Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
தீராத கேள்விகள்

ம.மணிமாறன்

கால் நூற்றாண்டுகளாக தன் சக மனிதனின் துயரங்களை கதைகளாக்கி வருபவர் உதயசங்கர். அவரின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பே "ஒரு விளக்கும், இரண்டு கண்களும்". வாசல் வெளியீடாக வந்துள்ள இக் கையடக்கத் தொகுப்பில் விரவிருக்கும் பத்துக் கதைகளின் ஊடான மனித வாதைகள் வாசகனின் மனதிற்குள்ளும் இறங்குகின்றன. படித்து முடித்த பொழுதினில் யாவரும் தன்னளவில் பெரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.

படைப்பாளியின் மனதை ஊடறுப்பதாக விளைவுகள் மட்டும் இருப்பதில்லை. அவனை வசீகரித்த, நிலைகுலையச் செய்த புத்தகங்களும் இருக்கக் கூடும். புத்தகங்கள் தன்னுள் புரள மறுத்த நாட்களின் வெளிப்பாடே "குமாரபுரம் ரயில்வே ஸ்டேசனின் ஓர் இரவும்", "ஒரு விளக்கும் இரண்டு கண்களும்" என்கிற கதைகள்.

1947 -சுதந்திரத்தின் ஆண்டு மட்டுமல்ல. அது பிரிவினையின் ஆண்டும்தான். ராட்கிளிப் வரைந்த பென்சில் கோடுகளால் விரிவுண்ட நில விரிசலில் இருந்து அரக்கர்கள் வெளியேறினார்கள். அவர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகளின் நீட்சி இன்று வரையிலும் நீடிக்கிறது. கடவுளின் பெயரால் நிகழ்ந்த பலியிலிருந்து மனிதத்தை மீட்க எந்தக் கடவுளும் வரவில்லையே என்கிற துடிப்பே சானிசிங்கை குமாரபுரம் ரயில்வே ஸ்டேசனிலிருந்து வழிந்தோடும் தண்டவாளங்களில் படிந்திருக்கும் இருட்டுக்குள்ளிருந்து முளைத்து வரச் செய்கிறது. புரிந்து கொள்ள முடியாத தொன்மமாக இன்றைக்கும் இந்தியா ஐரோப்பியர்களுக்கு இருந்தே வருகிறது. தன் கண் எதிரே நிகழ்ந்த வன்கொலையில் வீழ்ந்த மனிதம் கண்டு அதிர்ச்சியுற்று மனப்பிறழ்விற்குள்ளான ஆனியால் என்ன செய்ய முடியும். சூனியக் கிழவியெனும் மாயத்தைச் சுமந்தபடி இந்தியாவில் தான் இருக்க முடியும்.

மதம் நிலை குலையச் செய்த மனித வாழ்வைக் கண்ணுற்ற சானிசிங்கும், ஆனியும் மனப்பிறழ்விற்கு உள்ளாவதின் வழியே ஏற்படுத்தப்படும் வலியும், ரணமும் நமக்குள் கடத்துவது எதை?

கதைகள் அரசியலைப் பேசுபவை அல்ல. மனதின் நுட்பமான உரையாடல்களே கதை. உள் மன உலகத்தை தொடத் தயங்குபவனே அரசியல் பிரதிகளை பிரசவிக்கிறான் எனும் பின் நவீனர்களின் விவாதத்தை நேர்மையாக எதிர்கொண்டு உதயசங்கர் எழுதிய அரசியல் கதைகள் என "பூனைவெளி", "வாசம்" எனம் இரண்டு கதைகளையும் சொல்லலாம்.

தேயிலை மனிதர்களை ரத்தக் குளமாக்கிய சாதியத் திமிரைப் பேசும் கதை "அடி". அதிலும் கதைக்காரனின் முதுகில் விழுந்த அடியை இருட்டுக் கடை அல்வாவையும்,ஓசி மிக்சரையும் தின்றுவிட்டு தோல் தடித்துத் திரிகிற மொத்த சமூகத்தின் மீதும், கடத்துகிற நுட்பம் இருக்கிறதே நவீன கதை சொல்லியாக்குகிறது உதயசங்கரை.

வடிவ ரீதியில் மிக நுட்பமான பதிவாகிறது "ஊழி". கதையில் பேசுகிறவள் வட்டிக்கடை அண்ணாச்சியுடன் தான்பேசுகிறாள் அல்லது ஏசுகிறாள். அவள் பேசாத பேச்செல்லாம் கதை முடிந்த பிறகும் நமக்குள் இரைந்து கொண்டேயிருக்கிறது.

நகரங்கள் விதைத்த கொடுங்கனவை கதையாக்கியிருக்கிறார் அண்டாகாகசூம்... ஆபூக்காகுசூம்... என.

புதிர்களின் பாதை போர்ஷேக்குத்தான் தெரியும் என்கிற நையாண்டியின் வழியே மனித குலத்தின் நினைவுகளின் வரலாறு ஆன நாட்டார் கதைகளை வேறு வேறான தொனிகளில் சொல்லிப் பார்த்த கதை "புதிர்வெளிகளில் சுற்றித் திரிந்த ஒரு நாட்டார் கதை". நாட்டார் வழக்காறுகள் குறித்த அக்கறை. அதன் அரசியலை வெளிப்படுத்தும் நுட்பம் என வாசகன் மனதில் ஆட்டம்மனின் ரகசியத்தைத் திறந்து அறியும் வேறு ஒரு சாவியையும் தருகிறார் கதை சொல்லி. சாரதியையும் அப்பணசாமியையும் தொடர்ந்து வாசகர்களும் புதிர் வழியில் சுழன்றிட புதிர்பாதை அமைக்கப்பட்டு கதை நகர்கிறது.

கதை சொல்லி பேசியபடி நகரும் ரவிச்சந்திரனின் கதைக்குள் சுகந்தியின் கதையும், சுகந்தியின் கதைக்குள் பெண் வாழ்வு குறித்தான தர்க்கமும் அச்சமும் முற்றிலும் புதிதான அணுகுமுறைக்குள் வாசகனை அழைத்துச் செல்கிறது.

பொதுப் புத்தியிலிருந்து விலகிச் செல்பவனாக கலைஞனே காலந்தோறும் இருந்து வருகிறான். ஆகவேதான், மதங்கள் கிழித்த மனித உடல்களின் வாதைகளைத் தினமும் பார்த்தபடி நகர்வது எப்படி? மனுவின் பெயராலும், அனாச்சாரம் எனச் சொல்லியும் கிழித்த பெண் மனதின் துக்கத்தை எப்படிக் கடத்துவது? அரசியலற்ற கதைக்காரர்களின் நுண் அரசியலை எதிர்கொள்வது எப்படி? என தன்னுள் விளைந்த தீராத கேள்விகளின் தீவிரத்தை எதிர்கொள்ளவே கதை எழுதிக் கடக்கிறான் கலைஞன் காலத்தை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com