Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
அதே மூத்தாளி
எஸ்.இலட்சுமணப்பெருமாள்

சம்முகையாவுக்கும் கருப்பாயிக்கும் கல்யாணம் மூச்சி ரொம்ப வருசமா பிள்ளை குட்டிங்கறதே இல்லே. பேர் சொல்ல ஒத்தப்பிள்ளை வேணுன்னு ஏறாத கோயிலில்லே வேண்டாத சாமியில்லே. அந்த பகவான் கண்ணெ தொறப்பனாங்காரு.

ஊருக்குள்ள இருக்கிற மனுசமக்க இவங்க ரெண்டுபேரை எதிர்க்கெ பார்த்தாலும் குறுக்கெ பாத்தாலும் தாறுமாறா ஏசவும் பேசவுமா இருந்தாங்க. மலட்டுக் கழுதைக மொகரையில முழிச்சா விளங்குன மாதிரிதான் இன்னைக்கி நாளு தொலங்குன மாதிரிதான்... ன்னே விடிஞ்சதிலிருந்து அடையுற வரைக்கும் கண்ணுல காண்க விடாம பேசிப்பேசி ரணப்படுத்துனாங்க.

அந்த வெள்ளந்திகளும் எவ்வளவோ பொறுமையாத்தான் இருந்தாங்க. புருசனும் பெண்சாதியும் கழுதை மேய்ச்சாத்தான் பொழப்பு நடக்கும். இதுலே குறுக்கா மறுக்க தட்டுப்படாம இருக்க முடியுமா? சரி எவ்வளதான் பொறுமையா இருக்கிறது? வேற வழி தெரியல. ஒரு நா தேவையிலெ எல்லாக் கழுதையையும் கொண்டுபோயி முடுக்கலாம்பட்டி கழுதைச் சந்தையிலே வித்துப்போட்டு துட்டுத்துக்காணியோட ஊரைவிட்டே கிளம்பிட்டாங்க.

அப்படி கால்நடையா ரவ்வும் பகலும் நடந்து வந்துக்கிட்டிருக்கும்போது சந்தையில வித்திட்டு வந்த உருப்படிகள்ல ஒரு சின்ன பொட்டைக் கழுதை மட்டும் இவங்களுக்கு பிறந்தாடியே தொயந்து வந்துக்கிட்டிருந்ததை ஒரு வாரஞ்செண்டு பாத்து, அடியாத்தே! இந்த இம்புட்டு சீவனுக்கு நம்ம மேல எம்பூட்டு கரிசனம்.

பிள்ளையில்லாத நமக்கு அந்த ஆண்டவன்தான் துணைக்குத் துணையா அனுப்பிச்சு வச்சிருக்கான். அப்படீன்னு அதுக்கு மூத்தாளின்னு பேருவச்சி அதை பொன்னம்போல பொத்தி பொத்தி வளத்துட்டு வந்தாங்க.

அவங்க அரைவயிறு கால்வயிறு குடிச்சிக்கிட்டாச்சும் மூத்தாளிக்கி எந்த குறைபாடும் இல்லாம பாத்துக்கிட்டாங்க. போற போற ஊர்கள்ல தெருத்தெருவா வீடுகள்ல போயி நேரா நேரத்துக்கு கழி தண்ணி கஞ்சின்னு வாங்கி வைக்க புல்லு புண்ணாக்குன்னு எந்த நேரமும் செழிக்க செழிக்க உண்க திங்க ஒரு குறைச்சலுமில்லே.

அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளந்து அசல் கழுதையா ஆளாயிருச்சி.

இப்போ நாளுக்குநா சம்முகையாவுக்கும் கருப்பாயிக்கும் வரவர ரொம்ப கவலையாகிக்கிட்டே வந்தது. நமக்கோ பிள்ளையில்லே. இந்த மூத்தாளிய நல்ல முறையில் வளத்துச் செஞ்சு ஒரு வகை பண்ணி விட்டுட்டோமுன்னா பின்னாடி தவங்குன காலத்துக்கு ஆதரவா இருக்குமேன்னு பாத்தா கழுதைக்கு வயசாக வயசாக வல்லுசா கூறுபாடுங்கிறதே வளந்திருச்சேன்னுதான் கவலை.

