Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
பொதுத்தொகுதி

சு.மதியழகன்

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை)

இனி மகனை விட்டு வைக்கமாட்டார்கள் என்றுதான் சுப்பையாவிற்குப்பட்டது. மனைவியிடம் விசாரித்தார். புதுக்கோட்டை வரை போயிருப்பதாகச் சொன்னாள். “வந்தா எதுவும் பேசிப்போட்டுறதே! கொஞ்ச நாளைக்கி எங்கேயாவது கண்காணாத எடத்துல போயி இருக்கச் சொல்லு. நான் கரம்பக்குடி வரை போய்ட்டு வாரேன்.”

வழியில், சாமிக்கு முடிந்து போட்ட ரூபாய் நோட்டு கால்சட்டைப் பையில் பத்திரமாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொண்டார். `சாதாரண வாய்வார்த்தைக்கே கட்டி வச்சு நாரும் தோலுமா உரிப்பாங்க. இவன சும்மாவா விடப்போறாங்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுறத்துக்குள்ள இந்த உசுரு இருக்கப்படாது. கடவுளே! என் உசுரெ கொடுத்தர்றேன். எம் புள்ள உசுர காப்பாத்தீரு.'

கறம்பக்குடி வந்தடைந்த சுப்பையா நேராக பூச்சி மருந்துக் கடைக்குச் சென்று நூறு கிராம் குறுனை மருந்து வாங்கினார். பிறகு தெருவின் கடைசியில் உள்ள பிராந்திக் கடைக்குச் சென்று ஒரு குவார்ட்டர் பாட்டிலையும் வாங்கினார். பாட்டிலைத் தொடும் போது கை நடுங்கியது. தன்னையறியாமல் அழுகை முட்டிக் கொண்டு இருந்தது.

தேர்தலில் போட்டியிடப் போவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தது வெறும் பேச்சுக்குத்தானென்றிருந்தார் சுப்பையா. வேட்பு மனுவிற்கு முதல் நாள் படிவமும் பதற்றமுமாகத் திரிந்தவனைப் பார்த்ததும்தான் திகைத்துப் போனார். “என்னடா நெனச்சிட்டிருக்க? ஊருல நாம இருக்கணுமா, ஓடிப் போகணுமா?”

“ஏம்பா பயந்து நடுங்குறீங்க?”

“தம்பீ! இன்னும் எத்துன வருசம் வேணுணாலும் படி. ஒழச்சுத்தர்றோம். வேண்டாத பொல்லாப்பெல்லாம் நமக்கு வேண்டாமுய்யா”-அம்மாக்காரி சொன்னதற்கும் ஒரு பொல்லாப்பும் வராது என மறுத்துவிட்டான். சுப்பையாவிற்குத் தலைக்கேறியது.

“என்னடா நடக்காது? பத்து வருசமா பதவியில்லாம வெறியில கெடக்காரு மணியம். அவர விடுவனானு தொடையைத் தட்டிக்கிட்டு நிக்கிறான் புதுசா மொளச்ச வேலுச்சாமி. அவுகளுக்கு மத்தியில நீ ஈரா? பேனா? இப்பத்தானே அவுகளுக்குனு தொகுதி வந்துருக்கு. அதுல போயி நின்னா ஊரு உலகம் என்ன சொல்லும்.”

“இது பொதுத்தொகுதி. யாரு வேணுணாலும் நிக்கலாம்.”

“என்ன மயிறுத் தொகுதியைக் கண்ட. படிச்சுப்புட்டா எல்லாந் தெரியுமுனு மெதப்போ. பத்து வருசமா நம்ம பரங்கி மலையைத் தலைவராக்கி அழகு பார்த்த அந்த பெரியவருக்கு வழிவிடுறதேன் மொற. மீறுனா வம்சம் அழிஞ்சுறும்.”

“வேற வழியில்ல. பரங்கி மலைய நிறுத்தி அதிகாரம் பண்ணுனாரு. இப்ப நிப்பாட்டச் சொல்லுங்க பார்ப்போம்.”

“என்னடி இவம் பெரிய புடுங்கி மாதிரி பேசுறான்? குத்துக்கல்லாட்டம் கேட்டுக்கிட்டு நிக்கிறே. எலக்சன்ல நின்னா நா வூட்டுல இருக்கமாட்டேன். முடிவா கேட்டுச் சொல்லு.”

