Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
எழுத்தாளரும் தணிக்கை அதிகாரியும்
ராஜம் கிருஷ்ணன்

"இந்தத் தொழிலுக்கு எவ்வளவு முதல் போட்டிருக்கிறீர்கள்?"

நான் விழித்தேன்

"ஏனம்மா? என்ன முதல் போட்டீர்கள்?"

எனக்குக் குழப்பமாக இருந்தது.

அவர் மீண்டும் எனக்கு விளக்கமாக விவரித்தார்.

"ஒரு புத்தகம் என்றால் காகிதம், அச்சுக் கூலி, அட்டைப்படம், என்று எத்தனையோ செலவுகள். இதெல்லாம் கூட்டிக் கழித்தால்தான், முதலுக்கு மேல் செலவு ஆயிருக்கிறதா இல்லையா என்று தெரியவரும்? அப்படி நீங்கள் போட்ட முதல் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற கணக்குப் பண்ணலாம். இது லாபகரமான தொழிலா, இல்லையா என்று சொல்லலாம்"

"அப்படிப் பார்த்தால் இது லாபகரமான தொழில் அல்ல."

"பின் என்னம்மா சொல்கிறீர்கள்?"

"ஆமாம் நான் ஒரு புத்தகம் எழுதும் எண்ணத்துடன் கடற்கரைகளுக்குப் போகிறேன் என்றால் கௌரவம் பார்ப்பதில்லை!"

"என்னம்மா கதையாக இருக்கிறது? இதோ இருக்கிறது கடற்கரை. திருவில்லிக்கேணியில் இருந்து, அல்லது மயிலாப்பூர் நெடுக இருக்கிறது..."

"இந்தக் கடற்கரை இல்லை. தூத்துக்குடியில் இருந்து கரை நெடுகப் பயணம் செய்ய வேண்டும்!"

"அங்கே ஏனம்மா போக வேண்டும்? இங்கே இருக்கும் கடற்கரையை விட்டு விட்டு?"

"அங்கேதான் மீனவர் பிரச்சனை வெடித்தது!"

"என்ன பிரச்சனை? அங்க தான் வெடித்ததா? இங்கே வெடித்ததாக எழுதலாம் அல்லவா?"

"அப்படி எழுத முடியாது."

"ஏன்?"

ஏன் என்றால் அப்படித்தான். அந்த மீனவர் வரலாறே தனி... நானூறு வருடங்களுக்கு முன் அந்தக் கரைக்கு வந்த சேவியர் சுவாமிகள் அந்தக் கரையில் இருந்த மீனவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினார். அப்படியானால் மதமாற்றம் பற்றிய கதையா? என்னால் செய்யக்கூடியது.... "அதற்கு இணையாக விலை மதிப்பற்ற அன்புக்கு அப்ப பிரச்சனைதான். இதை எப்படி இந்த அரசு தடை செய்யாமல் விட்டது?"

எனக்குச் சிரிப்பு வந்தது.

"என்னம்மா சிரிக்கிறீர்கள்? நீங்களே மதக் கலவரத்தைத் தூண்டும் புத்தகத்தை எழுதிவிட்டு நியாயம் பேசுவது ஒரு குற்றவாளி தன் செயலை நியாயப்படுத்தும் செயல் ஆகும்!"

"இது நடந்த உண்மை. இதை ஆவணப்படுத்தும் முயற்சி என்று வைத்துக் கொள்ளலாம்."

"அப்படி இன்று எல்லாக் கலவரங்களையும் ஆவணப்படுத்த வேண்டியது அவசியமில்லை; மட்டுமன்று. ஆபத்தானதும் கூட. நீங்கள் இந்த மாதிரி நூல்களை எழுதுவது உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது."

"ஐயா, நீங்கள் வருமானவரி தணிக்கை அதிகாரி. என் வரவு - செலவுக்கணக்கைப் பார்த்து, எனக்கு வரி செலுத்த வேண்டுமா என்பதைத்தான் சொல்ல வேண்டுமே ஒழிய வரம்பு மீறி மூக்கை நுழைப்பது அநாவசியம்."

"அம்மா, நான் என் வரம்பை மீறி ஒரு இம்மி கூட நுழையவில்லை. சரி, நீங்கள் பயணம் செய்ய எவ்வளவு செலவு செய்தீர்கள்."