விவரங்கெட்ட சின்னக் கழுதையா இருக்கும் போதெல்லாம் அவ்வளவு சாதுவா இருக்கும். இப்பொ என்னடான்னா காலையிரெல எந்திரிச்சு அன்பா ஆதரவா பா...பா... றெக்.. றெக்.. றெக்குன்னு கூப்புட்டு ரெண்டுபேத்துல யாரு கிட்டெ போனாலும் படீர் படீர்னு ஒரே உதை. பின்னால நின்னா உதைக்கிறது. முன்னாடி போனா கடிக்கிறது. சாயந்தரம் வரைக்கும் சந்தோசமா இருக்கும். காலையில அந்த புத்தி மாறிப் போகுது. கிட்டெ அண்ட விடாது. ஒரு ராத்திருக்குள்ளே அப்படி என்ன நடந்து போச்சாம்?

வளத்தாளு வேத்தாளு தெரிய வேண்டாமா சம்முகைய்யா ஒரு நாளைக்கு மூணு தேறமாவது மூத்தாளியிட்டெ உதைபட்டு ஊட்டிக்குப்புற விழுந்து எந்திரிப்பான். சாம ஏமமெல்லாம் காலு காலுன்னு ஒரே கூப்பாடு. என்ன செய்ய நம்ம பிள்ளெய நாமலே வெளியே குத்தஞ்சொல்லிக்கிட்டு திரியவா முடியும். நாமளும் கடிக்குக்கடி உதைக்கு உதைன்னு போனா பிறகு அந்தச் சின்னக் கழுதைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். இன்னைக்கில்லாட்டா என்னைக்காவது அந்த ஆண்டவன் கழுதைப்பய புள்ளெக்கு நல்ல புத்தியை தரமாட்டானான்னு சமாதானமாகிக்கிடுவாங்க.

பாடு பங்கெல்லாம் மறந்து கருப்பாயோட செத்தெ சந்தோசமா பேசுற நேரமா கத்தலா கத்தி கூப்பாடுன்னா கூப்பாடு இன்ன மட்டுமில்லெ. அவ்வளதான் சம்முகவேல் எந்திரிச்சி கருப்பாயியெ மிதிமிதின்னு மிதிப்பான். பிள்ளெய லட்சணமயிரா வளத்திருக்கே. நேரங்காலந் தெரியாமன்னு.

பதிலுக்கு அவளும் உன்னை மாதிரித்தான் இருக்கும் ஒம்புள்ளெயும். ஒன் ஆத்தா உன்னை வளத்த மாதிரிதானெ நானும் எம்புள்ளெய வளத்தேன்னு அழுது ஒப்பாரி வைப்பா.

இப்படியா ஊரு ஊரா திரிஞ்சி கடைசியா ஒரு பள்ளிக்கூடத்துக்கு பக்கமா வந்து சேந்தாங்க. கழுதைய ஒரு தூண்ல கட்டிப்போட்டதும் பள்ளிக்கூட திருணையிலே புருசனும் பெண்சாதியும் கொஞ்சம் அசந்தாங்க. அசதியிலெ சம்முகய்யா கால் கருப்பாயி கால் மேல பட்டதுதான் தாம்சம் ரெண்டு நாளா நடையா நடந்தப்பொ சிவனேன்னு வந்த கழுதை கட்டுல நெல கொள்ளாம தூணைச் சுத்திசுத்தி ஓடுறதும் காலு காலுன்னு கத்தி கூப்பாடு போடுறதுமா ஒரே ரகளை பண்ணுனது.

உள்ளே படிச்சுக்கிட்டிருந்த பள்ளிக்கூடப் பிள்ளைகளெல்லாம் இது பண்ற அழிச்சாட்டியத்தைப் பாத்து அவங்களும் சந்தோசமா 'ஹே'ன்னு ஒரே இசைச்சலா இரையக் கூடிட்டாங்க. அந்த பள்ளிக்கூடத்து வாத்தியாரு ஒரு சாமியார். அவரை எல்லாரும் வாத்தியார்ச்சாமின்னுதான் கூப்புடுவாங்க.

வாத்தியார்ச்சாமி கையில பிரம்பு வச்சிக்கிட்டு உள்ளேயும் வெளியேயும் சுத்தி சுத்தி வந்து பையன்களை அதட்டுவாரோ கழுதைய அதட்டுவாரோ சமாளிக்க முடியல. சே! நம்ம புள்ளெ எவ்வளவோ தாவலை போலுக்கோன்னு சம்முகய்யாவும் கருப்பாயியும் எந்திரிச்சி உக்காந்துட்டாங்க.