வீட்டை விட்டு வெளியேறிவருக்குப் படபடவென்றிருந்தது. “இந்தச் சனியன் புடுச்ச பயலுக்கு கிறிக்கெதுவும் புடுச்சுப் போச்சா. வேலைக்கிப் போயி நாலு காசு சம்பாதிச்சு, நாலு பேருக்கு நல்ல புள்ளைனு பேரெடுக்குறத விட்டுப்புட்டு இப்புடி வந்து நிக்கிறானே'!

அன்றிரவு பெற்றோர்களிடம் பேசிப் பேசிப் பார்த்தான் பாக்கியராஜ். நிக்கக்கூடாது என்பதிலேயே உறுதியாக இருந்தவர்களிடம், எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டதால், மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு, மறுநாள் திரும்பப் பெற்று விடுவதாகக் கூறி தந்தையின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

அதிகாலையில் வாசலிலிருந்து வந்த குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனார். “டே சுப்பா வெளியே வாடா'!' என்றது மணியம்தான். ஈரக்குனலயே நடுங்கியது. “என்ன மொதலா இவ்ளோ தூரம், சொல்லி விட்டுருந்தா ஓடியாந்திருக்க மாட்டேனா?”

“கேள்விப்பட்டதெல்லாம் உண்மையாடா”?

“கிளிப்புள்ளைக்கி மாதிரி படிச்சிப்புட்டேன் மொதலாளி. மறுநாளே வாபஸ் வாங்கிறேங்கறான். வாபஸ் வாங்காம வீட்டுக்குள்ள வரப்படாதுனுட்டேன்.”

“அவரு என்ன பண்ணுவாரு. தறுதலைப் பயலுவளா சேந்துக்கிட்டு வெடச்சிக்கிட்டுத் திரிறானுவோ, போகப் போக எல்லாம் வசத்துக்கு வந்துருவாங்க மொதலாளி” என்றார் பரங்கி மலை.

“சுப்பா இன்னக்கி மனுத்தாக்கல் செய்யப் போகணும். ஒம்பது மணிக்கு கரெக்டா லாரி வந்துரும். தவறாம வந்துரு.”

“ஆகட்டும் மொதலாளி. தற்பொழுது `டே' போட்டு மணியம் பேசாதது ஆச்சர்யமாக இருந்தது.

“கேட்டியாடி! என்னமோ ஓம்மவன் முறுக்கிக்கிட்டுத் திரியிறானே!' அந்த மனுசனுக்குக் கால் தூசி பெறுவானா, வந்தான்னா சொல்லி வை.”

மனுத்தாக்கல் அன்றே ஒரு பெரும் தொகையை மணியமும் வேலுச்சாமியும் வாரி இறைத்தனர். பாக்கியராஜ் தரப்பு மட்டும் பேருந்தில் நாலைந்து பேரோடு சென்று, டீ, வடையோடு மனுத்தாக்கல் செலவை முடித்துக் கொண்டனர்.

“மகன் தலைவருக்கு நிக்கிறான். நீ மொதலாளிக்கு ஓட்டுக் கேட்டு வாரே. நீதான்டா கொள்கைச் சிங்கம்” போன்ற நக்கலடிப்புகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு இறுக்கமான முகத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரும், வேனும், லாரியுமாக அணிவகுத்து வந்த மணியத்தின் படை, அதே வேகத்துடன் மதியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மையம் கொண்டது. காரை விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்த மணியம், சுப்பையாவையும் உள்ளே வரும்படி அழைத்தார்.

“டேய் சுப்பா, ஒங்காளுகளுக்கு ஒரு மெம்பர் போட் இருக்குடா. ஒன்ன அன்னப் போடா எடுத்து விடட்டுமா?”

“அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது மொதலாளி. வேற யாருக்காச்சும் கொடுங்க.”

