Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
மக்கள் கலை இலக்கிய விழா
ம.செந்தில்குமார்

கலையாத பிரமிப்புகள்தான் இன்னும். மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக் கூத்து பயிற்சிப்பட்டறையும் இணைந்து நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவின் நிரல்களே, விழா நடத்தும் இடத்திற்கு செல்லத் தூண்டியது. சேலத்தில் இறங்கி மேட்டூர் செல்லும் பேருந்தில் ஏறினால் ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பொட்டனேரி என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து ஏர்வாடி குட்டப்பட்டிக்குச் செல்ல வேண்டும். நிறுத்தத்திலிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் அந்த ஊருக்குச் செல்ல பேருந்து எப்பொழுது வரும் என விசாரித்ததில், "அந்த ஊருக்கு பஸ் இல்லைங்க, மினி பஸ் மட்டும்தான். அதுவும் எப்ப வரும் என்று சொல்ல முடியாது" என்ற பொழுதுதான் பேருந்து இன்னும் செல்லாத குக்கிராமத்தில் இவ்வளவு பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. விழா நிர்வாகியிடம் பேசியதில் விழாவிற்கான பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்டோ, என்னையும், என்னைப்போன்ற இதர நண்பர்களையும் அழைத்துச் சென்றது.

அந்தச் சின்னஞ்சிறிய கிராமமே படைப்பாளிகளால் நிரம்பியிருந்தது. அது ஓர் அற்புதமான சூழல். தங்களுடைய ஆற்றல்களைப் பிறிதொரு செயல்களுக்குச் செலுத்தாமல் ஆக்கப்பூர்வமானவைகளுக்குச் செலுத்தும் நண்பர்களின் ஒருங்கிணைப்பு அந்த பூமிக்கு மகிழ்வைக் கொடுத்திருக்கும். கலந்து கொண்ட இலக்கியப் பிரமுகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டாலே பக்கங்கள் நிரம்பிவிடும் அபாயம் இருப்பதால், மிகச்சுருக்கமாக நிரல்களைப் பதிவு செய்வது பொருத்தமாக அமையும்.

விழா பிற்பகல் 3.00 மணிக்கு துவங்கியது. இவ்விழாவிற்கு தமுஎச மாநிலப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்று துவக்க உரை ஆற்றினார். புதிய மாதவியின் 'புதிய ஆரம்பங்கள்' என்ற சிறுகதை தொகுப்பைப் பற்றி ஆதவன் தீட்சண்யா பேசினார். பரிசைப் பெற்றுக்கொண்ட புதிய மாதவி, தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால், தான் ஒரு வாசகியாக மட்டுமே இருந்திருப்பேன் எனவும், தான் வாழ்ந்த மும்பையின் சமூகச் சூழல் தன்னை எழுதத் தூண்டியதாகவும், அங்குள்ள விளிம்பு நிலை மக்களின் நிலைகளைப் பதிவு செய்வது தன்னுடைய சமூக கடமை எனவும் தெரிவித்தார்.

சிறந்த நாவலுக்கான பரிசினை "கங்கணம்" என்ற நாவலைப் படைத்தமைக்காக பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. நாவலைப் பற்றி பேசிய நாஞ்சில் நாடன், தமிழ் நாவல் இலக்கிய உலகில், உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றது பெருமாள் முருகனின் நாவல் எனவும், சங்க கால இலக்கிய அறிவை மட்டும் பெற்றிருக்கும் தமிழாசிரியர்கள், நவீன கால இலக்கியங்களை அறியாதவராகவும், நவீன இலக்கியவாதிகள் சங்க கால இலக்கியங்களில் நாட்டமில்லாதவர்களாக இருக்கின்ற சூழலில், பெருமாள் முருகன் தமிழ்ப் பேராசிரியராகவும், நவீன இலக்கியப் படைப்பாளராகவும் இருப்பது மகிழ்வளிக்கின்றது எனக் குறிப்பிட்டார். ஏற்புரையாற்றிய பெருமாள் முருகன் மணல்வீடு அளிக்கும் சிறந்த நாவலுக்கான பரிசை நாஞ்சில் நாடன் அவர்களின் கையில் பெறுவது குறித்து பேருவகை கொள்வதாக தெரிவித்தார். சிறந்த சிற்றிதழுக்கான பரிசினை 'புது எழுத்து' பெற்றது.

சிறந்த கட்டுரைக்கான பரிசினை வே.மு.பொதிய வெற்பனின் 'புதையுண்ட மௌனங்களின் அகழ் மீட்பில்' என்ற கட்டுரை தொகுதி பெற்றது. சிறந்த கவிதைக்கான பரிசினை ஜீவன் பென்னியின் 'நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது' என்ற கவிதை தொகுப்பு பெற்றது. மேற்படி கவிதை நூல் வெளியீட்டு விழாவும் ஒருங்கே நடைபெற்றது.

அரசாங்கம் செய்ய வேண்டிய செயல்கள் ஹரிகிருஷ்ணன் மூலம் நிகழ்வதாகவும், இலக்கியத்தின் பல்வேறு முகங்களைக் கொண்ட ஐவருக்கு பரிசு வழங்கி சிறப்பித்ததை சிலாகித்தார் பிரபஞ்சன். இலக்கிய விழா முடிவடைந்ததும் கிராமிய தெரு கூத்துக் கலைஞர்கள், தோற்பாவை கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், ச.தமிழ்ச்செல்வன் அவர்களால் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியை வாழ்த்தி பேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கே.ஏ.குணசேகரன், தமிழ்நாட்டில் கூத்து என்பதை காஞ்சிபுரம் சூழ்ந்த மாவட்டங்களில் மட்டும் இருந்தது என்ற எண்ணங்களை இது போன்ற நிகழ்வுகள் புரட்டிப் போட்டது எனவும், சங்க கால இலக்கியத்தில் காட்டப்பட்ட கூத்துக்கலைகள் சீர்குலைந்த விதங்களைப் பற்றியும், தற்பொழுது இங்கே உள்ள கலைஞர்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு நாட்டுபுறக் கலைகளை கற்றுத்தர வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார்.

மாலை 7 மணிக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அத்துனை பேருக்கும் இரவு உணவினை ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். உணவிற்குப் பிறகு 'வாலி மோட்சம்' என்ற தோல் பொம்மலாட்டம் நிகழ்வு ஜெயா மற்றும் இராஜம்மா குழுவினரால் நடத்திக் காட்டப்பட்டது. இரவு 10 மணியிலிருந்து 'லங்காதகனம்' என்ற தெருக்கூத்து நிகழ்வு நடந்தேறியது.

ரசிகர்கள் எல்லாம், "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?" "மானாட மயிலாட" நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு, பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற தொல் கலைகள் எல்லாம் பூமிக்கு அடியில் புதைந்து கொண்டு இருக்கும் சூழலில், வாழ்வின் ஓரத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களை கவுரவித்து விழா எடுத்தது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

ஒரு குக்கிராமத்தில் தமிழகத்தின் தலையாய படைப்பாளிகளை வரவழைத்து அவர்கள் அனைவரும் அளவளாவியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com