Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
தமிழ்நாட்டுச் சித்தர்களும் சீன நாட்டு தாவோயிகளும்

அத்திவெட்டி வே.சிதம்பரம்

உலகின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை மிக்க வரலாறும், கலாச்சாரமும் உடைய இரு இனங்கள் தமிழரும், சீனரும் ஆவர். மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழருக்கும் சீனருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1015இல் ஒரு தூதுக்குழு சீனாவுக்குச் சென்று வந்துள்ளது. இதே போல் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1033இல் ஒரு தூதுக்குழுவும் முதல் குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1077ல் ஒரு தூதுக்குழுவும் சீனாவுக்கு சென்று வந்துள்ளது என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகிறார். தமிழக, சீன வணிகர்கள் இந்தோனேசியா - ஜாவாவில் சந்தித்து வணிகம் செய்துள்ளனர். தமிழ்மொழியில் சீனத் தொடர்புடைய பல சொற்கள் வழங்கி வருவதை Tamil Lexicon மூலம் அறியலாம். கம்பராமாயணத்தில் சீனர் பற்றிய குறிப்பு உள்ளது. சிலப்பதிகார உரையில், "சீனச்சூடன்" குறிப்பிடப்படுகிறது. இந்த ஆதாரங்கள் தமிழக - சீனர் வரலாற்றுத் தொடர்பை நன்கு விளக்குவதாக அமைகின்றன.

தமிழில் சித்தர் பாடல்கள் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. சித்தர்கள் இறைவழி பாட்டில் புதிய கருத்துக்களை வலியுறுத்தினர். நோய் நீக்கும் மருத்துவத்தில் கவனம் செலுத்தினர். ரசவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்ற கண்ணோட்டமுடையவர்களாக சீனத்தில் தாவோயிகள் விளங்கினர் என்று ஆய்வாளர்கள் ஒப்பு நோக்கியுள்ளனர். பேராசிரியர் க.கைலாசபதி "தமிழகத்து சித்தருக்கும் தாவோயிகளுக்கும் ஒப்புமைகள் மாத்திரமின்றி நேரடியான தொடர்புகளும் இருந்திருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சித்தத் தத்துவமும் தாவோயிகளும் ஏறத்தாழ ஒரே தன்மையான சூழலிலே தோன்றி வளர்ந்தன" என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் சித்தர்கள் பலர் சீனர் என்று பின்வருமாறு குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார். "நமது நாட்டுச் சித்தர்களுக்கும் சீன நாட்டு மருத்துவர்களுக்கும் (தாவோயிகள்) ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தொடர்பு உண்டு என்று தெரிகிறது. சீன நாட்டு வைத்தியம் நமது நாட்டுச் சித்த வைத்தியம் போலவே சிறந்து விளங்குகின்றது. போகர் என்பவர் தமிழ்நாட்டுச் சித்தர்களிலே ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் சீனர். சீனத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர். பழனி மலையிலே தங்கியிருந்தார். புலிப்பாணி என்பவரும் சீனர். இவரையே "வியாகரபாதர்" என்று குறிப்பிடுகின்றனர். இவர் போகரின் மாணவர் என்றும் சொல்கின்றனர்." சித்தர்களுக்கும் தாவோயிகளுக்கும் தொடர்பு இருந்தது இதனால் விளங்குகிறது.

வீரராகவ ஐயர் தனது கட்டுரை ஒன்றிலே "போகர் தமிழின் பல வைத்திய நூல்களும் இரசவாத நூல்களும் எழுதினார். சீனத்தவரான அவர் கி.பி. 3ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தாரென்பர். முதலில் பாட்னா, கயா முதலிய இடங்களுக்குச் சென்ற பின் தென்னிந்தியாவுக்கு வந்து தமிழ் சித்தரிடம் இரசவாதமும் வைத்தியமும் கற்றார். அவரும் இத்துறைகளை தமிழருக்குப் போதித்தார். அவருடன் சீனத்துக்குச் சென்ற தமிழ் சீடர்கள் சிலர் பொறியியற்கலைகள் பயின்று வந்து தமிழ்நாட்டில் புகழெய்தினர். புலிப்பாணி என்பவர் போகருடன் வந்து தமிழ்நாட்டில் தங்கியிருந்தவர். அவரும் தந்திரம், இரசவாதம், வைத்தியம் முதலியனபற்றி பல நூல்கள் எழுதியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது அறியத்தக்கது.

தமிழ் சித்தர்கள் துறவு வாழ்க்கையை வலியுறுத்துகின்றனர். யோகம் மூலம் கடவுளை அடைய வழி சொல்லுகின்றனர். சித்தர்களுக்கு முன்பு தமிழகத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோற்றுவித்த பக்தி மார்க்கம் பக்தி மூலம் இறைவனை அடைய வழி சொல்லியது. பக்தி மார்க்கம் தோற்றுவித்த சூழலுக்கு எதிராகவே சித்தர் தத்துவம் தோன்றியது. சித்தர்கள் மத நிறுவனத்தை ஏற்கவில்லை. விழாக்களை, சடங்குகளை ஏற்கவில்லை. பொருள் தேடும் வாழ்க்கை மனிதனின் ஆன்ம வாழ்வை அழித்துவிடும் என்று சித்தர்கள் நம்பினர். சித்தர்கள் மனிதனின் மேன்மையில் உயர்வில் நம்பிக்கை கொண்டனர். சித்தர்களுக்கும் இஸ்லாமிய சூபி தத்துவத்திற்கும் ஒப்புமை உண்டு என்று வில்லியம் கிரஹாம் என்பவர் எடுத்துக் காட்டியுள்ளார். சித்தர்கள் உடம்பைப் பேண வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்கிறார் திருமூலர்.