பிறகு, தற்போதைய தலைவரையே மனுத்தாக்கல் செய்யச் சொன்னார். படிவத்தோடு தயாராக நின்ற பரங்கிமலையும், மகிழ்ச்சியோடு மணியத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

வேட்பு மனுத்தாக்கலன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு ஊரை விட்டுப் போனவன் வாபஸ் தேதி வரை தலை காட்டவில்லை. மணியமும், வேலுச்சாமியும் நூறு தடவைக்கு மேல் வீட்டிற்கு வந்து நச்சரித்து விட்டுப் போனார்கள். புள்ளையாடி பெத்து வச்சிருக்க என்று சொல்லி ஆத்திரத்தில் மனைவியைப் போட்டு உதைத்ததுதான் மிச்சம். அவனைப் பற்றிய ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை. வாபஸ் தேதிக்கு முதல் நாள், வேலு மகள் இவர் மனைவியிடம் ஒரு தகவலைச் சொல்லி விட்டுப் போனாள்.

அன்றிரவு அரண்மனைக் கொல்லை முந்திரிக் காட்டை நோக்கி நடந்தார். தோப்பு எல்லையிலிருந்து அழைத்துப் போக நின்ற வேலுவைப் பார்த்ததும் சீறி விழுந்தார்: எல்லாருமாச் சேர்ந்து ஏங்குடிய கவுக்கத் திட்டம் போடுறீயளோ?”

“இவர்தான் பாக்கியராசோட அப்பா”

“வணக்கமுங்கய்யா”

எதையும் பொருட்படுத்தாத சுப்பையா அங்கும் இங்கும் கண்களை விட்டுத் தேடினார். அவனைக் கொத்தாகப் பிடித்துத் தரதரவென இழுத்துப் போகும் திட்டத்தோடுதான் வந்திருந்தார். மகனைக் காணவில்லை என்றதும் “எம்புள்ளையை எங்க ஒழிச்சு வச்சிருக்கீங்க? என்றவாறு கத்த ஆரம்பித்தார்.

“முதல்ல உக்காருங்கய்யா” - அவரைச் சாந்தப்படுத்தி உட்கார வைப்பதற்குள் அங்கிருந்தவர்களுக்குப் பெரும்பாடாகி விட்டது. எதற்கும் மசியாதவரிடம் கடைசியாக, நீங்க பயந்து சாகுறீயளே அவங்க சாதியில பொறந்து தொலைச்சவங்கதான் நாங்களும். கடைசி வரைக்கும் ஒங்க கூடவே இருப்போம். நம்மள மீறி அவங்க என்னதான் செஞ்சுருவாங்கன்னு பார்த்துப் புடுவோம்” என்றார். அவர்களில் சற்று வயது கூடியவராகத் தெரிந்தவர். நம்ப முடியாமல் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

“மணியத்த விட பாக்கியராசு எந்த விதத்துல கொறச்ச? குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுறவரை விட, நாலு கடவும் போயி நல்லது கெட்டது தெரிஞ்சு வச்சுருக்கிற நம்ம பய ஒசத்திதாண்ணே!”

“ம்... நல்லா ஏத்திவுட்டு கூத்துப்பாக்க இருக்கியளோ?”

ஒரு கட்டத்தில் இவர்களிடம் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார் சுப்பையா. கடைசியாக அவர்களிடம் “நான் எவங்கிட்டயும் ஓட்டுப் போடுங்கனு சொல்லிச் சொறிஞ்சுக்கிட்டு நிக்கமாட்டேன்” என்றவாறு கிளம்பி விட்டார். அவன் சாதகத்துல ஒரு கண்டம் இருப்பதாக எப்பவோ சோசியக்காரன் சொன்னது நினைப்புக்கு வந்தது. `எதுக்கும் சூரன் விடுதி பூசாரிக்கிட்ட போயி முத்துக்கொட்டை போட்டுப் பாத்திட்டு வந்தாலும், தேவலாம். ஒரு பசுமாடு வாங்குனது பொறுக்காம எவனும் செய்வினை செஞ்சிருப்பானோ' என்று கூட யோசித்தார்.

நிலந்தெளிவதற்குள் வீட்டை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வேக வேகமாக அடியை எடுத்து வைத்தார். வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கையில் “என்னடா சொன்னாங்க?” என்ற குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. வைக்கோல் தீர்ந்து விட்ட வெறும் படப்பில் உட்கார்ந்திருந்த மணியத்தின் ஆட்கள் சுப்பையாவை அருகில் வரும்படி அழைத்தனர்.

