Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
உறவு

ஆர்.கந்தசாமி

கண்ணாடியை அரைத்துக் குடித்து குருவக்கா சாகக் கிடக்கிறாள் என்று கேட்டபோது ஊரில் எல்லோருக்கும் அதிர்ச்சி; அதை விட வியப்பு; தற்கொலைப் பாதைக்குச் சென்ற பலரைத் தடுத்து வாழ வைத்தவள். நம்பிக்கை ஊட்டியவள்; அவளா இப்படி!

மருமகனைப் பார்க்க சேலம் சென்றவள் நேற்று இரவு ஊர் திரும்பினாள். சேலம் போய் வந்த கதையை குருவக்கா சிரிக்கச் சிரிக்க சொல்வதைக் கேட்கலாம் என்று காலைவரை பொறுத்திருந்த ஊர்ப் பெண்களுக்கு இதை நம்பவே முடியவில்லை.

குருவக்கா இராமநாதபுரத்திற்கு வந்தது வரத்துக்காரியாக பஞ்சம் பிழைக்கத்தான். ஒரு மாத பழக்கத்திலேயே ஊரும் ஜனங்களும் பிடித்துப்போனது. இனி மேல் இங்கேதான் தன் வாழ்க்கை! என்று முடிவு செய்தாள்.

யாருக்குத்தான் குருவக்காளைப் பிடிக்காது? அவள் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை. குழந்தை இல்லாமல், கணவனையும் இழந்து தனி மரமாகவே நடு வயதை எட்டிவிட்டவளுக்கு சொத்து என்று ஏதும் இல்லாவிட்டாலும் சிரிப்பை எல்லோருக்கும் வாரித் தர முடிந்தது.

கதை, சொலவடை, தன்வாழ்க்கை அனுபவங்களை செய்நேர்த்தியுடன் சொல்லும்போது நேரம் போவதே தெரியாது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்னும் ஏதாவது சொல்ல மாட்டாளா என்றே தோன்றும்.

பருத்தியெடுப்பது ஆகட்டும், களை வெட்டுவது ஆகட்டும், கூட வேலை செய்பவர்களுக்கு நிரை போவதே தெரியாது.

இப்படித்தான், காரை வீட்டு நாயக்கர், தோட்டத்தில் மிளகா நாற்று நடுவை. இராத்திரிக் கரண்டு, "இப்பப் போகட்டுமா, பிறகு போகட்டுமா?" என்று போக்குக் காண்பித்துக் கொண்டிருந்தது. பெருவாய்க் கால் நனைந்து தண்ணீர் பாத்தியைத் தொடும்போது 'தடார்' என்று மோட்டார் நின்று விட்டது. "கூடவே நானும் வர்றேன்" என்று லைட்டும் போய்விட்டது, ஒரே இருட்டு.

"என்ன குருவக்கா கரண்டு சனியன் இந்த அநியாயம் பண்ணுது. டவுண்ல நல்லாத்தானே இருக்கு" என்றார் காரவீட்டு நாயக்கர்.

குருவக்கா, " கிராமத்த தேடி வர்றதுக்கு கரண்டுக்கு வழி மறந்து போச்சோ என்னவோ? நீங்க பிரசண்டா இருக்கும் போது ரோட்டை கொஞ்சம் நல்லா போட்டு இருக்கலாம். கரண்டும் கஷ்ட்டப்படாம வழி பார்த்து வந்திருக்கும்" என்றான்.

எல்லோரும் குபீரென்று சிரிக்க காரவீட்டு நாயக்கரும், தன் அடிமடியிலேயே கைவைக்கப்பட்டதைப் பொருட்படுத்தாமல் மனம்விட்டுச் சிரித்தார்.

இன்னொரு சமயம். பருத்தி எடுப்பு நடந்து கொண்டிருந்தது. கரிசல்காடே வறுபட்டு கானல் பறந்து கொண்டிருந்தது. குருவக்கா வழக்கம்போல் முன்னத்தி நிரையில் போய்க்கொண்டிருந்தாள். வேலையில் சோர்வு தட்ட கருப்பாயி குருவக்காவைக் கிண்டினாள்.

"அக்கா இன்னிக்கு என்னகிழமை?"

"அதுவா...." என்று கூறிச் சிரித்தாள் குருவக்கா - கருப்பாயிக்கு கேட்டது கிடைத்துவிட்டது.