"அடேய் முட்டாப்பசங்களா நீங்கள்லாம் படிக்க வந்தவங்கதானா. அடங்காத பயகளா சொன்ன வார்த்தையை கேக்கறீங்களாடா உங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்து தொண்டைத்தண்ணியை விடுறதுக்கு பதிலா அந்தா அந்த கழுதைக்கு சொல்லிக்கொடுத்து அதை முன்னுக்கு கொண்டு வந்துரலாம்டான்னார். பயல்கள் கேக்கிற மாதிரியில்லே. அவராலே சமாளிக்க முடியல. மணியடிச்சு எல்லோரையும் வீட்டுக்கு போங்கடான்னு முடுக்கி விட்டுட்டு சம்முகய்யாவையும் கருப்பாயயையும் உங்களால பிள்ளைக படிப்புக்கெட்டுப் போச்சு மரியாதையா இடத்தை காலி பண்ணுங்கன்னார். அவங்க அதை காதுலயே வாங்கிக்கிடலை.

நா ஒரு கல்யாணமாகாத பிரம்மச்சாரி என் வாயில விழுந்தா பழிக்கும் நாங்கெட்ட வாக்கு சொல்லம்முன்ன கிளம்பிடுங்கன்னு சொன்னதுதான் தாம்சம் புருசனும் பெண்சாதியும் அவரு கால்ல விழுந்தாங்க.

வாத்தியார்ச்சாமி, வாத்தியார்சாமி நாங்க கொஞ்ச நேரம் இங்கே தகிப்பாறிட்டு உடனே போற மாதிரிதான் இருந்தோம். நீங்க சொன்ன ஒத்த வார்த்தைக்காகத்தான் அப்படியே திருணையிலெ உக்காந்திட்டோம். ஒரு வாக்குச் சொன்னாலும் திருவாக்கா சொன்னீங்க.

எங்களுக்கு பிள்ளையில்லாத குறையை இந்தக்கழுதைதான் தீத்து வச்சது. இதை கண்ணுக்கு கண்ணா வளர்த்து வாரோம். ஆனா பாருங்க வயசுக்கு தக்கன அறிவீங்கிறதே இல்லாமப்போச்சு வளத்தவங்களாச்சேன்னு தாட்சண்யமில்லாம எப்பப்பாரு உதை, கடி, கூப்பாடு, ஓட்டம் அதை வச்சிக்கிட்டு அலப்பறையின்னா அலப்பறை."

"அது சரி அதுக்கு நான் என்னம்பேன்" என்றார் சலிப்பும் அதட்டலுமா வாத்தியார்ச்சாமி.

"நீங்கதானய்யா பயககிட்டெ சொன்னீங்க. உங்களைக் கட்டி மாரடிக்கிறதுக்கு அந்தக் கழுதைக்கு சொல்லிக்கொடுத்து ஆளாக்கிறலாமுன்னு. அதைமட்டும் செய்து கொடுத்திருங்க. ஜென்மா ஜென்மாத்துக்கும் உங்களை கோயில்கட்டி கும்பிடுவோம்.

"வாத்தியார் சாமிக்கு திகைப்பாகிப் போச்சு என்னடா இது வம்பு! பயகளுக்கு ரோசம் வரட்டுமேன்னு சொன்னா அதை நெசம்ன்ன நம்புதுகளே அடக்கிறுக்குக் கழுதைகளா இப்படியிருந்தா பின்னே கழுதை கடிக்காம உதைக்காமலா இருக்கும்.?"

"இப்பொ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு"ங்க எங்க பிள்ளைய உங்கக்கிட்ட ஒப்படைச்சிட்டு சொடக்கு போடுறதுக்குள்ளே நாங்க வெளியேறிப் போயிர்றோம். ஒண்ணில்லெ ரெண்டு வருஷத்துல நாங்க வரும்போது அது சேட்டையெல்லாம் போயி நாலு பேரு பாத்து இது இன்னாரு பிள்ளையா அப்படீன்னு மதிக்கிற மாதிரி அதை செம்ம பண்ணிறணும். இல்லேன்னா ஆயுசுக்கும் எங்களுக்கு இந்த திருணைதான்."