“அய்யா, எவ்வளவோ சொல்லியும் கேட்கமாட்டேங்கிறாங்க. அவன எம்புள்ள இல்லனு தலை முழுகிட்டு வந்துட்டேன். இனி நான் தலையிடமாட்டேன், நீங்களாச்சு, அவங்களாச்சு.” நாள் நெருங்க நெருங்க ஊரின் சூடும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இப்பொழுதெல்லாம் பாக்கியராசும் அவனது சகாக்களும் தைரியமாகக் களத்தில் இறங்கி விட்டனர். மணியமும் வேலுச்சாமியும் சமமாக ஓட்டைப் பிரிப்பதால், பாக்கியராஜ் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என ஊரே கிசுகிசுத்தது.

“என்ன சுப்பண்ணே! ஓம்மகன்தேன் பிரசிடெண்டுன்னு ஊரே அலறுது. யாரோ எவரோ மாதிரி போயிக்கிட்டுருக்க நீயும் நாலு பேருக்கிட்ட ஓட்டுக் கேளு” என்ற சன்னாசியைச் செருப்பாலடிப்பேன் ராசுக்கோல். வேல மயிரப் பார்த்துக்கிட்டுப் போவென” விரட்டியடித்தார். “அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! விவசாயப் பெருங்குடி மக்களே! படித்தவர்களே! பண்பாளர்களே! உங்கள் பொன்னான வாக்குகளையெல்லாம் சிந்தாமல், சிதறாமல் ஒட்டுமொத்தமாக, படித்தவர். பண்பாளர், ஏழையின் தோழன், உங்கள் வீட்டுப்பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எஸ்.பாக்கியராஜ் அவர்களுக்கு வில் அம்புச் சின்னத்திலே முத்திரையிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்டுக் கொள்கிறோம்.

தொலைவில் கேட்ட ஆட்டோ விளம்பரம், ஊரியக்குளத்துக் கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சுப்பையாவின் காதில் விழுந்தது. அழகான குரலில், அழுத்தம் திருத்தமாக மகனின் பெயரை ஒலிபெருக்கியில் கேட்டதும் கலங்கி விட்டார். மகனின் வெற்றிக்காக யார் யாரோ உழைக்கும் போது தான் மட்டும் சும்மா இருப்பது அவமானமாகப்பட்டது என்றாலும் துணிந்து நடை போட ஏதோ இடறியது. தைரியத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு கொஞ்சம் “போயில இருந்தா குடுடாம்பி” என்றவாறு அன்றிரவு வேலுவின் வீட்டிற்குள் நுழைந்தார். வேலுவிற்குச் சந்தோசம் தாங்கவில்லை.

“இப்பவாச்சும் மனசு வச்சியே! நம்ம செயிக்கிறது உறுதிண்ணே! மணியத்தை விட்டேனா பாருனு வேலுச்சாமி கத்தை, கத்தையா வாரி எறக்கிறான். அவுக ஆளுகள்ல செம்பாதி இழுத்துப்புட்டான். நம்ம ஆளுகளத்தேன் பெருசா நம்பி இருந்தாரு. ஆனா நம்மதேன் ஒரே கோப்பா இருக்கோம்ல. அதுனால பித்துப் பிடிச்சு அலையிராரு மணியம்.”

“பரங்கி மலை எப்படி இருக்கான்?”

“அவங்கெடக்கான் பீ தின்னிப்பய. இன்னமும் மணியத்தோட நாய்ச்சட்டியத்தேன் நக்கிட்டு கெடக்குறான். அவன் பேச்ச இங்க யாரு கேட்குறா. பத்து வருசமா பதவியில இருந்தானே ஒரு வருசமாவது அவனால பள்ளிக்கூடத்துல கொடியேத்த முடிஞ்சுதா. நீ போயி ஒரு வீடு பாக்கியில்லாம ஓட்டுக் கேட்டுரு.”

கடைசியாகத் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தார். இறுக்கமான முகத்துடன் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தார் பரங்கிமலை.