"என்னக்கா சொல்லிட்டுச் சிரிக்கக் கூடாதா?" என்றாள்.

"இப்படித்தான் சக்கட்டி நாயக்கருக்கு ஒருநா கொல்லைக்குப் போக அவசரம். அந்தி மசங்குற நேரம். கோமணத்தைக் கட்டியிருந்த மனுசனுக்கு வெளியில் கட்டிட்டுப்போக அவசரத்துக்கு வேட்டி கிடைக்கல. கண்ணில்பட்ட சேலையை போர்த்திக் கிட்டு ஓடிப்போய் மந்தையில் 'அப்பாடா'ண்ணு உட்கார்ந்தார். அப்போ அங்கே வந்த இன்னொருத்தி இவர் மேல் உள்ள சேலையைப் பார்த்து, 'அடுத்த வீட்டு அக்காதானே' என்று பக்கத்தில் உட்கார்ந்து பேச்சுக் கொடுத்தாள். 'இதென்னடா ரோதனை' என்று இவர் எல்லாவற்றிற்கும் 'ம்...ம்.... போட்டுச் சமாளித்தார்.

"அக்கா இன்னிக்கி என்னகிழமை?" என்றாள் அவள்.

இவர் 'ம்' போட்டார்.

"ரெண்டு தடவை கேட்டவள், 'என்னக்கா நான்பாட்டுக்கு திரும்பத் திரும்ப கேட்கிறேன். என்னகிழமைண்ணு சொல்லக்கூடாதா?"

"இனிமேல் தாளாது என்று நினைத்த நாயக்கர் 'அதுவா.. அது ஆம்பிள்ளையும், பொம்பிளையும் சேர்ந்து உக்காந்து வெளிக்கிருந்த கிழமை' என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து ஓட்டம் பிடித்தார்.'

கள்ளமில்லாமல் வெடித்துச் சிதறிய சிரிப்பொலியில் சோர்வு பறந்துவிட்டது.

.....

வேலைக் களத்தில் மட்டுமில்லை. புருசனோடு மனஸ்தாபம், தாய்வீட்டில் கஷ்டம், உடன் பிறந்தவர்களுடன் உறவுப் பிரச்சனை போன்ற மன பாரத்துடன் வரும் பெண்களின் புகலிடம் குருவக்காவின் வீடுதான்.

'அக்காவிடம் பேச்சுக் கொடுத்தாலே மனசு லேசாயிடும்' என்பது கிராமத்துப் பெண்களின் அனுபவம்.

ஒருநாள் நடுச்சாமம். தெருவில் ஏதோ ஆள் நடமாடும் அரவம் கேட்டு குருவக்கா வெளியே வந்தாள். கீழவீட்டு மாரியம்மாதான். மேலூரில் வாக்கப்பட்டுப்போய் ஆறுமாதம் கூட ஆகவில்லை. புருசனுடன் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் சிலநாளாக முகம் கொடுத்துப் பேசாது இருப்பதையும் குருவக்கா கவனித்துத்தான் வந்தாள்.

மாரியம்மாள் தலையில் முக்காடுடன் மந்தைப் பிஞ்சை தோட்டக்கிணறு நோக்கி நடந்தாள்.

குருவக்காவுக்கு சகலமும் புரிந்துவிட்டது. அரவம் காட்டாமல் பின்னால் நடந்தாள்.

மாரியம்மாள் மந்தைப் பிஞ்சைக் கிணற்றின் கமலைக் கல்மீது நின்றாள். முந்தானையை இறுக்கிக் கட்டினாள்; ஒரு நிமிடம் யோசிப்பது போலத் தெரிந்தது.

நிலைமையின் விபரிதத்தைப் புரிந்து கொண்ட குருவக்கா, மாரியம்மாளின் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்து பாத்தியில் தள்ளினாள்.

சற்றும் இதை எதிர்பார்க்காத மாரியம்மாள் முதலில் அதிர்ச்சி அடைந்தாள்.

காப்பாற்றியது குருவக்கா என்று தெரிந்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டு உடைந்துஅழுதாள். துளிப்பாசமில்லாத அத்தை, குடிகார மாமன், இதைக் கண்டும் காணாத கோழைப் புருசனின் ஆதரவின்மை...