தாவோயிகளும் உடலைப்பேண வேண்டும் என்கின்றனர். துறவு வாழ்க்கையை வலியுறுத்துகின்றனர். வாழ்க்கைத் துன்பத்தைப் போக்க புராதன வாழ்க்கையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்கின்றனர். தாவோயிகள் பற்றி சீனப் பேராசிரியர் ஃபுங்-யூ-லான் (பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "சமுதாயத்தை விட்டு ஓடி மலைகளிலும் குகைகளிலும் ஒளிந்து கொள்ளும் துறவிகளின் வழி இது. இவ்வாறு செய்வதால் மனித உலகத்தின் தீமைகளையும், துன்பங்களையும் தான் விலக்கிக் கொள்ள முடியும் என்று மனிதன் கருதுகிறான்" என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், "தாவோ என்பதை விளக்கி தாவோ என்னும் சொல் பெயரால் குறிப்பிட முடியாத ஒன்றை உணர்த்துவதாக தாவோ கொள்கையினர் கருதுவர். அவர்கள் கருத்துப்படி எதனால் எல்லாப் பொருளும் இருக்கின்றனவோ அதுவே தாவோ எனப்படும்" என்று கூறுகிறார்.

பேராசிரியர் ஜோசப் நீதாம் தாவோயிகளின் இரசவாதம், மருத்துவம் பற்றிக் கூறுகையில், 'இரசவாதம் தாவோயிகள் கண்டறிந்த மூலப்படிவ விஞ்ஞானமே ஆகும். மருந்தாக்க இயலும் மருத்துவத் துறையும் தாவோயிகளுடன் நெருங்கிய தொடர்புடையனவே. தாவோயிகள் வெறும் அவதானிப்பிலிருந்து பரிசீலனைக்கு முக்கியமளித்தனர். பலனாக அன்றைய கல்வி முறையில் மகத்தானதொரு மாற்றத்தை உண்டாக்கினர்" என்று குறிப்பிடுகிறார்.

சித்தர்கள் சாதிப்பிரிவினைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். பாம்பாட்டி சித்தர் "சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று குறிப்பிடுகிறார். சித்தர்கள் நாத்திக வாதிகள் அல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே. இருப்பினும் பல மூட நம்பிக்கைகளை கண்டனம் செய்துள்ளனர். "உளியிட்ட கல்சிலையில் உண்டோ உணர்ச்சி? சதுர்வேதம் அறுவகை சாத்திரம், பல தந்திரம் புராணங்களைச் சாற்றும் ஆகமம், விதம் விதம் ஆனதான வேறு நூல்களும் வீணான நூல்களே என்று ஆடுபாம்பே" என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

தாவோயிகள் சமூகக் கொடுமைக்கு எதிரானவர்கள் என்பதை பேராசிரியர் நீதாம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "நில பிரபுத்துவ அமைப்பு முறை முழுவதையும் தாவோயிகள் வெறுத்தமை போதிய அளவு தெளிவுறுத்தப்படாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றே. கீழைத்தேய ஞானத்தை எடுத்துக்கூறும் அப்பாவித் துறவுகள் என்ற தோரணையில் அவர்களை வர்ணிப்பவர்கள் தாவோயிகள் கையாண்ட வன்சொற்களை ஒரு கணம் சிந்தித்தப் பார்த்தல் தகும்". சித்தர்களைப் போலவே தாவோயிகளும் சமூகக் கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் ஆவார்கள்.

சித்தர்களைப் பற்றி டாக்டர் கமில் சுவலபில் The poets of the Powers என்ற நூலை எழுதியுள்ளார். சித்தர்களைப் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. மேலும், ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் The poetry and the philosophy of the Tamil Siddhars என்ற நூலில் சித்தர்களைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

சித்தர்களின் கருத்துத் தாக்கம் மற்றும் எளிய கவிதைத் தாக்கம் பாரதி முதல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரையான நவீன கவிஞர்களின் கவிதையில் காணப்படுகிறது. சித்தர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டு "ஞானக்கோவை" என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது அறியத்தக்கது.

சித்தர்களும் தாவோயிகளும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். மருத்துவம் மூலம் சாதாரண மக்களுக்கு உதவினர். வாழ்க்கையை வளப்படுத்த முயன்றனர். தீயவற்றை எதிர்த்து நன்மையை மக்களுக்கு உருவாக்கப்பாடுபட்டனர். சாதாரண எளிய மக்கள் பக்கம் நின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com