“தம்பி எவ்வளவோ சொல்லியும் கேட்காம தறுதலப் பய நின்னுட்டான். ஓம் புள்ள மாதிரி நீதாம்பா மனசு வக்கணும்.

“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? கண்டவம் பேச்சையெல்லாம் கேட்டு ஊர் மானத்தைக் கெடுத்துட்டுத் திரியறாங்க. அந்தத் தறுதலை பசங்களோட நீயும் சேந்திட்டியோ?”

“நீ சொல்றதெல்லாம் சரிதாம்பா.. ஆனா..”

“என்ன ஆனா ஊனானுட்டு மணியக்கார் நமக்கு என்ன கொறைவச்சாரு. அந்தப்பய எலக்சன்ல நிக்கிறானு தெரிஞ்சும் ஒனக்கு மெம்பர் பதவி கொடுக்கிறேனு சொன்னாரே மறந்து போச்சோ? இப்ப சொல்லு, நான் அன்னப் போஸ்டா ஜெயிச்ச பதவிய ராஜினாமா செஞ்சிட்டு ஒனக்குத் தரச் சொல்றேன்.”

“அதெல்லாம் எதுக்குப்பா. ஓம் மாதிரி வெவரமான ஆளுக இருந்தாத்தேன் நமக்கெல்லாம் நல்லது.”

“வாபஸ் வாங்கிருவான்னு நீ சொன்னதை அப்படியே நம்புனாரு அந்தத் தெய்வம். எல்லாரும் நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியல்லே. தேர்தல் முடியட்டும் பேசிக்கிறேன்.”

“அந்தப் பய பண்ணுனதுக்கு, அவுகள ஏன் போட்டு வறுக்கிரிய, நீங்க போங்க மாமானு” - அவன் மனைவி சொன்னதைச் சாக்காக வைத்து இடத்தை விட்டு நகர்ந்தார்.

சோறு தண்ணீர் கூட நேரா நேரத்திற்கு இல்லாமல் அலைந்த மகனை நினைத்ததும் சுப்பையாவிற்குக் கவலையாக இருந்தது. `பசி தாங்கமாட்டாத பய. எப்படித்தான் திரியறானோ? தான் இனியும் அவனிடம் பேசாமல் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்தார்.'

தேர்தலன்று காலையில் பாக்கியராசை அருகில் வரும்படி அழைத்தார். சாமிக்கு முடிந்து போட்டு விட்டு திறுநீர் எடுத்து வரும்படி மனைவியிடம் கூறினார். `கடவுளே! நொண்டிக் கருப்பா, பட்டவா, சன்னாசி நீங்கதான் மனசு வைக்கணும். வேண்டிக் கொண்டே நெற்றியில் இட்டார்.

“எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ யாரோடவும் வம்பு தும்புக்குப் போகாதே. பூத்து வாசல்ல நின்னு ஒருத்தர் விடாம ஓட்டு மட்டும் கேளு”

“சரிப்பா” என்றவாறு விழுந்து வணங்கினான்.

கடைவாசலில் பாட்டிலோடு நின்று கொண்டிருந்தவருக்கு எங்கு வைத்து குடிப்பதென்று பிடிபடவில்லை. இங்கு வைத்துக் குடித்தால் மருந்து கலக்க முடியாது. வெளியில் என்றால் எங்கே? யோசித்துக் கொண்டு இருக்கும்போதே `பார்'க்குள் இருந்து வெளியே வந்த ஒரு விடலைப் பையன் இவரை குறும்பாய்ப் பார்த்தான்.

“என்ன பெருசு? கட்டிங்கு மேலே தாங்காதுண்ணு யோசிக்கிறியா? நான் வேணுனா கம்பெனி தரட்டா?"

மகனின் நினைப்பு வந்து கலங்கி விட்டார். `ஏம்புள்ள இப்புடியெல்லாமா ரவுடித்தனம் பண்ணுக்கிட்டுத் திரியுது. அதுக்குப் போயி இப்படி ஒரு சோதனையா? டேய் ராசா எங்கிட்டாவது ஓடிப் போயி பொழச்சுர்ரா. ஒனக்குத்தேன் வெளியில பழக்கமெல்லாம் இருக்கே."