மாரியம்மாளைப் பேசவிட்டாள்... பின், குருவக்கா கனிவான, கண்டிப்பான குரலில், "நீ வாக்கப்பட்டு எத்தனை வருசமாச்சி. ஆறு மாசம் கூட ஆகலை; போகப் போக புகுந்த வீட்டுக்காரங்க குணம் மாறலாம். மாறலண்ணாலும், அவங்க உறவே இல்லண்ணாலும் வாழ்க்கை இருக்கும். என்னைப் பாரு. ஒரு வகையில பார்த்தா எனக்கு யாருமில்லே; இன்னொரு வகையில எனக்கு ஊரே சொந்தம்."

இரண்டே நாளில் மாரியம்மாள் புத்துணர்வுடனும், புதுத் துணிச்சலுடனும் புகுந்த வீடு போனாள்.

ஒரு நாள் பக்கத்துக்கு வீட்டுக் கருப்பாயிடம் குருவக்கா, "ஊருக்குப் போறேன். ஒரு சாவு. வர மூணு நாளாகும். வீட்டைப் பார்த்துக்கோ" என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனாள்.

ஆனால், பத்து நாட்கள் கழித்துத்தான் ஊர்திரும்பினாள். கூடவே 7-8 வயது உள்ள பையன் இவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான்.

கேட்டதற்கு, "செத்தவ எனக்குத் தூரத்துச் சொந்தம். இவனுக்கு அம்மா. அப்பன்காரன் இவன் பிறந்தப்பம் பரதேசம் போனவன் ஊர் திரும்பவே இல்லை. உசிரோட இருக்கானோ? செத்தானோ? அம்மாவுக்கு சயநோக்காடு. நோயோடயும், வாழ்க்கையோடயும் போராடினா. கடைசில போதும்டா சாமின்னு கண்ணை மூடிட்டா. இவன் அனாதையா நிக்கான். சாவுக்கு வந்தவுங்க, 'இதுக்கு மேல இருந்தா இவன நம்ம தலைல கட்டிடுவாங்க'ன்னு சொல்லாம கொள்ளாம மயானத்துல இருந்தபடியே மாயமாயிட்டாங்க. இவன் தெருவுல நிக்கான். என்ன செய்வான்? என்னப் போல போக்கத்தவன். 'கூட வாடா'ன்னு கூட்டியந்துட்டேன்."

'இந்த வயசான காலத்துல எதுக்கு இதெல்லாம்' என்றாள் கருப்பாயி.

"ம்h... இன்னும் அம்பது வருசம் இருப்பேன். உங்களோடயே சந்தோசமா வாழ்வேன். 'இன்னொரு ஆயுச கொடுப்பா. இந்த ஊரிலேயே பிறக்கணு'மிண்ணு, நான் சாமிய கும்பிடுறேன். நீ என்னடி இப்படிச் சொல்ற".

கேட்டவள் சிரித்துக் கொண்டே, "இரு ஆத்தா... நல்லா இரு. நீ இருந்தாத்தான் எங்களுக்கெல்லாம் ஒரு தெம்பு" என்றாள்.

பையன் உள்ளூரில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பில் சேர்ந்தான். ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் குருவி குளத்தில் உள்ள ஹைஸ் கூலில் சேர்ந்தான். குருவக்கா, 'மருமகனே, மருமகனே' என்று மூச்சுக்கு முந்நூறு தரம் சொன்னாள். ஆனால், மகனைப் போல் பார்த்துக் கொண்டாள்.

இவள் கழி, கம்மஞ்சோறு என்று கழிவில்லாமல் சேர்த்துக் கொள்வாள். மருமகனுக்கு மூணு தரமும் நெல்லுச் சோறுதான்.

ஹைஸ்கூல் திறக்குமுன், முதல் வாரமே பையனை கழுகு மலைக்குக் கூட்டிச் சென்றாள். முருகனுக்கு அர்ச்சனை செய்தாள். கடைத் தெருவுக்குப் போய் மருமகனுக்கு சட்டை டவுசருக்குத் துணி எடுத்து தைக்கப்போட்டாள். பேனா, ரப்பர், ஜாமன்ட்ரி பாக்ஸ் என்று சாமான்கள் வாங்கியவள், சந்தையில், "இவனுக்குப் பிடிக்குமே' என்று "சூடக் கருவாடு" வாங்கினாள்.

