார்குடி இரெ.இராச கணேசன் இருவரும் செம்மலர்க்கு புதிய படைப்பாளிகள் - புதிய அறிமுகம். படைப்பார்வமிக்க ஒரு வாசகரின் ஆதங்கம் புரிகிறது. படைப்பாக்கத்தில் தொடர்ந்து முயல்க. முயற்சி திருவினையாக்கும்.

டி.பிரகாஷ், கரூர்.

லெனினை “ஸ்ரீமான் லெனின்” என்று புகழ்ந்துரைத்த பாரதியார், கார்ல் மார்க்ஸைப் பற்றி அறிந்திருக்கவில்லையா? அவரைப் பற்றி ஏதும் சொல்லியிருக்கிறாரா?

மார்க்ஸைப் பற்றி மகாகவி பாரதியார் அறிந்திருக்கிறார்; மார்க்ஸைப் பற்றிச் சொல்லியுமிருக்கிறார் என்றே தெரிகிறது. இதுவரை அறியப்படா மலிருந்த இந்தப் புதிய செய்தி, சீனி விசுவநாதன் தொகுத்துப் பதிப்பித்த “காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்” நூலின் நான்காம் தொகுதியில் உள்ளது. இத்தொகுப்பின் 577ஆம் பக்கத்தில் 116ஆவது எண் இடப்பட்டுள்ள “ஜன அபிவிருத்தியும் பொருள் நிலையும்” எனும் தமது கட்டுரையில் பாரதியார் கூறியிருப்பதாவது;

“ஐரோப்பாவில் ஸோஷலிஸ்ட் மார்க்கத்தார்க்கு மூல குருவாகிய “கார்ல் மார்க்ஸ்” என்பவர் பின்வருமாறு சொல்லுகிறார்: “எந்தச் சமயத்தில் பார்த்த போதிலும் ஒரு தேசத்து ஜனங்களின் ஆசாரங்கள், அறிவு, பயிற்சி முதலிய யாவும் அத்தேசத்தின் பொருள் நிலையையே பொறுத்தனவாகும்”

மார்க்ஸைப் பற்றி மகாகவி பாரதி அறிந்து வைத்திருக்கிறார் என்றே இதன் மூலம் அறிய முடிகிறது. மார்க்ஸின் அக்கருத்தை பாரதி தம் காலத்துத் தமிழ்நடையில் மொழியாக்கம் செய்துள்ளார். 10.4.1909 தேதிய “இந்தியா” பத்திரிகையில் பாரதி இக்கட்டுரையை எழுதியதாக இத்தொகுப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்த இந்தியப் புரட்சியாளர்கள் ரகசியமாகக் கொண்டுவந்த மார்க்ஸ் நூல்கள் - அல்லது மார்க்ஸைப் பற்றிய நூல்கள் பாரதியார்க்குக் கிடைத்திருக்க லாம் அல்லது அந்நாடுகளிலிருந்து வந்த ஆங்கிலப் பத்திரிகைகள் மூலமாக மார்க்ஸை பாரதி அறிந்திருக்கலாம். “ஸோஷலிஸ்ட் மார்க்கத்தாருக்கு மூலகுரு” என்று மார்க்ஸைப் பற்றி பாரதி மிகச்சரியாகவே மதிப்பிட்டிருக்கிறார்.

இரா.மணிகண்ட பிரபு, நாகர்கோவில்.

டாட்டாவின் ‘நானோ’ கார் தொழிற்சாலை மேற்குவங்கத்திலிருந்து குஜராத்திற்குப் போய்விட்டது. மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு ஆதரவாக எதிர்ப்புக் குரல் கொடுத்த பிஜேபி குஜராத்திற்கு மட்டும் ‘நானோ’ வை வரவேற்றது எப்படி?

மேற்குவங்கத்தில் மம்தாவுடன் சேர்ந்து பிஜேபி எதிர்த்ததற்கு கார் அல்ல காரணம்; அங்கு கவர்மென்ட் கம்யூனிஸ்ட் கவர்மென்டாக இருப்பதுதான் காரணம். குஜராத்திலும் விவசாயிகள் எதிர்ப்பதாகச் சேதி வந்தது. எங்கே அந்த சமூக சேவை திலகங்களான மேதாபட்கரும் அருந்ததிராயும்? ஒரு லட்சம் ரூபாயில் கார் - தொழில் வளர்ச்சி - வேலை வாய்ப்பு- இந்தப் பெருமையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்பதில்தான் இந்தத் திருக்கூட்டத்திற்கு எவ்வளவு அக்கறை!

எஸ்.கே.எஸ்.மணி, புதுவை

நீங்கள் இப்போது விரும்பிப் படித்துக் கொண்டிருக்கும் சிறந்த நூலைச் சொல்கிறீர்களா?

ஜோதிபாசு எழுதிய சுயசரிதை நூல். பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. 1930 - ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். கல்கத்தாவில் இப்போது தியாகிகள் மையம் என்று அழைக்கப்படும் நினைவுக் கூடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேச வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் தனது நண்பனையும் உடன் அழைத்துக் கொண்டு ஜோதிபாசு அங்குச் செல்கிறார். அங்கே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை போலீஸ்படை தடியினால் அடித்துத் துரத்துகிறது. ஆனாலும் அஞ்சி ஓடிவிடக்கூடாது என்று திடமான மனத்தோடு ஜோதிபாசு தன் நண்பனோடு போலீஸின் பிரம்படித் தாக்குதலை நோக்கி துணிச்சலாக முன்னேறிச் செல்கிறார். இருவர் முதுகிலும் போலீஸின் பிரம்படிகள் ஓங்கி விழுகின்றன. வீரமிக்க தேசபக்திக்கு கிடைத்த அடி! இதுபற்றி ஜோதிபாசு சொல்கிறார்:

“இருந்தாலும் நாங்கள் ஓடி ஒளியவில்லை. அப்படிச் செய்தால் நாங்கள் பயந்துவிட்டோம் என்று தோன்றக்கூடும். நாங்கள் விரைவாக நடந்து என் தந்தையின் மருத்துவமனையை அடைந்தோம். ஒரு விதத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எனது முதல் பொது எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.”- பெருமிதத்தோடு இப்படிச் சொல்லும் ஜோதிபாசு அப்போது 16வயதுச் சிறுவன்!

சுயசரிதையைப் படிக்கப் படிக்க - பக்கத்துக்குப் பக்கம் அவரது அரசியல் வாழ்க்கை நிகழ்வுகள் பிரமிப்பூட்டுகின்றன. இந்நூலை ஆங்கிலத்திலிருந்து அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் வீ.பா.கணேசன்.


செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com