Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
மறக்கள வழி

வெ.பெருமாள்சாமி

சங்க காலத்தில் மக்கள் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இனக் குழுவாக - கண சமூகமாக - வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்தனர். அந்தக் காலகட்டத்தில் நீர்வளம் மிக்க ஆற்றங்கரைப் பகுதிகளான மருதநிலத்தில் (வயலும் வயல் சார்ந்த இடமும்) பூகோளச் சூழல் காரணமாக சமுக மாற்றம் முன்னதாகவே நிகழ்ந்தது. ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்து அதனினும் முன்னேறியவையான அடிமைச் சமூகமும், நிப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின. வையைக் கரையில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் அரசு அமைத்து ஆட்சியை நிறுவினர். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் புகார் நகரத்தில் சோழர்கள் ஆட்சியமைத்தனர். சேர நாட்டில் வஞ்சி மாநகரில் சேர மன்னர்களின் அரசு அமைந்தது.

அதிகார போதையில் ஆழங்கால் பட்டிருந்த அம்மன்னர்கள் மண்ணாசை காரணமாக அண்டைப் பகுதிகளான குறிஞ்சி, முல்லை நிலங்களில் வேட்டையாடியும் நிரை மேய்த்தும் பொதுவுடமைச் சமூகமாக வாழ்ந்த மக்களின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டு அவர்களைக் கொடூரமாகத் தாக்கி அழித்தனர். அவர்களின் உடைமைகளைக் கொள்யைடித்துச் சென்றனர். அவ்வாறு அழித்துத்தான் அரசுகள் பேரரசுகள் ஆயின. இவ் அழிவுகளைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

சோழன் கரிகாற்பெருவளத்தான் இம்மக்கள் வாழ்ந்த ஊர்களை அழித்துப் பாழ் செய்தமை குறித்துப்பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விரிவாகப் பெருமை பொங்கப் பாடியுள்ளார். அதற்காக அம்மன்னன் புலவருக்குப் பதினாறு லட்சம் பொன் பரிசிலாகத் தந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

"கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி

விருந்துண்டு ஆனாய் பெருஞ்சோற்று அட்டில்

ஒண்சுவர் நல்லில் உயர்திணை இருந்து

பைங்கிளி மிழற்றும் பாலார் நெடுநகர்த்

தொடுதோலடியர் துடிபடக் குழிஇக்

கொடுவில் எயினார் கொண்டி யுண்ட

உணவில் வறுங்கூட்டு உள்ளகத்திருந்து

வளைவாய்க் கூகை நண்பகல் குழறவும்

அருங்கடி வரைப்பின் ஊர் கவினழியப்

பெரும்பாழ்செய்தும் அமையான்"

என்று அம்மன்னன் செய்த அழிவுகள் குறித்து பட்டினப் பாலை (261 -70) கூறுகிறது.

"கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி

பாழ் செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்"

என்று, பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் போரில் தோற்றவர்களின் ஊர்களை இடித்தழித்துப் பாழ் செய்து அவ்விடங்களில் கழுதை ஏர் பூட்டி உழுதுவெள் வரகும் கருங்கொள்ளும் விதைத்து இழிவுபடுத்திய செய்திகளைப் புற நானூறு (15) கூறுகிறது.

மன்னர்கள் கொடும்போர் நிகழ்த்திய போர்க் களத்தை ஏர்க்களமாக உருவகம் செய்துபுலவர்கள் மறக்களவழி என்னும் துறை அமையப் பாடியுள்ள பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. மூவேந்தர்களும், இனக்குழுவாக வாழ்ந்த மக்களின் சிறு குடிகளையும் சீறூர்களையும் பெரும்படை கொண்டு தாக்கிப் பெரும்போர் செய்து நிகழ்த்திய பேரழிவுகளை அப்பாடல்கள் விரிவாகக் கூறுகின்றன:

"கான்யாறு தழீகிய அகனெடும் புறவில்

வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட

விடுமுட் புரிசை ஏமுற வளை இப்

படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி"

(வேனிற்காலத் துவக்கத்தில் பகைமேற்சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த பெரிய காட்டிலுள்ள பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் வெட்டி வேட்டுவர்களின் அரண்களையும் அழித்து முட்களை மதிலாக வளைத்துக் கடலைப் போல் அகலமான பாடி வீடு அமைத்தான்) என்னும் நப்பூதனாரின் முல்லைப் பாட்டடிகள் (24-28) அரசர்கள் வேட்டுவர்களின் அரண்களையும் குடியிருப்புகளையும் அழித்தமைக்குச் சான்று பகர்கின்றன.