முதல்நாள் அந்தியிலிருந்தே ஊர்வன, பறப்பன, நடப்பனவைகளால் தேர்தல் அலுவலர்களை மணியமும், வேலுச்சாமியும் மாற்றி, மாற்றிக் கிறங்கடித்திருந்தனர். பலனாக இறந்து போன கிழடுகள் கூட, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் வடிவில், அவர்களுக்கு ஓட்டுப் போட்டனர். பாக்கியராசுக்கு விழ வேண்டிய கந்தனின் ஓட்டு, வாக்காளர் பட்டியலில் கந்தசாமி என்று இருந்ததால் அது கள்ள ஓட்டு என்று திருப்பி அனுப்பப்பட்டது.

எல்லா அராஜகங்களுக்கும் பாக்கியராஜ் தரப்பு அமைதியையே பதிலடியாகத் தந்தது. அது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது. எப்படியாவது உதைத்து வெளியேற்றி விட்டு மீதமுள்ள ஓட்டுக்களை மொத்தமாகக் குத்திப் போட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் கடைசி வரை நடக்கவில்லை.

இரவு சுப்பையாவால் சுத்தமாகத் தூங்க முடியவில்லை. ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்தது. பலரும் பலவிதமான கணிப்புகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தனர். பெருவாரியானவர்கள் பாக்கியராசுக்கே தீர்ப்பெழுதினர். சுப்பையாவிற்கு நிலை கொள்ளவில்லை. பாக்கியராஜ் வெற்றி பெற்று விட்டால் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வைத்து நெருக்கடி கொடுக்க மணியம் திட்டம் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வந்தது. ஜெயித்த பிறகு வரும் பின்விளைவுகளைப் பற்றிய கவலை `சுப்பையாவைப் பற்றிக் கொண்டது. மனத்தைப் போட்டு பலவாறும் அலட்டிக் கொண்டிருந்தவருக்கு அதிகாலையில்தான் கண்ணயர்ந்தது.

பசுவயல் ஊராட்சி மன்றத் தலைவராகப் பாக்கியராஜ் பொறுப்பேற்றுக் கொண்டான். அப்பொழுது தன் தந்தையை அருகில் வரும்படி அழைத்தான். “இவர்தான் என் அப்பா” என்று அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தினான். வணக்கம் சொல்லிய அதிகாரிகள் சுப்பையாவிற்கும் அருகில் ஒரு நாற்காலி போட்டு அமர வைத்தார்கள். வேண்டாமென்று மறுத்தாலும் விடவில்லை. உட்கார்ந்திருந்த மாத்திரத்திலேயே நாற்காலி எம்பி எம்பிப் பறந்தது. அந்தரத்தில் ஊர் முழுவதும் பசுமையாகத் தெரிந்தது. மணியம் மற்றும் வேலுச்சாமியின் வீடுகள் மட்டும் உயரமாக வளர்ந்து இவரைப் பார்த்து முறைத்தது. நாற்காலியை மேலும் ஒரு உந்து உந்தினார். அது இன்னமும் உயரத்தில் பறந்து இரண்டு வீடுகளையும் மட்டம் தட்டியது. ஊர் முழுவதும் இவருடைய ஆளுகைக்குள் வரும் பொழுது மனைவி எழுப்பியதில் விழிப்புத் தட்டி தொப்பென்று விழுந்தார்.

வாரிச்சுருட்டி எழுந்தவர் “எங்கேடி அவன்?” என்றார். அதிகாலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பி விட்டதாகக் கூறினாள். இப்பொழுதுதான் இன்று வாக்கு எண்ணிக்கை என்பது மீண்டும் நினைவிற்கு வந்தது. முகத்தைக் கழுவிக் கொண்டு வேலு வீட்டிற்கு ஓடினார். ஓட்டு எண்ணும் இடத்திற்குத் தானும் செல்லவிருப்பதாகவும் சுப்பையாவை வீட்டிலேயே இருக்கும்படியும் கூறினார் வேலு.

“பசங்கள பத்திரமா அழச்சிட்டுப் போயி கூட்டியாந்துருப்பா” என்றவர் வேலுவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார்.

“நீயெல்லாம் எவ்ளோவு கஷ்டப்பட்டுருக்க.”

