Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
கலைவாணர் நூற்றாண்டு
அவரை நினைப்பது...
சோழ.நாகராஜன்


இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்த வேளை. எந்த நேரத்திலும் சென்னையில் குண்டுவிழும் என்று எங்கும் ஒரே பீதி. பலரும் வீடுகளைக் காலி செய்து ஓடிக் கொண்டிருந்தனர். தெருவெங்கும் ஆள் நடமாட்டம் குறைந்துபோனது. அந்த இரவில் ஒருவர் மட்டும் மொட்டைமாடியில் கொட்டக்கொட்ட விழித்திருந்தார். குண்டுவிழுவதைப் பார்க்காமல் எப்படித் தூக்கம் வரும் அவருக்கு? ஆனால் அவரது மனைவி அவர் பக்கத்தில் படுத்து உறங்கிப்போனார்.

‘தொப்’பென்று சத்தம். ஒரு உருவம் சுவர் ஏறிக் குதித்தது தெரிந்தது. குண்டுவிழும் என்று காத்திருந்தவர் டார்ச் விளக்கை அந்த உருவத்தின் மேல் அடித்தார். அவர் மனைவி விழித்துக் கொண்டு, யாரது திருடனா? எனக் கேட்டார் பதைபதைத்து.

சுவர் ஏறிக் குதித்தவனைக் காட்டி, ‘இவன் என்னோடு நாடகத்தில் நடித்த பையன்!’ எனச் சொல்லி, வீட்டுக்குள் அழைத்துச் சென்று, சாப்பாடு போட்டு, சட்டை - வேட்டியெல்லாம் கொடுத்து, கையில் நூறு ரூபாயும் கொடுத்து அந்த மனிதர் சொன்னார்: “தம்பி! இதை வைத்து ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள், இந்தத் திருட்டுப் புத்தியை விட்டுவிடு!”

தன் வீட்டில் திருட வந்தவனிடம் இப்படிப் பரிவுகாட்டி, ஆதரித்து அனுப்பிய அந்த அன்பு உள்ளத்துக்குச் சொந்தக்காரர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இந்த நேயமும், அன்பும் அவரிடம் கடைசிவரை குறைவின்றி இருந்தது.

1908ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ஆம்நாள் பிறந்த கலைவாணருக்கு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள ஒழுகினசேரிதான் பிறந்த ஊர். ஏழ்மை நிறைந்த குடும்பத்தில், சுடலைமுத்துப்பிள்ளை - இசக்கியம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வனாகப் பிறந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழும் மலையாளமும் சேர்ந்த கல்வி. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது அவருக்கு. வறுமையின் பிடியில், படிப்பைத் தொடர முடியாத நிலையில், சோடா கம்பெனிக்கு வேலைக்குப் போனார்.

சின்ன வயதிலேயே நாடகக் கலைமீது அவருக்கிருந்த நாட்டத்தின் காரணமாக நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் வாய்ப்பை விரும்பிப் பெற்றார். 1925ல் தனது 17ஆம் வயதில் திருவனந்தபுரத்தில் மதுரை ஸ்ரீ பாலசண்முகானந்தா சபா நாடகக் குழுவில் போய்ச்சேர்ந்த என்.எஸ்.கே.அந்த வயதிலேயே ‘சத்யவான் சாவித்திரி’ நாடகத்தில் சாவித்திரியின் அப்பா வேடமேற்றார்.

டி.கே.எஸ். சகோதரர்களின் அந்த நாடகக்குழு ஒழுகினசேரியில் வந்து நாடகம் போட்டபோது, கோட்டாறு பெரும்புலவர் செய்குதம்பிப் பாவலர் கையால் ஒரு தங்கப் பதக்கத்தை முதன்முதலில் பெற்றார் கலைவாணர். பாவலர் அப்போதே சொன்னார்: “நம் நாஞ்சில் நாட்டு இளம்சிறுவன் என்.எஸ்.கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதையாக விளங்கப்போகிறான். இவனுடைய புகழால் நம்நாஞ்சில் நாடு மட்டுமல்லாமல், தமிழ்நாடே பெருமையடையப்போகிறது!”

என்னேயொரு சத்தியச்சொல்! பின்னாளில் மெய்யாகிப்போன தீர்க்கதரிசனச்சொல்! தமிழ்நாடு அவரால் அடைந்த பெருமையை இன்று வரையில் இன்னொருவர் வந்து வெல்ல இயலாத வகையிலல்லவா வாழ்ந்து காட்டிவிட்டுப்போனார் கலைவாணர்!

கலைவாணரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று கூறுவர். அவரை இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று சொல்லுதலும் பொருந்தும்தான். அத்தனை அதிசயக்கத்தக்கதல்லவா அவரது கலை வாழ்க்கை!

தன்னை ஒரு தேர்ந்த நாடகக் கலைஞனாகத் தகுதி உயர்த்திக் கொண்ட கலைவாணர், ஒரு கட்டத்தில் ‘கிருஷ்ணன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் நாடகம்’ என்று போட்டால்தான் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும் என்ற நிலைமையை ஏற்படுத்தினார். நொடிந்துபோன நாடகக்குழுக்கள், கைவிடப்பட்ட நாடகங்கள் எல்லாம் கிருஷ்ணன் தயவால் கடைத்தேறின. அப்போது புதிதாக வந்து, புதுமை செய்துகொண்டிருந்த பேசாப்படம் எனும் சினிமா பேசத்தொடங்கி, அதனோடு நாடகக் கலையும் சரிநிகர் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

நாடகக் கலைஞர்கள் பலரையும் போலவே கிருஷ்ணனும் சினிமாவுக்கு அழைக்கப்பட்டார். தன்னோடு நாடகத்துறையிலிருந்த எம்.ஜி.ஆரும், எம்.ஜி. சக்கரபாணியும், டி.எஸ்.பாலையாவும் இன்ன பிறரும் சினிமாவில் முதன்முதலில் முகங்காட்டிய ‘சதிலீலாவதி’யில் கிருஷ்ணன் தன் பங்குக்கு ஒரு புதுமையைப் போராடி, உரிமையெனப்பெற்றார். மற்றவர்கள் ‘சினிமா சான்ஸ்’ வருகிறதே என்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே படத்தின் நகைச்சுவைப் பகுதியை வடிவமைக்கும் பொறுப்பை ஒரு தனி உரிமையாக வாதாடிப் பெற்றார். அன்று தொடங்கி, அவரது பெரும்பாலான சினிமாக்களிலும் இந்த உரிமையை அவர் விட்டுக் கொடுக்காமல் பராமரித்தார். ‘தனி டிராக்’ முறையை அன்றே தொடங்கியவர் அவர்தான். இந்த அவரது தனித்துவம் தன்னிஷ்டம் போல நகைச்சுவைப் பகுதியைக் கையாள அவருக்குப் பெரிய வாய்ப்பை வழங்கியது. நகைச்சுவையின் மூலம் மக்களுக்கு நல்ல பல கருத்துக்களைச் சொல்ல இதை அவர் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கலைவாணரின் நகைச்சுவைக்கு அடிப்படை அவரது அறிவியல் பார்வை எனலாம். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையை அறிவியல் பூர்வமாகத் தரிசித்தவர் கலைவாணர் என்றே சொல்வேன். வாழ்க்கையை அறிவியல் கண்கொண்டு தரிசிக்கிறபோது மூடநம்பிக்கைகள் அகலும். அதோடு, சுயநலம் நீங்கி, மனிதநேயமும், சமூகப்பார்வையும் செழிக்கும். இத்தகைய அருங்குணங்களின் உருவமாகவே கலைவாணர் திகழ்ந்தார். இன்று வரையில் அவருக்கு இணை அவரே எனும் நிலைதான். சினிமாவில் கலைவாணருக்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அந்த இடத்தை வேறெவரும் போட்டி போட்டு அடையமுடியவில்லை. தனக்கு ஜோடியாக நடிக்க வந்து சேர்ந்த டி.ஏ.மதுரம் முதல்பார்வையிலேயே கலைவாணரின் மனசுக்குள் போய் அமர்ந்துவிட்டார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதென்ற உண்மையைக்கூட மறைத்து, மதுரத்தின் கைபிடித்தார் என்.எஸ்.கே. வாழ்விலும், தாழ்விலும் - படத்திலும், நிஜத்திலும் அந்த ஜோடி சக கலைஞர்களெல்லாரும் மூக்கில் விரல்வைத்து வியக்கும் வண்ணம் வாழ்ந்துகாட்டியது.