சம்முகய்யாவும் கருப்பாயும் சுருண்டு படுத்துக்கிட்டாங்க. ஒண்ணுஞ்செய்ய முடியாம வாத்தியார்ச்சாமி கிடந்து முழிச்சாரு. நாளைக்கு பள்ளிக்கூடம் துவங்குறதுக்கு முன்னாடி காலையிலெ இவங்களை எப்படி வெளியேத்துறதுன்னு அன்னக்கி ராத்திரி பூராவும் இருட்டிலே உட்கார்ந்து யோசனை பண்ணுனார். திடீர்ன்னு கழுதை காலு காலுன்னு கத்த ஆரம்பிச்சது. எந்திரிச்சு திருணைப்பக்கம் வந்தார். அங்கே சண்முகய்யாவும் கருப்பாயும் அன்னைக்குத்தான் சாந்தியாகிற பொண்ணு மாப்பிள்ளை மாதிரி ஆவல் ஆவலா கிடந்தாங்க. கழுதை நிலை கொள்ளாம கிடந்து தவிச்சது. அடி வயித்திலிருந்து குரலெடுத்து கத்திச்சு.

இதோட சத்தங்கேட்டு ரொம்ப தூரத்திலிருந்து ஒரு கழுதை சன்னங்குரல்ல துவங்கி அப்படியே கனமாய் ஏத்தி ஆரோகிச்சு ரொம்ப தாகத்துல கூச்சலாய்க் கூவி ஹெ... ஹெ... ஹெ... பர்ர்ர்ன்னு சன்னஞ்சன்னமா குறைச்சி முடியாம முடிச்சு வச்சது.

அவ்வளவுதான் அந்த எதுக்குரல் கேட்டு கட்டுத்தரையில் நிலை கொள்ளாம மூத்தாளி ஒரே களேபரமா வானத்துக்கும் பூமிக்கும் தாவுது. வாத்தியார்ச்சாமிக்கு புரிஞ்சு போச்சு மெல்லப் போயி கழுதைப்பக்கமா நின்னார். அது அவரை நாக்கால் நக்கி கெஞ்சி தன் பரும் மூக்கால் அனலா பெரும்மூச்சு விட்டது. அவ்வளவுதான் வாத்தியார்ச் சாமி கால்கட்டை அவிழ்த்து விட்டுட்டார்.

மூத்தாளி குஷியும் கொண்டாட்டமுமா அவரை ஒரு சுத்தி சுத்தி வந்து பின்னந்திங்கால்களால் ஓங்கி ஒரு உதை கொடுத்துட்டு ஓடிப்போனது. வாத்தியார்ச்சாமிக்கு பின்னாடியே போய் பார்க்கணும் போலிருந்தது. பெண் கழுதைக்கு காதல் வந்திருச்சுன்னா ஆண் கழுதைய பின்னந்திங்காலால பொழுதனைக்கும் உதைக்குமாம். அதுக்குப்பிறகுதான் ஆண் கழுதை லகுவுக்கு வருமாம்.

வாத்தியார்ச்சாமியை பொறுத்த மட்டுல அது சரியாப்போச்சு. போயி விடிய விடிய வேடிக்கை பார்த்துட்டு காலையிலதான் வந்தார். வந்தவர் புருஷன் பெண்சாதியைப் பாத்து உங்க பிள்ளையை பேரு சேத்தாச்சு. நீங்கபோயிட்டு பின்னால வாங்கன்னு முடுக்கிவிட்டுட்டார்.

தினசரி கழுதை வேடிக்கை பார்க்க போயிருவார். ஆமா பின்னே நாளைக்கு புள்ளக்காரங்களுக்கு பதில் சொல்லணுமில்லே என்று அவராய் சமாதானம் சொல்லிக்கிட்டார்.

ரொம்ப வருஷமாகிப்போச்சு. சம்முகவேலும், கருப்பாயும் அவங்க பிள்ளையப் பாக்க வாத்தியார்சாமிய தேடி வந்தாங்க. அப்பொ ஊருக்கு வெளியே ஒருத்தர் கூட்டமா கழுதைகள வச்சி மேய்ச்சிக்கிட்டிருந்தார். அவருகிட்டெ வந்து இன்னின்ன மாதிரின்னு விபரஞ்சொல்லி விசாரிச்சாங்க.

கழுதை வேடிக்கை பாக்கப்போன வாத்தியார்ச்சாமி கடைசியில் அவரும் ஒரு கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயமாகிப்போச்சு. கழுதை குட்டிபோட இவருக்கு குழந்தை பிறக்க, அங்கே குட்டிபோட இங்கே குழந்தை பிறக்க இப்படியே குழந்தை குட்டி பெருத்துப்போயி வாங்குன சம்பளம் கட்டுப்படியாகாம கடைசியில் வாத்தியார், வரும்படிக்காக பள்ளிக்கூடம் விட்ட நேரம் அந்த கழுதைகளை மேய்க்க ஆரம்பிச்சுட்டார். சாமி கோலமெல்லாம் மாறி அவருதான் கழுதை மேய்க்கிறார்ன்னு தெரியாம அவருக்கிட்டேயே வந்து விசாரிச்சாங்க. ஒத்தக் கழுதைய கொண்டுவந்து விட்டு தன்னை இந்த நிலைமைக்கு விட்டவங்களை சும்மா விடக்கூடாதுன்னு இதுகளுக்கு புத்திவரும்படியா செய்யணும்னு ஒரு வழி பண்ணுனார்.

