Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
ஆசிரியர் பக்கங்கள்


அமெரிக்கா வீழ்ச்சி

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது டாலர் வீழ்ச்சியில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. லேமேன் கம்பெனியும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் அமெரிக்காவில் திவாலாகிவிட்டன. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்பதற்கு ஜால்ரா அடித்த நாடுகள் இந்தியா உள்படத் திண்டாடித் தெருவில் நிற்கின்றன. உலகமயத்திற்குத் தாளம்போட்ட மன்மோகன்சிங், மான்டெக்சிங் அலுவாலியா, ப.சிதம்பரம் போன்றவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கிறார்கள். எனினும் அமெரிக்கப் பொருளாதார நொடிப்பால் நமது நாட்டுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கதைக்கிறார்கள். நம்நாட்டில் இன்சூரன்ஸ் போன்றவற்றைத் தனியார் துறைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியவர்கள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் ‘இனி மேலாவது உலகப் பொருளாதார முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார். 1929ம் ஆண்டு ஏற்பட்ட ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியைவிட மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகமயப் பொருளாதாரம் அமெரிக்காவுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது உலகை முன்னேற்றப் போவதாய் முன்பு கூறியது. இப்போது அழித்து வருகிறது. எல்லாவற்றையும் அழிப்பதோடு மட்டுமல்ல, நீதி நேர்மையையும் அழித்து வருகிறது. நேர்மையற்ற வழிமுறை மூலம் உலகப் பொருளாதாரத்தைச் சீரழித்து வரும் அடையாளம் தான் இன்றைய அமெரிக்கக் கம்பெனிகளின் திவால் நிலையாகும் என்கிறார் சாவேஸ்.

இந்த உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நுழைக்கும் போதே இடதுசாரிக் கட்சிகள் கடுமையாய் எதிர்த்தன. ஆனால், அந்த எதிர்ப்பை ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்தனர். பின்பு ஆட்சிக்கு வந்த பிஜேபியும் உலகமயத்தைத் தீவிரமாக அமுல்படுத்தியது. உலகமயம் ஒப்பற்றது என்றே காங்கிரசும், பிஜேபியும் இன்று வரை உளறி வருகின்றன.

அமெரிக்க அரசு திவாலான கம்பெனிகளை மீட்பதற்காகவும், அமெரிக்க மக்களை பாதிப்பிலிருந்து மீட்கவும், 700 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அமெரிக்க செனட் சபைகளில் எதிர்ப்புடன் (74 - 25) தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு அமெரிக்கனின் நிதிப் பாதுகாப்புக்கு இந்த மீட்பு மசோதா அவசியம் என்று ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை புஷ் மறைக்கிறார். இந்திய நிறுவனங்களுக்கு 45,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மோட்டார் மன்னர்களான ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனங்கள் நிலைமையின் கடுமையை எச்சரித்துள்ளன. பயனாளிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தம், உற்பத்தி நிறுத்தம் வரும் என்பதோடு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும் என்று கூறியுள்ளன. ஃபோர்டு கம்பெனியின் தலைமை அதிகாரியான ஆலன் முலாலி, “இந்த வீழ்ச்சி நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய அளவுக்கு ஆழமானது என்றும், கடந்த ஓராண்டு காலமாகவே எதிர்பார்த்தது என்றும் கூறியுள்ளார். கடன் வழங்கும் வங்கிகள் திவால் ஆனதால் கார் விற்பனை அடியோடு நின்று விட்டது; வேலையிழப்பும் அதிகரித்து விட்டது என்கிறார்.

