Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
நூல் மதிப்புரை
தி.க.சி - ஒரு மானுட ஆவணம்
ஜனநேசன்


“21 . இ - சுடலைமாடன் தெரு - திருநெல்வேலிடவுன்” என்னும் விலாசம் தமிழ் கூறும் நல்லுலகில் மிகப் பிரபலமான ஒன்று. தமிழ் இலக்கியவாதிகள் என்றறியப்பட்ட எவருக்கும் மேற்கண்ட விலாசத் திலிருந்து ஒரு கடிதம் கூட போகாமல் இருந்ததில்லை. இப்படி பிரபலமான அந்த முகவரிக்குச் சொந்தக்காரரான இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன் பற்றிய ஆவணப்படம் இது.

இப்படம் திரை விரியும் போது ஒரு குதிரை ஓடிக்களைத்து, மெல்ல புல் மேயக் குனியும் போது மயிலாக மாறுகிறது. காலவெளியில் ஓடும் குதிரையாகவும் பின்னர் அழகான மயிலாகவும் தி.க.சி.யின் வாழ்க்கை இயக்கத்தையும், கலை இலக்கிய இரசனையையும் குறியீடாகச் சொல்வதாக உணர முடிகிறது. இவ்வாவணப்படம் தொடக்கத்தில், திருநெல்வேலியின் அடையாளங்களான பச்சைவயல் சூழ்ந்த பரப்பின் நடுவில் தாமிரபரணி நதியும், குறுக்குத்துறை படிக்கட்டுகளும், கோவிலும், நெல்லையப்பர் - காந்திமதி கோவில் கோபுரங்களும், இருட்டுக்கடை அல்வாவும், நெரிசல் நிறைந்த நகர வீதிகளும் தோன்றிட, நாம் திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்லப்பட்டதாக உணருகிறோம்.

அடுத்து, தி.க.சி. ’21-இ-சுடலைமாடன் தெரு வீட்டிலிருந்து, வெளிவந்து முச்சந்திப் பிள்ளையார் கோவில் தெரு தபால் பெட்டியில், தான் முதல்நாள் இரவு எழுதின கடிதங்களைப் போட்டுவிட்டு அன்றைய தின வாழ்வைத் தொடங்குகிறார். தி.க.சி. படித்த மந்திரமூர்த்தி தொடக்கப்பள்ளி முதல் ம.தி.த.இந்து கல்லூரி வரை காட்சிப்படுத்துப்படுகிறது. தொடக்கப்பள்ளி அனுபவங்களையும், கல்லூரி விழாவில் புதுமைப்பித்தன் வந்து பேசிய விதத்தையும் தி.க.சி. தமது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து நமது நினைவுக்கு சுவாரஸ்ய மாய் இடப்பெயர்வு செய்கிறார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மூலம் அரசியலில் ஈடுபட்டு தடியடி பட்டது முதல் தொழிற்சங்க இயக்கங்களில் ஈடுபட்டது வரை பார்வைக்கு பரிமாறப்படுகிறது.

தி.க.சி. யைப் பற்றி, தமிழ் கூறும் உலகிற்கு அவர் ஆற்றிய தொண்டினை, அவரது இயல்புகளை, மேன்மையை தமுஎச மாநிலக்குழு உறுப்பினரும் ஓவியக் கவிஞருமான கிருஷி, தமுஎச மாநிலச் செயற்குழு உறுப்பினரும் இலக்கிய விமர்சகருமான ‘சிகரம்’ செந்தில்நாதன், கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத்தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன், ‘தாமரை’ இதழாசிரியர் சி.மகேந்திரன், எழுட்தாளர்கள் பா.செயப்பிரகாசம், தோப்பில் முகமது மீரான், கழனியூரன், நெல்லை அம்பி, ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோர் உள்ளப்பூர்வமாய் நினைவு கூர்கின்றனர். தி.க.சி.யின் மகன்கள் எழுத்தாளர் வண்ணதாசன், சேது, மகள் ஜெயலட்சுமி ஆகியோர், தி.க.சி. ஒரு தந்தையாக ஆற்றிய கடமைகளை, வழிகாட்டல்களை, ஊக்குவிப்புகளை தம் நினைவில் மலர்ந்தவைகளை நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த ஆவணப்படத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை “நதி” என்ற படிமம் தொடர்ந்து காட்சிப் படுத்தப்படுகிறது. தி.க.சி. தனது கொள்கை கோட்பாடுகளை, எதிர்காலக் கனவுகளை, நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல ஓடும் தாமிரபரணியில் சிறுவர்கள் குதிக்கும்போது ஏற்படும் நீர்ச்சலனத்தைக் காட்டிக் காட்டிப் பார்வையாளர் நெஞ்சிலும் சிந்தனைச் சலனங்கள் உருவாக்கப்படுகிறது.

