உடன் நிறுத்தப்பட வேண்டும்!
இலங்கை அரசின் இராணுவத் தாக்குதல் மூலம், தொடரும் இலங்கைப் பிரச்சனைக்கு எவ்விதத் தீர்வும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அமைதி ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இராணுவம் தொடுத்துள்ள தற்போதைய தாக்குதலில் மேலும் பல அப்பாவி தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளம் பேர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்து சொந்த பூமியிலேயே அகதிகளாகியுள்ளனர். எந்த நேரம் என்ன நேருமோ என்று தினம் பீதியில் உறைந்த வாழ்க்கை...
இலங்கை இராணுவத்திற்கும் எல்.டி.டி.இ.யினர்க்குமிடையே பல பத்தாண்டுக்காலமாக நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், இராணுவத்தின் தாக்குதலால் போருடன் சம்பந்தப்படாத அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்! லட்சக்கணக்கானோர் வீடிழந்து, உடைமைகள் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். வாழ்வுரிமை இழந்த தமிழர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளவும், வாழ்வினைத் தொடரவும் தமிழகத்திற்கு அகதிகளாய் வந்ததுடன், வேறு பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தோராகச் சென்றுள்ளனர். உலகின் மனசாட்சியை உலுக்குகிற - அதிரச் செய்கிற இப்பெருந்துயரம் முடிவின்றித் தொடர்கிறது.
தற்போதைய இராணுவத் தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்; பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும்; இதற்காக இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்துவதுடன் அந்த மக்களுக்கு மனிதாபிமான முறையிலான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் - என்று தமிழகம் உணர்ச்சி பொங்க உரத்துக் குரல் எழுப்புகிறது.
இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு இருதரப்பு ஆயுத மோதல் அல்ல. அமைதிப் பேச்சுவார்த்தையும் அதற்கும் மேலாக, தமிழின மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கான சுயாட்சியுடன் கூடிய ஓர் அரசியல் தீர்வே, பிரச்சனைகளுக்கும் தமிழன மக்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பான நல்வாழ்வுக்கும் வழிதிறக்கும்; நிரந்தர நல்ல தீர்வாகவும் இருக்கும். எதிர்கால நிகழ்வுகள் இதை நோக்கி நகருமா..?
செம்மலர் மின்னஞ்சல் முகவரி (semmalar.tn@gmail.com)
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|