நால்வகைப் படைகளோடும் வந்து தம்மை அழித்தொழிக்கப் போர் தொடுத்த முடி மன்னர்களை இனக் குழு மாந்தர் பெருவீரத்துடன் எதிர்த்துப் போரிட்டனர். இவர்களின் வீரச் செயல்கள் அப்பெருமன்னர்களின் வீரத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல. இனக் குழு மாந்தர்களின் வீரம் புலவர் பாடும் புகழ்ச்சிக்கு உரியதாக விளங்குகிறது. அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து புலவர்கள் பாடிய புற நானூற்றுப் பாடல்கள் அந்நூலுக்கு அணி சேர்ப்பனவாகவும், இனக் குழு மாந்தரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவனவாகவும் உள்ளன. இங்கு,மன்னர்களை எதிர்த்துப்போரிட்ட இனக் குழு வீரர்களின் பெயர்கள் புலவர்களால் குறிக்கப்படவில்லை என்பது நம் கவனத்துக்கு உரியதாகும்.

கணசமூகமாக இனக் குழுவாக - வாழ்ந்த எயினரது சிறுகுடியொன்றைத் தாக்கி அழிப்பதற்காகப் பெருவேந்தன் ஒருவன் பெரும் படையுடன் வந்து போரிட்டான். அவ்வூரினனான வீரன் ஒருவன் தன் சகவீரர்களுடன் இணைந்து அப்பெருவேந்தனை எதிர்க்கத் துணிந்து போரில் ஈடுபட்டான். அவ்வீரன் பெருவேந்தனது யானையைக் கொன்று தானும் இறந்து பட்டான். அச்செய்தியை அவ்வீரனது தாயான முதியவள் கேள்விப் பட்டாள். மகனது மரணச் செய்தி கேட்டு அத்தாய் வருந்தவில்லை. மாறாகப் பெரு மகிழ்ச்சி கொண்டாள். அம்மகிழ்ச்சி அவள் அவனை ஈன்ற நாளில் எய்திய உவகையினும் பெரிதாக இருந்தது. அவள் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரை உகுத்தன.

அத்தாயின் மகிழ்ச்சியையும் அம்மகிழ்ச்சியால் அவள் கண்களில் துளிர்த்த மகிழ்ச்சிக் கண்ணீரையும் கண்டபுலவர் பூங்கண் உத்திரையார் அக்காட்சியைப் பாடலாக வடித்தார்.

"மீனுண் கொக்கின் தூவியன்ன

வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்

நோன் கழை துயல் வரும் வெதிரத்து

வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"

- புறநானூறு 277

என்பது, மகனின் மரணச் செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்ற தாயைக் குறித்து புலவர் பாடிய பாடல் ஆகும்.

முதுமைக் காலத்தில் ஆதரவாக இருப்பவனான மகன் இறந்தமைக்காக அத்தாய் வருந்தினாள் அல்லள்; பெரிதும் மகிழ்ச்சியே உற்றாள். மகன் இறந்தமைக்காகத் தாய் வருந்தாது மகிழ்ந்தாள் எனில், அம்மகிழ்ச்சிக்கு அவள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அது, ஆதி பொதுவுடைமைச் சமூகம் ஆகும். அச்சமூகத்தில் உடைமைகள் அனைத்தும் மக்கள் அனைவர்க்கும் பொதுவானவை ஆகும். எனவே, சமூகத்தின் உடைமைகளையும், ஊரையும் காக்கும் போரில் தானும் பங்கு கொண்டு எதிரி வேந்தனின் களிற்றைக் கொன்று மகன் இறந்து பட்டான் என்பதால் அத்தாய் பெரிதும் மகிழ்ந்தாள். தாயின் அம்மகிழ்ச்சியையே இப்பாடல் கூறுகிறது.

இனக் குழுவாக வாழ்ந்த மக்களையும், அவர்தம் ஊர்களையும் முடி மன்னர்கள் போரிட்டு அழித்ததற்கு அம்மன்னர்களின் மண்ணாசை மட்டும் காரணமல்ல. இப்போது அவர்களுக்கு 'மனிதக் கால் நடை'களான அடிமைகளின் தேவை அதிகரித்ததும் காரணமாகும்.

முடிமன்னர்கள் இனக் குழு மக்களின் மேல் கடும்போர் நிகழ்த்தி அவர்களை அடக்கி அடிமைகளாகக் கொண்டு சென்றனர். அடங்க மறுத்தவர்களைக் கொன்று குவித்து, அப்பிணக் குவியல் மீது யானைகளைச் செலுத்தி சூழ்வரச் செய்து அதரிதிரித்துக் கடாவிட்டனர். அடங்கி அடிமைகளாகச் செல்ல மறுத்தவர்களை அச்சுறுத்திப் பணிய வைத்திடவே இத்தகைய கொடுஞ்செயல்களை அம்மன்னர்கள் நிகழ்த்தினர். இந்நிகழ்வுகளைப் புலவர்கள் பெருமையாகப் பாடினர்.

