Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
இயக்குநர் பாலாவின் நான் கடவுள்

எஸ்.ஏ.பி.

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா தனித்திறமை படைத்தவர். முன்பு சேது, பிதாமகன் படங்களில் அவரது திறமை வெளிப்பட்டது. இரண்டுமே மனநோயாளிகளின் வாழ்க்கை பற்றியது. நான் கடவுள் ஜெயமோகனின் ஏழாவது உலகம் கதையைத் தழுவி திரைக்கதையாக்கம் பாலாவால் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் மனநோயாளியின் கதைதான். பிதாமகனின் கதாநாயகன் சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவன் என்றால் 'நான் கடவு'ளின் கதாநாயகன் ருத்ரன் பிணங்கள் எரியும் காசி நகரின் சுடுகாட்டுப்புகையில் உருவாகிறான்.

சிறுவனாய் காசியில் விட்டு வந்த மகனைத் தேடிச் செல்லும் அப்பா பதினாலு ஆண்டுகள் கழித்துத் தனது மகனை ஒரு காபாலிகனாய், ருத்ரனாய் சந்தித்து அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன் தாய், தந்தை, சகோதரி அனைவரையும் வெறுத்து கஞ்சாவில் மிதக்கிறான். அகம் பிரம்மாஸ்மி எனும் அத்வைத உளறலை (நானே கடவுள்) உளறியவாறு ஒதுங்கி பிச்சைக்காரச்சாமியார்களோடு வாழ்கிறான். அதே ஊரில் ஊனமுற்றவர்களை வைத்துப் பிச்சையெடுக்க வைத்துப் பணம் பண்ணும் தாதா தாண்டவன். அவனிடம் சிக்கும் கண் தெரியாத பார்வையற்ற பூஜாவை ருத்ரன் எப்படி துயரங்களிலிருந்து விடுதலை செய்கிறான் என்பதே கதை. திரைக்கதை மிகச் சிறியது தான். படம் முழுவதையும் பிச்சைக்காரர்களே இழுத்துச் செல்கிறார்கள்.

முடிவில் காபாலிக தர்மமாய் கூறப்படும் பாவிகளுக்கும் பாவப்பட்ட பூஜாவுக்கும் நான் கடவுள் என்று கூறும் ருத்ரன் மரணத்தை வழங்குகிறான். உண்மையில் ருத்ரனாய் வரும் ஆர்யா வேடம் கட்டியவர் போலத் தோன்றவில்லை. நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பயங்கரத் தோற்றத்தோடு கம்பீரத்தோடு கடைசி வரை நடைபோடுகிறார். அவர் போடும் சண்டைகளும், செய்யும் கொலைகளும் பயங்கரமானவை.

காசியில் கங்கைக் கரையில் பிணங்கள் எரியும் காட்சிகள் அற்புதமாய் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளையராஜாவின் இசை படத்துக்கே உயிரூட்டுகிறது என்று கூறலாம். பூஜாவுக்குப் பிச்சையெடுக்க பொருத்தமான பழைய பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒளிப்பதிவும் சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளும் சிறப்புற அமைந்துள்ளன. ஜெயமோகனின் உரையாடல்கள் எதுவும் நினைவில் பதியவில்லை. பிச்சைக்காரர்களின் ஜோக்குகளில் மட்டும் லேசான சிரிப்பு வருகிறது.

பிச்சை எடுக்க வைக்கும் குடோன் போல திரைக்கதையை வேறு ஒன்றிரண்டு தளங்களுக்கு விஸ்தரித்திருந்தால் ருத்ரனும், படமும் சோபித்திருக்கலாம். எனினும் பாலாவின் தனித்திறமையும் நுட்பமும் படம் முழுவதும் பளிச்சிடுவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆர்யாவையும் பூஜாவையும் அவர் செதுக்கியிருப்பதையும் பாராட்ட வேண்டும்.

பாலா சாதாரணமாய் காண முடியாத மனநோயாளிக் கதாபாத்திரங்களை விட்டு வெகு மக்கள் கதாபாத்திரங்களை உருவாக்கி, நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை அம்பலப்படுத்த முன்வர வேண்டும். அவரது திறமை மக்களை விழிப்படையச் செய்யத்தக்கதாய் அடுத்த படைப்புகள் வெளிவர வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com