எஸ்.இராஜகுமாரனின் எழுத்து - படத்தொகுப்பு - இயக்கத்துடன் 60 நிமிடங்கள் ஒளி-ஒலிப்படமாய் மிளிர்ந்துள்ள இந்த ஆவணப்படம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு, இராஜகுமாரனின் ‘தமிழ்க்கூடம்’ தந்த நன்கொடையாக கவித்துவமாகத் திகழ்கிறது. ஒளியும், ஒலியும், பின்னணி இசைக் கோர்ப்பும் இதமான எடுத்துரைப்பும் கனகச்சிதமாக அமைந்து கவிதை லயத்தோடு லாவண்யமும் உணர்த்தப்படுகிறது.

‘ஒரு மகாநதி ஓடிக்கொண்டிருக்கிறது. இது பாறைகள் மீதும் படிக்கட்டுகள் மீதும் சிறுகற்களின் மீதும் தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. பாறைகளாய், படிகளாய், கற்களாய் நாம் உணர்கிறோம்” என்று ஓவியர் வள்ளிநாயகம் சொல்வது போல இவ்வாவணப் படத்தைப் பார்க்கும்போது தி.க.சி. என்னும் மாநதி நம்மையும் தழுவி ஓடிக் கொண்டி ருப்பதாக உணரமுடிகிறது.

தமிழ் நெஞ்சினர் இதை வாங்கிப்பார்த்து பரவசமடைவதோடு நின்றுவிடாமல், பாதுகாக்க வேண்டிய ஆவணம் இது. இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக நின்ற ‘தமிழ்க்கூடம்’ பரிமளா ராஜகுமாரன் பாராட்டப்பட வேண்டியவர்.

வெளியீடு : “தமிழ்க்கூடம்” 14, சிவாஜி தெரு, தி.நகர், சென்னை - 600 017. விலை : ரூ.100


வெனிஸ் வணிகன்

அன்னபாக்கியன்


ஷேக்ஸ்பியர் ஒளிப்புகழ்குன்றாத நாடகச் சூரியன். காலஎல்லைகளைக் கடந்தும், உணர்வுவெப்பம் குன்றாத உயிர்ச்சூட்டுடன் திகழ்கிற நாடகங்களை தந்தவர். அவர் காலத்துச் சமூக அமைப்பின் குணமும், பொருளியல் கட்டமைப்பும், தர்ம நியாய சட்டங்களின் தன்மையும், அவற்றுக்குள் இயங்குகிற மனிதர்களின் உள் மனஉலகச்சூழலையும் இணைத்தே எழுதியவர். அவரது நாடகங்களில் கவிதைத்தன்மை மேலோங்கி காவியச்சுவை தரும். இதிகாசங்களுக்குரிய உணர்ச்சிப்போராட்டமும், எதிரும் புதிருமான தத்துவப் போராட்டமும், எல்லாக் காலதத்திலும் இயங்குகிற மனிதக் குணாம்சங்களை வகைமாதிரி பாத்திரங்களாகக் கொண்டு புனையப்பட்ட ஷேக்ஸ்பியரின் ‘வெனிஸ்வணிகன்’ நாடகத்தை உரைநடை பாணியில் விளக்கி, உணர்த்தி மொழி பெயர்த்திருக்கிறார், புகழ்பெற்ற தலைசிறந்த இலக்கிய அறிஞரான அமரர் பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாடகம் முழுக்க யூதவெறுப்பை முன்வைக்கிற கிறுத்துவக்குரல். அதே நேரத்தில் மனித அடிமைகளை உடைமைகளாக கொண்டிருந்த கிறுத்துவ வணிகர்கள் பற்றிய அம்பலப்படுத்தலும் வருகிறது.அந்தோணியாவுக்கு நேர்கிற சோதனைகள், இழப்புகள், ஷைலக்கிடம் வட்டிக்கு வாங்கி பணிகிற தாழ்நிலை எல்லாம் பாண்டவர் சோகமாக நம்மை உணர வைக்கிறது. ‘ஒரு ராட்தல் சதையை அரிவது’ என்ற பத்திர ஒப்பந்தத்தை ஷைலக் நீதிமன்றத்தில் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதத்தை வாசிக்கிறபோது, துச்சாதனம் நினைவுக்கு வருகிறது.

நீதிமன்ற விவாதமே ஒரு நாடகத்தன்மையும் காவியத்தன்மையுமாக இருக்கிறது. அதில் வருகிற திருப்பமும், நிலைமாற்றமும் வாசகனை மகிழ்ச்சிக்கும் பிரமிப்புக்கும் ஆளாக்குகிறது.

உரைநடை பாணியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், சிறிய வடிவில் இருந்தாலும், பெரும்காவியத்தை ருசித்த அனுபவத்தைத் தருகிற மொழி பெயர்ப்பாளரின் வியத்தகு ஆற்றல். வெனிஸ்வணிகன் என்ற இந்த நூலை என்சிபிஎச் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட்,41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை - 98.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com