Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
தோழர் என்.வரதராஜன் வாழ்வும் வரலாறும்

எஸ்.ஏ.பி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் கவிஞர் பாலபாரதியால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

வரலாறு என்பது எல்லாக் காலங்களிலும் வெகு மக்களால் உருவாக்கப்படுவதுதான். அந்த வெகு மக்கள்தான் தங்களது தலைவர்களையும் உருவாக்குகிறார்கள். வெகு மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களுக்கே வழிகாட்டி வரலாற்றின் பாதை நெடுகிலும் அவர்களை அழைத்துச் செல்கிறவர்களே தலைவர்கள். வரலாற்றில் தனிநபர் பங்கு இந்த வகையில் மகத்தானதாகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களாக வருவது எளிதான காரியமல்ல. நேர்மை, ஒழுக்கம், வீரம், தியாகம் ஆகிய பண்புகளோடு பல ஆண்டுகள் உழைத்து மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே தலைவராக முடியும். எண்ணற்ற போராட்ட களங்களில் தலைமையேற்று சிறைகளையும், சித்ரவதைகளையும் சந்தித்தவர்களே கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள்.

இத்தகைய ஒரு மகத்தான தலைவரின் - தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொணர்ந்த கவிஞர் பாலபாரதியை மனமாரப் பாராட்டத் தோன்றுகிறது. ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெரும்பாலும் சுயசரிதை எழுதுவதில்லை. தன்னடக்கம் காரணமாகத் தங்களின் வீர தீரத் தியாக வரலாற்றை எழுதுவதில்லை. இது ஒரு குறையே. எனினும் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றோடு கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் இணைந்தது தான் என்பது இந்நூலைப் படித்தாலே அறிய முடியும்.

இந்நூலை ஒரு எளிய மனிதரின், எளிமையான தலைவரின் வாழ்வும் பணியும் என்று குறிப்பிடலாம். ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தில், அதுவும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்திலே வளர்ந்து வாலிபராகி மில் தொழிலாளியாகிறார். தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச காலம் தையல் தொழிலாளியாய் பணிபுரிந்தார். விடுதலைப் போராட்ட வீராங்கனை தோழர் கே.பி. ஜானகியம்மாவின் பேச்சைக் கேட்டு விடுதலைப் போராட்ட ஈர்ப்பு ஏற்பட்டது.

என்.வி., பாரதியின் பெயரால் வாலிபர் சங்கம் துவக்கியதும், ஜனசக்தி வாசிக்கத் துவங்கியதும்தான் அவரை அரசியலாக்கி கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைய வைத்தது. 1959ஆம் ஆண்டு தன்னைக் காதலித்த ஜெகதாம்மாவை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி கலப்புத் திருமணம் செய்தார். என்.வி. தமது மகன்களுக்கு கல்யாணசுந்தரம், பாரதி என்று பெயரிட்டார். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட்டுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோரின் நினைவாக மூத்த மகனுக்கும், தனது நேசத்துக்குரிய கவிஞர் பாரதியின் பெயரை இளைய மகனுக்கும் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் நீதிபதி "வேலை நிறுத்தம் செய்யும்படி மில் தொழிலாளர்களைத் தூண்டினாயா?" என்று கேட்டதற்கு "ஆம். தூண்டினேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்" என்று என்.வி. கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரிய கம்பீரத்தோடு பேசியுள்ளார். திண்டுக்கல்லில் தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், வி.மதனகோபால், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோருடன் இணைந்து தோல், சுருட்டு, பூட்டு, துப்புரவு ஆகிய தொழில்களில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களை அமைத்ததில் என்.வி.பெரும் பங்காற்றினார். பல போராட்டங்களில் பங்கேற்றுக் கட்சித் தலைவராய் உயர்ந்தார். இயக்கத்தின் வளர்ச்சியோடு என்.வி.யின் வளர்ச்சியும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