குருவக்கா ஒன்றும் கோவில் குளம் என்று சுற்றுபவளல்ல. உள்ளூர் காளியம்மன் கோவிலுக்குக் கூட பொங்கலன்று போனால் உண்டு.

இவள் கழுகுமலைக்குச் சென்று அர்ச்சனை பண்ணியது அனைவருக்கும் வியப்பு.

"என்னக்கா இது புதுப் பழக்கம்?" என்றாள் கருப்பாயி.

"என் வாழ்க்கை பற்றி எனக்குக் கவலையே இல்லை. என்னை மீறி எனக்கு எதுவுமே நடக்காது. ஆனா மருமகன் நல்லா இருக்கணும். அவன் குலம் தழைக்கணும். இந்த ஊர்லயே வேர் விடணும்" என்றாள்.

------

மருமகன் ஒவ்வொரு வகுப்பாகக் கூடக் கூட குருவக்காவுக்கு ஒவ்வொரு பழக்கமாகக் கூடியது.

காளியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்குப் போட்டாள். இவன் ஒன்பதிலிருந்து பத்துக்குப் போகும் போது சனிக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தாள்.

ஒருவழியாக முக்கித் தக்கி ஹைஸ்கூலைத் தாண்டும்போது மருமகனுக்கு சுத்தமாக 21 வயது ஆகிவிட்டது.

மிகக் குறைந்த மார்க்கில் 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்றுதான் தேறினான்.

மருமகனை 'வாத்தியார் ஆக்கி விட வேண்டுமென்பது குருவக்காவின் ஆசை.

ஊர்ப் பெரியவர்களிடம் யோசனை கேட்டாள். அவர்கள் சொன்ன ஆட்களையெல்லாம் பார்த்துப் பேசினாள். பலத்த சிபாரிசுடன் மருமகனை ஆசிரியர் பயற்சிப் பள்ளியில் சேர்த்தாள். ஊர்க்காரர்கள் சந்தோசத்துடன் தங்களால் இயன்றதைச் செய்தனர்.

குருவக்கா பணத்திற்காக அரும்பாடு பட்டாள். பணத்தை காலம் தவறாது மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தாள்.

கிடைத்த வேலையெல்லாம் கழிக்காமல் செய்தாள். களைவெட்டு, பருத்தி எடுத்தல், தப்புப் பருத்தி எடுத்தல், கோடையில் வேலையில்லாத போது கரிசல்காட்டில் முள் பொறுக்க, கல் பொறுக்க என்று கேட்டுக் கேட்டு வேலைக்குப் போனாள்.

சோற்றுக்கு குழம்பு வைப்பதைக் குறைத்துக் கொள்வது என்று ஆரம்பித்து, பின் நின்றே போனது. தண்ணீர் ஊற்றிய பழைய கஞ்சிதான் பெரும்பாலும். கடையில் பருத்திக்கு எடைக்கு எடை வாங்கிய சீனிக்கிழங்கைத் தின்று இரவுப் பாட்டை முடித்துக் கொண்டாள்.

மருமகன் இரணடு வருஷப் படிப்பை கஷ்டப்பட்டு நாலு வருஷப் படிப்பாக்கினான். ஆசிரியப் பயிற்சி முடிந்து வீட்டில் இருந்து பின்னும் இரண்டு வருசம் பரீட்சை எழுதித்தான் தேறினான்.

இதனாலெல்லாம் குருவக்கா தளர்ந்து விடவில்லை. ஆனால், எழுபது வயது அவள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களைச் செய்யாமல் இல்லை.

கண்களில் பார்வை குன்றியது. முன்பு போல ஓடியாடித்திரியமுடியவில்லை. மற்றவரோடு நிரை போட்டு வேலை செய்யமுடியவில்லை. ஆனாலும், மனதளவில் எழுபது வயதை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.

வெள்ளி, சனி உப்புத் தண்ணீர்க் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்து விட்டு, ஈரப்புடவையோடு சாமி கும்பிட்டு, காலையில் சாப்பிடாமலேயே காட்டு வேலைக்குப் போனாள்.