ரஷ்ய அதிபர் மெத்வதேவ் “உலகப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்காவின் உலக நிதி ஆதிக்கத்துக்குச் சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் உலகமய சீர்திருத்த நடவடிக்கைகளால் அந்த நாடுகள் திக்கற்ற நிலைக்கு ஆளாகி வருகின்றன என்பதோடு டாலர்தான் உலக நாணயம் என்பதும் முடிவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டார். ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மார்க்கெல் “இன்றைய நெருக்கடியிலிருந்து அனைவரும் பாடம் கற்க வேண்டும்; சர்வதேச நிதியத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாகவே அமெரிக்கப் பொருளாதாரம் எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது என்று அமெரிக்க நிதிச் செயலாளர் அறிவித்திருந்தார். லேமேன் பிரதர்ஸ் வங்கி திவால் ஆகப் போவதும் முன் கூட்டியே தெரிந்ததுதான். கடந்த ஆண்டே 107 டிகிரி காய்ச்சலில் இருந்தது. அமெரிக்க வணிகரான ஜான்ஜேன்சன் தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றி “பிரெஞ்சுப் புரட்சியின் போது நிலவிய பயங்கரம்” போன்றது என்று குறிப்பிட்டுள்ளார். வீடு கட்டக் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாததால்தான் லேமேன் வங்கி திவாலானதாய்க் கூறப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் அழிவின் விளிம்பில் நிற்பதாய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தாசர்களாகிவிட்ட ஆட்சியாளர்கள் கண்ணை மூடித் தியானத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது ஒன்றுதான் சர்வரோக நிவாரணி என்று உள்ளனர்.

அமெரிக்க அரசு அளிக்கும் 700 பில்லியன் டாலர் கடன் திவாலான வங்கிகளையும் இன்சூரன்ஸ் கம்பெனிகளையும் தூக்கி நிறுத்துமா? எவ்வளவு காலத்திற்கு? என்பனவெல்லாம் கேள்விக் குறிகளாகவே நிற்கின்றன. வேலையின்மை அமெரிக்காவில் பெருகி விட்டது. தொழில் நுட்பப் பொறியாளர்கள் உள்பட தெருவில் நின்று ஆப்பிள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிட்டது அமெரிக்கா. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்பவர்கள் இனியாவது வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கூர் டாடா கார் ஆலை

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி கடுமையாக முயற்சித்து டாட்டாவின் ஒரு லட்சம் ரூபாய் கார் நானோ தொழிற்சாலையைக் கொண்டு வந்தனர். கடந்த ஓராண்டு காலமாக மம்தா பானர்ஜி தலைமையில் பிஜேபி, நக்சலைட், காங்கிரஸ் ஆகியோர் இணைந்து மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதில் தீவிரமாய்ப் போராடினர். ஆலைக்கு வழங்கிய நிலத்தைத் திரும்ப வழங்கிவிட்டு டாட்டா வெளியேற வேண்டும் என்பதுதான் மம்தாவின் கோரிக்கையாக இருந்தது.

முப்பதாண்டுகளுக்கு முன்பு இடது முன்னணி அரசு நிலமற்றோருக்கு நிலம் வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியூட்டியது. இன்று அவர்களின் படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கச் செய்ய வேண்டிய பெருங்கடமை அரசுக்கு உள்ளது. அதற்காகவே மேற்குவங்கத்தைத் தொழில்மயமாக்க வேண்டியுள்ளது. இடது முன்னணி அரசு இதற்கென தனியார் துறையைத்தான் நாட வேண்டியுள்ளது. மத்திய அரசு எந்த உதவியும் செய்ய மறுக்கும் சூழலில் அரசுக்கு வேறுவழியில்லை. இந்தப் பின்னணியில் தான் மாநில அரசுக்கு நற்பெயர் கிடைக்கக் கூடாதென்று மம்தா தலைமையில் குடிகெடுக்கும் கூட்டம் அணி வகுத்தது.

தொழிற்சாலைக்கு வழங்கிய விவசாயிகளின் நிலத்தைத் திரும்பக் கொடு என்று கோஷமிட்டு மம்தா மூன்று மாதகாலமாக டாட்டா ஆலையை இயங்கவிடாமல் செய்தார். மாநில முதல்வர் புத்ததேவ் பல முயற்சிகள் செய்தும் முடியாததால் டாட்டா நிறுவனம் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்துவிட்டது. இதுபற்றி புத்ததேவ் குறிப்பிடும்போது “நாங்கள் போரில் தோற்றோம் - ஆனால் யுத்தம் இன்னும் முடியவில்லை” என்று கூறினார். மேற்குவங்க மக்கள் துரோகிகளுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com