தலைமறைவு வாழ்வில் அவர் பசி பட்டினியாய் போலீசாருக்குத் தப்பி வாழ்வதில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார். மார்க்சிய இலக்கியங்கள், சோவியத் இலக்கியங்கள் மற்றும் தமிழில் வந்த முற்போக்கு இலக்கியங்களைப் படித்தார். ஜூலியஸ் பூசிக் போன்ற வீரர்களைப் பற்றியும் படித்தவர். இன்று வரை அவரது பையில் புத்தகம் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும். பஸ் பயணங்களிலும், தங்குமிடங்களிலும் அவர் அமைதியாய் புத்தங்களை வாசிப்பதையும், வாசித்ததை உள்வாங்கி கட்சியின் அணிகளுக்குப் பிரயோகிப்பதையும் காணலாம். கடந்த 42 ஆண்டுகளாய் நான் அறிந்தவரை கட்சி முடிவுகளைக் கட்சிப் பேரவைகளில் ரிப்போர்ட் செய்வதில் நிகரற்றவர். அவர் எப்போதும் கட்சி ஸ்தாபனம் குறித்தே அழுத்தம் கொடுத்துப் பேசுவார்.. அவர் எதிரிகளை விமர்சிக்கும் போது கூட ஒரு பண்பட்ட நடைமுறையையே பின்பற்றுவார். சாமானியர்களிடம் உள்ள பழிக்குப் பழி போன்ற உணர்வுகள் கட்சியையும், தனிப்பட்ட தோழர்களையும் சேதப்படுத்தி முடமாக்கி விடும் என்பதைக் கூறித் தடுத்த வரலாறு அவருக்கு நிறைய உண்டு. ஆத்திரமூட்டலும், ஆத்திரமூட்டலுக்கு இரையாவதும் அவருக்குப் பிடிக்காது.

கொந்தளிப்பான நிலைமைகளில் கூட கட்சிப் பேரவைகளில் அவர் பேசினால் அடங்கிவிடும். பாரதி முதல் ஜூலியஸ் பூசிக் வரை கூறியவற்றை எடுத்துக் கூறிப்பொருத்தமான முறையில் உணர்வூட்டுவார். கட்சி முடிவுகளை செயல்படுத்துவதில் கவனமாக இல்லை என்றால் முடிவுகள் காகிதத்திலேயே நிற்கும் என்பார். தோழர்கள் செயலுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறுவார். நுகர்வுக் கலாச்சாரம் போன்ற முதலாளித்துவக் கருத்துக்களுக்கு தோழர்கள் இரையாகிவிடக் கூடாது என்று எச்சரிப்பார். இன்று வரை அவர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு ஓய்வறியா உழைப்பாளியாய்த் திகழ்ந்து முன்மாதிரியாய் விளங்குகிறார்.

1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் என்.வி. முக்கியமானவர். 1967 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் அவருக்காகக் கட்சியின் சார்பில் செலவிட்ட பணம் ரூ.4500 தான் என்றால் ஆச்சரியமில்லையா? ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி பெரும் பண முதலைகளை எதிர்த்துக் குறைந்த செலவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1973ஆம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி அதிமுக திண்டுக்கல்லில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆர். தோழர் என்.வி.க்கு ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்க விரும்பினார். ஆனால் அதை என்.வி. மறுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமையை நிலைநாட்டினார்.

சோசலிச நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளுக்கு அவர் கட்சியின் பிரதிநிதியாய் சென்ற சிறந்த அனுபவங்களை நூலில் கூறியுள்ளார்.

வாலிபர் சங்கம், தொழிற்சங்கம், பல ஆண்டுகள் விவசாயிகள் சங்கம், கட்சி மையம் என்று அறுபதாண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர். எங்கு பிரச்சனைகள் எழுந்தாலும் உடனே தலையிடுவதில் தீவிரமாக இருப்பார். மதுரையோடு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30 ஆண்டுகளாய்ப் பொறுப்பாளராக இருந்தார். நான் மாவட்டச் செயலாளராய் அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டேன். மூன்று முறை நடந்த சாதிக் கலவரங்களின் போது தெளிவான வழிகாட்டலைக் கொடுத்ததோடு எம்.ஜி.ஆருடன் பேசி நேரடியாய் அவரைக் கலவர பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கியப் பங்காற்றினார். இரு தரப்புத் தோழர்கள் அனுதாபிகளின் பேரவைக் கூட்டங்களை நடத்தி மக்கள் ஒற்றுமைக்கு வழிகாட்டியதை என்னால் மறக்க முடியாது.

பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துக்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகளை எதிர்த்து கட்சியும் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்த போராட்டங்கள் நடத்த அவர் ஊக்கப்படுத்தி வருகிறார். அண்மை ஆண்டுகளாய் அருந்ததியர் இட ஒதுக்கீடு, அவர்களை மலம் அள்ளச் செய்யும் கொடுமைகளை எதிர்த்து முன்னணியில் நின்று போராடி வருவதும் குறிப்பிடத்தக்க அவரது நடவடிக்கையாகும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்க தமிழக முதல்வரின் உதவியைப் பெறுவதிலும், அதற்குக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத்தை அழைத்து வருவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

அவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென்மாவட்டங்களில் கட்சியைக் கட்டுவதில் செலவிட்டார். அவர் சிறந்த பேச்சாளர், கட்சி அணிகளுக்கு அற்புதமான முறையில் போதிக்கும் ஆசிரியர் போன்ற பல்திறம் பெற்றவர். தமிழ்நாடு கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் என்.சங்கரய்யாவுக்குப் பிறகு பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு மீண்டும் மூன்றாவது முறையாகவும் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு அவரது பயணம் தொடர்கிறது.

தோழர் என்.வி. பத்திரிகை பிரசுரங்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை காட்டுவார். நீண்ட காலமாக தீக்கதிரைக் கட்டிக் காத்ததிலும், மூன்று பதிப்புகளாக்கியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. அடுத்த மாநாட்டிற்குள் திருச்சி, நெல்லைப் பதிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளார். மதுரைக்குக் கட்சிப் பணிக்காக அவர் வரும் போதெல்லாம் தீக்கதிரில் தங்கியிருப்பார். தோழர்களுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விவாதிப்பார். மதுரை தீக்கதிரில் நவீன அச்சு எந்திரங்களைப் பொருத்துவதிலும், பணிகளை விஸ்தரிப்பதிலும் அக்கறை செலுத்தினார். அவர் கலந்து கொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் பத்திரிகைகளின் விற்பனை பற்றிப் பேசாமல் விட மாட்டார். அதே போல் கட்சியின் கலைக் குழுக்களின் தோழர்களை மிகவும் நேசிப்பார். அவர்களது கூட்டங்களிலும், பயிற்சிப்பட்டறைகளிலும் இருந்து நேரத்தைச் செலவிட்டு வழிகாட்டுவார். இதற்கு கலை இலக்கியங்களின் மீது அவருக்குள்ள இயல்பான ஈடுபாடே காரணமாகும்.

பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், பதவிகள் பல பெற்றும் தனது துணைவியார் ஆசிரியையாகப் பணியாற்றியும் கூட இன்று வரை சொந்த வீடு கட்டிக் கொள்ளாமல் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருபவர். அவரது துணைவியார் ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்ள நீண்ட காலம் ஆசைப்பட்டார். அது நிறைவேறவேயில்லை. ஒருமுறை அந்தத் தாய் "முதிய வயதில் நான் நோய்வாய்ப்பட்டுச் சாகிற போது எந்த வீட்டில் சாவேன்" என்று என்.வியிடம் கேட்டார். அதற்கு அவர் "கவலைப்படாதே. சொந்த வீடு இல்லாவிட்டால் என்ன? என் மடி மீது உன் உடலைத் தாங்கி ஆயிரமாயிரம் செங்கொடிப் புதல்வர்கள் அணி வகுத்து வர இம்மண்ணில் புதைப்பேன்" என்று கூறிய செய்தியைப் படிக்கும் போது நம் கண்ணீல் நீர் மல்குகிறது. அவரது வாழ்வின் அனைத்து விசயங்களும் நூலில் கொண்டு வர முடியாவிட்டாலும் பெரும்பகுதி விசயங்களை நூலில் கொண்டு வருவதில் பாலபாரதி வெற்றி பெற்றுள்ளார்.

புரட்சியாளர்களின் பயணம் மிக நீண்டது. தோழர் என்.வி.! நீங்கள் எங்களுக்கு முன்னால் வழிகாட்டிப் பயணிக்கிறீர்கள். நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம். அணியணியாய், அளவற்ற நம்பிக்கையோடு... படித்து முடித்ததும் வாய் முணுமுணுக்கிறது.

தவறாது படியுங்கள்; இந்தப் புரட்சியாளனின் வாழ்க்கை வரலாற்றை. ஒரு எளிய மனிதன் தலைவராய் உயர்ந்த கதையை.



வெளியீடு : பாரதி புத்தகாலயம்

421, அண்ணாசாலை,

தேனாம்பேட்டை,

சென்னை - 600 018

விலை ரூ. 60


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com