நான் குழம்பிப் போனேன். எவ்வளவு செலவு? சுமார் ஆறுமாத காலம் அங்கும் இங்கும் இங்கும் தங்கிச் சமைத்து உண்டதும் மீனவர்களின் அன்பில் நனைந்து அவர்கள் எனக்காக உடன்குடி போன்ற அடுத்துள்ள ஊர்களில் இருந்து பொருட்கள், காய்கள், அரிசி போன்றவை வாங்கி வந்து எனக்குத் தாவர உணவு சமைத்துப் போட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன். இதற்கு என்ன விலை.. நிர்ணயிப்பது? என்ன காட்டுவது? மீண்டும் ஒரு முறை நான் அந்தக் கரை நெடுகச் சென்றேன். எனக்கு அறுசுவை உணவு - அமுதுபடைத்த அந்த மூதாட்டி காலமாகி இருந்தார். அவருடைய இளம்பிள்ளை வாதத்தால் கால் முடங்கிப் போன மகன் மட்டும் இருந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தொடர்ந்து நாலைந்தாண்டுகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வந்தன. அதன்வாயிலாக அன்புத்துளிகள் அந்த நட்புறவை பரிசாக நினைவுறுத்திக் கொண்டே இருந்தன. வரவு - செலவுக் கணக்கை ரூபாய் பைசாக்களில் கணக்கிடும் தணிக்கை அதிகாரியிடம் எப்படிக் கணக்கிடுவது? அவரே என் குழப்பதைப் பார்த்துவிட்டு, "பயணம் செய்தீர்கள். ஐம்பது கி.மீ. என்று வைத்துக் கொள்கிறேன். இங்கேயே கடற்கரை இருந்தாலும் மீறிப் போயிருக்கிறீர்கள். டாக்சியில் போனதாக வைத்துக் கொண்டாலும், நான் லிபரலாகவே செலவு ரூபாய் ஆயிரம் என்று போடுகிறேன். இதர செலவுகள் எல்லாமாக உங்கள் தொழிலில் ஒரு புத்தகம் தயாரிக்க ஆகும் செலவு, ரூபாய் ஆயிரம் - இது அதிகம்தான். நான் ரவுண்ட் ஆஃப் பண்ணிருக்கிறேன்."

அப்பாடா ஆளைவிட்டாரே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அடுத்த குண்டு வந்து வெடித்தது:

"சரி, என் ஃபீசைவெட்டுங்க. நான், உங்களுக்கு எதுவும் கட்ட வேண்டாம் என்று பான் நம்பர் கொடுத்துடறேன்."

"சரி என்ன ஃபீஸுங்க?"

"பத்தாயிரம்!"

"பத்தாயிரமா?" திடுக்கிட்டுப் போனேன். நான்

"ஆயிரம்னு சொல்ல, பத்தாயிரம் ஃபீஸா?"

"நீங்க இந்த ஃபீஸுக்கு ஒப்புக்கலன்னா, நீங்க செலவழிச்சிருக்கறத எல்லாம் ஒத்துக்குங்க. ட்ரிப்யூனலுக்குப் போகும் கேஸ். அப்புறம் ஐயா அம்மான்னு காலில் பிழுந்து கட்டுங்க லட்சம் ரூபாய் போல? எனக்கென்ன வந்தது?"

"ட்ரிப்யூனலா? அதென்னங்க?"

"அதுவா.... இதுமாதிரி விதிகளை மீறிட்டு முழிக்கிறவங்க முட்டிக்கும் கோர்ட்டு!"

"என்னங்க, இந்தத் தொழில்ல செலவுதான் ஆகுதே ஒழிய லாபமே இல்லீங்க?"

"அப்படி வாங்க வழிக்கு! லாபமில்லாம செலவு பண்ணுவீங்களா?"

"சத்தியமா சொல்றேன் லாபமில்லிங்க; புத்தகம் எழுதி முடிக்கிறதுக்குள்ளா என்ன விமர்சனம் வருமோன்னு பயந்திட்டே இருப்பேங்க?"

"விமரிசனத்துக்குச் செலவழிப்பீங்க? வெளியீட்டு விழாவைப்பீங்க; இதெல்லாம் வரும்படி இல்லாமலா செலவழிப்பீங்க?"

"அதெல்லாம் நான் செய்யறதில்லீங்க!"

"செய்யறது உண்டுதானே...?"

"நான்தான் முதலிலேயே சொன்னேனே? எது வந்தாலும் ஒத்துப்பேங்க"

"அப்படீன்னா முன்னமே வாயடைக்க செலவு செய்திரும்பிங்க! நீங்க செய்றது முழுக்கப் பொய்ங்கறது வெட்ட வெளிச்சமாலிடுத்து..."

