Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
உலராத கொழுப்பு
வி.கு.பால்ராஜ்

'நடைப் பயிற்சி இந்த வயசுலே தவிர்க்க முடியலே'

மருத்துவரின் ஆலோசனைகளை நிராகரிக்க முடியவில்லை. உடலும் தன்னுடைய இயலாமைகளைப் பல்வேறு வகைகளில் வெளிக்காட்டிக்கொண்டுதான் இருந்தது. கண் முன்னால் நடந்தேறிய இளம் வயதுக்காரர்களின் மரணமும், மருத்துவத்திற்காக என் வயதே உடையவர்கள் கடன் வாங்கி மீளாத் துயரில் மாட்டி பின் தற்கொலை செய்து கொண்டதும், சில குடும்பங்கள் விவாகரத்து வரை சென்றதும் 37 வயதிற்குள் கிடைத்த கசப்பான அனுபவங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தகப்பனற்ற குழந்தைகளாக என் குழந்தைகள் பிறரிடம் கழிவிரக்கம் தேடி அலைவதையும், என் மனைவி விதவையாக உலக வன்மங்களை, வக்கிரங்களை சிரித்துக் கொண்டே பழக்கப்படுத்தி, வாழ்க்கையின் கொடூரத்தாக்குதலுக்கு என்னால் இரையாகிப் போவதையும் சகிக்க முடியவில்லை. இவ்உலக வாழ்க்கையின் துன்பங்களுக்குள் சிக்கித் தவிக்கும் பல்வேறு பட்ட மனிதர்களைப் போலவே இப்பொழுது நானும்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த இந்த எட்டு வருட வாழ்க்கையில் உடலிலும் மனதிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆச்சரியமானவை. காலையில் நீராகரம் குடித்து, வேப்பங்குச்சியால் பல்துலக்கி, 'வெளி'க்குச் சென்று, கிணற்றில் விழுந்து குளித்து, வேப்பமரத்து நிழலில் ஓய்வெடுத்து, வயல்வெளிகளில் சுற்றித் திரிந்து, கிடைத்த உடல் ஆரோக்கியத்தை, பேஸ்ட்டு பிரஷ்களும், தெருவோரத் தேநீர் கடைகளும், நகரத்து வாகனப் புகைகளும், எண்ணெயில் வறுத்த புரோட்டாக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் உடல் ஆரோக்கியதைத் தின்று கொண்டிருந்தது. அலுவலகம், வீடு, வேலை, குடும்பம், பணம் என ஈடுபாடு இல்லாமல் 'கீக்' கொடுத்த பொம்மையாய்ச் சூழல் தீர்மானித்த வேலைகளை செய்வதற்காக ஓடிக் கொண்டிருக்கும் என்னைத்தான் ஊரில் ஐயா பீத்திக் கொண்டிருக்கிறார். தன் மகன் நல்லா பிழைத்துக் கொண்டிருக்கிறான் என்று.

விவரம் தெரிந்த நாளிலிருந்து மருத்துவர்களைப் பார்க்க அச்சமாகத்தான் இருக்கிறது. சமீபமாய்க் கிடைத்த சில அனுபவங்களும் மிக மோசமானவை. ஏதோ ஒர்க் ஷாப்பில் ரிப்பேருக்குப்போட்டு வைத்திருக்கும் எனது மோட்டார் பைக்கை பார்ப்பது போல் என்னை மருத்துவர் கொஞ்சம் கூட உணர்ச்சியின்றி 'ஸ்டெத்சை' வைத்து சடங்காகப் பல இடங்களில் தொட்டுப் பார்த்து, 'திரும்புங்க', 'இழுங்க' 'என்ன செய்து' 'பேண்ட கழட்டுங்க' இதுதான் மிகச் சிறந்த மருத்துவர் என்னுடன் நடத்திய உரையாடல். குறிப்பாக, 'ஸ்டெத்சை' இதயத்துக்கு அருகில் வைக்கும்போது பையைச் சோதிப்பது போலவும், அடுத்த முறை சட்டையில் பையே இல்லாமல் தைக்க வேண்டும் என்றும் வெறுப்பாய் இருந்தது. முழு ஐநூறு ரூபாயை காவு வாங்கிய பின் சொன்னார், எடையை குறைக்க வேண்டும் என்று. வேறு வழியில்லாமல்தான் உணவில்லாமல் சாகும் நமது ஊரில் உடல் பருமனைக் குறைக்க வாக்கிங் போக ரத வீதியைச் சுற்றி வருகிறேன்.