வேலை செய்யும் போது குருவக்காவுக்கு களைப்பு ஏற்பட்டாலும், இவளது வரவு மற்றவர் சோர்வை நீக்கியது.

சிலர் மறைவில், சிலர் நேரிலேயே "அக்கா படுறபாட்டுக்கு, பேசாம இவங்களே பரீட்சை எழுதிடலாம்" என்றனர்.

இதற்குப் பதிலாக, குருவக்கா சில நேரம் "என் மருமகனை கேலியா செய்றீங்க" என்பாள்.

சில நேரம், "அதுக்கு சல்க்கார் பயக ஒத்துக்க மாட்டாங்களே" என்பாள்.

"இல்லக்கா உடம்புக்கு ஏதாச்சலும் வந்திடப் போகுது" என்று உண்மையான அக்கறையுடன் சொன்னாள் கருப்பாயி.

"என் உடம்புக்கு என்ன? எமன் வாய்தா கேட்டுட்டுத்தான் இருக்கான். 'பயலே வாசலுக்கு அந்தப் பக்கத்துலயே நில்லு. நான் சொல்றபோது உள்ளே வா"ண்ணு வாசத் திண்ணையிலேயே உக்கார வச்சிருக்கேன்.

-----

ஒரு வழியாக பயிற்சி முடிந்த சில மாதங்களிலேயே, மருமகனுக்கு சேலத்தில் வாத்தியார் வேலை கிடைத்தது.

குருவக்கா ஓடிப்போய் கழுகுமலை முருகனுக்கு அர்ச்சனை செய்தாள். மனதில் கருப்பாயின் மகள் வந்தாள். அவளை மருமகளாக்கிக் கொண்டால் இவளின் ஆசை முழுமையாகி விடும். 'என் வீட்டு நாத்து இந்த ஊரில் வேர்ப்பிடிச்சி மரமாகணும் என்று வேண்டினாள்.

நல்ல நாள் பார்த்து மருமகன் சேலத்திற்குப் புறப்பட்டான். 'அது பொல்லாத நாள்' என்று குருவக்காவுக்குத் தெரிய நியாயமில்லை. வாழ்க்கையின் தொடரும் அபத்தங்களில் இதுவும் ஒன்று.

சேலம் போய்ச் சேர்ந்த கையோடு மருமகன் செய்த முதல் காரியம், ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் தன் உடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது.

எல்லாம் முடிந்து இரண்டு மாதம் கழித்து கடிதம் போட்டான்.

தனக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருந்த கருப்பாயி மகளை மருமகளாக்கிக் கொள்ள நினைத்த குருவக்காவின் எண்ணத்தில் மண்.

தன்வாழ்வின் ஜீவ ஊற்றாக இருந்த ஊரிலேயே தன் குலம் வேர்விட்டுத் தழைக்க வேண்டும் என்ற ஆசை நிராசை ஆனது.

ஊரார்க்கு மருமகனின் துரோகம் தெரியவர,குருவக்காவிடம் தங்களது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தனர்.

குருவக்கா, "அவன் இஷ்டம்; அவன் செஞ்சிக்கிட்டான்" என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

மணமக்கள் இருவரையும் அழைத்து விருந்து வைத்தாள்.

முன்னேற்பாடாக வீட்டுக்கு ஓடுமாற்றினாள். வெள்ளை அடித்தாள்.

ஊர்க்காரர்கள் ஆளாளுக்கு ஒத்தாசை செய்தனர். 'சுண்ணாம்பு இல்லாமலேயே வெற்றிலை போடுபவர்' என்று சிக்கனத்திற்கு பேர் போன சங்கையா, இரண்டு வண்டி மணல் கொண்டு வந்து குருவக்காவின் வீட்டு முற்றத்தில் பரப்பினார்.

புது மணமக்கள் வந்தனர். குருவக்கா மகிழ்ச்சியோடு பார்த்துப் பார்த்து விருந்து வைத்தாள்.

ஆனால், மருமகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஃபேன் காற்று இல்லாமல் தவித்துப் போனாள். சோறு படைத்ததட்டுகளிலிருந்து, படுக்கும் பாய் வரை அருவருப்புடன் பார்த்தாள். வீடும் சரி, ஊரும் சரி ஒட்டவே இல்லை அவளுக்கு.