கலைவாணர் சொந்தப்படம் எடுத்தார். கையைச் சுட்டுக்கொண்டார். சினிமாவில் புகழின் உச்சிக்குப் போன பிறரைப்போலவே அவருக்கும் அந்த ஆசை வந்தது. வறுமை நிலைமை மாறி, கொஞ்சம் பணம் சேர்ந்த பொழுது- அவருக்கு வசதிகள் வந்து சேர்ந்த பொழுது ஒரு பத்திரிகை நிருபர் இப்படிக்கேட்டார்: “நீங்கள் இப்போது பணக்காரர் ஆகிவிட்டீர்கள் அல்லவா?” கலைவாணர் இதற்குச் சொன்ன பதிலைப்போல வேறொருவர் சொல்லிவிட முடியுமா என்ன? கலைவாணர் சொன்னார் : “ஆமாம்! நான் இப்போது பணக்காரன்தான். ஆனால், மற்ற பணக்காரர்களுக்கும் எனக்கு வித்தியாசம் இருக்கிறது. நான் பிறகுக்குக் கொடுத்து உதவுவதற்காகவே பணம் சம்பாதிக்கிறேன்!”

இதுவெறும் வார்த்தைகளில்லை. பெயர் வாங்க வேண்டும், மக்களிடத்தில் செல்வாக்கு பெற வேண்டும், ரசிகர் கூட்டத்தைப் பெருக்கி தான் நடிக்கும் சினிமா ஓடுவதற்கு ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு சொன்ன வேஷ வார்த்தைகளில்லை. பின்னாளில் அரசியல் பிரவேசத்துக்கு உதவுமே என்று இயங்கியதல்ல அவரது உதவும் உள்ளம்.

கலைவாணருக்குக் கொடைக்குணம் இயல்பிலேயே இருந்தது. பிறர் துயர் கண்டு சகிக்காத மனம் அவருடையது. சுயநலம் என்றால் அவருக்கு என்னவென்று தெரியாது. கொடுக்கும் குணம் அவர் இந்த மண்ணைவிட்டு மறையும் வரையில் மாறாமல் இருந்தது. தன் கலையின் மூலம் எளிய முறையில் வலிய கருத்துக்களை வாரி வாரி வழங்கிய அந்த வள்ளல், அதனால் கிட்டிய செல்வத்தையும் பிறருக்கே கொடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார். கலைவாணர் இப்படி இரண்டு வகையிலும் அவர் ஒரு பெருங்கொடையாளியாகவே வாழ்ந்தார்.

பகுத்தறிவுக்கருத்துக்களை எவர் மனமும் நோகாதவாறு எடுத்துச் சொல்லும் திறன் அவருடையது. இந்த நோக்கத்திற்கு நகைச்சுவை அவருக்குக் கைகொடுத்தது. நகைச்சுவைப் பகுதியைத் தானே உருவாக்கிக் கொள்ளும் தனி டிராக் முறை இதற்குத் தோதாக ஒத்திசைந்தது. கரம் பிடித்த காதல் மனைவி மதுரம் அவரின் மனசாக இருந்தார். சிந்தைக்கு உரமூட்டும் பகுத்தறிவுக் கருத்துக்களின் பெட்டகமாக பாடல்களை அவருக்காகவே யாத்துக் கொடுத்தார் உடுமலை நாராயணகவி. உடனிருந்த சக கலைஞர்களின் முழு அன்பு கலந்த ஒத்துழைப்பு கூடுதல் பலம் சேர்த்தது. இந்தக் கூட்டணி தமிழ்த்திரைவானில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் இல்லாத சினிமா எப்படி ஓடும் என்கிற நிலை கூட ஏற்பட்டது.

கலைவாணர் ‘நல்லதம்பி’ படம் எடுத்தார். தீண்டாமைக்கு எதிராகவும், கள்ளுக்குடிக்கு எதிராகவும் அதில் பிரச்சாரம் செய்தார். நந்தனார் சரித்திரம் என்பதை மாற்றி கிந்தனார் காலட்சேபம் செய்தார். அந்த நந்தன் கோவிலுக்குள் போக ஆசைப்பட்டான். கலைவாணரின் கிந்தனோ படிக்க ஆசைப்பட்டான். கல்வி தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து மீட்கும் என்று தன் கிந்தனார் காலட்சேபத்தில் சொன்னார் கலைவாணர்.

ஜமீன்தார் நல்லதம்பியாக கலைவாணர் நடித்தார். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதிவைக்கும் ‘காந்திய’ ஜமீன்தார் இந்த நல்லதம்பி.