“நீ ஒன்னும் கவலைப்படாதே! நாம செயிக்கிறது உறுதி. தோலன்கரைக்காரன் சில பேருதேன் மாத்திப் போட்டுக்கிறதா துப்புக் கிடைக்கிது. அதுனால நமக்கு ஒண்ணும் பெரிய நட்டமில்ல.”

அறுபத்தியெட்டு ஓட்டு வித்தியாசத்தில் மணியம் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டதும் ஊர் வந்து சேரும் வரை தாரை தப்பட்டைகளால் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பாக்கியராசும் அவனது நண்பர்களும் புதுக்கோட்டை வரை சென்றிருப்பதாக வேலு வந்து சொன்னார்.

“ஏம்பா விட்டுட்டு வந்தே?”

“போயிட்டு வரட்டும். இப்ப ஊருக்குள்ள வந்தா நல்லாருக்காது.” என்றவரின் குரல் உடைந்தது.

“நம்ம ஆளுகதேன் பாதிப்பேருக்கிட்ட கழுத்தறுத்திட்டாங்க, பரங்கிமலைதான் ரகசியமாக சதி பண்ணியிருக்கான். நொண்டிக்கோயில் கட்டுற முழுச்செலவையும் ஏத்துக்கறேனு சொன்னாராம் மணியம். நம்மாளுக கால்லகூட விழுந்ததா சொல்றாங்க. கொஞ்சம் முந்தித் தெரியாமப் போச்சே! தெரிஞ்சுருந்தா துரத்தி அடிச்சிருப்பேனே!” தேம்பித் தேம்பி அழுத வேலுவைச் சுப்பையாவும் அவரது மனைவியும் ஆறுதல் படுத்தினார்கள்.

மாலையில் வீடு திரும்பிய பாக்கியராஜ் அவனுக்காக உழைத்தவர்களின் வீடுகளுக்கெல்லாம் நண்பர்களுடன் சென்று ஆறுதல் சொன்னான்.

“தேர்தல் என்றால் அப்படியும் இப்படியும்தான் இருக்கும். இதுக்காக யாரும் கவலைப்பட வேண்டாம். காலம் இத்தோடு முடிந்து விடாது.”

பிறகு இரவு புதுக்கோட்டையில் ஏதோ கூட்டம் இருப்பதாகத் தாயிடம் கூறிச் சென்றுவிட்டான். அவனது தைரியத்தைச் சிலர் பாராட்டினாலும் ஒட்டு மொத்தச் சேரியும் அவனுக்காகப் பரிதாபப்பட்டது. “இவன் ஜெயிச்சிருந்தாலும் கொஞ்சம் அடங்கியிருப்பாங்க. தோத்துவேறப்போயிட்டான். இனி எவுனவச்சு இந்தப் பயல போட்டுத்தள்ளுறாங்களோ.....” ஆங்காங்கே கிளம்பிய கிசுகிசுப்புகள் சுப்பையாவின் காதுக்கும் எட்டியது.

அன்றிரவு முழுவதும் சுப்பையாவின் கண்ணில் பொட்டுக்கூட தூக்கம் வரவில்லை. வீட்டுக்கும் வாசலுக்குமாகப் பினாவிப் பினாவித் திரிந்தார். காய்ச்சல் கண்டது போல உடம்பு பூராவும் காந்தியது. `மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால்.'

நினைக்கவே பயங்கரமாக இருந்தது. கழுத்தை அறுத்துப் போட்ட கோழியாய் துடிதுடித்துப் போனார். தனக்கு வேறு வழியே இல்லை என்பதாக உணர்ந்தார். விடிந்ததும் வீட்டை விட்டு ஒரு அடி கூட அவரால் எடுத்து வைக்க முடியவில்லை. மனைவி கொடுத்த வறத்தண்ணியைக் கூட மறுத்து விட்டு மாலையில் வீட்டை விட்டுக் கிளம்பினார்.

குடியை நிறுத்தும்படி மனைவி வலியுறுத்திய போதெல்லாம் மேலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து அடித்துத் துவைப்பார். பொறுமையிழந்தவள், ஒரு நாள் ஒடுத்தி இலையை அவித்துக் குடித்து விட்டாள். உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து வந்தன்று அவள் தலையில சத்தியம் செய்து நிறுத்தியது. பதினைந்து வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் மீண்டும் சாராயக் கடைக்குள் நுழைகிறார். அடியேய் லெட்சுமி! இன்னக்கி சத்தியத்தை மீறிட்டேன். இனிமே ஓம் மூஞ்சியிலேயே முழிக்கமாட்டேன்.