தோற்ற இனக் குழுமாந்தரை மன்னர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்றனர் என்ற செய்தியைப் பட்டினப் பாலை கூறுகிறது. அந்நூலிற் பயிலும் கொண்டி மகளிர் (246) (அடிமை மகளிர்) என்ற தொடர் இக்கூற்றுக்கு அரண் செய்வதாக அமைந்துள்ளது.

"அநாகரிக நிலையின் கடைக் கட்டத்தில் அடிமை எதற்கும் பிரயோஜனம் இல்லை. இந்தக் காரணத்துக்காகத்தான் அமெரிக்க இந்தியர்கள்தாம் தோற்கடித்த எதிரிகளை, அதற்கு மேலான கட்டத்தில் நடத்தியதற்கு முற்றிலும் வேறாக நடத்தினார்கள். ஒன்று, ஆண்கள் கொல்லப்பட்டார்கள்; அல்லது வெற்றி பெற்ற குலம் தோற்றவர்களைச் சகோதரர்களாக சுவீகரித்துக் கொண்டது. பெண்களை மணம் புரிந்து கொண்டார்கள்; அல்லது உயிர் பிழைத்த அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் அதே போல் சுவீகரித்துக் கொண்டார்கள். இந்தக் கட்டத்தில் மனித உழைப்புச் சக்தி என்பது தன்னை வாழ வைத்துக் கொள்வதற்குரிய செலவுக்கு மேல் கணிசமான உபரியைத் தரவில்லை.

கால்நடை வளர்ப்பு, உலோகங்களைப் பயன்படுத்துதல் துணி நெய்தல் கடைசியில் நிலத்தில் வேளாண்மை செய்தல் ஆகியவை புகுத்தப்பட்டபின் இது மாறியது. கால்நடைகளை கவனித்துக் கொள்ள அதிக ஆட்கள் தேவைப்பட்டனர். போரில் சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் இந்தக் காரியத்துக்குப் பயன்பட்டனர். மேலும், அவர்களைக் கால்நடைகளைப் போலவே பெருகச் செய்ய முடிந்தது" என்று அமெரிக்க செவ்விந்தியர்களைப் பற்றி எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளமை தமிழகத்துக்கும் பொருந்தும் எனில் மிகையன்று.

அரண்மனைகளும் ஆண்டைகளின் வளமனைகளும் வானளாவிய மாட மாளிகைகளும் பாதுகாப்புக்கான வலுமிக்க கோட்டைகளும் கொத்தளங்களும் ஆழம் மிக்க அகழிகளும் ஏரிகளும் குளங்களும் பாசனக் கால்வாய்களும் வளம் மிக்க வயல் நிலங்களும் அமைத்திட வேண்டிய கட்டாயம் மன்னர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்காகவே, போர்களில் தோற்கடிக்கப்பட்ட இனக் குழு மாந்தர்கள் அம்மன்னர்களால் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

மதுரைக் காஞ்சியிலும், பட்டினப் பாலையிலும் சிலப் பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ள வானளாவிய கட்டடங்களும் எழுநிலை மாடங்களும் மயன் சிருஷ்டி அல்ல; மந்திரங்களால் எழுப்பப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் மனிதப் படைப்புகளே. இயந்திரங்களின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் ஏற்பட்டிராத அந்தக் காலகட்டத்தில் அந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்குத் தேவையான மனித உழைப்பை அடிமைகளே நல்கினர். அதற்காக ஆயிரக்கணக்கான அடிமைகளைத் திரட்டிக் கொணரவே இத்தகைய போர்கள் இனக் குழு மாந்தர்மேல் மன்னர்களால் தொடுக்கப்பட்டன. போர்களில் தோற்றவர்களை அடிமைகளாக்கிக் கொண்டு வந்து மன்னர்கள் இவ்வேலைகளில் ஈடுபடுத்தினர். வானுற எழுப்பப்பட்ட கட்டடங்கள் குறித்தும் வலிமை மிகு கோட்டைகள் குறித்தும் ஆழம் மிகு அகழிகள் குறித்தும் இலக்கியங்கூறும் பெருமை மிகு வருணனைகளே இதற்கு சாட்சியங்களாக அமைந்துள்ளன.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சுயநலனுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும், ஆப்பிரிக்க நீக்ரோக்களும் அமெரிக்க செவ்விந்தியர்களும் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை வரலாறு நமக்குக் கூறுகிறது. அதுபோல, தமிழகத்தின் அன்றைய சுரண்டும் வர்க்கமான ஆட்சியாளர்கள் இனக் குழு மக்களை அடிமைகளாக்கிட நிகழ்த்திய போர்களையே புறநானூற்றின் மறக்கள வழிப் பாடல்கள் கூறுகின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com