அந்த ஊர் போலீஸ் ஸ்டேசன்ல கோபக்கார பொம்பளை இன்ஸ்பெக்டரா இருந்தா. ஏழை எம்பதி ஏப்பை சாப்பைகள்ன்னு தயை தாட்சண்யமில்லாம அடி உதைதான் இவங்களுக்கு. அவதான் லாயக்குன்னு "நீங்க வாத்தியார் சாமிய பாத்து என்ன செய்ய உங்க பிள்ளை அறிவுக்கு அது சுயமா படிச்சு இந்த ஊர்ல இன்ஸ்பெக்டர் வேலைபாக்குது. இது பிடிக்காத வாத்தியார் சாமி பொச்சரிப்பு எடுத்துப்போய் ஊரைவிட்டே போயிட்டாரு உங்க பிள்ளைய உடனே போய் பாருங்க"ன்னார்.

இவங்களுக்கு சந்தோசம்னா சந்தோசம் இன்னமட்டுமில்ல. டேசன் எங்கிட்டிருக்கு சாமின்னு கேட்டும் கேக்காம ஓடுனாங்க.

அந்த டேசன் ஏட்டையாம்மா இவருகிட்டதான் படிச்சவ. அந்த அம்மாகிட்டெ நடந்த விபரமெல்லாஞ் சொல்லி நாலு போடு போட்டு ரெண்டு பேரையும் ஊரைவிட்டு முடுக்கச் சொன்னார். இவங்க போன நேரம் இன்ஸ்பெக்டரம்மா நாலஞ்சு கேடிகளை அடியோ அடின்னு அடி விளாசிக்கிட்டிருந்தது. அப்ப பாத்து சம்முகவேலு டேசனுக்கு வெளியே நின்னு அந்த அம்மாளைப் பாத்து, பா... பா... றெக்.. றெக்.. ஏ கழுதை மூத்தாளி அடையாளந் தெரியலையா பா..பா.. நால்லா பாரு யாரு வந்திருக்கேன்னு ஹெக்.. ஹெக்.. முன்னால கையநீட்டி தலைய ஆட்டி ஆட்டி கூப்பிட்டாப்புல...

இன்ஸ்பெக்டரம்மா கோபத்தோடு திரும்பிப்பாத்து இதுக என்ன கிறுக்குகளா ரோட்டுல அலையறது உள்ளே வந்திருச்சோன்னு பாத்தமட்டுல இருந்தா.

இன்னும் அடையாளந்தெரியலையா.. ஏய் இங்கப்பாரு மூத்தாளி.. இந்தா.. உங்க ஆத்தா நிக்காபாரு... பா... பா... தலையை மேலுங்கீழுமா ஆட்டி ஆட்டி கூப்புட கூப்புட கருப்பாயிக்கு சந்தேகமா இருந்தது. புருசனைப் பாத்து நம்ம புள்ளென்னா இந்நேரம் வரைக்கும் அடையாளந் தெரியாமலா இருக்கும்..

சம்முகவேலும் 'அதானே' என்றுயோசனையானான்.

அந்நேரம் ஏட்டையாம்மா வந்துஅவங்களைப் பத்திச்சொன்னா... அவ்வளவுதான்.. கோபம் அண்டகாரம் முட்டிப்போயி. 'ஓகோ இவங்களுக்கு என்னைப்பார்த்தா அவங்க கழுதை மாதிரி தெரியுதோ.. ன்னு திடுதிடுன்னு ஓடி வந்து சம்முகவேலு அடப்பச்சேத்து ஓங்கி ஒரு மிதி வச்சாள் இன்ஸ்பெக்டரம்மா.

அப்படியே தூரப்போய் ஊட்டிக்குப்புற விழுந்த சம்முகவேலு தடுமாறி எழுந்திருச்சி மூக்காந்தண்டியில ஒழுகிற ரத்தத்தை தொடச்சிக்கிட்டே பெண்சாதிய பாத்து "ஏம்மா கருப்பாயி சந்தேகமில்லே. கழுதைப்பயபுள்ள இது நம்ம மூத்தாளியேதாம்மோய்!"


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com