முடிவாக, குவார்ட்டரில் பாதியை இங்கேயே குடித்து விட்டு, மீதியை வெளியில் சென்று மருந்து கலக்கிக் குடிக்கும் நோக்கத்துடன் `பார்க்குள்' நுழைந்தார். உள்ளே ஒலித்த அலப்பறைகளில் ஊர்க்காரர்களின் குரலும் கேட்டது. அவர்களின் பேச்சு தேர்தல் பற்றியதாக இருந்தது. சுவர் ஓரமாக ஒடுங்கினார்.

“தோத்தாலும் சுப்பன் மகன்தாண்டா தலைவரு. ஒரு மாசமா மணியத்தைக் குலை நடுங்க வச்சுப்புட்டான்ல. ஒட்டு மொத்தச் சேரியும் என் சுண்டு விரல்லன்னு தப்பட்டம் அடிச்சாருல்ல. வச்சான்ல ஆப்பு.”

“ஆமாண்ணே! இப்பவும் கொஞ்சம் அசந்துருந்தா அவந்தேன் தலைவரு. கடைசி நேரத்துல அள்ளி எறச்சிப்புட்டாருல்ல. அப்படி இருந்தும் நம்ம பூத்துலேயே அவனுக்கும் ஓட்டு வுழுந்துருக்குப்பா!”

“அதெல்லாம் பெரிசில்லே. தோத்தா நாண்டுக்கிட்டுச் செத்துருவேண்ணு அவங்க காலல்ல போயி விழுந்துருக்காரு தெரியுமா?”

“அவரு கண்ணுல வெரல வுட்டு ஆட்டுன அந்த பாக்கியராசுப் பயல சும்மாவா விடப் போறாரு?”

“அப்படியெல்லாம் கிள்ளுக்கீரையா நெனச்சுறாதீய. நமக்கு வேணுனா அவன் சாதாரண ஆளாத் தெரியலாம். மாவட்டம் பூராவும் அவனுக்கு ஆளுக இருக்கு. அப்புறம் பெரிய, பெரிய அதிகாரியையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். முசுடுக் கூட்டுல கைய வுடுறது மாதிரிதேன் அவனச் சீண்டுறது.”

சுப்பையாவுக்கு உடம்பு முழுவதும் இரும்பாலடித்தது மாதிரி முறுக்கேறிக் கொண்டிருந்தது. கால்ச்சட்டையிலிருந்து மருந்துப் பொட்டலத்தை எடுத்தார். அவரது கைக்குள் அது கல்லாக உருண்டு திரண்டது. தன் பலங்கொண்ட மட்டும் வேகத்தைக் கூட்டி விட்டெறிந்தார். அது ரோடு தாண்டிப் போய் சாக்கடைக்குள் விழுந்தது.

ஊர்க்காரர்கள் இருந்த அறையை விட்டு லபக்கென்று அடுத்த அறைக்குள் தாண்டினார். இன்னக்கி மட்டும் மன்னிச்சிருடி லெட்சுமி. நாளையிலேருந்து சத்தியத்தைக் காப்பாத்துறேன்.

அவருக்குள் உற்சாகம் பொங்கிப் பொங்கி கண்களில் வழிந்தது. குவளை கொண்டு வந்து வைத்த பையனிடம், தண்ணீர்ப் பாக்கெட்டும், ஊறுகாய்ப் பொட்டலமும் கொண்டு வருமாறு அதட்டலாகக் கூறினார். பாதியை ஊற்றி மீதியை நீரால் நிரப்பினார்.

கடகடவென ஒரே மூச்சில் அடித்து குவளையைக் காலி செய்தார். ஆள் காட்டி விரலை ஊறுகாய்ப் பொட்டலத்துக்குள் விட்டு அழுத்தமாக நோண்டினார். கண்களை இறுக மூடிக் கொண்டு சப்.. சப்... பென சப்தம் வரச் சப்புக் கொட்டினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com