"நீங்க என்னவோ பயமுறுத்தூங்க! இந்தத் தொழிலில் மனத் திருப்தித்தானே ஒழிய பணம் இல்ல! நீங்க வேணா என் பொருளாதார நிலையப்பாருங்க. அதெல்லாம் எழுதறவங்களுக்கு ஒரு சுக்கும் கிடையாது அவங்களுக்குக் கணக்குப் போடத் தெரியாது. வியாபாரிகள்தான் சம்பாதிப்பவர்கள். ஆயிரம் புத்தகமனு அச்சிட்டதா சொல்றவாங்க. புத்தகச் சந்தைன்னு ஒண்ணு போடுவாங்க அதுல ஒரு சமயம் ஐநூறு புத்தகத்துக்கு மேல் நான் கையெழுத்துப்போட்டுக்குடுத்தேன். ஆனால அப்பவும் கையிருப்புப் புத்தகம் 1000 பிரதிகள்னு கணக்குக் காட்டியிருந்தாங்க. அவங்கதான் எங்களைச் சரியா முட்டாள்கள்னு புரிஞ்சுக்கிட்டு முளகாரச்சிட்டிருக்காங்க. நாங்க அப்பாவிங்க. எங்க முதுகில் சுமய வச்சேன்னா தாங்க மாட்டோமுங்க!"

"இதொன்னும் நம்பும்படியாக இல்லை. நீங்கள் பொய் சொல்றதுல வல்லவங்க. பேனாவிலநீங்க போடறது மையில்ல. அப்பட்டமான பொய். பணத்தைக் கக்குங்க. இல்லாட்டி அதன் விளைவைச் சந்திக்க நேரிடும்."

"துணிந்தவருக்குத் துக்கமில்லை. என்ன ஆனாலும் பாத்துக்கய்யா?"

"அப்படி வா வழிக்கு! எடு! பதுக்கி வச்சிருக்கிற கரன்ஸி எல்லாம்"

"வந்து சோதனை போட்டுக்குங்க"

உள்ளே செல்கிறார். பூட்டிய கதவு திறக்கப்படுகிறது. அலமாரியில் புத்தகங்கள் அடுக்கடுக்காகக் காட்சியளிக்கின்றன.

"என்னம்மா இதெல்லாம்?"

"பார்த்தால் தெரியல? புத்தகங்கள்"

"ஏன் பதுக்கி வச்சிருக்கே? உள்ள கரன்ஸியா?"

திறந்து பாரய்யா? வயிற்றெரிச்சலக்கிளப்பாதே?"

"ஒரு புத்தகத்தைத்திறந்து பார்த்துவிட்டு வீசி எறிகிறார்.

"என்னம்மா இதெல்லாம்? கதைவுடற?"

"கதை இல்ல நிஜந்தான். ஒண்ணும் விக்கல. கடன் வாங்கிப் புத்தகம் போட்டோம். லஞ்சம் குடுக்கப் பணமில்ல. நூலகங்களுக்கும் இது போகல. வங்கில வெறும் பேப்பரை வச்சா கடன் குடுப்பாங்க? அச்சிட்ட புத்தகங்களை சொத்துன்னு ஒத்துக்கிறது இல்ல. படைப்பாளிக்கு மூளை இருந்தும் யாரும் ஒத்துக்கறது இல்ல. என்புத்தகம் தீப்பெட்டிய விட அத்தியாவசியமான பொருளா மக்களிடையே பரவணும்னு கனவு கண்ட பாரதியின் எழுத்துக்கள் முட்டைக்குள் போட்டுக் கட்டபட்டிருந்தன. மூட்டையை அடகுவச்சி பொண்ணு கல்யாணத்துக்குக் கடன் வாங்கினாங்க. அதுபோல இதுக்கும் ஒரு காலம் வரலாம்!"

"என்னம்மா கதை பண்ணிட்டிருக்கிறீங்க?"

"கதையில்லை. சத்தியமா இதுதான் உண்மை! இலையில் வைத்த சோறு உண்மையில்லை. இலைக்குத்தான் மதிப்பு!"

"இலையில்லைன்னா சோறு எப்படி வரும்?

வியபாரி இல்லைன்னா நீ புத்தகம் எழுதுவியா?

ஒத்துக் கொள்! ஒத்துக்கொள்! உன் மூளையினால் ஒன்னும் வேகாது. உன் எழுத்து இன்று வெறும் காத்து.... அன்னிக்கு வெறும் ஏடுகள். இன்னிக்கு அந்த மதிப்பும் கூட கிடையாது.... எதிர்காலம் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அந்த தான் எல்லாரும் டி.வி. சிரியல் எழுதவோ, சினிமாக் கதைன்னு மாயமான் பின்னாடி ஓடவோ செய்யிறாங்க. மேலும் கேக்காதீங்க. எழுத்தாளர் ஒண்ணா மானம் மனச் சாட்சிகளைத் தூக்கி எறிஞ்சுட்டு வாரா வாரம் குப்பைகளை விதைக்கணும். இல்லே சாகணும்...."


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com