தங்கியிருந்ததது ஒரே நாள்தான். நாள் முழுவதும் விசிறி வைத்து வீசிய வண்ணமே இருந்தாள். ஊரில் யாருக்கும் அவளை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

வந்த மறுநாளே மணமக்கள் இருவரும் ஊர் கிளம்பிவிட்டனர்.

குருவக்கா குருவிகுளம் வரை சென்று பஸ் ஏற்றி அனுப்பி வைத்தாள்.

மருமகளிடம், "சீக்கிரம் எனக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடு; நான் வளர்க்கிறேன்" என்றாள். ஆனால், மருமகளிடம் பதில்தான் இல்லை.

குருவக்கா திருப்தியாகவே திரும்பி வந்தாள்.

---------

ஒருமாதம் கழித்து, மருமகள் குடும்பம் நடத்தும் பாங்கைப் பார்க்க குருவக்கா சேலம் கிளம்பினாள்.

தான் சேலம் வருவதை ஒருவாரத்திற்கு முன்னதாகவே கடிதம் மூலம் தகவல் அனுப்பினாள்.

"ஒரு பத்து நாள் கூட மாட ஒத்தாசையா இருந்துட்டு வர்றேன்" என்று கருப்பாயிடம் கூறி விடை பெற்றாள்.

சேலம் சென்றவளுக்கு முதல் அதிர்ச்சி. தன்னை அழைத்துப் போக பஸ் நிலையத்திற்கு மருமகன் வரவில்லை.

'கடிதாசி சேந்திச்சோ இல்லையோ?' என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். விலாசத்தை வைத்து கஷ்ட்டப்பட்டு வீடு விசாரித்துப் போனாள்.

வீடு பூட்டி இருந்தது. கிரில் கேட் வழியாகப் பார்த்ததில் சமையலறை தெரிந்தது. மருமகள் சேரில் உட்கார்ந்து இருந்தாள். பெயர் சொல்லி அழைத்தாள்.

கதவருகே வந்த மருமகள் குருவக்காவைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

"அவுக ஊரில் இல்லையே" என்று கூறி உள்ளே சென்றாள்.

சாவிதான் எடுக்கப் போகிறாள் என்று குருவக்கா காத்திருந்தாள்.

பகல் முழுவதும் காத்திருந்ததும் கதவு திறக்கப்படவே இல்லை.

குருவக்காவுக்கு சகலமும் புரிந்துவிட்டது. "போயிட்டு வர்றேம்மா. அவன்வந்தா சொல்லு" என்று உள்ளே பார்த்துச் சொல்லிவிட்டு பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தாள்.

நினைவு மெல்ல நழுவிக் கொண்டு இருந்தது குருவக்காவுக்கு. ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் வந்து விட்டனர். பெண்களின் அழுகை ஒலி கேட்டது. அனைவரின் கண்களும் கண்ணீர் நிறைந்து இருந்தது.

பழைய பிரசிடெண்டு தலைகுனிந்து குருவக்காவிடம் கேட்டார்:

"குருவக்கா, மருமகனுக்குச் சொல்லி அனுப்பட்டுமா? கொள்ளி போடணுமில்ல"

குருவக்காவின் செருகிய கண்கள் மெல்லத் திறந்தன.

சிரமத்துடன் இரண்டு கைகளையும் உயர்த்தி, மறுப்பது போல அசைத்தாள்.

"மருமகன் கொள்ளி போட வேண்டாம்" என்கிறாளா?

குருவக்கா இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டாள். கண்கள் சுற்றி இருப்பவர் அனைவர் மீதும் பட்டுத் திரும்பியது.

'அவள் என்ன சொல்ல விரும்புகிறாள்? பலரும் பலவாறு நினைத்துக் கொண்டனர்.

அவள் கையெடுத்துக் கும்பிட்டது, 'தனது இறுதிக் கடனை ஊரார் தான் செய்ய வேண்டும்' என வேண்டுவது போலும்,.. இத்தனைக் காலம் தன்னுடன் தாயாய், பிள்ளையாய்ப் பழகியதற்கு ஊராருக்கு நன்றி கூறுவது போலும்,...

விடை பெற்றுக் கொள்வது போலும்... இருந்தது.

கைகள் தொய்ந்து மார்பின் மீது விழுந்தன. கண்கள் நிரந்தரமாக மூடிக் கொண்டன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com