பராசக்தி தயாராகிக் கொண்டிருந்த போதே சிவாஜி கணேசனை வைத்து ‘பணம்’ எடுத்தார். சொந்தப்படமெடுத்த பலரையும் போலவே கலைவாணருக்கும் அந்தச் சோகம் வந்தது. சேர்த்த செல்வமெல்லாமல் கையைவிட்டுப் போனபோதும் கொடுக்கிற வழக்கத்தை அவர் கை மறக்கிறதாக இல்லை.

மகளுக்குத் திருமணம் என்று யாராவது வந்து நின்றால் பதைபதைத்துப் போய் பணத்தை எடுத்துக் கொடுப்பார் அவர். கஷ்டம் என்று எவரும் அவர்முன் சொல்லிவிட முடியாது. உடனே அவர் கை தானாக எடுத்துக் கொடுத்துவிடும். இப்படியொரு மனிதர் தமிழ் சினிமா உலகத்தில் இருந்தாரா? என வியக்கத்தான் வேண்டும்.

பெரியார் இயக்கத்தோடும், பொதுவுடைமை இயக்கத்தோடும், தேசிய இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தோடும் ஆரோக்கியமான நட்புக் கொண்டிருந்தவர் கலைவாணர். இந்த இயக்கங்களின் உயர்ந்த லட்சியங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டவர் அவர். அவற்றிற்குத் தனது கலையின் வாயிலாக உருவம் கொடுக்க பெரு முயற்சி செய்தவர் அவர். இருந்த போதும் தன்னை எந்த இயக்கமும் சாராத பொது மனிதனாக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்பியவர் கலைவாணர்.

மனைவி மதுரத்திடம் ஒரு நாள் கலைவாணர் சொன்னார்:

“மதுரம், நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிட வேண்டும்!”

மதுரம் பதறிப்போனார். கலைவாணர் அவரைத் தேற்றியபடி சொன்னார்:

“ஆமாம் மதுரம். ஒரு கலைஞன் தன் கலை வறண்டுபோகும்முன் இறந்துவிட வேண்டும். கலை வறண்ட பின்னரும் வாழ்வது போன்ற அவலம் அவனுக்கு வேறொன்றும் இருக்க முடியாது!”

நிஜத்திலும், நடிப்பிலும் சிரிக்க வைத்துக்கொண்டேயிருக்கும் வழக்கம் கொண்ட கலைவாணர்தான் இப்படிப் பேசினார். வெறும் நகைச்சுவைக் கலைஞன் அல்லவே அவர். வெறுமனே சிரிக்க வைப்பவருக்குக் கோமாளி என்றுதானே தமிழில் பெயர்? ஆனால், கலைவாணர் தன்னை ‘நாகரீகக் கோமாளி’ என்றல்லவா அழைத்துக் கொண்டார்! இந்தப் புதுமையான கோமாளி சிரிக்கவும் வைப்பான், நாட்டைச் செழிக்கவும் வைப்பானென்றல்லவா சொன்னார் அவர். தன்னை சீர்திருத்தக்கோமாளி என்று கூறிக்கொண்டவரல்லவா அவர்?

கலைவாணர் வாழ்ந்து, மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்னரும் தமிழுலகம் அவரை நன்றியோடு நினைத்துக் கொள்வதற்கு அவரது அரிய அருங்குணங்கள்தானே காரணம்! மக்கள் சமூகத்தை முன்னேக்கி நகர்த்த தன்னாலியன்றதனைச் செய்து செல்லும் மனிதர்களை அந்த மக்கள் சமூகம் கொண்டாடி வைப்பது அந்தச் சமூகத்தின் நன்மை கருதியும் தானே?

இந்த வகையிலும் கலைவாணருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவரது இந்த நூற்றாண்டுத் தருணத்தில் அவர் குறித்து சிந்திப்பதும், அவர் வாழ்வை அறிவதும், அவரது அரிய திரைப்படங்களைத் தேடிப்பிடித்துப் பார்ப்பதும் அவருக்கு நாம் செய்யும் நன்றியும், அஞ்சலியும் மட்டுமல்ல... சகலவிதங்களிலும் தரம் தாழ்ந்து கிடக்கும் சினிமா உள்ளிட்ட கலைகளின் இன்றைய நிலைமாற, கலைவாணரைப் பயில்வது என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் பேருதவியும்கூடத்தான்!

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com