என்னைப்போல் நிறைய பேர் காலையில் நடந்து கொண்டிருந்தார்கள். காலையில் எழுந்து உலா வரும் போது நகரத்தின் அவலம் பல்லை இளித்துக் கொண்டு சிரித்தது. கிராமத்திலிருந்து என் ஐயா வயதையொத்த பெருசுகள் தனது செல்வங்களை சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்து குப்பையைக் கொட்டுவது போல் மார்க்கெட் கமிஷன் கடைகளில் தட்டிவிட்டு சாக்கை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு காத்துக்கிடப்பதும், மில் தொழிலாளிகள் சைக்கிளில் வேலைக்குப் போவதும், வருவதும், பிச்சைக்காரர்கள் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் சோம்பல் முறித்து மெதுவாக எழுந்து உட்கார்ந்து, தான் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் பார்த்து ஆய்வு செய்து கொண்டு, இரவில் கொசுக் கடித்த இடங்களைச் சொறிந்து கொள்வதும், கொத்தனார்கள், சித்தாள்கள் தலையில் இரும்புத் தட்டு, ரசமட்டம், தூக்குவாளியோடு எங்கோ போய்க் கொண்டிருப்பதும், நகர சுத்தித் தொழிலாளிகள் மிக அக்கறையாக குப்பை அள்ளுவதும், சாக்கடை தள்ளுவதும் மனதில் குற்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே சென்றது. என்னுடைய படிப்பு, மரியாதை, சேர்த்துக் கொண்டிருக்கும் பணம் இவைகளுக்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்ற உணர்வு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இப்படி ஒரு குற்ற உணர்வு, எனக்கு இந்தக் காலை எனக்குக் கொடுத்த பரிசாகவே நினைத்துக் கொண்டேன். கிராமத்தில் கிடைத்த சில அவமானங்கள் நகரத்தில் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கீழத் தெருக்காரன், சேரிப்பய, 'அய்யா'த்'துரை' என்று என் ஐயா வைத்த பெயரைச் சொல்லி அழைக்காமல் 'ஏலே சீனி மகனே' என்று மேலத் தெருக்காரனின் எள்ளல் கூடிய அழைப்பு, படிக்காத மதுரையைப் பார்க்காத, தெற்கு - வடக்கு தெரியாத காமுட்டாள் பயல்களெல்லாம் சாதிக் கொழுப்பால் ஆசிரியரென்றும் கூட பார்க்காமல் ஒருமையில் அழைப்பது என ஏதுமில்லை நகரத்தில். உண்மையில் நகரம் சில மாற்றங்களைக் கொடுத்திருப்பதை நான் உணர்ந்தபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ரதவீதியில் நடக்கும் போது இராஜ தர்பாராக இருந்தது. கைகளை வீசி, இடம் அடைத்து 'ஹாயாக நடந்து கொண்டிருந்தேன்'. போட்டித் தேர்வுக்காகப் படித்த போது என் சாதிக்காரர்கள் இதே ரதவீதியில் அனுமதிக்கப்படவில்லை என்பதும், இந்தத் தெருவில் நடப்பதற்கே எனது முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள் என்ற செய்தியும் எனக்கு நினைவில் வந்த போது நடையின் வேகம் தானாக அதிகரித்தது. ஏதோ ஒரே நாளில் உடல் எடை குறைந்து விடுவதைப் போலவும், ஆரோக்கியம் உடனடியாக உடலில் சேர்வதைப் போலவும் எண்ணியபடியே பல்வேறு நினைவுகளோடு அந்தக் காலை நேர நடைப் பயிற்சி எனக்குத் தென்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

நகைக்கடை வீதி தாண்டி நடந்து வந்தபோது, நூறு அடி தூரத்தில் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கால்களைப் பின்னிப் பின்னி நடந்து வந்தார். அவரின் ஒவ்வொரு தப்படியும் மிகக் குறைவான தூரத்தையே கடந்தது. ஐந்து அடிக்குச் சற்றுக் குறைவான, குள்ளமான வடிவம், மூக்குக் கண்ணாடி விழாமல் இருக்க நூல் கயிற்றால் பிடறியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நூல் கயிறு, செந்நிறம், பற்களற்ற பொக்கைவாய், தாடியின் மயிரளவேயுள்ள தலைமுடி, கண்டிப்பாக நடைப்பயிற்சி வந்தவராக அவர் இருக்க வாய்ப்பில்லை. நிராகரிக்கப்பட்ட முதுமை என்பது தெளிவாகப் புலப்பட்டது. மீண்டும் ஐயா ஏனோ நினைவுக்கு வந்து சென்றார்.

சரியாக நான் அவரை எதிர் திசையில் கடந்து சென்ற வினாடியில் கைத்தடியோடு கீழே சாய்ந்தார். சற்றும் எதிர்பாராத நான் திடுக்குற்று அவரை அள்ளினேன். முகத்தின் குறுக்கே வெட்டியது போல பற்களற்ற வாயிலிருந்து அவர் 'சக்கிலிய.. பற...மகனுங்க' என்று அவர் வார்த்தைகளால் முகத்திலேயே வெட்டினார். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலில் இருந்து என்னால் மீள முடியவில்லை. மனதில் தோன்றிய மிருகம் அவரை அப்படியே தூக்கிச் சாக்கடையில் வீசி விட்டுப் போக வேண்டும் எனத் தூண்டியது, அறிவும், எதார்த்தமும், அந்த கிழவனின் முதுமையும் என்னை மனித நிலைக்குக் கொண்டு வந்தது. இருப்பினும் அவரை என்னால், கையில் தாங்க முடியாமல் கீழே போட்டுவிட்டேன். எதற்காகச் சாதியை இந்தக் கிழம் காலையில் கதைக்கிறது என்பதை உணர வேண்டும் என்ற வெறுப்பு கலந்த ஆவல் மேலெழுந்தது. முகம் சுளித்து குஷ்டரோகியைப் பார்ப்பது போல் வன்மம் என்னை ஆக்கிரமிக்க அவரைப் பார்த்தேன்.

"எந்தச் சக்கிலிய... பறக்.. மகனுக இந்த ரோட்டைப் போட்டானோ அறிவி கெட்ட முட்டாப் பயக" ரோட்டில் உள்ள பள்ளம் மேடுகளுக்காக - எவனோ ஒரு காண்ட்ராக்ட்காரன் செய்த ஊழலுக்கும் இழி செயலுக்கும்.. சம்பந்தமில்லாத சாதி மீது அந்தக் கிழம் வசைமொழிகளை வீசிக் கொண்டிருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com